சொன்னால் நம்பமாட்டீர்கள்! - 31

சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது. திரு.கோபால மேனன் சபாநாயகர். திரு. காமராஜ் முதல் மந்திரி.
சொன்னால் நம்பமாட்டீர்கள்! - 31

சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது. திரு.கோபால மேனன் சபாநாயகர். திரு. காமராஜ் முதல் மந்திரி.

திரு. சி.சுப்ரமணியம் நிதி மந்திரி மற்றும் மந்திரிகள். சட்டசபை அங்கத்தினர்கள் எல்லாரும் அசந்து போனார்கள். நாங்களோ சட்டசபைக்குள்ளே நின்றுகொண்டு, ""வேங்கடத்தை விட மாட்டோம்'' என்றெல்லாம் முழக்கம் செய்தோம்.

சபாநாயகர் உத்தரவு இல்லாமல் சபைக்குள் போலீசார் வர முடியாது. அதனால் போலீசார் வெளியே நின்று கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள்.

சபாநாயகர் கோபால மேனன் என் னைப் பார்த்து ""சபைக்குள் வரக் கூடாது. சட்ட விரோ தம். வெளியே போங்கள்'' என்றார்.

உடனே திருமதி சரோஜினி, ""நீங்கள் ஒரு மலையாளி... இது தமிழர் பிரச்சினை. மந்திரி சபையின் கவனத்தைக் கவரவே நாங்கள் உள்ளே வந்திருக்கிறோம்'' என்றார்.

உடனே முதலமைச்சர் காமராசர் எங்களிடம், ""சரி, எல்லோரையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்'' என்றார். வெளியே வந்தோம். எங்களுடைய கோரிக்கையைச் சொன்னோம். ""சரி, என்னால் செய்யக் கூடியதைக் கட்டாயம் செய்கிறேன்'' என்று சொன்னார்.

அவர் அந்தப் பக்கம் போனதும் போலீசார் எங்களை வளைத்துப் பிடித்து கைது செய்து வேனில் ஏற்றி வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய் வைத்திருந்தார்கள்.

கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் மனைவியாருக்கு இதெல்லாம் புதிய அனுபவம். கொஞ்சம் கலவரப்பட்டதுபோல இருந்தார்கள். நான் கு.சா.கி. அவர்களிடம் ""எதுக்கய்யா மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்தீங்க? அவங்க ஜெயிலுக்குப் போகப் பயப்படுவாங்க போலிருக்கே'' என்றேன்.

அவர் உடனே ""இப்ப நான் கூட்டிக்கொண்டு வந்ததாலே தேச சம்பந்தமாக ஜெயிலுக்குப் போகப் போறா, வீட்டிலே விட்டு வந்திருந்தா கிரிமினல் சம்பந்தமா அடிதடி சண்டைக் கேசுக்காக ஜெயிலுக்கு வந்து நிற்பாளே'' என்றார்.

""என்ன விஷயம்'' என்றேன். அவர் சொன்ன விஷயம் ரொம்ப தமாஷாக இருந்தது. அதாவது அவருக்கு இரு மனைவிகள். இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம். ஒரு மனைவி மேல் மாடியில் வசிக்கிறார். இன்னொரு மனைவி கீழ் வீட்டில் வசிக்கிறார். தாங்கள் எங்கே வசிப்பது? என்று நடுவில் ஒரு கேள்வி போட்டேன்.

""நான் மாடிப்படியில்தான் வசிக்கிறேன். அதனாலே மேலே இருப்பவர் கீழ் வராமலும், கீழே இருப்பவர் மேலே போகாமலும் தடுத்துக் கொண்டிருக்கிற சக்தி நான்தான். விஷயம் இப்படி இருக்கிறபோது நான் மட்டும் போராட்டத்திற்கு வந்து விட்டால் மேலே இருக்கிறவர் கீழே வர, கீழே இருக்கிறவர் மேலே போக, கடைசியில் அடிதடி சண்டைக் கேசில் ஜெயிலுக்குத் தானே வரவேண்டும். அதனால்தான் ஒருத்தியை என்னுடன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன்'' என்றார். 

எல்லோரும் தமாஷாகச் சிரித்தோம். ஜெயிலுக்கு வந்தவர்களை மனம் தளராமல் கவிஞர் கு.சா.கி. இப்படி தமாஷாகப் பேசி உற்சாகமூட்டிக் கொண்டிருப்பதில் வல்லவர். பிறருக்கு எந்தத் தீங்கும் நினைக்காத நல்லவர்.

எங்களையெல்லாம் போலீஸ் கமிஷனர் முன் ஆஜர் செய்தார்கள். முதலில் என் பெயரைச் சொன்னதும் நான் கமிஷனர் எதிரில் நின்றேன். அப்போது கமிஷனராக இருந்தவர் திரு. அருள் அவர்கள். என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகை செய்துவிட்டு ஏதோ எழுதப்போனார். நான் உடனே ""சார்எழுதும்போது "பி' கிளாஸ் போட்டு எழுதுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் உள்ளே போய் வேறு போராட வேண்டியதிருக்கும்'' என்றேன்.

""பி-கிளாஸ் போடுகிறேன்'' என்று சொல்லி சிரித்துக் கொண்ட எழுதினார். எழுதி முடித்ததும் ""சரி நீங்கள் போகலாம்'' என்றார்.

""சார் இன்னொரு விஷயம்'' என்றேன் ""என்ன?'' என்றார்.

""இப்போது மணி ஒன்று. எங்களைச் சிறைக்குள் கொண்டு போகும்போது மணி நான்காகிவிடும். சிறையில் சடங்குகள் முடிந்து எங்கள் அறைகளுக்குச் செல்லும்போது மணி ஆறாகலாம்.

