அப்பாவைத் தேடி

"இந்தியாவிலிருந்து வேலைக்காக மலேசியாவுக்கு வந்துருக்குறோம். யாருக்காவது ஏதாவது இலட்சியம் மாதிரி ஏதும் இருக்கிறதா''?" சீட்டாட்டத்தின் ஊடே இராமகிருஷ்ணன் தான் ஆரம்பித்தார்.
அப்பாவைத் தேடி

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை
"இந்தியாவிலிருந்து வேலைக்காக மலேசியாவுக்கு வந்துருக்குறோம். யாருக்காவது ஏதாவது இலட்சியம் மாதிரி ஏதும் இருக்கிறதா''?" சீட்டாட்டத்தின் ஊடே இராமகிருஷ்ணன் தான் ஆரம்பித்தார்.
"என்னா பெரிய இலட்சியம். பணம் சம்பாதிக்கிறது தான் இலட்சியம்'' என்றான் சுப்ரமணி சிரித்துக் கொண்டே.
"சரித்தான். பணம் சம்பாரிச்சுட்டு என்னா செய்யப் போறீங்க?''" என்றார் இராமகிருஷ்ணன் விடாமல். 
"முதல்ல உங்களுக்கு இலட்சியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்'' " என்றான் நிர்மல்.
"எனக்கு ஊர் சுத்தனும். ஒவ்வொரு நாடாப் போய்ப் பார்க்கனும். இங்கருந்து ஒவ்வொரு வருஷமும் லீவுக்கு ஊருக்குப் போறப்ப, ஏதாவது புதிய நாட்டுக்குப் போயிட்டு வரலாம்னு நெனைச்சிருக்கேன். அதுக்கான செலவுகளுக்குத் தான் இங்க சம்பாதிக்க வந்திருக்கேன்'' " என்றார் இராம
கிருஷ்ணன். 
"எனக்கு இலட்சியம் புடலங்காய்ன்னு எல்லாம் எதுவுமில்ல; இந்தியாவுக்குத் திரும்பிப் போகவே நான் விரும்பல. மலேசியாவுலயே பி.ஆர். ஸ்டேட்டஸ் வாங்கி நிரந்தரமாத் தங்கிடணும். ஒரு ஏழெட்டு வருஷம் இங்கயே வேலை பார்த்துட்டா அது சாத்தியம்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லியிருக்காங்க...''" என்றார் அனந்து.
ஹிந்தியில் மிகப் பிரபலமாயிருக்கும் நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லி, "நான் சம்பாரிச்சுக் கொண்டு போற காசையெல்லாம் அவளோட காலடியில் கொட்டியாச்சும் அவரோட நட்பு வைச்சுக்கணும். அதுதான் என்னோட வாழ்க்கை இலட்சியம்'' " என்றார் முருகவேள். எல்லோரும் சிரித்தார்கள்.
அழகர்சாமியும் சிரித்துக் கொண்டே, "எனக்கு தி.ஜானகிராமன் எழுதுன "தவம்ங்கிற' சிறுகதை ஒன்னு தான் ஞாபகத்திற்கு வருது'' என்றான். 
"அதென்ன கதை சொல்லுங்க பாஸ்; எல்லோரும் கேட்குறோம்'' " என்றான் சுப்ரமணி ஆர்வமாக. 
"நூத்தம்பது வேலி நெலத்துக்குத் சொந்தக்கார மிராசுதாரர் ஒருத்தர்ட்ட எடுபிடி வேலைகள் செஞ்சுக்கிட்டுருக்கார் ஒருத்தர். மிராசுதாரர் ஒருசமயம் தஞ்சாவூர்ல இருக்கிற ஒரு தாசி வீட்டுக்குப் போறப்ப வேலைக்காரரையும் கூட்டிக்கிட்டுப் போறார். 
தாசியோட பேரு சொர்ணாம்பாள். அம்பாளவிட அவள் அவருக்கு அழகாத் தெரியிறா. தீ மாதிரி சுடர்விடுகிற அழகுன்னு விவரிக்கிறார் தி.ஜா. அவளப் பார்த்ததுமே வேலைக்காரருக்கும் ஒருநாள் ஒரு பொழுதாச்சும் அவள்கூட இருக்கணும்னு ஆசை வந்துடுது.
அடுத்தநாள் தாசியோட வீட்டு வேலைக்காரி மூலமா சொர்ணாம்பாள் கூட ஒருநாள் இருக்கிறதுக்கு அறுநூறு எழுநூறு ரூபாய் ஆகும்னு தெரிஞ்சுக்கிறார். அப்ப அவரோட மாசச் சம்பளமே ஏழு ரூபாய் தான். வீட்டுக்குப் போனதுமே மனைவியோட நகைகள எல்லாம் வித்து, அதுல வர்ற பணத்தவச்சு சிங்கப்பூருக்கு வேலைக்குப் போறார். 
மனைவி மக்களப்பத்தி ஒருபோதும் நெனைக்காம, எப்போதுமே சொர்ணாம்பாள் பத்தியே நெனைச்சிக்கிட்டு கடுமையா உழைக்கிறார். யுத்தம் வந்து பலரும் பயந்து போய் அவங்க அவங்க நாட்டுக்குத் திரும்பிப் போன பின்னாடியும் அவர் ஒரே வெறியோட அங்கேயே தங்கி வேலை செய்றார். 
சாப்பிட்டும் சாப்பிடாமலும் சிக்கனமாகவே இருக்கிறார். பத்து வருஷம் போல அங்க இருந்து சம்பாதிச்சதையெல்லாம் எடுத்துக்கிட்டு கப்பல்ல ஊருக்குப் போனவர், அன்னைக்கு சாயந்திரமே சொர்ணாம்பாளைத் தேடித் தஞ்சாவூருக்குப் போறார். அவளப் பார்த்தா அடையாளமே தெரியாம வற்றி உலர்ந்து போய் சருகாட்டாம் இருக்கிறாள். ஆற்றாமையுடன் பணத்தை அவளின் காலடியில் கொட்டி அவரின் கதையைச் சொல்கிறார்.
