அவர் வருவாரா...?

கோபத்தில் மாமாவை விட்டுப் பிரிந்து வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டிருந்தன. பிரிந்து வந்திருந்த ஓரிரு நாட்களிலேயே என்னை அழைத்துச் செல்ல மாமா வந்திருந்தபோதெல்லாம் அவருடன்
 அவர் வருவாரா...?

தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி - 2019 ரூ 5 ஆயிரம் பரிசு பெறும் இரண்டாம் பரிசு கதை
 கோபத்தில் மாமாவை விட்டுப் பிரிந்து வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டிருந்தன. பிரிந்து வந்திருந்த ஓரிரு நாட்களிலேயே என்னை அழைத்துச் செல்ல மாமா வந்திருந்தபோதெல்லாம் அவருடன் போகாமலிருப்பதற்காக அவரை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தியிருக்கிறேன். என் செயல்களைப் பெரிதுபடுத்தாத மாமா தொடர்ந்து என்னை அழைத்துச் சென்றுவிட பல தடவைகள் முயற்சி செய்திருக்கிறார்.
 திருமண பந்தத்தில் இணைத்து வைக்க அநேகம் உறவுகள் வந்து குதூகலித்தது போலவே, பிரிந்திருக்கும் எங்களுக்குள் சமரசம் செய்து சேர்த்து வைக்க முயற்சிகள் பல செய்தும் நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்தான் என்கிற என் மூர்க்க குணத்தால் அவர்கள் என்ன சொல்லியும் என்னால் சமாதானம் ஆகிவிட முடியாத சூழலில் இருவருக்குமான பேச்சு வார்த்தைகள் அப்படியே நின்று போயிருந்தன. இதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சேர்வோமா மீண்டும் உறவுகள் ஒன்றிணைந்து எங்களைச் சேர்த்து வைப்பார்களான்னும் தெரியல. அதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லாதிருப்பதுபோல எண்ணும்படியாக உணர்கிறேன். ஆனாலும் அவரோடு சேர்ந்திருக்க வேண்டுமாய் மனம் தவியாய் தவிக்கிறேன். என்னை அழைத்துச் செல்ல அவர் வருவாரா...
 மாமாவையே நெனச்சிக்கிட்டிருக்கிறதால சரியா தூக்கம் வர்றதில்ல. அப்படியே கண்ணசந்து தூக்கம் புடுச்சி படுத்திருந்தேன்னா பயப்படும்படியான ஏதேனும் காட்சிகள் தோன்றி திடுக் திடுக்கென்று விழிப்பு வந்துவிடுகிறது. சில்வண்டுகளின் ரீங்கார ஓசையுடன் கூடிய நடுச்சாம இரவின் அமைதி மனதிற்கு குதூகலமாயிருந்தாலும் அவரின் பிரிவு தந்திருக்கும் ஞாபகங்களினால் ஏற்பட்ட வலி வெப்பமாய்த் தகிக்கச் செய்கிறது. மின்னல் பளிச்சிட்டது போல காணும்படியான உருவத் தோற்றங்களை உணரத் தோன்றுகிறது. நிசப்தமான இரவும்கூட பேரிரைச்சலாய் இருக்கிறதேவென்று எண்ணும்படியான அசூயையான பேச்சுக்குரல்கள் கேட்டபடியிருக்கிறது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். நடக்க முயற்சிக்கிறேன். தூக்கமின்மையால் உடல் சோர்ந்து கண்ணில் பட்டாம்பூச்சி சிறகடிப்பதுபோன்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. மின்னதிர்வாய் குலுங்கி உடல் லேசானதுபோல நடை பிசகியது. ஆனாலும் சிவந்திருக்கும் கண்களில் சிரித்த முகமாய் அவரின் உருவமே வந்து நிற்கிறது.
