மூணாவதும் பெண்

தனத்துக்கு மூன்றாவது முறையும் பெண் குழந்தை தான் பிறந்தது. பிறந்த குழந்தையை அணைத்துக்கொண்டு கேவிக் கேவி அழும் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாமல் விழித்தான் செந்தில்.
மூணாவதும் பெண்

தனத்துக்கு மூன்றாவது முறையும் பெண் குழந்தை தான் பிறந்தது. பிறந்த குழந்தையை அணைத்துக்கொண்டு கேவிக் கேவி அழும் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாமல் விழித்தான் செந்தில்.
"தனம், இப்படி ஓயாம அழாதே புள்ளே... மனசுக்கு கஷ்டமாயிருக்கும்மா... நம்ப புது பாப்பாவைப் பாரு... ரோசாப்பூ கணக்கா ...கொள்ளை அழகு...''
குழந்தையை ஆசையாய் தொட்டுப் பார்த்தான்.
"என்னய்யா... உனக்கு விளையாட்டா இருக்கா... இந்தமுறை நீ ஆம்பளை புள்ளையோட தான் வரணும்... பொட்டப் புள்ளயத் தூக்கிட்டு வந்தியானா, வீட்டிலேயே சேக்கமாட்டேன்னு உங்கம்மா சொல்லிட்டே இருந்தாங்களே. இன்னிக்கு மத்தியானம் நோவெடுத்து இங்கே ஆஸ்பத்திரிக்கு வரும்போது கூட அப்படித்தானே சொல்லி அனுப்பிச்சாங்க...'' அழுகையினூடே தனம் புலம்பினாள்.
"நீ கவலைப் படாதேம்மா தனம்... எனக்கு நீ வேணும்... நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நான் காலையிலே வீட்டுக்குப் போய் அம்மாகிட்டே பேசிக்கிறேன்... இப்போ நீ நல்லா நிம்மதியா தூங்கு'' என்று சொல்லி தானும் ஆஸ்பத்திரி வராண்டாவில் போய் படுத்தான்.
வீட்டுக்குள்ளே நுழையும்போதே ராணியும் வேணியும் ஓடி வந்தனர்.
"அப்பா அப்பா, எங்களுக்குத் தம்பியா? தங்கச்சியா... என்ன பாப்பா பொறந்துருக்கு... அம்மாவும் குட்டிப் பாப்பாவும் எப்ப வருவாங்க?''
அம்மாவிடம் எப்படி சொல்வதுன்னு பயந்து கொண்டேவந்த செந்திலுக்கு, குழந்தைகளின் உற்சாகம், தைரியத்தைக் கொடுத்தது... "கண்ணுகளா... நம்ப வீட்டுக்கு உங்க மாதிரியே தங்கச்சி பாப்பா வரப் போகுது... நாளை மறுநாள் அம்மாவும் குட்டிப்பாப்பாவும் வந்துடுவாங்க...'' எதிர்பார்த்தபடியே சமயலறையில் வேலையாயிருந்த அம்மா ஹாலுக்கு ஓடி வந்தாள்.
"என்னாடா சொல்றே இந்த வாட்டியும் பொம்பளபுள்ளைதானா... எனக்கு அப்பவே தெரியும்... அவ வயித்துவாசி... பொட்டை தான் பிறக்கும்னு... அதான் ராத்திரி ரெண்டு மூணு வாட்டி... அந்த மனுஷன் அதான் உங்கப்பாரு போன் செஞ்சப்பல்லாம் எடுத்து விஷயத்தை சொல்லாம பம்மிக்கிட்டு கிடந்தையாக்கும்...இப்போ என்னா? நான்தான் முன்னமேயே சொல்லிட்டேனில்ல... ஆம்பிளை பிள்ளை யை பெத்தாத்தான் அவ இந்த வீட்டுக்கு வரலாம்னு... மூணாவதையும் பொம்பளையா பெத்து வச்சுருக்கா... நான் சொன்னபடி அவங்க ரெண்டு பேத்தையும் அவங்கப்பா வீட்லே கொண்டு விட்டு வந்துடு... தங்கராசு காருக்குசொல்லிடு. உன்னோட ஆட்டோல வேண்டாம்''
கொஞ்சம்கூட மனுஷத் தன்மையே இல்லாமல் அம்மா பேசினாள். செந்தில் கோபத்தை அடக்கிக் கொண்டான். அம்மாவை எதிர்த்து அவனால் பதில் பேச முடியாது. அம்மாவின் வளர்ப்பு அப்படி...
