ரெங்க நாயகி

வித்தியாசமான தொப்பியை அணிந்து கொண்டு எதிரே வந்து நின்றவனைக் கொஞ்ச நேரம் அடையாளம் தெரியவில்லை.
ரெங்க நாயகி

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை 

வித்தியாசமான தொப்பியை அணிந்து கொண்டு எதிரே வந்து நின்றவனைக் கொஞ்ச நேரம் அடையாளம் தெரியவில்லை.
"செளக்கியமா மாமா?''" என்று கேட்ட பிறகுதான் அந்த குரலிலிருந்து அவனைக் கண்டுபிடித்தேன்.
"ராஜ கோபால்... அடையாளமே தெரியலடா... பார்த்து ரொம்ப நாளாச்சு... குண்டாயிட்டே... தொப்பை வேற... ஏன்டா உடம்பை கவனிக்காம விட்டுட்டியா... ஆமா, திருப்பதி மொட்டையா? நல்ல தரிசனம் கிடைச்சதா? திருப்பதி போறதா உங்க அம்மா கூட சொல்லலையே... உண்டியல்ல போட காணிக்கை தந்திருப்பேன். எனக்கும் நடைபாதையில போகணும்னு ஆசை... வேண்டுதல் ஏதும் இல்லை. நடந்து போகணும்னு ஏக்கம்...'' - " நான்தான் படபடவென்று பேசினேன்.
மெளனமாய் நின்றிருந்த ராஜகோபால் தொப்பியைக் கழட்டினான். அவன் கண்கள் சொட்டியது. "
"இது திருப்பதி மொட்டை இல்லை மாமா, ராமேஸ்வரம் மொட்டை''" கண்களைத் துடைத்துக் கொண்டான்.
கண்களில் ஆற்றை அடைத்து வைத்திருந்தான், நிரம்பித் தழும்பிச் சொட்டிற்று.
"மாமா அவசர வேலையா எங்காவது கிளம்பிட்டீங்களா?''"
"இல்லைடா, அவசர வயசைத் தாண்டிட்டேன். ஓவர் டேக் பண்ணி ஓடின காலம் போயிடுச்சு, ஓரமா நடந்து போறேன். ஒதுங்கி எல்லாருக்கும் வழி விட்டுர்றேன்... லைப்ரரிதான் போறேன் சொல்லு.''"
"மனசு பாரமா இருக்கு கொஞ்சம் பேசணும்.''"
"லைப்ரரில எல்லாரும் பேசிட்டிருப்பாங்க... நான் பேசறதில்லை.. பல வருஷம் கழிச்சி வந்திருக்கே... வீட்டுக்கு வா, மாமியும் உன்னைப் பாத்தா பூரிப்பாயிடுவா... சீரியல்கள் சலிப்பாயிடுச்சு.. ஜனங்களைப் பார்த்து பேசறது டானிக் சாப்பிட்ட மாதிரி...''"
"வீட்டுக்குதான் வந்தேன் மாமா''" என்றான்.
வீட்டை நோக்கி நடந்தோம். தெருவில் சுதா கடையில் மினி பால் பாக்கெட் வாங்கிக் கொண்டேன். "பிஸ்கட் வேண்டாம்'' என்று சொல்லி விட்டான். வீட்டிற்கு வந்தோம். ஹாலிலேயே உட்கார்ந்தோம்.
"பெரியவன் சொசைட்டி பேங்க்ல டெம்பரரியா சேர்ந்திருக்கான். பன்ணெண்டு தர்றாங்க... சின்னவன் ஆ.உ முடிச்சிட்டு பெங்களுர்ல ஒரு கம்பெனில சேர்ந்துட்டான். இருபது வாங்கறான். கடைசி இப்பதான் ப்ளஸ் டூ.''" தொப்பியை மடி மீது நாய்க் குட்டியைப் போல வைத்து நீவினான். " 
"அம்மாவை கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க மாமா."ஊரோட ஊரா வாழ்ந்துட்டா, ரெங்கநாயகி இல்லேன்னா இந்த ஊர் செத்துடும், இந்த ஊர் இல்லனா ரெங்கநாயகி செத்துடுவா''"
அவன் வெறுமையாய், சின்னதாய்ச் சிரித்தான். அது சிரிப்பும் கூட இல்லை, சிரிப்பு மறைத்த அழுகை. 
