
கசகசவென புரள்வுகள் பெருகின. அசங்கலில் விழித்துக் கொண்டாள். ""ஒங்களுக்கு என்ன ஆச்சு?... ஏ... சாமக் கோடாங்கி மாதிரி முழிச்சுக் கெடக்கீக...'' அவனது பதிலை எதிர்பாராமல் உறங்கியும் போனாள்.
அனற் புழுவென அவன் துடிக்கும் காரணம் அறிவாள் அவள். எனினும் சேர்ந்து வாங்கிக் கொள்ள முடியாது. "அழுது அழுது பெத்தாலும் அவதான் பெறணும்' என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல.
அடுக்களையில் பூனையின் உருட்டல். சரேலென உள் சென்றான். பாய்ந்த வேகம் தெரியவில்லை. வால் நுனியையும் மறைத்துக் கொண்டது வெருகு. வீட்டுப் பூனைகள் வைத்த பாலைத் தவிர ஒன்றையும் தொடாது. வெருகுப் பூனைகள் நடுநிசிக் கள்ளர்கள். எத்தனை மூடினாலும் எடுத்துக் கொள்கிறது லாகவமாய்.
மொட்டை மாடியில் நிலா. வானெங்கும் பொழிந்தது. "உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கிலே ஒளி உண்டாம்' ஏனோ பாரதி நினைவு. மன இருள். அமைதியின்மையின் பேரிருள்.
விட்டம் பார்ப்பதும் புட்டம் நிமிர்வதுமாய் பின்னிரவைத் தாண்டி புது நாளும் வந்தது. போட்டது போட்டபடி செல்ல வேண்டும் அவள். நீட்ட வேண்டும் சுளையாய். மறுசொல் இல்லை அங்கு. வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான்.
விதம் விதமாய் பெருகின குழுக்கள். கிள்ளியும் தந்தன. அள்ளியும் வழங்கின. சிட்டைகள் திமிறின கை கொள்ளாமல். கூட்டிக் கழித்தால் மூணு லட்சம், நாலு லட்சம் என கால்கள் முளைத்தன. தவிர நாள், வாரம், மாதமென கந்துக்காரன் கூண்டு.
பெண்ணும் பையனும் கண்ணயர்ந்திருந்தார்கள். கால்மாடு தலைமாடென வழிந்தது தூக்கம். "பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லையொரு துன்பமடா' இழைந்து வரும் பாடல். கடனறியாக் குழந்தைகள். தகப்பனின் பாடறியாச் செல்வங்கள். தானும் ஒன்றென இருந்து கொள்கிறாள் அவள். "பொருளீட்டும் தொழிலற்ற இரவுகளில் தூக்கம் தொலைப்பதால் கடன்கள் தீர்வதற்கில்லை'யென உணர்ந்திருக்கலாம் அவள்.
"ஒவ்வொன்னாக் கொறைக்யணும்...' என்பான் அவன்.
""ஒங்க மொள்ளைக்கு எத எதக் கொறப்பீங்க?'' கேட்பாள் அவள்.
ஒருநாள் விட்டு ஒருநாள் குழுத்தலைவிகளின் வீடுகள், "வா...வா'வென அழைத்தன. ஆண் சுய உதவிக் குழுக்கள் பெயருக்கு என்றான பின் பெண்கள் சுய உதவிக் குழுக்களே பெருகி வளர்ந்தன. மான அவமானங்களுக்கு அஞ்சி அவர்கள்தான் "வாயைக் கட்டி வயித்தைக் கட்டி' கடன் கட்டுவார்கள் என்று "தெய்வ சாட்சி'யாய் நிறுத்தப்பட்டார்கள். கடனாளியாவதன் மூலமாய் ஆணுக்குச் சமமாய் மாற "உறுதி மொழி' எடுக்க அவள் முன் சென்றாள். "இறைவணக்கம்' முடிந்து பிள்ளைகள் வகுப்பறைகளுக்கு பின் சென்றனர்.
ஆபீஸர்ப் பையன்கள் எட்டு என்றாள் ஏழு ஐம்பதுக்கே சபைக்கு வந்தார்கள். அத்தக் கூலி அரைக் கூலி இழந்து பெண்கள் காத்திருந்தார்கள்.