"இதுக்காக யாராவது தவம் கிடப்பாங்களா?' என்று கடிந்து கொண்ட சொர்ணாம்பாள், அவரை ஆரத் தழுவி ஒரேஒரு முத்தம் கொடுக்கிறாள். பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த முத்தம் கிடைத்திருந்தால் வேலைக்காரர் சந்தோஷப் பட்டிருப்பார். அவருக்கு இப்பொழுது அது சாதாரணமாய்த் தெரிகிறது. ஆனால் சொர்ணாம்பாள் இப்போது தான் தனக்கு மனசு நெறைஞ்சு இளமையா, ரொம்பவே அழகாயிட்ட மாதிரி உணர்றதாச் சொல்லி அவரோட பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துடுறாள். 
இரவு தங்கிவிட்டு காலை ஆறரை மணிக்கு முதல் இரயில்ல அவரைக் கிளம்பிப் போகச் சொல்கிறாள். ஆனால் அவர் இராத்திரியே ஏதோ மெயில் இருப்பதாகச் சொல்லிக் கிளம்பி விடுகிறார்'' அழகர்சாமி கதை சொல்லி முடித்ததும் சபையே உறைந்து போய் உட்கார்ந்திருந்தது.
"நீங்க சொல்ற நடிகை மேக்கப்பக் கலைச்சிட்டா இப்பவே பாதிக் கிழவி தான் பாஸ். நீங்க சம்பாதிச்சுட்டு ஊருக்குப் போறப்ப, இன்னும் கண்றாவியா பார்க்கவே சகிக்க முடியாம ஆனாலும் ஆயிடுவாங்க. அதனால முதல் வருஷம் முடிஞ்சதும் கம்பெனியில ஒருமாசம் சம்பளத்தோட லீவு தருவாங்க. அப்பவே போயிட்டு வந்துடுங்க''" என்று நிர்மல் சீண்டவும் முருகவேள் வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார்.
"அழகர்சாமி, உங்களுக்கு இலட்சியம், ஆசைன்னு எதுவுமில்லையா'' " என்றார் இராமகிருஷ்ணன். அவன் சொல்வதா வேண்டாமா என்று ஒரு நிமிஷம் தயங்கினான். அப்புறம், "நான் மலேசியாவுக்கு வேலை பார்த்து சம்பாதிச்சுட்டுப் போக வரல. எங்க அப்பாவத் தேடித்தான் வந்துருக்கேன்'' என்றான். 
எல்லோரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
அழகர்சாமி அவனுடைய அப்பாவை நேரில் பார்த்தது கூட இல்லை. அவனுடைய வீட்டில் அப்பாவின் புகைப்படம் என்று ஒன்றே ஒன்று தான் இருந்தது. அது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கல்யாணமான புதிதில் அவர்கள் எடுத்துக் கொண்டது. 
சுமார் இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள அழகன்குளம் என்கிற கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மழை தண்ணி இல்லாமல் விவசாய நிலங்கள் எல்லாம் பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்தன. 
தன்னுடைய கர்ப்பிணி மனைவி கஞ்சி தண்ணி குடிக்காமல் சுருண்டு கிடப்பதைக் கண் கொண்டு பார்க்க சகிக்க முடியாமல் சாவடியில் போய் உட்கார்ந்து கொண்டார் முத்தையா. 
அங்கிருந்த கந்தசாமிதான் சொன்னான். "இன்னும் ஒரு வாரத்துல நம்ம ஊர்லருந்து ஏழெட்டுப்பேர் இராமேஸ்வரம் போயி அங்கருந்து கப்பல்ல பினாங்குக்குப் போகப் போறோம். பினாங்கு போயிட்டா, அங்கருந்து மலேயா போயிடலாமாம். அங்க தோட்டங்கள்ல வேலை செய்ய நெறையா ஆளுகள் தேவைப்படுதாம். நீயும் வர்றியா?''" என்றான்.
முத்தையா சந்தோஷமானான். ஆனாலும் "என்கிட்ட ஒத்தப் பைசா கூட இல்லையேப்பா. நான் எப்படி வர்றது? கப்பல் சார்ஜுக்கெல்லாம் காசு வேண்டாமா?''" என்றான்.
"நம்மள ஒரு ஏஜெண்டு சரக்குக் கப்பல்லதான் கூட்டிக்கிட்டுப் போகப் போறார். கப்பல்ல அவங்க சொல்ற ஒன்னு ரெண்டு வேலைகளச் செஞ்சாப் போதும். திருட்டுத்தனமாத் தான் அந்த நாட்டுக்குள்ள போகனும். எப்படியாச்சும் உள்ள போயிட்டமின்னா அப்புறம் சனங்களோட சனமாக் கலந்துடலாம். 
ஏற்கெனவே அங்க நெறையாத் தமிழ்க்காரங்க இருக்காங்களாம். அதனால நம்மல யாரும் கண்டுபிடிக்க முடியாது. செம்பனை, ரப்பர், தேயிலைன்னு விளையுற நிறைய தோட்டங்கள் அங்க இருக்காம். வேலைக்குப் பஞ்சமே இருக்காதுன்றாங்க. வயிறாரச் சாப்பிட்டுக்கலாம். அதுல மிச்சம் புடிச்சு ஒன்னு ரெண்ட பொண்டாட்டி புள்ளைகளுக்கும் அனுப்பி வைக்கலாம். என்ன சொல்ற?''" என்று ஆசை காட்டினான் கந்தசாமி.
