அற்புதங்கள் தரும் ஆலயங்கள்...

அற்புதம் நிறைந்த ஆலயங்கள் - 1 முதல் 4 பாகங்கள் சத்யவதனாவால் தொகுக்கப்பட்டுள்ளன
அற்புதங்கள் தரும் ஆலயங்கள்...
Updated on
3 min read

நூல் அறிமுகம்
அற்புதமான அறிமுகங்கள்!
அற்புதம் நிறைந்த ஆலயங்கள் - 1 முதல் 4 பாகங்கள் சத்யவதனாவால் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம், வேலூர் , திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள பல கோயில்கள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாகம் இரண்டில் திருச்சி , தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் , அரியலூர், கரூர், புதுக்கோட்டை ,பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்களும், பாகம் மூன்றில் மதுரை, கோவை, திருநெல்வேலி, திருவாரூர், நாமக்கல், சேலம், திருப்பூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்கள்பற்றிய தகவல்களும், பாகம் 4-இல் அயல் மாநிலங்களான கர்நாடகா, அஸ்ஸாம், ஆந்திரா, கேரளம் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன பொதுவான தகவல்கள் என்ற தலைப்பில் குட்டிக் குட்டித் தகவல்கள் 46 -உம் தொகுக்கப்பட்டுள்ளன. நான்கு பாகங்களும் அழகான கட்டமைப்புடன் தெளிவான எழுத்துக் கோர்வை உடன் அமைந்துள்ளன.
ஒவ்வொரு திருக்கோயிலின் தல வரலாறு, திருக்கோயிலின் சிறப்பம்சங்கள், அந்தத் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என பலவிவரங்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் குறிப்பிடப்பட்ட அனைத்துக் கோயில்களுக்கும் எவ்வாறு செல்ல வேண்டும்? என்பன போன்ற விவரங்கள், தொடர்பு முகவரிகள், திருக்கோயில் நேரம், வேறு வசதிகள் அங்கு ஏதேனும் இருக்கிறதா என்ற குறிப்புகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்றாலும், சில கோயில்கள் குறித்த அத்தகைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கோயில்களுக்கும் அத்தகைய தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த நூல்கள் நல்ல வழிகாட்டி குறிப்பேடுகளாக மலர்ந்திருக்கும். கோயில்களைப் பற்றிய அறிமுக நூல்கள் என இவற்றைக் குறிப்பிடலாம்.
இந்த நூலின் ஐந்தாம் பாகத்தைத் தொகுத்தளித்திருப்பவர் சி.வீரரகு. இவர் தமிழ்நாடு அரசின்முன்னாள் சுரங்கங்கள் இணை இயக்குநராகவும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார் . தன் பணிகளுக்கு இடையே ஆன்மீகத்தில்கொண்ட ஈடுபாட்டால் இந்நூலைத் தொகுத்துள்ளார்.

உத்திரகோசமங்கை சிவாலயத்தை உலகின் முதல் சிவாலயம் என அழைத்து அது பற்றிய சிறப்பு தகவல்களைத் தொகுத்து உள்ளார். இதுதவிர சுமார் 15 தலைப்புகளில் சிவராத்திரி , 1008 லிங்கங்கள், சனாதன தர்மத்தின் காலக்கணக்கு, சித்தர்களின் நெறி, விஷ்ணு சகஸ்ரநாமம் உருவான வரலாறு, வெற்றிக்கான திறவுகோல் குறித்து பரமானந்தர் எழுதியது, மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயிலின் சிறப்பு மேலும் செவிவழி செய்திகள் சரஸ்வதியின் சிறப்பு அறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் சில தகவல்கள் ஆகியவற்றை தொகுத்து ஒரு நூலாக ஆக்கியுள்ளார்.
1008 லிங்கங்களின் பெயர்களையும் பட்டியலிட்டு வழங்கியுள்ளார். அந்த பெயர்களைப் படிப்பதற்கே பலருக்குப் பொறுமை தேவைப்படும் காலத்தில் அவற்றை இந்நூலில் வழங்கியிருப்பது அரிய முயற்சி. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் காலத்தில் இந்தியாவை ஆண்ட வில்லியம் காரோ என்பவர் கலெக்டராக இருந்தார் . அவர் இக்கோயிலின் அம்பாளை வழிபடுவதற்கு தனியாக துவாரம் வைத்து அதன் வழியாக வழிபட்டார் என்பன போன்ற பல சுவையான தகவல்களும் இந்நூலில் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கின்றன.


நூலிலிருந்து...
அதிர்ஷ்டம் என்றால் என்ன?

சனீஸ்வரர் சன்னதிக்கு செல்பவர்கள் அவரது முகத்தைப் பார்க்கக் கூடாது. திருவடியையே தரிசிக்க வேண்டும் என்று சொல்வர்.
நவக்கிரங்களை அடக்கி அவற்றை தன் சிம்மாசன படிக்கட்டுகளாக பயன்படுத்தினான் இராவணன். அப்போது சனீஸ்வரர், தன் உக்கிரப் பார்வையால் ராவணனைப் பார்க்க அவனுக்கு சனி பிடித்தது. அதன் பின் இராமாயணப் போரில் அவன் இறந்தான் என்பது கதை.
இப்படி சனி என்றாலே ஒருவித பயம் இருக்க திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோவிலில் சனீஸ்வரர் சன்னதியைச் சுற்றி வந்து வழிபடுகின்றனர் பக்தர்கள். அத்துடன் இங்குள்ள சனீஸ்வரரை பொங்கு சனீஸ்வரர் மற்றும் அனுக்கிரக சனீஸ்வரர் என அழைத்து தலைமுதல் பாதம் வரை தரிசிக்கின்றனர்.
சனீஸ்வரர் தலமான திருநள்ளாறில் கூட சனீஸ்வரரை வலம் வர முடியாது. ஆனால் இலத்தூர் பொங்கு சனீஸ்வரரை வலம் வரலாம். அருள் வழங்கும் நிலையில் காட்சி தருகிறார். சனீஸ்வரர் கோயில் மற்ற இடங்களில் மேற்கு நோக்கி இருக்கும் காக வாகனம், இங்கு கிழக்கு நோக்கி உள்ளது.
இவ்வாறான சனியை வணங்கினால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி மற்றும் கண்டச்சனியால் சிரமப்படுவோர் இவரை வணங்குகின்றனர். சம்பாதித்த பொருள் கையில் தங்க சனிக்கிழமைகளில் பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்கின்றனர்.
மதுரை - தென்காசி சாலையில் மதுரையிலிருந்து 153 கி.மீ.தூ ரத்தில் இலத்தூர் விலக்கு வரும். இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் கோவில் உள்ளது. தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை கிராமம் செல்லும் பஸ்கள் இவ்வூர் வழியே செல்கின்றன.

அற்புதங்கள் தரும் ஆலயங்கள்;
பாகம்-1; பக்.465; ரூ.200; பாகம் -2 ;
பக்.245; ரூ125 ;
பாகம் -3 ; பக்.301; ரூ.150;
பாகம் -4 ; பக்.151; ரூ.100 ;
நான்கு பாகங்களின்
தொகுப்பாசிரியர்: சத்யவதனா;
பாகம் -5 -
தொகுப்பாசிரியர்: சி.வீரரகு; பக்.178; ரூ.100; சத்யா பதிப்பகம், மனை எண்: 98, கதவு எண்:8, நேதாஜி தெரு, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை-75; கைபேசி: 9790828285.

இரா.இரகுநாதன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com