"கடன் பெறுவதும் தொழில் செய்வதும் அடிப்படை உரிமை. முறையாகக் கட்டி, மீண்டும் மீண்டும் வாங்குவேன். கடன் வாங்குவதன் மூலம் நாட்டையும் வீட்டையும் வளப்படுத்துவேன். ஒருவர் கட்டாவிட்டாலும் அவருக்காகப் பொறுப்பேற்றுக் கட்டுவேன். சங்க விதிகளைக் காப்பேன். சங்க ஒற்றுமை பேணுவேன்' உறுதி மொழிக்குள் வந்து சேராதவர்களுக்கு உவட்டி விடும். குழுத் தலைவிகள் ஆட்டம் போடுவார்கள். குவலயத்திற்கே ராணிபோல் கொம்பு தூக்கி ஊதுவார்கள். ""வாங்கத் தெரியுது... நல்லா வாக்கட்ட போடத் தெரியுது... வந்து கட்டத்தே வலிக்குது. இவளுகளெல்லாம் சங்கத்துல சேரலைன்னு யார் அழுதாக...''
மொட்டை மாடிகளிலும், முற்றங்களிலும் சபைகள் கூடின. புழங்க ஏதுவற்ற தலைவிகள் வீடெனில் தெருக்களில் சேர் போட்டார்கள். ஆபீஸர்ப் பையன்களின் தோரணைகள் எம்.எல்.ஏ, மந்திரிகளைக் கொண்டிருந்தது. அவர்களது சுட்டு விரல்களுக்குக் கட்டுப்பட்டவர்களைப் போல் பெண்கள் அடங்கி ஒடுங்கி அமர்ந்தார்கள்.
எழுவது ஒன்றுதான் விழாமல் இருக்க உதவும். ஒருபக்கம் விடிவதற்குள் வியாபாரக் குரல் எழுப்ப முடியாது. தூக்கச் சடவுடன் இருப்பார்கள். வெள்ளன எழுந்தவர்களின் கவனம் சாணம் தெளிப்பதிலும், கோலம் வரைவதிலும் இருக்கும். எனினும் பார்க்க வேண்டும். எண்ணி எழுபது பாக்கெட்டுகள் கால் கிலோவும் அரைக் கிலோவுமாக இருந்தன. "கையில காசு... வாயில தோச' என்றால்தான் கதை நடத்த முடியும். சீவி முடித்து சீருடை அணிந்து ஒட்டகச் சுமையுடன் பிள்ளைகள் ஆட்டோ, பஸ்களெனப் புகுவதற்குள் டப்பாக்களில் விழ வேண்டும் தின்பண்டங்கள்.
இரு வேளை அலைந்தாலே சங்கம் கட்டமுடியும் என்றிருந்தால் அவள் சுதாரித்துக் கொள்வாள். ஆபீஸர்ப் பையன்கள் "சுடு தண்ணி'யைக் காலில் ஊற்றிக் கொண்டு நிற்பார்கள். அவகாசம் ஒரு மணி நேரம் என்றாள் ஒரு மணி நேரம் தான். தலையை அடமானம் வைத்தாவது முடிக்க வேண்டும்.
அதற்குள் கொடுத்து உதவுகிறவர்களைத் தேடி அலைந்தாள். ஆயிரம் கைமாற்றுக்கு மாலைக்குள் ஆயிரத்து நூறு. விடிந்தால் ஆயிரத்து இருநூறு. வட்டி குட்டி போடுவதுடன் பன்றிகள் பல குட்டிகள் போட்டன.
திருமண மாதத்தில் உருப் பெற்ற குழுக் கடன்கள் பருப் பொருளாகி பாறாங்கல்லாய் அழுத்தின. ""எட்டுக் குத்துக்கும் எளையதுக கூட ஆனமான தொழில்கள பாத்து அரசனாப் பொழய்க்கிதுக... நீங்க என்னாடான்னா தொத்த சைக்கிள வச்சுக்கிட்டு தொண்ணாந்து கெடக்கீக...'' ஒரு நாளைக்குப் பத்து தரமாவது சொல்வாள். வருஷத்திற்கு எத்தனை தடவை என்று எண்ணிக் கொள்வான். எருமை மாட்டில் மழை விழுந்தது.