முத்தையா உடனேயே இதைப்பற்றி மனைவியிடம் சொன்னதும் அவள் மலர்ந்து போனாள். "என்னைப்பத்தியெல்லாம் நீ கவலைப் படாதைய்யா. நான் எங்க ஆத்தா வீட்ல போயி இருந்துக்குவேன். தைர்யமாப் போயிட்டு வாய்யா'' " என்று சொன்ன காமாட்சி, அவளின் மூக்கிலும் காதிலும் அணிந்திருந்த மூக்குத்தியையும் தோடுகளையும் கழற்றிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தாள். 
அப்படி ஊரைவிட்டுப் போன முத்தையாவிடமிருந்து முதல் ஏழெட்டு வருடங்களுக்கு அவ்வப்போது கடிதங்களும் கொஞ்சம் பணமும் வந்து கொண்டிருந்தன. ஆனால் அதற்கப்புறம் அவரிடமிருந்து கடிதமும் வரவில்லை. பணமும் வரவில்லை. அவருக்கு என்னாயிற்றோ என்பது பற்றியும் ஒரு தகவலும் இல்லை.
அடுத்த சில வருஷங்களில் முத்தையாவை அழைத்துக் கொண்டு போன கந்தசாமியும் அவனுடைய கூட்டளிகளும் நிறைய சம்பாத்தியங்களுடன் ஊருக்குத் திரும்பி விட்டார்கள். ஆனால் முத்தையாவும் இன்னும் சிலரும் அவர்களுடன் திரும்பி வரவில்லை. 
கந்தசாமி முத்தையா பற்றி சொன்ன தகவலைக் கேட்ட காமாட்சிக்கு ஈரக்குலை நடுங்கியது. "எங்கள எல்லாம் ரெண்டு மூணு பேராப் பிரிச்சு வெவ்வேறு ஊர்களுக்கு தோட்ட வேலைக்கு அனுப்புனாங்க. நானும் உன் புருசனும் சுங்கப் பட்டாணிங்குற எடத்துல ரப்பர் தோட்டத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். வேலை கொஞ்சம் கஷ்டம் தான். உன் புருஷனுக்கு உடம்பு வளையல. 
மூணு வருஷம் போல எங்க கூட இருந்தவன் அங்கருந்து எப்படியோ தப்பிச்சுப் பினாங்குக்குப் போயிட்டான். அங்க எவளையோ சேர்த்துக்கிட்டு குடித்தனமும் பண்றான்னு செவிவழியாச் சேதி வந்துச்சு. அதனால உன் புருஷன் இனி ஊருக்கெல்லாம் திரும்பி வர மாட்டான். நீ உன் வழியப் பார்த்து வாழ்ந்துக்கோ''."
கந்தசாமி சொன்னதைக் கேட்டதும் காமாட்சிக்கு நெஞ்சில் இடி விழுந்தது போலாகி, மயங்கி விழுந்து விட்டாள். அவளால் முத்தையா செய்ததைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனி புருஷன் திரும்பி வரப் போவதில்லை என்கிற நிதர்சனம் உறைக்கவும் - அவளுடைய ஆத்தாளும் முந்தின வருஷந்தான் இறந்து போயிருந்தாள் - அழகர்சாமியையும் கையில் பிடித்துக் கொண்டு ஊரிலிருந்து வெளியேறி விட்டாள்.
இராமநாதபுரத்திற்கு வந்தவள் பஸ்úஸறி மதுரைக்குப் போனாள். மதுரையில் ஒரு அரவை மில்லில் கூட்டிப் பெருக்குகிற வேலை கிடைத்தது. அங்கேயே தங்கிக் கொண்டாள். வீடு மற்றும் கடைகளுக்கு முறைவாசல் செய்தாள். சில வீடுகளில் வீட்டு வேலைகளும் செய்தாள். அரவைமில் முதலாளி தான் அழகர்சாமியைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க 
வைத்தார்.
அழகர்சாமிக்கு மலேசியாவில் வேலை கிடைத்ததுமே கொஞ்சமும் யோசிக்காமல் உடனேயே ஒத்துக் கொண்டான். அங்கு போய் எப்படியாவது அப்பனைத் தேடிக் கண்டுபிடித்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, நீ செய்தது நியாயமாடா என்று கேட்டு முகத்தில் காறித் துப்ப வேண்டும். 
அழகர்சாமி மலேசியாவிற்குக் கிளம்பும் போது, முத்தையா அவனுடைய மனைவிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தையும், அவர்களின் கல்யாண போட்டோவையும் மறக்காமல் எடுத்துக் கொண்டான்.
***** ***** *****
நாட்கள் மிகமிக வேகமாகத் தான் ஓடுகின்றன. அழகர்சாமி கோலாலம்பூருக்கு வந்து ஆறு மாதங்கள் முடியப் போகிறது. காலையில் வேலைக்குப் போனால் வேலை முடிந்து வீட்டிற்கு வர இரவாகி விடுகிறது. அப்புறம் சமையல்; சாப்பாடு; தூக்கம் என்று வாழ்க்கையும் அவசர கதியில் தான் இயங்குகிறது. 
சில நாட்களுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அழகர்சாமி சுப்ரமணியையும் அழைத்துக் கொண்டு பினாங்கிற்குப் போய் வந்தான். ஆனால் அப்பாவைப் பற்றி எந்தத் தகவலும் அங்கு கிடைக்கவில்லை. அப்பாவின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியில் பெரிய ரெஸ்ட்டாரெண்ட் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் யாருக்கும் அழகர்சாமியின் அப்பா பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அப்பாவைத் தேடிக் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்கிற நிதர்சனம் உறைக்க ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்கள். 
அப்பாவைத் தேடிக் கண்டுபிடிப்பது வரைக்குமாவது மலேசியாவில் தங்கியிருக்க முடியுமா என்பது அழகர்சாமிக்கு சந்தேகமாக இருந்தது. மலேசியாவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கத் தொடங்கி இருக்கிறது. அவன் வேலை பார்க்கும் சைட்டிலும் தினம் தினம் பிரச்னைகள் தான். 