 தோட்டத்து வெளிவாசல் சென்று முகம் கழுவி முந்தானையால் துடைத்துக்கொண்டே உள்ளே வந்தேன். ஸ்டேண்டில் மூலையிலிருந்த டிவி முன் நின்று அதனோரம் ஒட்டியிருந்த ஒரு சிவப்புக் கலர் சிறிய வட்ட ஸ்டிக்கர் பொட்டினை விரல் நகத்தினால் சுரண்டியெடுத்து நெற்றியில் இரு புருவங்களுக்கும் மத்தியில் ஒத்தினேன். இரவு நேரத்தில் கண்ணாடிப் பார்க்க கூடாதென்பார்கள். அது ஏனென்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அந்த நேரத்தில் நான் கண்ணாடிமுன் நின்று மங்கலான இரவு விளக்கு வெளிச்சத்தில் ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டினைப் பார்த்தேன். என் மாமாவே என் நெஞ்சில் குடிவந்தது போலிருந்தது. கலைந்திருந்த தலைமுடியை இருகைகளாலும் நீவி காதோரமாய் வழித்துவிட்டு சரி செய்துகொண்டே படுத்திருக்கும் அம்மாவின் அருகில் வந்தமர்ந்தேன். அம்மா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். சற்றுத் தள்ளி தம்பி, அவனையடுத்து அப்பா. என்னைத் தவிர என்னைப்பற்றிய கவலை யாருக்குமில்லையென்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எல்லோருமே நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 தம்பி... அவன் என்ன செய்வான். அவன் சின்னப்பையன். அவனோடு விளையாட, செல்லமாய்ச் சண்டையிட, அவனுக்குத் தேவையானவைகளை நேரத்தில் செய்து கொடுக்க நான் பக்கத்தில் இங்கேயே இருந்து கொண்டிருந்தால் அவனுக்கும் நல்லதுதானே? நான் மாமாவோடு சேர்ந்திருந்தாலென்ன... இல்லாமல் போனால் அவனுக்கென்ன? அதனை யோசிக்குமளவுக்கு அவனுக்கு போதிய வயதுமில்லைதானே. ஆனால் சின்ன சலனம் கூட இல்லாதவர்களாய் இவர்களால் மட்டும் எப்படித் தூங்க முடிகிறது? எங்களை சேர்த்து வைக்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறார்களாவென்றால் எதுவுமில்லை. அதுபற்றிய கவலை கொஞ்சமும் இவர்களுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. அப்படியிருந்திருந்தால் இப்படி தன்னிலை மறந்தவர்களாய் தூங்கிக் கொண்டிருப்பார்களா...
 இன்னும் விடிய வெகு நாழிகையிருந்தது. யோசித்தபடியேயிருந்தேன். என்னருகில் படுத்திருந்த அம்மா புரண்டு படுத்தாள். தூக்கத்திலும் கைகள் என் பக்கமாய் நீண்டு தடவிப்பார்த்து நான் படுத்திருக்கவில்லை; உட்கார்ந்திருக்கிறேன் என்பதனை உணர்ந்து கொண்டவளாய் கண்விழித்துப் பார்த்தாள்.
 "ஏய்... ஏண்டி ஒக்காந்திருக்க?'' என்றபடி கண்களை மூடிக்கொண்டாள். "என்னை இங்கேயே தங்க வைச்சிக்கிட்டு என்னம்மா பண்ணப் போற... புருஷன் வீட்லயிருந்து கோவிச்சிக்கிட்டு தெரியாம வந்திட்டேன். சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிசாக்கி பொட்டுன்னு வெடிக்க வைச்சிட்டியேம்மா. நான்தான் சின்னப் பொண்ணு விவரம் தெரியாம அதையெல்லாம் பெரிசா நெனைச்சி வந்திட்டேன். எனக்கு புரிய வைச்சி அப்பவே என்னை என் புருஷன் வீட்டோட அனுப்பியிருக்கலாமே... நானும் சந்தோஷமாயிருந்திருப்பேனேன்னு'’ கேட்டுவிடவே மனம் பரபரத்தது. என் பதிலை எதிர்பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்பவள் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாமே. நேரங்கள் கரைந்தன. அவளின் முகத்தைப் பார்த்தபடியேயிருந்தேன். அம்மா கண்விழிப்பதாய்த் தெரியவில்லை. எனக்கும் தூக்கம் வருவதாயில்லை. ஏன் கோவிச்சிக்கிட்டு வந்தோம்ன்னு மாமாவின் நினைவுகள்தான் வந்தபடியிருந்து கொண்டிருந்தது.
 மாமாகிட்ட எது கேட்டாலும் அவர் அம்மாக்கிட்ட கேக்கறேன்னு சொல்றது... உடனே கிடைக்காமல் போகிற அந்த ஏமாற்றம் வெறுப்பைத் தந்தது. ஒரு சினிமாயில்ல. பார்க்கு இல்ல. ஒரு நாள் லீவு போட்டாலும் சம்பளம் போயிடும். சம்பளம் இல்லேன்னா கல்யாணத்திற்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதில் இழுபறி நிலையேற்பட்டுவிடும் போன்ற காரணங்களினால் வேலை வேலையென்று இயந்திரகதியில் ஓடிக்கொண்டேயிருந்த மாமா மீது கோபம் கோபமாய் வந்தது. அடைபட்ட கிளியின் மனவோட்டமான புழுக்கம் எனக்குள். நான் கேட்கிற எதுவும் சில நாட்கள் கடந்து அல்லது இரண்டொரு முறை நினைவூட்டலுக்குப் பிறகு எனக்கு கிடைக்கக் கூடியதாயிருந்தது மேலும் மாமாவின்மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. இனிப்பாய் துவங்கியிருந்த வாழ்க்கை சின்ன சின்னதான ஆசைகளுக்கும் அத்தையின் அனுமதிக்கு காத்திருக்கும் மாமாவை வெறுக்கச் செய்தது. அவரைப் பிரிந்து வருவதற்கான உச்சபட்சமான கோபமாய் இதுவே எனக்கு அப்போதிருந்திருந்தது. கடனை அடைச்சிட்டு வந்து என்னை கூப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்.