கேட்டுத் தவித்து கிடைக்காத காசுகள் கூரையைப் பிளந்து கொட்டின. வலிய ஆள் சேர்த்துவழங்கும் வினோதங்கள் நடந்தன. கடைசியில் ஓர் ஒப்புதலைப் பெறாமல் குழுத் தலைவிகள் வெளியேறியதில்லை. பெண்களின் சொந்தக் காலில் நிற்க உருவானதெல்லாம் ஆண்களின் பந்தல் காலில் விழுந்து கொண்டிருந்தன. ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு, பேங் பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஒரிஜினல், ஜெராக்ஸ் என்கிற பேச்சுகள் வீடு முழுவதையும் பீடித்துக் கொண்டன. தெருவெங்கும் ஆங்கில முழக்கமாய் பரவியுமிருந்தது.
ஒவ்வொன்றிலும் பத்துக் காப்பி, இருபது காப்பி என எடுத்து ராணுவ தயார் நிலையில் இருந்தார்கள். ஒரிஜினல், ஜெராக்ஸ் அடங்கிய மஞ்சள் பை மீது எப்போதும் ஒரு கண் இருந்தது.
"பணம் போடுறாக...' என்கிற நாட்களில் கண்ணுறங்காது. அரைகுறை வியாபாரத்தோடு பதறி வருவான். அதற்குள் அவள் சங்க ஆபீஸ் போய்ச் சேர்ந்திருப்பாள். கால் மூளை செத்துக் காசை வாங்குவதற்குள் கண்ணீர் பிதுங்கிவிடும். பசித்த வயிற்றுக்குச் சிறிது புளிச்சாதமோ தயிர்ச் சாதமோ தருவார்கள். பெருமாள் கோயில் பொங்கச் சோறு நினைவுக்கு வரும். பொரியைத் தின்று தண்ணீர் குடித்தாற் போல் பசி அடங்காது.
நீட்டிய இடமெல்லாம் அவள் ஐம்பது என்றால் அதில் பாதி கையெழுத்தை அவன் போட வேண்டும். ஒரிஜினல், ஜெராக்ஸ் தாள்களுடன் பணத்தாள் சேரும் நாள் அது ஒன்றுதான். குழுத்தலைவிகள் தொகைக்கேற்ப ஆயிரம், ரெண்டாயிரம் எடுத்துக் கொள்வார்கள். நாகர் ரெஸ்டாரண்டிலோ எவரெஸ்ட் ஹோட்டலிலோ பிரியாணிக்கு அமர்வார்கள். ஆட்டோவுக்குப் பகிர்ந்தளிப்பார்கள். ஐம்பத்து இரண்டு வாரங்கள் இழுபட்டு, துவைபட்டு லோன் அடைந்ததும் மற்றொரு "பணம் போடும்' நாளுக்காக மஞ்சள் பையுடன் காத்திருப்பார்கள்.
மொத்த கடைகளில் இனிப்பு கார வகைகள் வாங்கி மறு எடை போட்டு விற்பதும் ஒரு தொழில்தான். "செய்யும் தொழிலே தெய்வம்' ஊர்கள் தோறும் முகங்கள் வந்தன. சொந்தங்கள் கூடின. கால் கிலோ பாக்கிக்காக தெரு முக்கில் மறைபவர்களும் பெருகினார்கள்.
நடு வயிற்றில் அவளது கை விழுந்திருந்தது. ஒருச்சாய்த்து உடம்போடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தாள். ஓசையின்றி விலக்கி எழ முயன்றான். என்ன மாயமோ விழித்துக் கொண்டாள். அடித்துப் போட்டாற் போல் உறங்கவும் செய்கிறாள். அசங்கலில் எழுந்தும் விடுகிறாள். அப்படியொரு வாகு. அறியாக் குழந்தையின் வாகு, வரம்தான்.
""செவராத்திரிதான் போல...'' என்றாள்.
