சொன்னால் நம்பமாட்டீர்கள் ! - 36

திருச்சியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு சென்னைக்கு ரயில் ஏற ஜங்ஷனுக்கு வந்தேன். முதல் வகுப்பு டிக்கட் கையிலிருந்தாலும் அந்த வண்டியிலே இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் ! - 36

அறிஞர் அண்ணாவுடன்


திருச்சியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு சென்னைக்கு ரயில் ஏற ஜங்ஷனுக்கு வந்தேன். முதல் வகுப்பு டிக்கட் கையிலிருந்தாலும் அந்த வண்டியிலே இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு போலீஸ் ஆபீஸர் என் முன்னால் வந்து ""உங்களை சி.எம். கூப்பிடுகிறார்'' என்றார்.

""யார் திரு. அண்ணாதுரை அவர்களா?'' என்றேன்.

ஆம்'' என்றார்.

""சரி'' என்று அவரைப் பின்பற்றி அண்ணா இருந்த கம்பார்ட்மெண்ட்டுக்குப் போனேன். அண்ணா என்னை அன்புடன் வரவேற்று, ""சென்னைக்குத் தானே?'' என்றார்.

""ஆம்''  என்றேன்.

""என்னுடனே பிரயாணம் செய்வதில் ஆட்சேபமில்லையே?'' என்றார்.

""ஆட்சேபமில்லை; ஆனால் தங்களுக்கு அசெளகரியமாக இருக்குமே''  என்றேன்.

""எனக்கு ஒரு அசெளகரியமுமில்லை. சொல்லப் போனால் உங்களுக்குத்தான் அசெளகரியமாக இருக்கும்'' என்றார்.

""எனக்கென்ன அசெளகரியம்?'' என்றேன் நான்.

""சீக்கிரத்தில் தூங்கவிடாமல், வெகு நேரம் நான் பேசிக் கொண்டிருப்பேனே'' என்றார்.

""தங்கள் பேச்சைக் கேட்க எவ்வளவோ பேர் தவம் கிடக்கிறார்கள். வலிய வரும் சீதேவியை இழந்து விடுவேனா?'' என்று சொல்லி அவருடன் பிரயாணத்தைத் துவங்கினேன். ரயில் நகர ஆரம்பித்ததும் ""தங்களிடம் முதல் வகுப்பு டிக்கட் இருக்கிறதா?'' என்று கேட்டார்.

""வித் அவுட்டில் வருவதாக நினைத்து விட்டீர்களா? இதோ எனது முதல் வகுப்பு டிக்கட்''  என்று டிக்கெட்டைக் காண்பித்தேன்.

""என் தம்பிமார்களில் சிலர் இப்படி என்னுடன் ஏறிக்கொண்டு அந்தத் தைரியத்தில் டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்ததுண்டு. அவர்களுக்காக நான் டிக்கட் வாங்கிவிடுவது வழக்கம்'' என்றார்.

""நான் உங்களை நம்பிப் பிரயாணம் செய்பவனில்லையே'' என்றேன்.

""நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து எனக்குப் புரிகிறது. திருச்சிக்கு எங்கே வந்தீர்கள்?'' என்று கேட்டார்.

""ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்காக வந்தேன்'' என்றேன்.

""ரொம்பத் தாக்கிப் பேசினீர்களோ?'' என்று சொல்லிவிட்டு, ""நீங்க தாக்கிப் பேசினாலும் நானும் என் தம்பிமார்களும் கோபப்படுவதில்லை. ஏனென்றால் அதிலுள்ள நகைச்சுவை எங்களைச் சிரிக்க வைத்து விடுகிறது'' என்றார்.

""வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம்'' என்றேன்.

""அது சரி. தி.மு.க. ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?'' என்று ஒரு எக்கச்சக்கமான கேள்வியைக் கேட்டார். நான் சிறிது யோசனை செய்தேன். ஆனால் அண்ணாவோ, ""எதற்கு யோசனை செய்கிறீர்கள்? உங்கள் மனதில் இருப்பதைச் சொன்னால்தானே எனக்கும் சில விஷயங்கள் புரியும்'' என்றார்.

""நூல் தீருகிறவரை கழி சுற்றிக் கொண்டேயிருக்கும்'' என்றேன். 