 கணவனுக்கு உள்ள கஷ்டங்கள், லாப, நஷ்டங்கள் சுக, துக்கங்கள் அனைத்திலும் மனைவியானவள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிற சின்ன விஷயத்தைக்கூட புரிஞ்சிக்காதவளா இருந்திருக்கிறேனே... பங்கெடுத்துக்க வேணாம். குறைஞ்சபட்சம் அவருக்கு நெருக்கடி கொடுக்காமலாவது இருந்திருக்கலாம்ன்னு எண்ணத்தோணுது. அதுமட்டுமல்லாமல் மாமாவை விட்டுப் பிரிந்து வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு தோணும்படியா கடந்துபோன இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ நிகழ்வுகள் உணரும்படியாய் செய்து விட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்களால், "ஏன்... புருஷன் வீட்டுக்கு போகாம இங்கேயே வந்து தங்கியிருக்க. ஏதாவது பிரச்னையான்னு கேட்கிறபோது அதனால் ஏற்படுகிற ரணங்கள் பெரும் துயரம். நான் சொல்கிற பதிலைக்கேட்டு முகம் சுளிக்கிறபோது நான் செய்ததுதான் தவறோ என நினைக்க வைக்கிற வலி பெரும் சுமை. கல்யாணமாகி ஜோடி ஜோடியாகப் போகிறவர்களைப் பார்க்கும்போதும் திரும்பும் திசையெல்லாம் அவர் முகம் தெரிவது போலவே அவரை ஞாபகப்படுத்திய உணர்வுகள் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது அவரோடு பேச வேண்டும் போலிருக்கிறது. அவர் வருவாரா...
 எங்களைச் சேர்த்து வைக்க பேச வருகிறவர்களையெல்லாம், "இந்த விஷயத்துல தலையிடாதீங்க. இது விஷயமா பேசறதாயிருந்தா இப்பவே கிளம்பிடுங்க'' என்று கறாராக முகத்திலடித்தாற்போல சொல்லி அவர்களின் வாயை அடைத்து உதாசீனப்படுத்தியிருந்ததினால் இனி அவர் வருவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. அவர் வருவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வதெவ்வாறென்று என்னால் விளங்கிக் கொள்ளவியலாமல் தவிக்கும்படியானது என் நிலைமை.
 இத்தனை நாட்கள் இல்லையில்லை இத்தனை ஆண்டுகள் இங்கு இருந்திருக்கக் கூடாது. மாமா வந்து அழைத்துச் செல்லாமல் நானே அங்கு சென்றுவிடலாம்தானே. நான் புகுந்தவீடு என்வீடுதானே. அங்கே செல்ல எனக்கென்ன தயக்கம். இப்படியான கேள்விகள் என்னை துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி நான் செல்வது அவமானமாய் உணரத் தோன்றியது. நான் இங்கிருந்து சென்று விட எண்ணியிருப்பது அம்மாவிற்கு தெரிந்தால், என் கழுத்தை நெரித்துப் போடவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாயிருக்கும். அந்த அளவுக்கு மாமா மீது வெறுப்பு ஏற்படும்படியாய் என்னால் சித்திரிக்கப்பட்டிருந்ததினால் அதற்கும் வழியில்லாமல் போனது. ஒருவேளை மாமாவே என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டால் ஏதேனும் சமாதானம் சொல்லி அவரோடு சென்றுவிட மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. வந்துவிட மாட்டாராவென தினந்தினமும் வழியைப் பார்த்தபடியிருக்கிறேன்.
 அவர் என்னிடம் போனில் தொடர்புகொண்டு பேசியபோதெல்லாம் அவரிடம் பேசக் கூடாதென்பதற்காகவே போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் நான் அவரை தொடர்பு கொள்ள எண்ணி முயற்சித்தபோது உபயோகத்திலில்லை என்கிற தகவல் வந்தபடியிருந்தது. என்னைப்போல் தொடர்புகொள்ள முயற்சித்து என் போன் உபயோகத்திலில்லை என வர அவரும் கோபத்தில் போனை சுவிட்ச் ஆஃப் செய்திருப்பாரோ... இப்படித்தான் விளையாட்டாய் எங்களுக்குள் தொலைபேசி விசாரிப்புகளும் துண்டிக்கப்பட்டிருக்குமென்று எண்ணுகிறேன்.
 மாமாவைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாத படிக்கு கட்டுப்பாடுகள் விதித்ததுபோல அமைதி சூழ்ந்திருந்தது. வேறெங்கிருந்தாவது போன் வந்தாலும் யாரிடமிருந்து வந்திருக்கிறதென்று அதட்டலாய்க் கேட்கிற அம்மாவின் குரல் எப்பொழுதும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது வீட்டினில். அதையும் தாண்டி இப்பொழுது பேசமாட்டாரா என்கிற ஏக்கத்தில் இப்பொழுதெல்லாம் போனையே பார்த்தபடியிருந்து கொண்டிருக்கிறேன்.