"ஊர் இல்லைன்னா அம்மா செத்துடுவாங்கன்னு சொல்லுங்க.. அம்மா இல்லைன்னா ஊர் சாகாது, ஈ 
எறும்புக் கூட சாகாது''"
"உங்கம்மா ஏன்டா அப்படி இருக்காங்க...''" காபியோடு வந்தாள் சரோ... "
"யார் யாருக்கோ பாத்திரம் கழுவிட்டு, யார் குழந்தைகளுக்கோ கால் கழுவிட்டு, கண்ட இடத்தையெல்லாம் சுத்தம் பண்ணிட்டு, எதுக்கு இப்படி பண்றாங்க... இங்க வரட்டும் மூணு வேளை சோறு நான் போடறேன்''"
"நான் கூப்பிட்டாலே வரலை மாமி, மகன் வீட்லயே ஒரு நாள் தங்க மாட்டேன்றா, ஒரு வேளை சாப்பிட மாட்டேன்றா''
சரோவிற்கு சுகரும், ப்ரஷரும் தொல்லை, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வீடு வாசல் சுத்தம் பண்ண என்று அழைக்க முடியாது. சாப்பாடு போடறேன் என்றுதான் அழைப்பாள். ரெங்கநாயகி விசேஷங்களுக்கு அழைத்தாலே சாப்பிட மாட்டாள். ஃபாஸ்ட்டிங் என்று ஒற்றை ஆங்கில வார்த்தையை தெரிந்து வைத்து ஒப்பிப்பாள்.
"மகன் வீட்ல தண்ணிக் கூட குடிக்க மாட்டேன்றா மாமி. கிணத்துல மொண்ட தண்ணிதான் குடிப்பாளாம். அதுவும் பெருமாள் கோயில் கிணத்துத் தண்ணிதான் குடிப்பாளாம். வரும்போதே தண்ணியோடதான் வர்றா.... என்னைக்காவது பெருமாள் கோயில் கிணறு வத்தட்டும் அப்பத் தெரியும்''"
"அது வத்தவே வத்தாதுடா... எனக்கு அறுபத்தைஞ்சி தாண்டுது... எவ்வளவோ காய்ச்சலப் பார்த்துட்டேன். அந்த கிணறு காய்ஞ்சதில்லை. காபி எடுத்துக்கடா''
"காபி குடிக்கக் கூட தெம்ப்பில்லை மாமா, மனசு கனக்குது''"
"என்னாச்சு?''"
சொல்வதற்கு யோசித்தான். ஆனால் அவன் பேச வந்ததை யூகித்துக் கொண்டேன். ரொம்ப தாமதமாக தகவல் தெரிந்திருக்கிறது. ரொம்பத் தாமதம் என்றால் பல வருஷங்கள். ஒரு வேளை வேறு விஷயமாகக் கூட வந்திருக்கலாம். இன்னும் கூட அந்த விஷயம் தெரியாமலிருக்கலாம்.
"சூடா குடிச்சுக்கடா...''" என்றேன்.
"நீயாவது அம்மாகிட்டசொல்லுடா ராஜகோபால்... ஒண்டிக்கட்டையா எதுக்கு கஷ்டப்படணும். இங்கே வந்துட சொல்லு... நான் பார்த்துக்கிறேன்'' என்றாள் சரோ. அவள் பிரச்னை அவளுக்கு.
"யார் சொன்னாலும் கேட்க மாட்டா மாமி, ஒருத்தர் தயவும் அவளுக்கு வேணாம்னு நினைக்கிறா... அவ தயவுலதான் எல்லாருமே இருக்கணும்னு நினைக்கிறா''
சரோவிற்கு புரிய வைக்க முடியாது. ரெங்க நாயகி வேற டைப். பத்து பாத்திரம் தேய்க்கிறவதான், ஆனா பத்து பாத்திரம் தேய்க்கிறவதானேன்னு சாதாரணமா எடை போட முடியாது. எல்லா மரங்களிலும் கதவுகள் செய்றாங்க, தேக்கு மரத்துல செய்த கதவுப் போல வருமா? அப்படித்தான் ரெங்கநாயகி அவளுக்குள் கட்டுப்பாடுகள், லட்சியங்கள் எல்லாம் விதிச்சுக்கிட்டு வாழறவ...