அதற்குள் ஸ்கூலுக்குப் போகத் தயாராய் நின்று கொண்டிருந்த வேணி, ராணி இருவரையும் தன்னுடைய ஆட்டோவில் உட்கார வைத்துவிட்டு உள்ளே வந்தான்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அம்மாவிடம் பேச ஆரம்பித்தான்.
"ஏம்மா, பெண் குழந்தை பிறந்ததுக்கு என் மனைவி என்னம்மா செய்வா...பாவம் ... எதுக்காக அவங்கப்பா வீட்லே கொண்டுபோய் விடணும்? அதெல்லாம் என்னால முடியாது. நான் நம் வீட்டுக்குத்தான் கூட்டி வருவேன்''
மகனுக்கு கோபம் வருகிறது என்று தெரிந்ததும், அவனைத்தாஜா செய்வதுபோல் பேச ஆரம்பித்தாள் அம்மா...
"நம்ப வம்சம் தழைக்க ஒரு ஆம்பிள்ளைப் பிள்ளை வேண்டாமாடா ராசா... அதுக்குத்தான் சொல்றேன். அவளை அவங்கப்பா வீட்லே விட்டுட்டு அவ உறவை அத்துக்கிட்டு வந்துடுன்னு... என் சித்தப்பாரு பேத்தியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்...''
அம்மா பேசுவதைக் கேட்கமுடியாமல் செந்தில் காதுகளை பொத்திக் கொண்டான். அவனையும் மீறி முதல் முறையாக அம்மாவிடம் ஆத்திரமாய் கத்தினான்.
"நிறுத்தும்மா... விட்டா ரொம்பத்தான் ஓவரா பேசறே...பெரிய சமஸ்தானம் பாரு நம்ம வீடு. ஆண்வாரிசு இல்லாம அழிஞ்சுபோக... எனக்கு என் தனம் தான் வேணும்... எங்க மூணு பொண்ணுகளையும் நாங்க உழைச்சுப் படிக்கவச்சு வளர்ப்போம்... என்னை மாதிரி ஓர் ஆட்டோ டிரைவரோட பொண்ணுதான் கஷ்டமான ஆடிட்டர் பரீட்சையிலே இந்தியாவிலேயே முதல் மாணவியா வந்துருக்கா''
அதுவரை மனைவிக்கும் மகனுக்கும் நடந்த வாக்கு வாதத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அண்ணாமலை, மகனுக்கு சப்போர்ட்டாக பேசத் தொடங்கினார்.
"பகவதி... என்ன நினைச்சுட்டிருக்கே உன் மனசிலே... பெண்ணோ... ஆணோ... ஆண்டவன் கொடுத்ததை சந்தோஷமா ஏத்துக்காம... என் இப்படி அக்கிரமமாய் பேசறே... நீயும் ஒரு பொம்பிளைதானே... மருமகப்பொண்ணு ரொம்ப நல்லவ... மகன் அவ மேல உசிராயிருக்கான். அவங்களை பிரிச்ச பாவத்தைக் கொட்டிக்காதே. நல்லா அனுபவிப்பே''
""பெரிய முனிவரோ... சாபம் கொடுக்கிறீரே... வாயை மூடிட்டுப் போய்யா... இந்தப் பாருடா மகனே...நான் சொன்னாசொன்னதுதான்... போன்போட்டு எங்க சித்தப்பாரு மகன் கிட்டே நாளை மறுநாள் சம்பந்தம் பேச வரச்சொல்லிப் போடறேன்... நீ மட்டும் நான் சொன்னபடி செய்யாம உன் பெண்டாட்டியை இங்கே கூட்டிட்டு வந்தேன்னு வச்சுக்கோ ... நான் நாண்டுக்கிட்டு செத்துடுவேன். சொல்லிட்டேன்''
அம்மா வழக்கம்போல் தன் கடைசி அஸ்திரத்தை பிரயோகித்து விட்டாள். சிறு வயசிலிருந்தே இப்படி சொல்லிச் சொல்லியே செந்திலை எல்லா விஷயத்துக்கும் பணிய வைத்து விடுவாள். செந்திலுக்கு அம்மா மேல் ரொம்ப பாசம்... அதனாலேயே அம்மா எது சொன்னாலும் எது செஞ்சாலும் மறுக்கவோ, எதிர்த்துப் பேசி சண்டை போடவோ அவனால் முடியாது. ஆனால் இப்பொழுது அவனுக்கே அம்மாவைப் பார்க்கவே வெறுப்பாயிருந்தது. தன் வெறுப்பையும் கோபத்தையும் "சே'ன்னு ஒற்றை வார்த்தையில் கொட்டினான். ஒரு வார்த்தையையும் பேசாமல் வெளியேறினான். ஆட்டோவில் காத்திருந்த குழந்தைகளை பள்ளியில் கொண்டுபோய் விட்டவன், ஆஸ்பத்திரிக்கு வந்து தனத்து முன் நின்றான்.