 எங்களை ஒன்றுசேர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் எனக்கும் அவருக்குமான ஈகோவின் பின்னணியில் தவறான தூண்டுதலாய் முழுக்க முழுக்க என் அம்மாவே இருந்துவிட்டிருக்கிறார் என்பது, நான் தாமதமாய் உணர்ந்தறிந்த உண்மை.
 கல்லூரி இறுதியாண்டு முடிச்சிட்டு வீட்டிலிருந்த ஒருநாள். அத்தை வந்திருந்தார்கள். அப்பாவின் கூடப்பிறந்த சகோதரி.
 "வா அத்த...''
 நான் அழகாயிருக்கேன்னு நானே சொல்லிக்கக் கூடாது. ஆனால் அப்படித்தான் என் உறவுல எல்லாரும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்படியே முழுங்கிட்ற மாதிரி அத்தை என்னை ஏற இறங்கப் பார்த்து எல்இடி பல்பின் வெளிச்சமாய் முகம் பிரகாசித்து ""வரன் ஆயி... அம்மா இல்ல...''" என்றது.
 "இருக்கே... அம்மா... ,'" குரல் கொடுத்தேன்.
 "அப்பா...''"
 "அப்பா இல்ல... வெளிய போயிருக்கு''
 உள்ளேயிருந்து வாசலுக்கு வந்த அம்மா அத்தையைக் கண்டதும் திடீரென்று கருத்த மேகம் சுழ்ந்து எதுவும் தெரியாமல் இருட்டானதுபோல முகம் சுருங்கி சுரத்தில்லாமல், "வா அண்ணி...''" என்று வேண்டா வெறுப்பாய் வரவேற்றாள்.
 அம்மாவின் முகபாவனையில் வெளிப்படும் வெறுப்பினைப் புரிந்து கொண்டாலும் காரியம் சித்தியாக வேண்டுமென்கிற மனவோட்டத்தில் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாதவளாயும் எனக்கு காலேஜ் படிப்பு முடிந்திருந்த விஷயம் தெரிந்து கொண்டே அதனை அம்மா வாயால் சொல்ல வைக்க வேண்டுமென்பது போலவும்,
 "பாப்பா காலேஜுக்குப் போவலியா?'' ஓர விழியால் என்னைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் அத்தை.
 "படிப்பு முடிஞ்சிடுச்சே. வீட்லதான் இருக்கா...'' ஒத்தை வார்த்தையாய் சொன்னாள் அம்மா. அத்தையைக் கண்டாலே அம்மாவுக்கு பிடிக்கிறதில்ல. அம்மா கட்டிக்கிட்டு வந்ததிலயிருந்து பனிப்போராய் அவர்களுக்குள் இருந்து கொண்டிருந்த நாத்தனார்ப் பிரச்னை காரணமாயிருக்கலாம்.
 "தம்பியிருப்பான்... ஒரு விஷயம் பேசிட்டுப் போலாம்ன்னு வந்தேன்'' என்றிழுத்தாள்.
 "உங்க தம்பிக்கிட்டதான் பேசணும்ன்னா அது இராத்திரிக்குத்தான் வரும். இல்ல ஏதாவது சொல்லணும்ன்னா எங்கிட்டச் சொல்லு. வந்ததும் நான் சொல்றேன்...'' என்று அத்தையை அப்படியே கிளம்பி போகும்படியான தொனியிலேயே பட்டென்று மூஞ்சியிலடித்தாற்போல சொன்னாள் அம்மா.
 ஆனாலும் அத்தை விடாகண்டியாய் தான் வந்திருக்கும் நோக்கம் பலிக்க வேண்டுமென்பதிலேயே தன்னை நிலைநிறுத்திக்கொண்டவளாய் வாங்கி வந்திருந்த பழம், பேக்கரி வகைகளை சுவரோரம் கீழே வைத்து அதில் மேலேயேயிருந்த பூப்பொட்டலத்தை வெளியே எடுத்தவளாய் இரண்டு முழம் அளவுக்கு நீட்டமாய் விட்டு வாயில் வைத்து பற்களால் கடித்து துண்டாக்கி டிவி பார்த்துக் கொண்டிருந்த என் தலையில் வைத்துக் கொண்டே , "ஒனக்குத் தெரியாமயா... எல்லாம் நம்ம பாப்பா விஷயமாத்தான்''" என்று சொல்லி எங்கள் முகங்களில் ஏற்படப்போகிற சலனங்களை காணும் எண்ணத்தில் என்னையும் அம்மாவின் முகத்தையும் கூர்ந்து பார்த்தபடியிருந்தார்.
 என்னைப் பற்றி என்றதும் நான் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கண்டுக்காததுபோல டிவியில் பார்வையைச் செலுத்தியபடியிருந்தேன். அம்மாவுக்கும் கூட சட்டென்று புரிந்திருக்கவில்லையோ என்னவோ "ஆனந்தியப் பத்தியா?'" என்றார்கள்.