காபி டம்ளரை கையிலேயே வைத்து உருட்டினான். எவர்சில்வர் டம்ளரின் காபியின் சூடு இதமா இருந்திருக்கலாம். அல்லது அவன் பற்றிக் கொள்ள ஏதோ ஒன்று தேவைப்பட, டம்ளரைப் பற்றிக் கொண்டிருக்கலாம்.
"மாமா''"
"சொல்லுடா''"
"எங்கப்பாவை நீங்கப் பார்த்திருக்கீங்களா?''"
"ம்''" என்றேன். இந்தக் கேள்வியை பல வருஷங்களுக்கு முன்பே எதிர்பார்த்தேன்.
"பேசி இருக்கீங்களா?''"
"ம்''"
"அவரை நல்லாவே உங்களுக்குத் தெரியுமா?''"
"தெரியும்''
"என்னை அவர் பார்த்திருக்காரா?''"
"நீ குழந்தையா இருக்கும் போது''"
"என்னை தூக்கி இருக்காரா?''"
"வாய்ப்பில்லை'' "
துக்கத்துடனே கேட்டு வந்தான்.
"எங்கப்பாவை கடைசியா எப்போ பார்த்தீங்க...''"
"ஞாபகமில்லடா... நாற்பது வருஷத்துக்கு முன்னே பார்த்தேன்''"
"அவரோட போட்டோ ஏதாவது இருக்கா...?''"
"இல்ல''"
"நான் அவரைப் பார்த்திருப்பேனா?''"
"ம்''"
"எனக்கு ஞாபகமே இல்ல மாமா, அவர் எப்படி இருப்பார்?''"
"அப்படியே உன்னை மாதிரி''" என்றேன். "ஆமாண்டா அச்சு அசலா நீதான்''" ராஜகோபாலுக்கு கண்ணீர் வழிந்தது. பேச முடியவில்லை. துக்கம் அடைத்தது. அவன் துடைக்க, துடைக்க வழிந்தது.
சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்தான். எழுந்து அதனருகே போனான். கண்ணாடியில் அவன் தந்தையைத் தேடினான். கொஞ்சம் வாய் விட்டு அழுதான்.
"எங்கப்பா இறந்துட்டாராம் மாமா''" பெரிதாக அழுதான்.
"அழட்டும்'' என்று அமைதியாக இருந்தேன். அவன் அழுவதைப் பார்த்த சரோவும் அழுதாள். சரோவுக்கு அண்ணன். பெரியப்பா மகன், ராஜகோபாலின் அப்பா.
எழுந்து போய் ரெண்டு நிமிடம் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டேன். மழை நிற்பதுப் போல அழுகை கொஞ்ச கொஞ்சமாகக் கரைந்து நின்றது. தோளில் கை போட்டு அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தேன்.
"அவர் இறந்து பதினைஞ்சி வருஷமாச்சுடா... எனக்கும் தெரியாது. ரொம்ப நாள் கழிச்சி, பெங்களூர்ல ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், அங்கே சொன்னாங்க...''"
சோபாவில் உட்கார்ந்தபடி சுவரிலிருந்து கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"மைசூருக்கு பக்கத்துல ஏதோ ஒரு கிராமத்துல இருந்தாராம்''" என்றேன்.
"போனேன் மாமா, மைசூர்ல இருந்து நூறு கிலோ மீட்டர், சின்ன ஊர், சிக்க கரைன்னு அந்த ஊர் பேரு, கண்டுபிடிச்சுப் போனேன். யாருக்கும் அப்பாவை ஞாபகம் இல்லை. ஒரே ஒருத்தர் ஞாபகம் வைச்சிருந்தார். தனியாத்தான் இருந்தாராம். பள்ளிக் கூடத்துல வாட்சமேனா இருந்தாராம்... பள்ளிக் கூடத்துல கூட விசாரிச்சேன். இப்போ இருக்கிற யாருக்கும் அவரைத் தெரியல, இடுகாட்டுல போய் அவரைப் புதைச்ச இடம் ஏதாவது அடையாளம் இருக்கான்னுப் பார்த்தேன். எதுவும் இல்லை, திரும்ப வந்துட்டேன். எங்கப்பான்னு ஒருத்தர் வாழ்ந்ததுக்கு எந்த அடையாளமும் இல்லை''" தலையில் அடித்துக் கொண்டான்.