""விளக்கம் தேவை'' என்றார்.
""இந்தி எதிர்ப்பு என்ற மாயை தீரும்வரை தி.மு.க. ஆட்சி இருக்கும்'' என்றேன்.
""இதுதான் காங்கிரஸ்காரர்களுடைய அபிப்பிராயமா?'' என்றார்.
""பெரும்பாலோருடைய எண்ணம்'' என்றேன்.
""அது சரி. 67 தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா?'' என்றார்.
""என் சொந்த அபிப்பிராயம் 62 தேர்தலில் தங்களைக் காஞ்சீபுரத்தில் தோற்கடித்ததுதான் 67-இல் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம்'' என்றேன்.
""எப்படி'' என்றார்.
""தங்களை 62-இல் வெற்றி பெற விட்டிருந்தால் தாங்கள் இவ்வளவு முனைப்பாக வேலை செய்து, தங்களுக்குப் பரம எதிரியான ராஜாஜி முதலியவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கமாட்டீர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டிருந்திருப்பீர்கள். காலம் ஓடியிருக்கும். இதை நான் அப்போதே காமராசரிடம் சொன்னேன். காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும் மறுத்துவிட்டேன்'' என்றேன்.
""தாங்கள் சொல்வது மனித இயல்பை ஒட்டிய சங்கதிதான். இருந்தாலும், மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்திய பிறகு மக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டாமா?'' என்றார்.
""மக்களுக்கு மதிப்புக் கொடுப்போம். ஆனால் உங்கள் கட்சியை நாங்கள் மதிக்க முடியவில்லையே'' என்றேன்.
""பந்தை காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் எங்கோ வீசி எறிய, அது உங்கள் மீதே வந்து தாக்கும்போது நீங்கள் வேறு யாரையும் குறை கூறிப் பயன் இல்லை'' என்றார்.
பின்னர் இருவரும் படுத்துத் தூங்கிவிட்டோம். காலை எழுந்ததும் செங்கற்பட்டு ஸ்டேஷனில் அன்புடன் எனக்குக் காலை ஆகாரத்தை அவரே பரிமாறினார். அது முடிந்ததும், என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.
அது நான் எழுதிய ஒரு நாவல். தலைப்பு  "மானமே பெரிது' என்பதாகும். 
""இந்த நாவல் நம் சந்திப்பின் நினைவாக என்னிடமே இருக்கட்டும். அதில் அன்பளிப்பு என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள்'' என்று புத்தகத்தை நீட்டினார். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.
மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும் அண்ணாவிடம் விடைபெற்றுக் கொண்டு ரயிலை விட்டு இறங்கினேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். உண்மையில் என் மனத்தில் அது வரையில் அண்ணாவைப் பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனை விட்டு ரயில் போனதைப் போல் என் இதயத்தை விட்டுப் போய் விட்டது.
அன்பிற்கு அளவுண்டோ?
சக்கரவர்த்தி திரு. ராஜகோபாலச்சாரியார் அவர்களிடம் எனக்குச் சிறு வயது முதற்கொண்டு அதிகப்
படியான ஈடுபாடு உண்டு. காரணம் சிறுவயதிலேயே கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியவற்றைப் படித்து, அதை மனதில் பதிய வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.
கல்கி அவர்கள் அடிக்கடி ராஜாஜி அவர்களைப் பற்றி எழுதும் கட்டுரைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்து அரசியலில் ராஜாஜியைப் பின்பற்றுபவனாக என்னை அறியாமலேயே நான் மாறிவிட்டேன்.
ராஜாஜியிடம் ஒரு தெய்வீகப் பக்தியை கல்கி அவர்களின் எழுத்து எனக்கு ஊட்டியது. நான் சென்னைக்கு வந்து குடியேறியபோது ராஜாஜி அவர்களின் அன்பை நம்பியே வந்தேன்.
ராஜாஜி அவர்களும் என்னிடம் மிகுந்த பிரியம் காட்டி என்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருந்து வந்தார்கள். சென்னையில் தியாகராய நகர் பனகல் பார்க் எதிரில் "தமிழ்ப் பண்ணை' என்ற புத்தக வெளியீட்டுப் பதிப்பக நிலையம் துவக்கியபோது ராஜாஜி அவர்களின் ஆசியுடன் துவக்கினேன்.
அப்போது அரசியலில் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் ஒரு சிக்கலான நிலைமை உருவாகி இருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் பெரும்பாலோர் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைச்சாலையில் இருந்தார்கள்.
ராஜாஜி அவர்கள் ஆகஸ்ட் புரட்சியை ஆதரிக்காததினால் அவர் மட்டும் வெளியில் இருந்தார். கட்சி வேலைகளோ அரசியல் வேலைகளோ எதுவும் இல்லாததினால் இலக்கியத்தில் மனதை செலுத்திக் கொண்டு இருந்தார். அதனால் நான் "தமிழ்ப் பண்ணை' ஆரம்பித்தது அவருக்கு ஒரு வாய்ப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஆகவே தினம் தினம் தமிழ்ப் பண்ணைக்கு வந்து சிறிது நேரம் புத்தகங்களின் நடுவில் பொழுதுபோக்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
தினம் தினம் ராஜாஜி அவர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றதனால் பல உயர்ந்த விஷயங்களை அவரிடம் அப்போதைக்கப்போது நான் கற்றுக் கொள்ள ஏதுவாக இருந்தது. திடீரென்று ஒருநாள் ராஜாஜி அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நான் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டு இருந்தேன்.
ராஜாஜி வந்தது அறிந்ததும் வேகமாக கை அலம்பி விட்டு ஓடி வந்தேன். அதற்குள் ராஜாஜி நான் சிற்றுண்டி அருந்தும் இடத்திற்கு வந்து விட்டார். 
""பாதி சாப்பிட்டதுடன் எனக்காக எழுந்திருக்க வேண்டாம். உட்கார்ந்து சாப்பிடுங்கள்'' என்று சொன்னார்.
""தாங்களும் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுவேன்'' என்று அடக்கமாகப் பதில் கூறினேன்.
""செட்டி நாட்டு இட்லி பூப்போல் இருக்கும் என்று சொல்வார்களே. உங்கள் வீட்டு இட்லி எப்படி இருக்கும். இரண்டு கொடுங்கள்'' என்று சொன்னார்.
வாழை இலையைப் போட்டு இரண்டு இட்லி எடுத்து வைத்து என் மனைவி, ""பிராமணர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டால் பெரும் பாவம் என்று எங்கள் பெரியவர்கள் சொல்லுவார்களே? எல்லாம் அறிந்த தாங்கள் அதைப் பற்றி என்ன அறிவுரை எங்களுக்கு கூறப் போகிறீர்கள்'' என்று கேட்டு விட்டாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com