 மாமாவுக்கு என்னைப் பெண் கேட்க எப்படிப் பேச்சைத் துவக்குவது என்றறியாதவளாய் ஏதேதோ பேசியபடியிருந்தாள் அத்தை. ஆனால் அதற்காகத்தான் வந்திருக்கிறாள் என்பது அத்தை என்னைப் பார்க்கும் விதம் அவளின் பேச்சினிடையில் தெளிவாகியிருந்தது எனக்கு. எனக்கே புரிகிறதென்றால் அம்மாவுக்கு புரியாமலாயிருந்திருக்கும். பிடிகொடுக்காமல் கெழுத்தி மீனாய் வழுக்கி நழுவியபடியிருந்தாள் அம்மா.
 சுத்திவளைத்துப் பேசியதில் அம்மாவின் எண்ணத்தினைப் புரிந்துகொள்ள முடியாதவளாய் திணறிய அத்தை இதற்குமேலும் அவ்வாறு பேசி அம்மாவின் பிடி வாங்க முடியாதென்கிற முடிவுக்கு வந்தவளாய், "எனக்கு சுத்தி வளைச்சிப் பேசத் தெரியாது தாயி... நான் நேராவே கேட்டுடறேன். நம்ம அருணுக்கு ஆனந்திய கட்டிக்கலாமுன்னு எண்ணமிருக்கு. நீ என்னா சொல்ற?' என்றாள் அத்தை.
 கீறல் கீறலாய் கோடு விழுந்து கீச்கீச்சென்று ஒலியெழுப்பும் சிடிபோல முகம் சுழித்து கடுகடுத்து முகத்தை விகாரமாய் மாற்றியிருந்த அம்மா, " "தே... சும்மா ஏதாவது பேசிட்டிருக்காத...' என்றாள்.
 அதன் அர்த்தம் இங்க வந்து பொண்ணு கேக்குற வேலையெல்லாம் வச்சிக்காதன்னு நாசூக்கா கண்டிக்கிற அம்மாவின் ஒரு விதம். அத்தைக்குப் புரியாமலில்லை. எப்படியாவது என்னை மாமாவுக்கு கட்டிக்க சம்மதம் வாங்கணும்ங்கிற முடிவோட வந்திருந்ததினால் குரலில் ஏக்கம் ஒரு தவிப்புத் தெரிய, "இல்ல ஆயி... நான் நெசமாத்தான் கேக்குறன்'' என்றார்.
 எத்தனையோ தடவை வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் மாமா. பேசியுமிருக்கிறேன். ஆனால் அவரை கட்டிக்கிறதுப் பத்திய எந்த எண்ணமும் என்னிடம் இல்லாதிருந்ததை நினைத்துக் கொண்டேன். அதேசமயத்தில் மாமாவைக் கட்டிக்கிட்டா என்னங்கற மாதிரிய ஒரு எண்ணம் எனக்குள் உருவாகியிருந்ததை அம்மா உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அம்மா என்ன சொல்லப் போகிறார் என்பது பற்றிய சிந்தனையில் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அம்மா பேச்சில்லாமல் அத்தையையே பார்த்தபடி நின்றிருந்தார்கள். இருவரின் பார்வையும் நேருக்கு நேராய் பார்த்திருக்க சிறிது நேர மௌனம்.
 "என்ன ஆயி... கேட்டதும் எதுவும் பேசாம நிக்குற..." அத்தைதான் முதலில் பேசி அம்மாவின் மௌனத்தைக் கலைத்தார்கள்.
 இஷ்டமில்லையென்பதை எப்படிச் சொல்வது என்று யோசித்த அம்மா பொத்தாம்பொதுவாய், "அவ இப்பத்தான் படிப்ப முடிச்சிருக்கா... அவளுக்கு கல்யாணம் பண்றது பத்தியே நாங்க யாரும் இன்னும் யோசிக்கவேயில்லை... நீ அருணுக்கு கல்யாணம் பண்ணப் போறியா?''" என்று எதிர்கேள்வி கேட்டாள்.
 அத்தையும் கொஞ்சமும் அசர்வதாய் தெரியவில்லை. "
 "நீ பாப்பாவைக் குடுத்தீன்னா இப்ப அவனுக்கு கல்யாணம் பண்ணுவேன். இல்லைன்னா பொறுமையாத்தான் செய்யணும்'' என்றாள்.
 "பொறுமையான்னா... கல்யாணம் பண்ணனும்ன்னு முடிவெடுத்திட்டேயில்ல...'' என்று தெளிவாய் சிந்தித்தவளாயும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் அந்த விஷயத்தில் விருப்பமில்லையென்பதனை நாசூக்காய் சொல்வது போலவும் பேசினாள் அம்மா.
 எத்தனை பதனமாயிழுத்து வலை கிழிந்துபோனாலும் மாற்றுவழியில் தன் நோக்கத்தினை நிறைவேற்ற துடிப்பாயிருக்கும் ஒரு மீன்பிடிக்காரனின் மனநிலையாய் அத்தை, "என்ன ஆயி புடி குடுக்காமப் பேசுற... பாப்பாவைக் கட்டணும்ன்னுதான் இப்ப அவனுக்கு கல்யாணப் பேச்சே எடுத்திருக்கோம்''" என்று மாற்று வலையாய் தன் வார்த்தையஸ்திரத்தை மீண்டும் பிரயோகித்துப் பார்த்தாள்.