"உன்னை விட வேற என்னடா அடையாளம்? உன் இனிஷியல் ஜி. உன் சர்டிபிகேட்ல அப்பா பேரு கோவிந்தன்னு இருக்கு, கோவிந்தன் மகன் ராஜகோபால்ங்கிற அடையாளத்தை விட பெரிய அடையாளம் என்ன வேணும்? உன் மூனு பிள்ளைகளுக்கு தாத்தாதானே...?''
அவன் கண்கள் மலர்ந்ததைப் பார்த்தேன்.
"ராமேஸ்வரம் போய் காரியம் பண்ணிட்டு, பிண்டம் கொடுத்துட்டு வந்தேன் மாமா. அப்பத்தான் அவர் ஆத்மா சாந்தியடையும்னு சொன்னாங்க...''
"செய்ய வேண்டியதை செஞ்சிருக்கேடா, சந்தோசம்''"
"மாமா இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிய வேணாம். காலம் பூரா புருஷன் இல்லாம வாழ்ந்துட்டா... இப்போ தெரிஞ்சி, அவளுக்கு சடங்கு பண்ணி, பூ எடுத்து, பொட்டு அழிச்சி, வளையல் உடைச்சி, அவளை அலங்கோலமா பார்க்க விரும்பல''
"பைத்தியக்காரா... ரெங்கநாயகிக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியா? தெரியும்டா, பெத்தத் தாயை நீ சரியாப் புரிஞ்சுக்கலடா, பூ வைச்சி, பொட்டு வைச்சி, அலங்காரம் பண்ணி எப்படா பார்த்தே...?''"
"மாமா''"
"அவ முகம் மங்களம்ண்டா... சுப மங்களம்! அதனால அவளோட அமங்களம் யார் கண்ணுக்கும் தெரியல, மஞ்சள் பூசினதே இல்லை, பகவான் பேரைச் சொல்லி நெத்தியில எப்பவும் திருமஞ்சணம்தான் இருக்கும். கையில நாலு பித்தளை வளையல் மாட்டியிருப்பா, அது அவளுக்கு தங்க வளையல் மாதிரி இருக்கும். கழுத்துல பெருமாள் டாலர் ஒண்ணைத் தொங்க விட்டிருப்பா, ஒரு பவள மணி போட்டிருப்பா, மாங்கல்யத்தை, கல்யாணமான மூணு மாசத்துல கழட்டிக் கொடுத்துட்டா''"
அவன் சிலை மாதிரி, அசைவின்றி உட்கார்ந்தான், ஆச்சரியமாய் பார்த்தான்.
"ரெங்கநாயகி ஏழ்மையான வீட்ல பிறந்ததால பெரிசா படிக்க வைக்கல, நாலோ, அஞ்சோ போனாள். சின்னப் பொண்ணா இருக்கும் போதே ஓர் ஆச்சாரமான வீட்ல பத்து பாத்திரம் தேய்க்க அனுப்பிட்டாங்க... சுத்தம், ஒழுக்கம், பக்தி அங்கே கத்து கிட்டாள். பெருமாளுக்குத் திருப்பணி செய்றது அதுல முக்கியமானது. நான் கூட சின்ன வயசுல ஆண்டாள்னு கேலி செய்வேன். பெருமாளுக்கு அவ்ளோ அழகா, நேர்த்தியா மாலைக் கட்டித் தருவாள். புளியோதரை பொங்கல், சுண்டல் அவ்ளோ டேஸ்ட்டா செய்வாள். ரொம்ப நல்ல பொண்ணு, பெரியவங்க ஏமாத்திட்டாங்க... கோவிந்தன் குடிகாரன். கல்யாணம் பண்ணா திருந்திடுவான்னு தப்பா கணக்குப் போட்டாங்க. உங்கம்மா ரொம்ப சின்னப் பொண்ணு ரெண்டுப் பேரும் ஒண்ணா வாழ்ந்தது மூணே நாள்தான், புதன்கிழமை கல்யாணமாச்சு, புதன், வியாழன், வெள்ளி மூணே நாள்தான் வாழ்ந்தாங்க. சனிக்கிழமை பிரச்னை.வேலைக்குப் போனவன், ராத்திரி வீடு திரும்பும் போது குடிச்சிட்டு வந்திருக்கான். அதுமட்டுமில்ல மாமிசம் வாங்கி வந்து சமைக்க சொல்லி இருக்கான். ரெங்கநாயகி மறுத்து இருக்கிறா... ஆச்சாரமான குடும்பத்துல பிறக்கலைன்னாலும், ஆச்சாரமான வீட்ல வளர்ந்தவ. மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லைன்னு பொய்ச் சொல்லி கட்டி வைச்சிட்டாங்க... உங்கப்பா நான்காம் நாளே சுய ரூபம் காட்டத் தொடங்கிட்டார். "என் அடிமைடி நீ... வீடு வீடா கழுவறதுக்கு போற, இனிமே எனக்கு கழுவு, புருஷனுக்கு பணிவிடை செய், நான் குடிப்பேன். புலால் திம்பேன், செய்துப் போடணும்'னு கண்டிச்சி இருக்கார். அப்போ வீட்டை விட்டு வெளியே வந்தவதான்'' என்றேன் பெருமூச்சு வந்தது. அடுத்து என்ன சொல்றது தெரியலை.