காண்ட்ராக்டரிடம் வேலையில் வேகம் இருந்த அளவிற்கு சுத்தமாய்த் தரம் இல்லை. அதுபற்றி ஒருமுறை மீட்டிங்கில் அழகர்சாமி டெவலப்பரிடம் முறையிட்டபோது காண்ட்ராக்டரின் புராஜெக்ட் மேனேஜருக்கும் அவனுக்கும் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது.
"உங்களின் இந்தியா மாதிரி ஆமை வேகத்தில் கட்டிடம் கட்ட முடியாது; இங்கு வீணாகும் ஒவ்வொரு விநாடியும் காசு என்பதையும் புரிந்து பேசுங்கள்''" என்று எகிறினார். டெவலப்பரின் பிரதிநிதி லோலாமும் அவருக்கு சாதகமாகவே பேசினார்.
"உங்களின் மலேசியன் கல்ச்சர் என்பது இடிந்து விழுகிற கட்டிடத்தை வேகவேகமாகக் கட்டி முடிப்பதா லீ''" என்று அழகர்சாமியும் சத்தம் போட மீட்டிங் களேபரமானது. 
டெவலப்பரின் தலைமை அதிகாரி ஆல்பர்ட் முடிவாய்ப் பேசத் தொடங்கினார். "
"சரி மிஸ்டர் அழகர்சாமி, வேலையில் நீங்கள் கண்ட குறைபாடுகளை எல்லாம் தொகுத்து அதற்கான அத்தாட்சிகளுடன் எங்களுக்குச் சமர்ப்பியுங்கள். நாங்கள் பரிசீலித்து ஒரு முடிவிற்கு வருகிறோம்''" என்றார். 
பைல்கள் ஃபெயிலான புள்ளி விவரங்கள், கான்கிரீட்டில் காண்ட்ராக்ட்ர் பண்ணிய தில்லுமுல்லுகள், கான்கிரீட் பரிசோதனையில் ஃபெயிலான விவரங்கள், கான்கிரீட் கலந்து குறிப்பிட்ட நேரம் கடந்து தாமதமாகப் போட முயன்று அவற்றைப் போராடித் திருப்பி அனுப்பிய தருணங்கள், சேறையும் சகதியையும் முழுசாய் அப்புறப்படுத்தாமலேயே அவர்கள் கான்கிரீட் போட முயற்சித்த தருணங்களின் புகைப்படங்கள்... 
என்று எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தேதி வாரியாக நேர்த்தியாக வரிசைப்படுத்தி ரிப்போர்ட் தயாரித்து அனுப்பி வைத்தான் அழகர்சாமி. ரிப்போர்ட்டை டெவலப்பர் ஏற்காதபட்சத்தில் அழகர்சாமி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவான்; ஏற்றுக் கொண்டால் காண்ட்ராக்ட் கேன்சல் ஆகும். ஆனால் ரிப்போர்ட் அனுப்பி பத்து நாட்களுக்கு மேலாகியும் எந்தச் சலனமும் ஏற்படவில்லை. 
அன்றைக்கு சனிக்கிழமை. சைட் மீட்டிங்கில் காண்ட்ராக்டரின் இன்ஜினியர்களுடன் அழகர்சாமி காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தபோது, டெவலப்பரின் அலுவலகத்திலிருந்து ஒருவன் வந்து கடிதம் ஒன்றை நோட்டீஸ் போர்டில் ஒட்டிவிட்டுப் போனான். 
ரெசினெண்ட் இன்ஜினியர் அழகர்சாமி கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் தற்போதைய காண்ட்ராக்டருடனான வேலை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், புதிதான எந்த வேலை
களையும் அவர்கள் தொடங்கக் கூடாது எனவும் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு இருக்கிற குறைகளை எல்லாம் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்துவிட்டு வெளியேறி விடும்படியும் அதன் பின்பு புதிய ஒப்பந்தக்காரர் வேலைகளைத் தொடங்குவார் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. 
வேலைத்தளத்தில் இலேசான பரபரப்பு நிலவியது. வேலை ஆட்கள் எல்லோரும் அங்கங்கே குழுக்குழுவாகக் கூடி கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழகர்சாமியை சுட்டிக்காட்டி தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு கர்வமாகவும் இலேசாய்ப் பயமாகவும் இருந்தது. 
காண்ட்ராக்டரின் மேனேஜர் லீ தாமதமாய்த் தான் சைட்டிற்கு வந்தான். வந்ததும் அழகர்சாமியிடம் சோர்ந்து போய்க் கை கொடுத்தான். "எனக்கு உன்மேல் எந்தக் கோபமும் இல்லை. நான் எங்கள் அலுவலகத்தில் சொன்னபடி செய்தேன். நீயும் என்னைக் கோபித்துக் கொள்ளாதே'' என்றான். அப்புறம் இன்றைக்கு எல்லோரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாம் என்று அழகர்சாமிக்கு அழைப்பு விடுத்தான். 
அழகர்சாமி மறுக்கவே, "சரி, ஹோட்டலுக்கு வராவிட்டால் பரவாயில்லை. அநேகமாக கேண்டீனை இன்றோடு மூடி விடுவோம். கடைசியாக எங்களோடு அங்கு வந்தாவது ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போ''" என்று அழைத்தான். லோலாமும் வற்புறுத்தினான்.
அழகர்சாமி எப்போதும் மைலோ தான் குடிப்பான் என்பதால் இவனைப் பார்த்ததுமே கேண்டீனில் இருந்தவன் மைலோ கலக்கத் தொடங்கி விட்டான். "இன்றைக்கு எங்களுடைய சீனத்து ஸ்பெஷல் கேக் ஒன்றை உனக்காக வாங்கி வந்திருக்கிறேன். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்''" என்ற லீ எழுந்து கேண்டீனிற்கு உள்ளே போய் ஒரு பிளேட்டில் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய கேக் ஒன்றைக் கொண்டு வந்தான்.