குழந்தையை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த தனம்... செந்திலைக் கண்டதும் அழுகையினுடே,
" என்னய்யா, நேத்து வீரமா பேசினயே ... உங்கம்மா கிட்டே சொன்னாயா? என்னையும் குழந்தையையும் வீட்டுக்கு கூட்டி வரச்சொல்லி ஒத்துக்கிட்டாங்களா?''
தனம் கேட்க கேட்க செந்திலுக்கு பதில் சொல்ல வாயே வரவில்லை... தயங்கித் தயங்கி, "அழாதே தனம்... பச்சை உடம்பு தாங்காது'' என்று மட்டும் சொன்னான்.
"அட போய்யா... உங்கம்மா என்ன சொல்லிருப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் என்ன செய்வேன்... ராணிக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு... வாந்தி, தலைசுத்தல் னு மசக்கை அறிகுறி ஒண்ணுமில்லாம மாசாமாசம் ஒதுங்கிக் கிட்டும் இருந்ததில் இது வயித்தில் வந்ததே தெரியாமப் போயிடுச்சே...திடீர்னு வயிறு கனக்குதேன்னு டாக்டரம்மாகிட்ட வந்தா... "என்னம்மா தாயறியாத சூலுண்டா...உன் வயித்தில் அஞ்சு மாசப் பிள்ளை ஜம்னு உக்காந்திருக்கு... இனிமேல் கலைச்சி துடைச்சியெல்லாம் செய்ய முடியாதுன்னு அனுப்பிட்டாங்களே... அப்பத்திலேர்ந்து உங்கம்மா என்னை மிரட்டிக்கிட்டேதானே இருந்தாங்க... நானும் பைத்தியம் மாதிரி பிள்ளைக்குப் பிள்ளை மசக்கை அனுபவங்கள் மாத்தியிருந்தா பொறக்கற பிள்ளையும் மாத்திப் பிறக்கும்னு சொல்வாங்களே... அதனாலே இது ஆம்பிள்ளையாத்தான் இருக்கணும்னு நம்பிக்கிட்டிருந்தேன்... இப்படி கடவுள் என்னை சோதிச்சுட்டாரே'' புலம்பி அழும் மனைவியை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை, ""செந்தில் சார்... உங்களை டாக்டரம்மா வரச்சொன்னாங்க...'' என்று வார்டு நர்ஸ் வந்து கூப்பிட்டாள்.
"தனம் நான் போய் டாக்டரைப் பாத்துட்டு வரேன்... நம்மைப் போல வசதி குறைஞ்சவங்களுக்கு டாக்டரம்மா கொஞ்சம் சகாயம் பண்ணுவாங்களாம்... பிரசவத்துக்கு ஆகும் செலவுலே பாதி குடுத்தாப் போதுமாம்... அது விசயமாத்தான் இருக்கும்'' என்று சொல்லிப் போனவன், அன்று பூரா வரவில்லை...
மறுநாளும் காணோம்...
தனத்துக்கு கவலையாயிருந்தது. "அவங்கம்மாவோட சேர்ந்துகொண்டு இவரும் நம்மை ஒதுக்குகிறாரா... ஐயோ பாவம் அப்படியெல்லாம் செய்ய மாட்டாரே ... தங்கமான மனுஷன்... என்மேலே உசிரையே வச்சிருப்பாரே... ஆனால் ஏனிப்படின்னு தெரியலியே...'' குழப்பமும் சமாதானமுமாய் தவித்தாள்.
ஒரு வழியாய் அன்று இரவு தான் செந்தில் தனத்தைப் பார்க்க வந்தான்.
"என்ன ஆச்சுங்க... இரண்டு நாளா இப்படி வராமயே இருந்துட்டீங்க... உங்கம்மா போகக்கூடாதுன்னுட்டாங்களா'' தனம் பதட்டமாய்வினவினாள்.
"அட அசட்டுப் புள்ளே. கொஞ்சம் உடம்புக்கு முடியல... வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்துக்கிட்டேன்... என்னைய எங்கம்மா ஒண்ணும் செய்ய முடியாது. நாளைக்கு உன்னையும் குழந்தையையும் நம்ம வீட்டுக்குத் தான் கூட்டிப் போகப் போறேன்... கண்டதையும் நினைச்சு குழம்பாம இப்போ தூங்கு'' என்று சாதாரணமாக சொன்னான். அதே மாதிரி மறுநாள் ஆஸ்பத்திரியிலிருந்து தன்னுடைய ஆட்டோவிலேயே மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்தும் வந்துவிட்டான்.