""முழிச்சுக் கெடந்தா எல்லாம் கெடச்சிருமா?... முழுசா தூங்கி எந்திரிச்சுப் போனாத்தான வெடுப்பா அலஞ்சு ஏவாரம் பண்ணல முடியும்... இல்லேன்னா எதப் பாத்தாலும் கடுப்பு வரும்...'' கனிவு ததும்பும் சொற்களுடன் பார்த்தாள்.
குருட்டழுக்கேறிய பனியன், வெளிறிய கைலி, ஒட்டடைக் குச்சியாய் நின்றான். அந்தக் கோலம் அவளை என்னவோ பண்ணியது. பாடுகள் தீர்ந்து எப்போது நன்றாகப் படுத்து உறங்குவான் என்று
தெரியவில்லை.
எங்காவது கேட்டு வைத்திருக்கலாம். அந்த விடியலை அவள் அணுகிய விதம் அப்படி எண்ண வைத்தது. எதுவெனிலும் அவளிடமிருந்து ஒரு வார்த்தையை வாங்கி விட முடியாது.
நகர்கிற அவனது பாதங்களில் வலது கையை அழுந்தப் பதித்தாள். விலகிக் கொள்ள முயன்றான். விடவில்லை. இடது கையால் முழங்கால்களை வளைத்துப் பிடித்தாள். தலைமாட்டில் இருந்த டைகர் பாமை எடுத்தாள். கரகரவெனத் தேய்த்தாள். வலிக்கு இதமாயிருந்தது. சற்று அழுத்தினாள்.""ஆ'' என்றான்.
""இந்த வலியோட எப்படி சைக்கிள் மிதிப்பீக..?''என்றாள். ""சரக்கு வேற பத்தாம இருக்கு... அதிலயும் கடன் போனா எப்புடி சங்கம் கட்றது?''
""வேற என்ன பண்றது?... போற வேலைக்கு போயித்தான ஆகணும்... இருப்புக் காசா வச்சிக்கிட்டிருக்கோம்... எடுத்து நீட்ட...''
அவள் அவனை ஆதூரத்துடன் பார்த்தாள். உடம்போடு சேர்த்து சைக்கிளும் பிணைந்திருந்தது. கர்ணணுக்கு கவச குண்டலம்.
இன்னொரு விரல் டைகர் பாமைத் தோண்டினாள். அவன் நின்ற வண்ணமே மயங்கினான். அமர்ந்து அவளை கட்டிக் கொண்டான்.
""நாயா பேயா அலஞ்சாலும் ஒனக்கு ஒரு நல்லதப் பண்ண முடியல... மொத்த சத்தமா எடுத்தாலும் முளிமூக்குக்கு கா பவுனு போட வக்கில்ல... கடன வாங்கி... கடனக் கட்டி இப்புடியே காலம் ஓடிரும் போல்ருக்கு...'' விரக்தியாய்ச் சிரித்தான்.
அவள் அவனது தலையைக் கோதினாள். கூட்டிப் பிடித்துச் சிலுப்பினாள்.
""ஏ கழுத... விடு... புரு புருங்குது...'' என்றான்.
அவள் புன்னகைத்தபடியே முடியை விட்டாள்.
""கடன் குடுக்கும் போதும், வாரந் தவறாம திருப்பிக்குடுக்கும் போதும் கடன் பெறுவதால் விளையும் நன்மைகள்னு ஒரு பிரசங்கமே பண்றாய்ங்க... இன்னிக்கிருக்கிற ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள்ல நன்மைகள் நமக்கா சங்கத்துக்காரய்ங்களுக்காணு வெளங்கல...'' பேசிக் கொண்டே அவனது பனியனைத் தொட்டாள். ஓரிடத்தில் ஓட்டை இருந்தது. விரல் விட்டுக் கிழித்து விடுவாள் போல் தோன்றியது.
""இதெல்லாம் எதுக்கு?... விடிய ஆபீஸர்ப் பையங்க வந்து நிப்பாய்ங்களே..?'' என்றான்
""ஆமாமா... அவய்ங்க வரத்தானே செய்வாங்க...'' என்றாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.