"உனக்கு...?''" என்றான் அழகர்சாமி. "சொல்லி இருக்கிறேன். கொண்டு வருவார்கள். முதலில் நீ சாப்பிடு''" என்றான் லீ. அழகர்சாமி கேக்கை எடுத்துக் கடிக்கப் போகும் போது கேண்டீனின் பின்புறமிருந்து தலை தெறிக்கிற வேகத்தில் ஓடிவந்த ஒருத்தர் அவனுடைய கையிலிருந்த கேக்கையும் பெஞ்சின் மேலிருந்த மைலோ பானத்தையும் மூர்க்கமாகத் தட்டி விட்டார். அப்புறம் வழக்கம் போல் தரையை உதைத்து தமிழ்க் கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கினார்.
இவரை அழகர்சாமி வேலைத்தளத்திற்கு வந்த முதல் நாளிலேயே சந்தித்திருந்தான். அன்றைக்கும் இதைப்போலவே தமிழில் கெட்ட வார்த்தைகளை சத்தமாய் உச்சரித்துக் கொண்டு, இந்த மனிதர் ஓடிவந்து கேண்டீனுக்கு முன்நின்று கொண்டு கத்தத் தொடங்கினார். அவருக்கு நாற்பத்தைந்து அல்லது ஒன்றிரண்டு வயது கூடவோ குறைவாகவோ இருக்கலாம். 
மேல்ச்சட்டை எதுவும் அணிந்திருக்கவில்லை. அணிந்திருந்த அழுக்கு பேண்ட்டிலும் நிறைய கிழிசல்கள். தொண்டை நரம்புகள் புடைக்க கைகளையும் கால்களையும் ஆட்டி ஆட்டி குதித்துக் கொண்டிருந்தார். யாரிடம் என்றில்லாமல் மாயமான எதிரி ஒருத்தனைக் கற்பித்துக் கொண்டு காற்றுவெளியில் வார்த்தைகளை இரைத்துக் கொண்டிருந்தார். எல்லோரும் சிரித்தார்கள். 
அநேகமாக அவர் பேசிய தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தம் அங்கிருந்தவர்கள் யாருக்கும் விளங்கியிருக்காது. அதனால் தான் அத்தனை ஆபாச வார்த்தைகளைக் கேட்டும் அவர்களால் சிரிக்க முடிந்தது என்று அழகர்சாமிக்குத் தோன்றியது. 
"அவன் ஒரு பைத்தியம்''’ என்று லோலாம் அறிமுகப் படுத்துவதற்கு முன்பே அது அழகர்சாமிக்குப் புரிந்து விட்டது. வேலை ஆட்கள் சிலர் அவர்கள் சாப்பிட்டது போக மிச்சமிருக்கிற பண்டங்களைத் தர அவற்றை வாங்கிக் கொண்டு ஓரமாய்ப்போய் உட்கார்ந்து சாப்பிட்டார். அழகர்சாமியும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலானான்.
இவர் ஏன் இன்றைக்கு இப்படி நடந்து கொள்கிறார் என்று அழகர்சாமி யோசித்துக் கொண்டிருக்கும் போதே கேண்டீனில் இருந்த சிலர் அவரை கடுமையாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள். அழகர்சாமி அவர்களைத் தடுக்கவே விட்டு விட்டார்கள்.
கேண்டீனிலிருந்தவர் மறுபடியும் ஒரு மைலோ கலந்து கொண்டு வந்து கொடுக்க, அவரிடம் உள்ளே போய் வேறொரு கேக் கொண்டு வரும்படி சொன்னான் லீ. ஆனால் இந்த முறையும் அழகர்சாமியை எதையும் சாப்பிடவிடாமல் பைத்தியகாரத் தமிழர் தட்டிவிட்டு அழிச்சாட்டியம் பண்ணினார்.
வேலைக்காரர்கள் வெளியேற்றுவதற்காக அவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது, "தயவு பண்ணி அவங்க எது குடுத்தாலும் சாப்பிடாதீங்க தம்பி. அதுல விஷம் கலந்துருக்கு''" என்று கத்திக் கொண்டு போனார். அழகர்சாமிக்கு சிலீரென்று இருந்தது.
"அவர் பேசுறது உன்னோட மொழியா. என்ன சொல்லிக் கத்தீட்டுப் போறார்?''" என்றான் லீ. "
"எதுவும் தெளிவா இல்ல. பல மொழிகளக் கலந்து கட்டிப் பேசுறார். என்ன சொல்றாருன்னு எனக்கும் புரியல''" என்றான் அழகர்சாமி இயல்பில்லாத ஒரு சிரிப்புடன்.
"பைத்தியங்களே இப்படித்தான். அவங்களுக்குன்னு தனி உலகம். தனி மொழி இல்லையா. பாவம் தான்''" என்று பரிதாபப்பட்ட லீ கேண்டீன்காரரிடம் மறுபடியும் மைலோ கலக்கச் சொன்னான். 
"வேணாம்; இன்னொரு நாள் பார்த்துக்கலாம்''" என்று சொன்ன அழகர்சாமி எழுந்து விட்டான்.
"பைத்தியகாரத் தமிழர் ஏன் அப்படிக் கத்தி விட்டுப் போனார். அவர் சொல்வது உண்மையா?' சைட்டில் வேலை நிறுத்தப்பட்டு விட்டதால் அழகர்சாமியும் சீக்கிரமே வீட்டிற்குக் கிளம்பி விட்டான். கொஞ்ச தூரம் நடந்து தெரு முக்கில் நின்று கொண்டு டாக்ஸிக்காக அவன் காத்திருந்த போது, எங்கிருந்தோ மறுபடியும் வந்து சேர்ந்தார் பைத்தியக்காரத் தமிழர். 