ராஜகோபாலும் அமைதியாக இருந்தான். 
"அவங்கள சேர்த்து வைக்க ரொம்ப பாடுபட்டோம் முடியலை''" சரோ சொன்னாள். "ரெண்டு பேருமே பிடிவாதமா இருந்தாங்க... அவ போட்ட கண்டிஷன் குடிக்கக் கூடாது. மாமிசம் கூடாது. அவர் இரண்டுக்குமே ஒத்துக்கலை. உங்கப்பா முரடா பேசினார். "அவ கழுத்துல தாலிக் கட்டி இருக்கேன். அவ சொல்றதை நான் கேட்கணுமா, நான் சொல்றதை அவ கேட்கணுமா? அப்போ தாலிக்கு என்ன மரியாதை இருக்கு'ன்னு சொல்ல ஆரம்பிச்சார்... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. பிரச்னை நடந்தன்னைக்கு நானும் அவளும்தான் மண் குடத்தல தண்ணி சேந்தி எடுத்துட்டு வர்றோம். இப்போ அர்ச்சனா டெக்ஸ்டைல்ஸ் இருக்கே... அங்கே மல்லித் தோட்டம் இருந்துச்சு அங்கதான் வழி மறிச்சார் உங்கப்பா. அடிச்சிருந்தா, உதைச்சிருந்தா கூட அவ்ளோ ஆத்திரப் பட்டிருக்க மாட்டா, வாயில மாமிசத்த திணிச்சார்''"
சரோ அந்தக் காட்சியைக் கண் முன் கொண்டு வர கண்களை ஒரு கணம் மூடினாள். "
"அவளால தாங்க முடியல, உயிரை விட்ருவாப் போல இருந்தது. ரொம்ப துடிச்சா, வாந்தி வாந்தியா எடுத்துட்டே இருக்கா. நீ அப்போ மூணு மாசம் வயித்துல, நான் ரொம்ப பயந்துட்டேன். "நீ விஷம் கொடுத்திருந்தா கூட சந்தோசப்பட்டிருப்பேன்டா... கழுத்த நெறிச்சி கொன்னிருந்தாக் கூட பாவம் இல்லடா..." கத்திட்டே குடத்துல இருக்கிற தண்ணியை ஊத்தி ஊத்தி வாயைக் கழுவினா அப்பதான் கோபத்துல மாங்கல்யத்த கழட்டி குடத்து ஜலத்துல நனைச்சி உங்கப்பா மூஞ்சில போட்டா... இனிமே புருஷன் இல்லடா"ன்னு ஊருக்கே கேட்கிற மாதிரி கத்தினா... அத்தோட முடிஞ்சது ஊர்ல எல்லோரும் உங்கப்பாவைத் திட்ட ஆரம்பிச்சாங்க... அப்போ ஊரை விட்டுப் போனவர்தான். எப்பவாச்சும் ஒரு நாள் வருவார். உன்னை தூரமா நின்னு பார்ப்பார். போயிடுவார். அப்புறம் ரொம்ப காலம் வரலை''" சரோ கண்களை விரித்தபடி கூறினாள். அவளுக்கும் ஏதோ பாரம் குறைந்த மாதிரி இருந்தது.