 "அவள விடு அண்ணி... அவளையொரு வேலைக்கு அனுப்பி சொந்தக்கால்ல நிக்க வைச்சாத்தான் கல்யாணத்தப் பத்தியெல்லாம் யோசிக்கவே முடியும்''" என்று வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையா திரும்பவும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
 வாளையுருவிய விக்கிரமாதித்தன் செயலாய், "வேலைக்கு அனுப்பறதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். முடிவா நீ என்னதான் சொல்ற... பொண்ண மட்டும் குடுத்தீன்னாப் போதும்''" என்று தன் நிலையிலிருந்து மாறாதவளாய் நிர்ப்பந்தப்படுத்தும் விதமாய் உரத்துச் சொன்னாள் அத்தை.
 "நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல. நீ உன் தம்பிக்கிட்டேயே கெட்டுக்க''" ஒரே வார்த்தையில் தடாலடியாய் அடித்துச் சொன்னாள் அம்மா. என்னை அவரின் அண்ணன் மகனுக்கு கொடுக்க எண்ணியிருந்தது எப்பவாவது அம்மாவின் அண்ணன் வரும்போது அவரிடம் பேசுவதிலிருந்து புரிந்திருந்தது எனக்கு. ஆனால் அவன் ஊர் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் குடிப்பழக்கம் இருப்பதனாலயும் அவனை ஒரு பொறுப்பானவனா மாற்றும்படி அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. ஒருவேளை அதற்காகத்தான் அத்தையிடம் பிடிகொடுக்காமலிருந்தாரோ என்று இப்பொழுது எண்ணத் தோன்றுகிறது எனக்கு.
 அப்பாவிடம், "அக்கா பொண்ணு கேக்குது... நீ என்ன சொல்ற...'' என்று சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டியென்று உறவுக்குள்ளே எல்லோருக்கும் என் கல்யாணப்பேச்சு மெல்வதற்குச் சுவையான அவலாகி ஒருவர் மாற்றியொருவரென்று எல்லோருமே என் கல்யாண விஷயமாய் பேச அடிக்கடி வீட்டிற்கு வரத் தொடங்கியிருந்தனர்.
 "இப்ப கல்யாணம் கட்டிக்கொடுக்கிறதில்லங்க''றதத் தவிர வேறேதுவும் இவர்களால் சொல்ல முடியவில்லை.
 ஒரு சித்தப்பா, " ஏன் கட்டிக்குடுக்கிறதில்ல. கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்''ங்கற பழமொழியைச் சொன்னவர், "பொண்ணுன்னு இருந்தா கட்டிக்குடுத்துத்தானே ஆவணும்?''
 அவர்களும் அம்மாவின் எண்ணத்தைப் புரிந்து வைத்திருந்ததினால், "இப்பப் பிரச்னை அக்கா பையன் அருணுக்கு நீ குடுப்பியா?ங்கறதுதான்''" என்றொரு சிக்கலான கேள்வியைக் கேட்கவும் அப்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அசடு வழிந்தார்.
 மாமாவிற்கு என்னைக் கொடுக்க பிரியமில்லாதிருந்த அம்மா, மனைவி சொல்றதக் கேக்குறதா... உறவுக்காரர்கள் சொல்றதைக் கேக்குறதா என்கிற குழப்பத்தில் தவிப்போடிருந்த அப்பா, அம்மாவின் வாய்க்கு பயந்தவராய் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாய் போனதுபோல, " எனக்கு இஷ்டமில்ல. நீ வேற எடத்துல பாத்து பொண்ணு கட்டிக்க''ன்னு அத்தையிடம் நறுக்குத் தெறித்தாற்போல கறாராகச் சொல்லிவிட்டார். அப்பாவின் இந்த திடீர் பேச்சினால் வந்திருந்த அனைவர் முகத்திலும் திகில் படர்ந்தது போன்ற வெளுப்புத் தெரிந்தது. எப்படியாவது பேசி சேர்த்து வச்சிடலாம்ன்னு வந்திருந்தவர்களுக்கு அம்மா அப்பாவின் பேச்சு வருத்தத்தைத் தரவே எதுவும் பேசாமல் எழுந்து கிளம்பத் தயாரானார்கள்.
 அங்கிருந்தவர்கள் அனைவரின் மனப்போக்கினையும் துல்லியமாய் கணக்கிட்ட பெரியப்பா யாரையும் எழுந்திரிக்க விடாதவராய் உட்காரும்படியாய்க் கைகாட்டினார். முக்கியமான முடிவெடுக்கப்போகிறாரென்பது மட்டும் புரிவதுபோலிருந்தது எனக்கு.