"அவங்க குடுத்தது எதையும் சாப்பிட்டீங்களா தம்பி''" என்ற பதட்டத்துடன் அழகர்சாமியிடம் விசாரித்தார்.
அவன் எதுவும் பேசாமல் அவரைக் கோபமாய்ப் பார்க்கவும், "நான் பைத்தியம் இல்ல தம்பி. நிஜமாகவே அவங்க உங்கள விஷம் வச்சுக் கொல்லப் பார்த்தாங்க''" என்றார் இலேசாய் விசும்பியபடி.
"சரி டாக்ஸியில ஏறுங்க; வீட்டுல போய்ப் பேசிக்கலாம்''" என்று சொல்லி அவரையும் தன்னுடன் டாக்ஸியில் ஏற்றி அபார்ட்மெண்ட்டிற்கு அழைத்துப் போனான் அழகர்சாமி.
அவர் தன்னுடைய பெயரை சடையாண்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 
"நான் கேண்டீன் கொட்டகைக்குப் பின்னால படுத்திருந்தேன் தம்பி. அப்ப அவசரமாய் உள்ள வந்த லீ அங்கிருந்த கேண்டீன் ஆளுகிட்ட பேசுறதக் கேட்டேன். அவங்க சீன மொழியில பேசிக்கிட்டாங்க. 
லீ கொண்டு வந்த கவருலருந்து ஒரு கேக் துண்டை எடுத்து பிளேட்டில வச்சு அதுக்கு மேல பசை போல இருந்த ஒன்னத் தடவுனான். அதைப்பார்த்த கேண்டீன் ஆளு " அய்யோ இது விஷமாச்சேன்னு பதறுனான். 
"ஆமா, இது அந்த இந்திய இன்ஜினியரக் கொல்றதுக்காகத் தான். எங்க ஆபீசுல வாங்கிக் குடுத்து அனுப்புனாங்கன்னான். "சைட்டுல விழுந்து அவன் செத்தான்னா நாம எல்லாம் மாட்டிக்க மாட்டமா?’ன்னு அவள் கேட்கவும், "அவன் இப்ப சாக மாட்டான். இது கொஞ்சம் ஸ்லோ பாய்சன். ரெண்டு மூனு நாளைக்கு அப்புறந்தான் சாவான். பிரேதப் பரிசோதணையிலயும் ஹார்ட் அட்டாக்குன்னு தான் ரிப்போர்ட் ஆகும். விஷம்ன்னு கண்டுபிடிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டே விஷப் பசைக்கு மேல மறுபடியும் கேக்கோட கிரீமத் தடவுனான். அதான் நான் ஓடிவந்து தட்டி விட்டேன்''" என்று அவர் சொல்லி முடிக்கவும் அழகர்சாமி சிலிர்ப்புடன் அவரை அணைத்துக் கொண்டான். 
"அப்ப வாங்க போலீசுல போய் சொல்லிடலாம்'' என்று அவரை அழைத்தான் அழகர்சாமி.
"அவங்க உனக்கு விஷம் கொடுக்க முயற்சி பண்ணாங்கங்குறதுக்கு ஒரே சாட்சி நான் தான். ஆனால் என்னால போலீசுக்கெல்லாம் வந்து சாட்சி சொல்ல முடியாது. போலீசுக்கு வந்தால் அது எனக்கு சிக்கலாயிடும். ஏன்னா என்கிட்ட இந்த நாட்டுல தங்கி இருக்கிறதுக்குத் தேவையான எந்த பேப்பரும் இல்ல''" என்றவர் அவரின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
"எனக்கு சொந்த ஊர் கூத்தப்பாடிங்கிற கிராமம். அது தருமபுரி மாவட்டத்துல இருக்கு. அந்தக் காலத்து பெரிய எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணேன். வேலை ஒன்னும் சரியா அமையல. பக்கத்து ஊருல பால் சொசைட்டியில தான் வேலை கிடைச்சது. அதுல வர்ற வருமானம் குடும்பத்துக்குப் போதல. வெளிநாட்டுக்குப் போகலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.
தர்மபுரியில ஒரு ஏஜெண்ட் ஒரு லட்சரூபாய் புரட்டிக் குடுக்க முடிஞ்சா ரெண்டு மூனு மாசத்துல மலேசியாவுக்கு அனுப்பி வச்சுடுவேன்னார். எங்க அப்பா எங்க வாழ்க்கைக்கே ஆதாரமா இருந்த நெலத்தையெல்லாம் வித்துப் பணம் குடுத்தார். நானும் கொண்டு போயி ஏஜெண்டுகிட்ட கட்டுனேன். 
மலேசியாவுல எனக்கு சூப்பர்வைசர் வேலைன்னு சொல்லி அனுப்பி வச்சார். கம்பெனி முகவரி பத்துமலைன்னு ஓரிடத்துல இருந்துச்சு. அங்க தேடிப் போனால் அதுல கம்பெனி ஒண்ணும் இல்ல. வெட்டவெளி. அந்த அட்ரசுக்குப் பக்கத்துல முருகன் கோயில் ஒன்னு தான் இருந்துச்சு. 
இங்க வந்த பின்னாடி தான் அது ஏமாத்து வேலைன்னு புரிஞ்சது. டூரிஸ்ட் விசா எடுத்து அனுப்பி வச்சிருக்கார் ஏஜெண்ட். நான் அழுது அரட்டுறதப் பார்த்த அங்கிருந்த தமிழ்க்காரர் ஒருத்தர் என்னை ஒரு டீக்கடைக்குக் கூட்டிட்டுப் போயி சாப்பிடவச்சு பேசாம இந்தியாவுக்கே திரும்பிப் போயிடச் சொன்னார். 