ஆகவே நாங்கள் இப்போது சாப்பிடாமல் சிறைக்குச் சென்றால் இன்று பூரா பட்டினி கிடக்க நேரிடும். அதனால் எங்கள் எல்லோருக்கும் நல்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றேன். கமிஷனர், சிரித்துக் கொண்டே ""எத்தனை முறை சிறைக்குச் சென்றிருக்கிறீர்கள்?'' என்றார்.

""நான்கு ஐந்து முறை சென்றிருக்கிறேன்'' என்றேன். ""அதனால் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சரி நீங்கள் போகலாம்'' என்று சொல்லி எங்களுடன் வந்த சார்ஜண்டைக் கூப்பிட்டு தன் கைப்பணத்தை (ரூ.200) கொடுத்து நல்ல சாப்பாடு போட்டு பிறகு ஜெயிலுக்குக் கொண்டு போகும்படி உத்தரவிட்டார்.

கட்டபொம்மன்,  கப்பலோட்டிய தமிழன்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுடன் நான் தமிழரசுக் கழகத்தில் தொண்டு செய்து கொண்டிருந்தபோது, "தங்கமலை ரகசியம்'  என்ற திரைப்படக்கதை ஒன்றை பத்மினி பிக்சர்ஸ் உரிமையாளர் திரு. பி.ஆர்.பந்துலு அவர்களிடம் சொன்னேன்.

கதை, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பதற்காகவே சொல்லப்பட்டது. 

வசனம் மிகச் சிறப்பாகப் பேசி அற்புதமாக நடிக்கும் ஆற்றல் பெற்ற  சிவாஜி அவர்கள், வாய் பேசாமலே  சிறப்பாக நடிப்பதற்காக பாதிக்கதை வரையில் வாய் பேசத் தெரியாத வாலிபனாகவும், பின்னர் பேசத் தெரிந்தவனாகவும் ஒரு கதாபாத்திரத்தை சிருஷ்டி செய்தேன்.

கதாநாயகன் குழந்தையாக இருக்கும்போது சூழ்ச்சியின் காரணமாகக் காட்டில் வீசப்படுகிறான்.  அக்குழந்தையை யானைகள் எடுத்து வளர்ப்பதாகக் கதை. 

யானைகள் எப்படி எப்படி ஒரு குழந்தையை வளர்க்கும் - யானைகள் என்னென்ன வேலை செய்யும் என்பதை எல்லாம் இதற்காக நான் பல சர்க்கஸ் கம்பெனிகளில் விசாரித்து ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன். அதனால் திரு.பந்துலு அவர்கள் என்னையும் தன் கூடவே இருந்து படப்பிடிப்பிற்கு உதவியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். 

திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் முதன்முதலில் டைரக்ட் செய்த படமும் அதுதான்!
"தங்கமலை ரகசியம்' படப்பிடிப்பின்போதுதான் பந்துலு அவர்களின் உள்ளத்தில் " வீரபாண்டிய கட்டபொம்மன்',  "கப்பலோட்டிய தமிழன்'   ஆகிய இருவரின் சரிதத்தைப் படமாக்க வேண்டுமென்ற விதையை ஊன்றினேன். 

திரு.ம.பொ.சி. அவர்களைப் பற்றி பந்துலு அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பேன். 

என்னுடைய தூண்டுதலுக்கு மிகவும் ஆதரவாக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் இருந்தார். 

பத்மினி பிக்சர்ஸூக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் திரு. கு.மா.பாலசுப்பிரமணியமும், தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்தவராகையால் அவரும் என்  பேச்சை ஆமோதித்துக்  கொண்டிருந்தார். 

"தங்கமலை ரகசியம்'  தமிழில் பெரிய வெற்றிப் படமாக  அமைந்தது. அதுவே " ரத்னகிரி ரகசியம்' என்ற பெயரில் கன்னடத்தில் வெளிவந்து அதுவும் பெரிய வெற்றிப்  படமாக அமைந்தது. 

அச்சமயத்தில்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் நானும் மற்றும் தமிழரசுக் கழகத் தோழர்களும் கட்டபொம்மன் பற்றித் தமிழகமெங்கும் தீவிரப் பிரசாரம் செய்து  கொண்டிருந்தோம். 

தமிழக மக்கள் கட்டபொம்மனைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டார்கள். அவனுடைய வீரம் - தியாகம் இவற்றை மிகவும் போற்றினார்கள்.

இச்சூழ்நிலையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற அற்புதமான நாடகத்தை அரங்கேற்றம் செய்தார். 

அந்த நாடகம் தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. 

திரு.பி.ஆர்.பந்துலு  உள்ளத்திலும் ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்தியது. 

நாடகம் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது திரு.  பந்துலு அவர்கள் என்னிடம், ""சரி... உங்கள் விருப்பப்படி கட்டபொம்மன்  பட வேலையை நாளையே  துவக்குங்கள்'' என்றார். 

நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 

மறுநாள் முதலில் நான் செய்த காரியம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் வீட்டுக்கு பி.ஆர்.பந்துலுவைக் கூட்டிக் கொண்டு போய், ம.பொ.சி. அவர்களுக்கு மாலை, மரியாதை  செய்து, "" கட்டபொம்மன் படம் தயாரிக்கச் சிறந்த ஆலோசனைகள் அடிக்கடி சொல்ல வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டதுதான்

அதுபோல திரு.ம.பொ.சி. அவர்கள் கட்டபொம்மன் படம் முழுவதற்கும்  கூடவே இருந்து  உதவி செய்தார்கள்.

(தொடரும்) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com