 பெரியப்பாவின் இந்த செய்கையினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். அல்லது இதன் பின்னணியென்னவாயிருக்கும் என்கிற யோசனையாய் கூட இருக்கலாம். ஒருவர் முகத்தையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அமைதி நிலவியது. யார் முதலில் வாயைத் திறப்பது என்பது போலிருந்தது அவர்களிடையே திகழ்ந்த மௌனம்.
 "எப்பவுமே ஒரு விஷயத்த வளவளன்னு இழுத்துக்கிட்டிருக்கக் கூடாது'' என்று ஆரம்பித்த பெரியப்பா ஏதோ யோசனையாய் என்னைப் பார்த்தவர், "ஆனந்தி ஒரு சொம்பு தண்ணிக்குடும்மா...'' என்றார். நான் உள்ளே சென்று சொம்பையெடுத்து தண்ணீர் முகர்ந்து கொண்டு பெரியப்பாவிடம் கொடுக்க வர அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் இல்லாததினால் நான் சொம்புடன் வெளியில் வந்தேன். வெளியே நின்றிருந்த அவரிடம் தண்ணீர் சொம்பை நீட்டியதும் கையில் வாங்கி அண்ணாந்து வாயிலூற்றி கொப்பளித்துத் துப்பி மீண்டும் வாயில் தண்ணீரையூற்றும் அந்த இடைப்பட்ட நேரத்தில் ""ஆனந்தி... நீ என்னம்மா சொல்ற... ஓங்கல்யாண விஷயமாத்தான் பேசிக்கிட்டிருக்கோம். மாமனக் கட்டிக்க உனக்கு இஷ்டமிருக்கா இல்லையான்னு நீ எங்கிட்ட வெளிப்படையாச் சொல்லு. உனக்கு இஷ்டமில்லேன்னா யாரும் எதுவும் பேசாம எல்லாத்தையும் அப்படியே நிறுத்திட்றோம்''" என்று மெதுவாய்க் கெட்டு என் பதிலுக்கான நேரத்தினை அவர் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை மட்டுமே என்பதனை சொல்லாமல் சொல்லி தண்ணீரை மடக்மடக்கென்று குடித்து என்ன சொல்லப் போகிறேனென என்னைப் பார்த்தார்.
 எனக்கான அவகாசம் அவர் தண்ணீர் குடித்து முடிக்கும்வரை மட்டுமே என்றிருந்தாலும் நான் என் மனதில் மாமாவை நினைத்திருந்ததினால் சட்டென்று சொன்னேன்: "எனக்கு இஷ்டந்தான் பெரியப்பா...'' என்றேன்.
 பெரியப்பா என்னிடம் கேட்டதோ நான் அவரிடம் சொன்னதோ யாருக்கும் தெரிந்திருக்காது என்றே எண்ணுகிறேன். அப்படியே நாங்கள் பேசியதனைக் கேட்டிருந்தாலும் அது இந்த விஷயமாயிருக்காது. வேறெதுவாவது பேசியிருக்கலாம் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் அந்த குறுகிய விநாடிகளில் இந்த விஷயத்தைப் பேசியிருக்க வாய்ப்பேயிருக்காது என்றுதான் அவர்கள் நினைக்கக்கூடும். அல்லது நாங்கள் பேசியதைக் கவனியாமல் ஆனந்தி விஷயத்தில் நாம் சரியாகத்தான் யோசித்திருக்கிறோமா... என்கிற சிந்தனையிலிருந்து கொண்டிருக்கலாம்.
 பெரியப்பா மீண்டும் வந்து அவரிடத்தில் உட்கார்ந்து, "நீ அருணுக்கு குடுக்கக் கூடாதுன்னு இருக்கிறதுக்கு என்ன காரணம்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?'' என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டார். கட்டிக்குடுக்கிற நிலைமையில பொருளாதாரம் இடங்கொடுக்கலேங்கறதுதான் அப்பாவின் பதிலாயிருந்தது. அத்தை அதனையொரு பிரச்னையாவே எடுத்துக்கொள்ளாதவராய், "என்னா செய்யப் போறீங்க. எதுவும் செய்ய வேணாம். பொண்ணுக் குடுத்தாப் போதும்'' என்று பிடிவாதமாய் இளகி நிற்க பெரியப்பா சமரசம் பேசினார். அப்பாவைப் பொருத்தவரை பொருளாதாரமொன்றே பிரச்னையாயிருந்ததினால் அதற்கொரு முடிவு கிடைத்தவுடன் அம்மாவைப் பேசி சரிகட்டிக் கொள்ளலாம் என்கிற துணிச்சலில் வேறு வழியில்லாமல் எப்படியாவது முடிஞ்சாப் போதுமென்கிற மாதிரியே சம்மதம் தெரிவித்திருந்தார். கடைசிவரை பிடி கொடுக்காதிருந்த அம்மாவை அவர்கள் வலையில் விழும்படியாய் தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனமொன்றில் சைட் இன்சார்ஜ் ஆக வேலை. மாதம் இருபதாயிரம் சம்பளம் என்றதும் வாய்பிளந்த அம்மா, "அண்ணன் மகனும் ஊதாரியா சுத்துறான். சரி எப்படியாவது இருந்துட்டுப் போவட்டும்'ன்னு நினைச்சாங்களோ என்னவோ... இருதலைக்கொள்ளி எறும்பாய் இருந்தவர் சமாதானமானவராய் ஒப்புக்கொள்ளும்படியாய் ஆனதில் என் திருமணம் இனிதே நடந்து முடிந்திருந்தது.
