ஆத்தங்குடி தரைக் கற்கள்!

இன்றைய நவீன கால கட்டட வேலைப்பாடுகளில் இயற்கை முறையிலான தரைக் கற்களுக்கு அமோக வரவேற்பு உள்ளதென்றால், அது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடியில் தயாராகும் தரைக்
ஆத்தங்குடி தரைக் கற்கள்!

இன்றைய நவீன கால கட்டட வேலைப்பாடுகளில் இயற்கை முறையிலான தரைக் கற்களுக்கு அமோக வரவேற்பு உள்ளதென்றால், அது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடியில் தயாராகும் தரைக் கற்களுக்குத்தான். 

ஆம். இங்கு தயாரிக்கப்படும் தரைக் கற்கள்(டைல்ஸ்)தமிழகம், புதுச்சேரி,கர்நாடகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், மலேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. 

கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் சிறிது இதமான இளஞ்சூட்டினையும் அளிக்கும் கிரானைட் கற்களின் விலை தற்போது அதிகம். மேலும், பளிங்குக் கற்களைப் (மார்பிள்) பதித்த தரைகள், குளிர் காலத்தில் மிகவும் குளிர்ச்சி தரும். ஆனால் ஆத்தங்குடியில் அழகிய பூ வேலைப் பாடுகளுடன் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் தரைக் கற்கள் குளிர்காலத்தில் கதகதப்பையும்,கோடை காலத்தில் குளர்ச்சியையும் தர வல்லவை. 

அதுமட்டுமின்றி, குறைந்த விலை என்பதால் இதனை ஏழை,எளியோர் முதல் அனைத்துத் தரப்பினரும் வாங்கி பயன்படுத்த முடியும். ஆகவே இங்கு தயாராகும் கற்களுக்கு நமது நாடு மட்டுமின்றி வெளி நாட்டினரிடமும் நல்ல வரவேற்பு உள்ளதாக ஆத்தங்குடியில் தரைக் கற்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எம்.செந்தில்குமார் தெரிவிக்கின்றார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

""கடந்த மூன்று தலைமுறைகளாக ஆத்தங்குடியில் தரைக் கற்கள் தயாரிக்கும் பணியினை குடிசைத்  தொழிலாக மேற்கொண்டு வருகின்றோம். இங்கு 25 தயாரிப்புக் கூடங்கள் உள்ளன. இந்தத் தொழில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இந்தப் பகுதியில் கிடைக்கும் தரமான மண்ணின் தன்மை காரணமாகத் தான் தரைக் கற்கள் தரமானதாக 
உள்ளன. 

இயற்கை முறையில் மண், சிமெண்ட் ஆகியவற்றின் மூலம் தரைக்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த வகை கற்கள் 8 சதுர அங்குலம்,10 சதுர அங்குலம்,12 சதுர அங்குலம் என்ற அளவுகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, சுமார் நூற்று இருபதுக்கும் மேற்பட்ட அழகிய பூ  வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் தரைக்கற்கள் தயாரிப்புப் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்ப கால கட்டத்தில் காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி
களில் வசித்து வந்த நகரத்தார்கள் இந்த கற்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். இயற்கையான முறையில் தயாரிப்பு, விலை குறைவு, நீண்ட நாள் உழைப்பு, மிதமான குளிர்ச்சி மற்றும் நிறம் மங்காத சாயங்களின் பயன்பாடு போன்ற காரணங்களால்  இவை வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. 
ஆகவே நாளடைவில் காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக வரும் வெளிநாட்டினரும் ஆத்தங்குடி தரைக்கற்களை வாங்கத் தொடங்கினர்.   

ஒரு பணியாளர் நாளொன்றுக்கு 40 முதல் 50 கற்கள் தயாரிக்க முடியும். ஒரு கல்லின் விலை ரூ.45-க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும், தற்போதைய நிலையில் போதிய அளவு வருமானம் இருப்பது மனநிறைவாக உள்ளது. இந்தத் தொழிலை எங்களது குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு விருப்பமாக உள்ளது. 

ஆனால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இனி வரும் காலங்களில் இந்தத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமானதாக இருக்காது என்பதால், எங்கள் பிள்ளைகள் படித்து முடித்தவுடன் வேறு தொழிலுக்குச் செல்லவே விரும்புகின்றனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com