சித்தப்பா மகன் கல்யாணம் நிச்சயம் செய்ய வந்துடுவான்... அதுக்குள்ளே வெரசா சமையலை முடிக்கணும்னு பகவதி ஓடி ஓடி விருந்து தயாரித்துக் கொண்டிருக்கும்போது, சித்தாப்பா மகன் போன் போட்டு சொன்ன விஷயம் பகவதிக்கு ரொம்பவே அதிர்ச்சியாய் இருந்தது.
சரியாக அந்த சமயம் வாசலில் ஆட்டோ வரவும் மகனும் மருமகளும் குழந்தையுடன் இறங்குவதையும் பார்த்து ஓடினாள்.
"என்னப்பா செந்தில், இப்படி செஞ்சுட்டே... அதான் ரெண்டு நாளா யார் கிட்டேயும் எதுவும் சொல்லாம வீட்லேயே படுத்துக் கிடந்தையா... உங்க மாமன்காரன் இப்பத்தான் போன் போட்டு நீ செஞ்ச விஷயத்தை சொல்றான்... இன்னைக்கு இங்கே வரவும் மாட்டானாம்''
"ஆமாம்... அம்மா... எனக்கு நீயும் வேணும். தனமும் வேணும்... அதனால தான் அப்படி செஞ்சேன்... மாமாவுக்கு நானே போனைப் போட்டு எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன்... அப்புறம் எப்படி வருவாரு...''
"எனக்கு நீயும் வேணும்மா' என்ற பிள்ளையின் பாசம் பகவதியின் மனதை என்னவோ செய்தது. அவளையுமறியாமல் தனத்திடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்...
" வாம்மா தனம், உள்ளே உங்க அறைக்குப் போய் ஓய்வு எடுத்துக்கோ... மருமகளை கைத்தாங்கலா கூட்டிட்டுப் போடா செந்தில்...'' என்று அக்கறைகாட்டிப் பேசவும் செய்தாள்...
தன் மாமியாரா இப்படி? நடப்பதெல்லாம் கனவா... நனவா...'' புரியாமல் உள்ளே சென்ற தனம், ஆவலை அடக்க முடியாமல் , ""நீங்க என்ன செஞ்சீங்க உங்கம்மா இப்படி மாறிட்டாங்களே''
"சொல்றேன் தனம். உன்கிட்டே சொல்லாமலா இருக்க முடியும்? அன்னைக்கு டாக்டரம்மா கூப்பிட்டாங்கன்னு போனேனா...அவங்க அறையிலே யாரோ இருந்தாங்க. வெளில பெஞ்சுலே உட்கார்ந்தேன். அம்மா பாட்டுக்கு ஆண் வாரிசு வேணும். வேறே கல்யாணம் கட்டிக்கோன்னுஆகாத்தியம் பண்ணறாங்களே. என்னாலே தனத்தை விட்டு இருக்கவே முடியாதே... மனசுல கவலை அலைபாஞ்சுட்டே இருந்தது.
அந்த சமயம் உள்ளே இருப்பவர்களிடம் டாக்டர் சொன்னது என் காதில் விழுந்தது..."ஏன் சார் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க...உங்க மனைவி ரொம்ப வீக்காக இருக்காங்க... அவங்களுக்கு இப்போ குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணமுடியாது... ஏன் நீங்க நல்லாத்தானே இருக்கீங்க... நீங்களே பண்ணிக்கலாமே...''
உள்ளே யாருக்கோ சொன்னது எனக்கு சொன்ன மாதிரி இருந்தது. உடனே டாக்டரைக் கலந்து பேசி அவர் சொன்னபடி இதே ஆஸ்பத்திரியில் ஆண்கள் பிரிவு மருத்துவரிடம் போய் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு விட்டேன் தனம்... அம்மாவை சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியல... எனக்கு நீ வேணும் தனம்''
கணவனின் வார்த்தைகளில்... தனக்காக, தன் மேலுள்ள பிரியத்தால், அவன் செய்த செயலில் தனத்தின் மனம் உவகையில் பொங்கியது... இவருக்குத்தான் என்மேல் எத்தனை பாசம்... நெகிழ்ச்சியில் கண்களில் நீர் துளிர்க்க கணவனின் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டாள் தனம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com