 அம்மாவுக்கும் என் மனசப் புரிஞ்சிக்கத் தெரியில. அப்பாவும் கட்சி, நண்பர்கள்ன்னு சுத்த கிளம்பிடுறாரு. யாருக்கும் என்னைப் பத்தின அக்கறையிருக்கிறதாவே தோணல. ஆனா மாமாவை அப்படி நினைக்கத் தோணல. அவுங்க என் நினைப்பாத்தான் இருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். மாமாவைப் பிரிஞ்சி வந்திருந்த ஆறேழு மாதங்களுக்குள்ளேயே எத்தனையோ முறை வந்து என்னை இட்டுக்கிட்டு போறதுக்காக எப்படியெல்லாமோ முயற்சிப் பண்ணியிருக்காங்க. அப்பெல்லாம் இங்க வந்ததுனால என்னால அம்மாவால அப்பாவாலயும் அவமானங்களைச் சுமந்துதான்போயிருக்காங்க. மாமாவை மறக்க வைக்க அம்மா செஞ்ச தந்திரங்கள்தான் எத்தனையெத்தனை?
 "ஏய்... சின்னம்மா வரச்சொல்லுது. போய் ஒரு நாலு நாளைக்கு இருந்துட்டு வாயேன்டி. உனக்கும் அவனப்பத்தின "ஞாபகம் இல்லாம இருக்கும்''" என்று மாமாவை மறக்க மறந்திருக்க அம்மாவே எனக்கு யோசனை சொல்லியிருக்கிறார்களே என்று நினைக்கும்பொழுது இப்பொழுது நினைத்தாலும் மிகுந்த வேதனையாயிருக்கிறது. அப்போது எனக்கு அது புரியாததினால் அம்மா சொன்னார்களேயென்று சின்னம்மா வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.
 டவுன் கடை பார்க்க பிரம்மாண்டமாய்த் தெரியும். பல மாடிக்கட்டிடங்கள் ஏதேனும் விசேஷங்கள்... சீரியல் பல்பு வெளிச்சம் ரேடியோ பாட்டுச் சத்தம். சென்றுகொண்டும் வந்து கொண்டும் அநேகம் பேர். பரபரப்பான டவுன் வாழ்க்கையை ரசிக்கலாம் என்கிற உந்துதல். அம்மா சொன்னவுடனே சின்னம்மா வீட்டிற்குச் செல்ல உடன்பட்டது எல்லாமே மாமாவை மறக்க வைப்பதற்கான ஒரு சூழ்ச்சியென்பதனை அறியாமலேயே இருந்திருக்கிறேன். எவ்வளவுதான் சுகபோகமான வாழ்க்கையை என் கண் முன் கொண்டுவந்து நிறுத்தினாலும் நான் மாமாவோடு இருந்த அந்த நினைவுகளினால் அவரை மறக்கவும் முடியல. நினைக்காம இருக்கவும் முடியல.
 கணவன் மனைவிக்குள்ளயிருக்கிற ஊடலும் கூடலும் சகஜமானதுன்னு அப்ப எனக்குப்புரியல்ல. இந்த சின்ன விஷயத்தைப் பெரிசா எடுத்துக்கிட்டு கட்டுன வீட்டவிட்டு பொறந்த வீட்டுக்கு வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் எனக்குப் புரியுது. ஆனா அங்கிருந்து கிளம்பி இங்க வந்தமாதிரி இங்கிருந்து கிளம்பி அங்க போக முடியலையே...
 "ஆனந்தி நீ வந்திடு... நீயில்லாம வீடே வெறிச்சின்னு இருக்கு'' என்று என்னை அழைத்துச் செல்ல எத்தனையொமுறை வந்து கெஞ்சியிருக்கிறது மாமா. அப்பொழுதெல்லாம் இரக்கம் காட்டாத நான், இப்பொழுது அவர் வரமாட்டாரா என்பதுபோல பார்த்திருக்கிறேன்.
 விடிகாலை கோழி கூவியது. எனக்கான விடியல் ஒருநாள் வருமென்கிற நம்பிக்கையுடன் வாசல் தெளிக்க எழுந்து சென்றேன். அவர் வருவார்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுருக்கெழுத்தாளர் இவரின் "நெருஞ்சி' என்ற சிறுகதைத் தொகுப்பு 2010 - இல் வெளிவந்தது. தினமணி கதிர், கணையாழி, செம்மலர், தாமரை உட்பட பல இதழ்களில் இவருடைய கதைகள் வெளி வந்திருக்கின்றன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com