ஆனால் நான் ஊருக்குத் திரும்பிப் போனால் கண்டிப்பா எங்க அம்மாவும் அப்பாவும் தற்கொலை பண்ணிப்பாங்கன்னு சொல்லி அழுதேன். அப்புறம் தான் அவர் வேணுமின்னா இங்கயே தங்கிக்க. ஒன்னு ரெண்டு வேலை செஞ்சு சாப்பிட்டுக்கோ. ஆனால் சம்பளமெல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டார்.
ஆனால் அவரும் ஒருசமயம் போலீஸ்காரங்க மலேசியா முழுக்க விசா இல்லாம வேலை செய்றவங்களப் பிடிக்கிறதுக்காக செக்கிங் நடத்திக்கிட்டு இருக்கிறதாக் கேள்விப்பட்டு வெளிய போகச் சொல்லிட்டார். அப்புறம் மலாக்கா, பினாங்கு, லங்காவீன்னு போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இல்லாத இடங்களுக்குப் போய்க் கிடைச்ச வேலைங்கள செய்துகிட்டு இருந்தேன். 
இப்பல்லாம் எல்லா இடத்திலயும் போலீசு கெடுபிடிகள் அதிகமா இருக்கிறதால எங்கள மாதிரியானவங்கள வேலைக்கு வச்சிக்கிடப் பயப்படுறாங்க. அதான் இப்படி பைத்தியக்கார வேஷம் போட்டுக்கிட்டு இரக்கப்பட்டு யாராவது ஏதாவது கொடுத்தால் சாப்பிட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் தம்பி''" 
"நீங்க பினாங்குல இருந்துருக்கீங்களா சடையாண்டி?'' " என்று ஆர்வமாய் விசாரித்தான் அழகர்சாமி. "
"ஏந்தம்பி கேட்குறீங்க? நாலைஞ்சு வருஷம் போல அங்க இருந்துருக்கேனே'' என்றார் அவர். 
அழகர்சாமி தன்னுடைய சூட்கேசைத் திறந்து அவனுடைய அம்மாவும் அப்பாவும் இருக்கிற போட்டோவை எடுத்து அவரிடம் காட்டி "இவரை அங்க எப்பவாவது பார்த்திருக்கீங்களா?" என்றான்.
போட்டோவை மேலோட்டமாய்ப் பார்த்துவிட்டு, "பார்த்த மாதிரி ஞாபகமில்லையே''" என்று சொல்லி அவனிடமே புகைப்படத்தைத் திருப்பிக் கொடுத்தார். அப்புறம் "கொஞ்சம் பரிச்சயமான முகமாத்தான் தெரியுது'' " என்ற சடையாண்டி.
மறுபடியும் அழகர்சாமியிடமிருந்து புகைப்படத்தை வாங்கிப் பார்த்தார். 
"இவர நான் பினாங்குல வச்சுப் பார்க்கல; ஆனால் மலாக்காவில பார்த்த ஞாபகம் இருக்கு'' " என்று சொல்லவும் அழகர்சாமி பிரகாசமானான்.
அடுத்தநாள் சடையாண்டியையும் அழைத்துக் கொண்டு மலாக்காவிற்குப் பயணமானான் அழகர்சாமி. அழகர்சாமியின் அப்பா வேலை பார்த்த ஒரு சீனக்கடையில் தான் மிகக் குறுகிய காலத்திற்கு சடையாண்டியும் வேலை பார்த்திருக்கிறார். மலாக்காவில் சைனா டவுன் என்னும் பகுதிக்கு அழைத்துப் போய் அதனுள் ஜோன்க்கர் சாலை என்னும் மிகமிகப் பரபரப்பான கடைவீதிக்கு அழைத்துப் போனார் சடையாண்டி. பல கடைகள் முகப்பில் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் குழம்பினார் அவர். 
கடைகளைத் தயங்கித் தயங்கி நோட்டம் விட்டுக் கொண்டு வந்தவர் ஒரு கடையைப் பார்த்ததும் இதுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அழகர்சாமியை உள்ளே அழைத்துப் போனார். அங்கிருந்த ஒருவனிடம் சடையாண்டி கடையின் ஓனரைப் பார்க்க வேண்டும் என்றான். அவன் சடையாண்டியிடம் மலாயில் ஏதோ விசாரிக்கவும் அவர் சீன மொழியில் பதில் சொன்னார். 
அவன் அவர்களைக் கடையின் பின் பகுதிக்கு அழைத்துப் போய் அங்கிருந்த இளைஞனைக் காட்டிவிட்டு அவனுடைய வேலைக்குத் திரும்பிப் போய்விட்டான். சடையாண்டி அவருக்கு சீனமொழியில் வந்தனம் சொல்லி தான் அவருடைய கடையில் ஏற்கெனவே வேலை பார்த்திருப்பதாகத் தெரிவித்தான். அவர், "இப்பொழுது கடையில் வேலை ஒன்றும் காலி இல்லை''’ என்றார் அவசரமாய். 
"வேலை எதுவும் வேண்டாம்; இங்கு ஏற்கெனவே வேலை பார்த்த ஒருவரைப் பற்றி விசாரித்துப் போக வந்திருக்கிறோம்'' ’ என்ற சடையாண்டி அழகர்சாமியிடமிருந்த அவனுடைய அப்பாவின் போட்டோவைக் காட்டினார். போட்டோவைப் பார்த்ததும் சீனனின் முகம் கறுத்தது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், "போட்டோவில் இருப்பவர் இங்கு வேலை பார்க்கவில்லை''என்றான்.
