ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரசாயன உணவும், 'பஞ்சகர்மா'வும்!

நோயற்ற வாழ்விற்கும் - உடலின் பலத்திற்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால், நெய், தயிர், வெண்ணெய் போன்றவற்றைச் சாப்பிடச் சொல்கிறீர்கள்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரசாயன உணவும், 'பஞ்சகர்மா'வும்!
Updated on
2 min read

நோயற்ற வாழ்விற்கும் - உடலின் பலத்திற்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால், நெய், தயிர், வெண்ணெய் போன்றவற்றைச் சாப்பிடச் சொல்கிறீர்கள். ஆனால் தற்காலத்தில் விளையும் கீரைகள், பழங்கள், காய்கள் எல்லாம் ரசாயன உரம், பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தியே விளை விக்கப்படுகின்றன. இதனால், காய், கனி, பழங்கள் கீரைகளில் உண்மையான சத்துக்கள் இருக்குமா, அது எவ்வகையில் நமக்கு பயன் அளிக்கும்?  ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால், அதன் தன்மைகள் மாறுபடுமா? நாம் உண்ணும் அனைத்தும்  இரசாயன உரங்கள் கொண்டு விளைவிக்கப்படுபவை தானே? இதற்கு நீங்கள் பதில் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். 

-தாவீது ராஜா, பழவேற்காடு. 

ரசாயன உரங்கள் உண்ணும் உணவு வகைகளின் மூலமாக மனிதர்களின் குடல் வழியாக இறங்கி, ரத்தத்தில் கலந்து, உடல் உட்புறத் தாதுக்களில் பரவி, பெரும் ஆபத்தை விளைவிக்கப் போவதை முன்பே அறிந்திருந்த ஆயுர்வேதம், அவற்றை அறவே வெளியேற்றி, உடலை ஆரோக்கிய நிலைக்குத் திருப்புவதற்காக “"பஞ்சகர்மா'” எனும் சிறப்புச் சிகிச்சையை சத்ய யுகத்திற்கு முன்பே பரிந்துரை செய்திருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்! 

வாந்தி-பேதி-வஸ்தி (எனிமா) - நஸ்யம் எனும் மூக்கில் மருந்துவிடும் முறை - சிராவ்யதம் எனும் ரத்தக் குழாயைக் கீறி கெட்ட ரத்தத்தை வெளியேற்றுதல் ஆகிய இந்த ஐந்துக்கும் "பஞ்சகர்மா' என்று பெயராகும். இவற்றைச் செய்து கொள்வதற்கு முன்-ஸ்நேஹ, ஸ்வேதம் எனும் நெய்ப்புப் பொருட்களை அருந்தச் செய்து , உட்புறக் கழிவுகளை குடலுக்கும், தலைக்கும் கொண்டு வந்து, அதன் பிறகு பஞ்சகர்மா முறைகளின் மூலம் உடலைச் சுத்தப்படுத்தும் இந்த சிகிச்சை முறைகள், நம் பாரத தேசத்தில் முன்பு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது.

அவசர வாழ்க்கையை அரவணைத்துக் கொண்ட நாம், எல்லாவற்றிலும் அவசரத்தை ஏற்படுத்திக் கொண்டு,துன்புறுகிறோம். நிதானமாகக் கையாளப் பட வேண்டிய பஞ்சகர்மா சிகிச்சையை காலத்திற்கு ஏற்ப, தடாலடியாகச் செய்து உடலைச் சுத்தப்படுத்த முடியுமா ? என்று நீங்கள் கேட்டால், அதற்கு பதில் முடியாது என்றே வருத்தத்துடன் கூற வேண்டி வரும். காரணம், சிறப்பான முறையில் செய்து  முடிக்கப்படும் நெய்ப்புப் பொருளை அருந்தும் முறையால், நமக்குக் கிடைக்கும் நன்மைகளை வாக்படர் எனும் முனிவர் பட்டியலிடுகிறார்.

கொழுந்துவிடும் பசித்தீ - பரிசுத்தமான குடல் - கேடடையாத என்றும் புதிதான சப்ததாதுக்கள் - ரஸம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்தணுக்கள் (பெண்களுக்கு - மாதவிடாய் உற்பத்தி)- நல்ல உடல், மனோபலம்,  நல்ல உடல் நிறம்,  வலுவான புலன்கள்,  கிழத்தோற்றம் எளிதாக வராமல் தடுக்கப்படுவது. நூறு வருடங்கள் ஆரோக்யமான வாழ்வு.

அதற்கு அடுத்ததாக செய்யப்படும் வியர்வை சிகிச்சையினால் ஏற்படும் நன்மைகள் -  குடல், தாதுக்கள், உடல் உட்புறக் குழாய்கள், போன்ற பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுகளை கொச கொசத்த நிலைக்கு மாற்றிய நெய்ப்புகளால், பின் தொடரப்படும் வியர்வை சிகிச்சையினால், திரவ ரூபத்திற்கு உருக்கப்பட்டு, குடல் மற்றும் தலைப்பகுதிக்கு எளிதாகக் கொண்டு வரப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட சிகிச்சையின் பலனாக, குடலை வந்தடைந்திருக்கும் ரசாயனக் கழிவுகளை அகற்ற அதன் பிறகு செய்யப்படும் வாந்தி பேதி, சிகிச்சையினால், நாம் அடையும் நன்மைகள்:

புத்திக்குத் தெளிவு - புலன்களுக்கு தம் புலப் பொருட்களை நன்கு அறியும் தன்மை வலுப்படுதல் - வலுவான தாதுக்கள்- பசித்தீ சரியான அளவில் ஜ்வலித்தல் - மூப்பு தள்ளிப் போகுதல்.

அதன் பிறகு, வஸ்தி எனும் எனிமா சிகிச்சை முறையால்; உடலிலுள்ள வாயுவின் சீற்றத்தை நன்கு அடக்கி, அதன் செயல்களை திறம்பட வளர்த்துத் தரும். மூக்கில் மருந்து விடும் சிகிச்சை மூலமாக ஏற்படும் நன்மைகள்:

கழுத்து, தோள்பட்டைகள், மார்பு, வலுவடைதல் - முகத்தோல் மினுமினுப்பு - புலன்கள் வலுப்பெறுதல் - தலைமுடி நரைக்காதிருத்தல் -காரி ரத்தக் குழாயைக்கீறி, கெட்ட ரத்தத்தை வெளியேற்றுவதால்:

தெளிவான நிறம் - புலன்களின் சிறப்பான செயல்பாடு - தடையில்லாத பசி - உடல், மனம் சுகமான நிலையில் ஆரோக்யத்துடனிருத்தல் - உடல் புஷ்டி, பலம்.
இவை ஒரு முறை செய்து கொண்டால் போதாது. தகுந்த இடைவெளியில் செய்து கொள்வதால், நாம் என்றென்றும் சாப்பிட வேண்டிய காலத்தின் கட்டாயமாகிப் போன ரசாயன உரம் நிறைந்த உணவுப் பொருட்களின் கழிவுகளை அகற்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com