"அதுக்கு பின்னாடி பெருமாள் கோயிலுக்கு சேவை செய்ய ரெங்க நாயகி போகலை. வாயில மாமிஷம் பட்டது பெரிய பாவமா நினைச்சி எந்தக் கோயிலுக்கும் போகாம இருந்தா, நீ பொறந்து ரொம்ப நாள் கழிச்சி பெரிய மனுஷாளுங்க வந்து சமாதானம் செய்து அழைச்சிட்டு போனாங்க... வரவே மாட்டேன்னு மறுத்துட்டா... "நான் பாவி என்னை விட்டுடுங்க'ன்னு பிடிவாதம் பண்ணா... ஆனாலும் விடலை. "பெருமாள் மேல நிஜமான பக்தி இருந்தால், அவருக்கு சேவை செய்ய விருப்பம் இருந்தால் பெருமாள் மேல் பற்றிருந்தால் வா, இல்லேன்னா வேணாம்'னு பெரியவங்க சொன்ன பிறகுதான் கோயில் படி மிதிச்சாள்'' என்று சொல்லி முடித்தாள் சரோ.
"எந்தப் பொண்ணாலயும் ரெங்கநாயகி மாதிரி கறாரா வாழ முடியாதுடா. அவ சிரிச்சிப் பார்த்ததே இல்லை. சினிமா, திருவிழா, கச்சேரி எதையும் கண்டுக்க மாட்டா, டிவி கூட பார்த்ததில்லை, எப்பவும் பெருமாள், பெருமாள்தான்... யார் வீட்லயும் கை 
நனைக்க மாட்டா. டாக்டரம்மா வீட்ல மொத்த சமையலும் அவதான் செய்வாள். உப்பு, காரம் பார்க்கக் கூட வாயில விட மாட்டா.வீட்டுக்கு வந்து தனியா சமைச்சு சாப்பிடுவாள், கறாரா சம்பளம் வாங்குவா.அதனாலதான் உன்ன கான்வென்ட்ல படிக்க வைச்சாள். கஷ்டம் காட்டாம வளர்த்தாள். இப்போ பேரப்பிள்ளை
களுக்கு சேர்த்திட்டிருக்காள்'' என்றேன்.
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். இரவாகி விட்டது. சாப்பாடு வேண்டாமென்று சொல்லி விட்டான். அம்மா கையால் சாப்பிடுவதாகச் சொல்லி விட்டுப் போனான்.
அதன் பிறகு பெருத்த மவுனம் நிலவியது. சரோ மெளமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். அவளின் தலையை நீவியபடி, "சரோ'" என்றேன்.
"ரெங்கநாயகி வாழ்க்கையை நானே பாழ் பண்ணிட்டேன்ங்க. கோவிந்தண்ணன் குடிகாரன், பொறுப்பில்லாதவன்னு தெரிஞ்சும் ரொம்ப நல்லவன்னு பொய் சொல்லி அவளைக் கட்டி வைச்சேன். ஏழ்மையில இருக்கிறப் பொண்ணுன்னு மட்டமா நினைச்சி, அவ வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டுட்டேன்''" கண்
களைத் துடைத்துக் கொண்டாள். "
"நான் பண்ணது பெரிய பாவம்ங்க...''
"நான் பண்ண பாவம் ரொம்ப பெரிசாச்சே சரோ. கோவிந்தனுக்கு நான்தான் விளையாட்டா ரெங்கநாயகிக்கும் மாமிசம் பழக்கிடு, உங்களுக்கு பிரச்னை வராதுன்னு சொல்லி கொடுத்தேன். எவ்ளோ பெரிய தப்பு, எவ்ளோ பெரிய தப்பு, போதையில அவனும் அப்படியே செஞ்சிட்டான். பாவம்... பாவம் பண்ணிட்டேன் சரோ. ஒரே ஒரு வார்த்தை குடிக்காம இருடான்னு சொல்லி இருக்கணும். தவறிட்டேன் சரோ''
பெரிதாக கதறி அழ வேண்டும் போலிருந்தது. அழ தெரியவில்லை.
அப்போதுதான் கவனித்தேன்.
டீப்பாயின் மீது காபியும், தண்ணீரும் அப்படியே இருந்தது.
இவன் ரெங்கநாயகி மகன்.

நா.கோகிலன், 
ஜோலார்பேட்டையை அடுத்த எஸ்.கொடியூரைச் சேர்ந்தவர். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றவர். "இலக்கிய மெரினா' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அரசு தேர்வுகள் எழுதுபவர்களுக்கான பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com