"இல்லை. அவர் இங்கு தான் வேலை பார்த்தார். நானும் கூடக் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். உங்களுடைய அப்பாவிற்குத் தெரிந்திருக்கலாம். அவரைப் பார்க்க முடியுமா?''’ என்றார் சடையாண்டி. "அவர் இரண்டு வருஷங்களுக்கு முன்பு இறந்து போய் விட்டார்'' ’ என்ற சீனன் "வியாபார நேரம்; தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். சீக்கிரம் வெளியே போங்கள்''’ என்று அவர்களை அவசரமாய் விரட்டினான். 
சடையாண்டிக்கும் குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை கடை கை மாறி இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் கடையின் இளைஞன் எதையோ மறைப்பதும் அவனுடைய முகமாற்றத்
திலிருந்தும் பதட்டத்திலிருந்தும் பளிச்செனத் தெரிந்தது. 
கடையிலிருந்து வெளியேறி, அந்தத் தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலரிடம் அவனுடைய அப்பாவின் புகைப்படத்தைக் காட்டி, " இவரை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?'' என்று விசாரித்துப் பார்த்தார்கள். யாரும் பாஸிட்டிவ்வான பதில்களைத் தரவில்லை. 
அந்தத் தெருவிலேயே இருந்த உணவகம் ஒன்றில் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்கப் போனபோது கல்லாவில் உட்கார்ந்திருந்தவன் தமிழனாய் இருக்கவே அவனிடமும் அப்பாவின் போட்டோவைக் காட்டி விசாரித்தான் அழகர்சாமி.
"எனக்கு இவர எங்கயும் பார்த்த ஞாபகம் இல்ல. ஆனா மலாக்கால தான் இருந்துருந்தார்னா எங்க தாத்தாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம்'' " என்று சொல்லி வேறொருவனை அழைத்து கல்லாவில் உட்கார வைத்து விட்டு அவர்களை ஹோட்டலின் முதல் மாடிக்கு அழைத்துப் போனான். 
அங்கிருந்த முதியவர் அழகர்சாமியை ஆழமாய் ஊடுருவிப் பார்த்துவிட்டு, "இவர நீங்க எதுக்குத் தேடி வந்துருக்கீங்க; அவருக்கு நீங்க என்ன உறவு முறை?'' " என்றார் போட்டோவைப் பார்த்ததும். 
"அவரு எங்க அப்பா தான்'' " என்று அழகர்சாமி சொல்லவும், "அடப்பாவி மனுஷா, ஊருல இப்படி ஒரு புள்ளைய உட்டுட்டு வந்தா, இங்க ஒரு சிறுக்கிய சேர்த்துக்கிட்டு செத்துத் தொலைஞ்சான்'' " என்று விசனப்பட்டவர் சொல்லத் தொடங்கினார்.
"மலாக்காவுல கொஞ்ச நாள் தான் இருந்தான் உங்க அப்பன். அவன் வேலை பார்த்த சீனனோட கடையில அவன் பொண்டாட்டி கூடவே சிநேகமாயிட்டான். அவள் தான் உங்க அப்பன் மேல ஆசைப்பட்டு சேர்த்துக்கிட்டாள்னும் அப்பப் பேசிக்கிட்டாங்க. அது சீனனுக்குத் தெரிஞ்சு கண்டிச்சிருக்கான். அப்பயும் அவங்க தொடர்பை உட்டுடல. லங்காவித் தீவுலயும் சீனனுக்கு ஒரு கடை இருந்துச்சு. உங்க அப்பன சீனன் அங்க வேலைக்கு அனுப்பிட்டான். அங்க வேலைக்குப் போன கொஞ்சநாள்லயே, தாய்லாந்துலருந்து கள்ளத்தோணியில போதைப் பொருள் கடத்தீட்டு வந்தான்னு உங்க அப்பனப் போலீசு புடிச்சிருச்சு.
அவன் கொண்டு வந்த மூட்டையில போதை மருந்து இருக்குன்னே உங்க அப்பனுக்குத் தெரியாதுன்னும் சீனனே போலீசுக்குத் தகவல் சொல்லி உங்க அப்பன புடிச்சுக் கொடுத்தான்னும் பேசிக்கிட்டாங்க. ஆனா எதையும் நிரூபிக்க முடியல. மலேசியாவுல போதை மருந்து சம்பந்தமான குற்றங்களுக்கு மரணதண்டனைங்குறதால'' " அவர் பேச முடியாமல் கேவி அழத் தொடங்கினார்: 
அப்புறம் நிதானத்திற்கு வந்து, "உங்க அப்பன்கிட்ட அவன் இந்தியாவுலருந்து இங்க வந்ததுக்கான எந்த பேப்பரும் இல்ல. உங்க அப்பனும் சொல்லல. அவன் தன்னோடக் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம்னே சொல்லிட்டான். மலேசிய அரசாங்கம் இந்திய அரசுக்குத் தகவல் தெரிவிச்சதாகவும், அவங்களால உங்க அப்பன் பத்தின எந்த விவரத்தையும் கண்டுபிடிக்க முடியலைன்னும் அப்ப பேசிக்கிட்டாங்க'' " என்றார்.
அழகர்சாமி அன்றைக்கு இரவு அம்மாவிற்குப் போன் பண்ணி, " "அப்பாவை தேடிக் கண்டுபிடிக்கவே முடியலம்மா. உன்னை விட்டுட்டு என்னாலயும் இங்க இருக்க முடியலம்மா. அதனால நான் நம்ம ஊருக்கே திரும்பி வந்துடப் போறேன்ம்மா'' " என்று சொல்லவும், " அவளும் சரிப்பா'' என்றாள்.

கட்டடப் பொறியாளரான சோ.சுப்புராஜ், எண்பதுகளின் மத்தியில் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். நூற்று இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இருபது கவிதைகள், ஐந்து குறுநாவல்கள் எழுதியிருக்கிறார். இரண்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுப்பு 
வெளிவந்திருக்கிறது. பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பல பெற்றிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com