செங்கலுக்குப் பதிலாக தெர்மாகோல்!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் செங்கல்லுக்குப் பதிலாக தெர்மாகோல் அட்டையைக் கொண்டு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 
செங்கலுக்குப் பதிலாக தெர்மாகோல்!
Updated on
2 min read

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் செங்கல்லுக்குப் பதிலாக தெர்மாகோல் அட்டையைக் கொண்டு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், ரயில் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் என கட்டுமானப் பணிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. அதேபோல, நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகளும் நவீன தொழில்நுட்பத்துடன் வளர்ச்சி அடைந்து வருகின்றன. 

கட்டுமானப் பணிக்குத் தேவைப்படும் மூலப்பொருளான மணல், கடந்த ஓராண்டுக்கு முன்பு கன அடி ரூ.35-க்குக் கிடைத்தது. ஆனால், தற்போது அதன் விலை ரூ. 165-ஆக உயர்ந்துள்ளது. சிமெண்ட் ரூ. 270-க்கு விற்கப்பட்ட மூட்டை இப்போது ரூ. 450-ஆக உயர்ந்துள்ளது. ஒரு டன் இரும்பு கம்பி ரூ. 34 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மணல் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம். சாண்ட் தரம் குறித்து ஆராய போதிய அளவில் பரிசோதனைக் கூடங்கள் இல்லாததால்,  அவற்றின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், கட்டுமானப் பணிகள் தடைபட்டு நிற்கின்றன. இதனால், லட்சக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கட்டுமானப் பொருள்கள் ஒவ்வொன்றையும் தயாரிக்கும்போது, சுற்றுச்சூழல் தொடர்ந்து மாசுப்படுத்தப்படுகிறது. இதனால், மாற்றுக் கட்டுமானப் பொருள்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தும் நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், செங்கலுக்குப் பதிலாக தெர்மாகோல் அட்டையைப் பயன்படுத்தி வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

பெரம்பலூர் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர், வீடியோ மற்றும் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். செட்டிக்குளம் கிராமத்தின் தேரோடும் பிரதான சாலையில், தனக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 600 சதுர அடி பரப்பளவில் கீழ்தளத்தில் கடை, மாடியில் வீடு என தனக்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், கம்பி, செங்கல், ஜல்லி, மணல் ஏதுமின்றி, வெளிநாடுகளைப்போல தெர்மாகோல் தொழில்நுட்ப முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களை நகைப்பிற்கு உள்ளாக்கினாலும், பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ராமர் கூறியது: 

""தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் தொழில்ரீதியாகச் சென்று வருகிறேன். அவ்வாறு, ஒரு வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து, அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட போது, தெர்மாகோல் மூலமாக கட்டப்பட்டது என்றார். இதை நான் நம்பவில்லை. இருப்பினும், கட்டுமானப் பொறியாளர்களிடம் கேட்டபோது சாத்தியம் எனத் தெரியவந்தது. 

இணையத்தில் ஆய்வு செய்தபோது, இதுபோன்ற வீடுகள் வெளிநாடுகளில் அதிக அளவில் கட்டப்பட்டு வருவதை அறிந்தேன். பிறகு, வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது அவர்கள் அச்சமடைந்தனர். தற்போது, குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்போடு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.

கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் பொறியாளர் ஆனந்த கீதனிடம் பேசினோம்:

""தெர்மாகோல் தொழில்நுட்பம் வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. நாங்கள், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடக்கத்தில் தனிநபர் கழிவறைகள் கட்டிக்கொடுத்தோம். தொடர்ந்து, மாடியில் அறை ஒன்று கட்டிக்கொடுத்தோம். பிறகு படிப்படியாக தற்போது தெர்மா கோல் மூலம் கட்டுமானப் பணிகளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக அளவுகள் எடுக்கப்பட்டுத் தேவையான அளவுகளில் வெல்ட் மெஷ் என்று அழைக்கப்படும் கம்பி வலைகளுக்கு இடையே, 3 அங்குலம் அளவு கொண்ட தெர்மாகோல்களை வைத்து பேனல்களாகத் தயாரித்து, அதை  சுவர்களுக்குப் பதிலாக பொருத்தியுள்ளோம். பிறகு, அதன் மேல் கலவையைக் கொண்டு மெத்தி விட்டு, பூச்சுவேலையைத் தொடங்குவோம். இவ்வாறு செய்வதால் காலநேரம், பொருள் விரையம் குறையும். மேற்கொண்டு, செங்கல், கருங்கல், ஜல்லி, மணல், கம்பி அதற்குத் தேவையான பணியாளர்களும் தேவையில்லை. 

இதுபோன்ற வீடுகளுக்கு அடித்தளம் எனக் கூறப்படும், அஸ்திவாரம் பெரிய அளவில் தேவையில்லை. வீட்டின் எடையும் மிகக்குறைவு என்பதால், விரிசல், பூகம்பம், நில நடுக்கம், சூறாவளி, கடும் மழை போன்றவற்றைத் தாங்கும் தன்மை கொண்டது. வழக்கமாகக் கட்டப்படும் வீடுகளை விட இந்த வீடு பல மடங்கு வலுவாக இருக்கும்.  கடற்கரைப் பகுதி, மலைப் பிரதேசங்களுக்கும் இது ஏற்றதாகும். இதுபோன்ற கட்டுமானப் பணிகளை உரிய பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும்'' என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com