சொன்னால் நம்பமாட்டீர்கள் - 35

"டெஸ்ட் எடுப்பது' என்பது  பலமாதிரி நடிக்கச் சொல்லிப்படமாக எடுப்பது.
சொன்னால் நம்பமாட்டீர்கள் - 35
Updated on
3 min read

"டெஸ்ட் எடுப்பது' என்பது  பலமாதிரி நடிக்கச் சொல்லிப்படமாக எடுப்பது.

"டெஸ்டை' எம்.ஜி.ஆர். பார்த்தார். கூட நாங்கள் சிலரும் பார்த்தோம்.

சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக்காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். அதுவும் ஒரு செக்ஸியாகத் தானே இருக்கிறது. இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டு விடுங்கள்' என்று சொன்னார்.

எங்கள் சாவித்திரி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் "பாக்கெட்மார்' என்ற இந்திப் படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும், திரு. ப. நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும், திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் "நெகடிவ் ரைட்ஸ்' வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து வேலையைத் துவங்கினோம்.

படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர்., "எவ்வளவு லட்சம் செய்து படம் எடுக்கிறோம். அந்த படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும், அதேபோல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமையவேண்டும். பணம் செலவு செய்து "போஸ்டர்' ஒட்டுகிறோம்.

÷பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்குப் பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்'' என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் எங்கள் குழுவைச் சேர்ந்த திரு. மா. லெட்சுமணன் அவர்கள் மேற்படி படத்திற்கு "திருடாதே' என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் அப்பெயர் ரொம்பவும் பிடித்தது. திரு. மா. லெட்சுமணனுக்கு ரூ.500ஐ எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

"திருடாதே' படம் வேகமாக வளர்ந்து வந்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்களும் "திருடாதே' படத்தை மிக நன்றாகத் தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கால் ஓடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடி போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வருவேன்.

ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம், ""என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும்.

ஆகவே படத்தை திரு. ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் லாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்கிறேன்'' என்று சொன்னார்.

நான் சிறிது யோசித்தேன். அவர் விடவில்லை. ""என் பேச்சைக் கேளுங்கள்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார். "சரி' என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம்.

"திருடாதே' படத்திற்காக எனக்குக் கிடைத்த பணத்தை வைத்துத்தான் "கடவுளின் குழந்தை' என்ற படத்தை நான் எடுத்தேன்.

அதன் பின் "திருடாதே' ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப் படமாக ஓடியது. அதன் வெற்றிக்கு நான்தான் அஸ்திவாரம் என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் போயிற்று.

ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும். 

அதனால் "திருடாதே' நூறாவது வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

வாழ்க அவர் பண்பு!

பனகல் பார்க் காய்கறி அங்காடி

சென்னை தியாகராய நகர், பனகல் பார்க் அருகில்தான் தமிழ்ப் பண்ணை, அதன் எதிர் பிளாட்பாரத்தில் சிலர் காய்கறி விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் திடீரென்று ஒரு போலீஸ் லாரி நிறைய போலீசார் வந்து காய்கறி விற்றவர்களை அடித்துக் காய்கறிகளைத் தெருவில் வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். நான் ஓடிப் போய் போலீசாரின் செய்கையை எதிர்த்தேன்.  மக்கள் என் பக்கம் சேர்ந்ததும் சார்ஜண்ட் என்னைக் கைது செய்வதாகச் சொல்லி லாரியில் ஏற்றிக் கொண்டு போனார்.

ஒரு மணி நேரம் கழித்து விடுதலை செய்வதாகச் சொன்னார். ""நான் விடுதலையாக முடியாது. வாருங்கள் கமிஷனரிடம் போவோம், இல்லையென்றால் முதலமைச்சர் காமராஜரிடம் போவோம்'' என்று சொன்னேன். பின்னர் சார்ஜண்ட் என்னை முதல் அமைச்சர் வீட்டில் கொண்டு வந்துவிட்டார்.

காமராசர் அப்போதுதான் வெளியில் புறப்படும் தறுவாயிலிருந்தார். என்னைக் கண்டதும், ""என்ன சங்கதி?'' என்றார்.

காய்கறி விற்கும் ஏழைகளுக்கு ஏற்பட்ட கதியைச் சொன்னேன்.

""அப்படியா, பின்னே ஏறுங்க காரிலே, அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம்'' என்று கூறிப் புறப்பட்டார். குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் விவரம் பூராவும் சொல்லி, இந்த ஏழைகள் மானமாகப் பிழைக்க ஏதாவது வழி செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அங்கே நின்ற ஏழை எளியவர்களையும் தெருவில் கிடக்கும் காய்கறிகளையும் பார்த்துவிட்டு ""இதற்கு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

""என்மீது தங்களுக்கு நம்பிக்கை உண்டல்லவா?'' என்றேன்.

""நிச்சயமாக'' என்றார்.

""அப்படியானால் நான் சொல்லும் இடத்தில் மார்க்கெட் வைக்க உத்தரவிடுங்கள், இந்த ஏழைகளை வாழ வைக்கலாம்'' என்றேன்.

அப்போது அங்கு வந்துசேர்ந்த போலீஸ் கமிஷனரை காமராஜர் கூப்பிட்டு, ""இவருடன் கலந்து மார்க்கெட் வைக்க ஏற்பாடு செய்யுங்கள், ஏழைகள் பிழைக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

காமராஜ் அவர்களின் உத்தரவுப்படி போலீஸ் கமிஷனர் அவர்களும் நகரசபை கமிஷனர் அவர்களும் நானும் கலந்து பேசி பனகல் பார்க்கை ஒட்டிய உஸ்மான் ரோடு பிளாட்பாரத்தில் வரிசைக் கிரமமாக எண் கொடுத்து ஒவ்வொரு வியாபாரிக்கும் இடம் ஒதுக்கி மார்க்கெட் நடத்தச் சட்டப்பூர்வமாகச் செய்தோம்.

பின்னர் அதே மார்க்கெட் இடத்தை மாநகராட்சி ஏலத்திற்கு விட்டு அதில் நல்ல வருமானமும் தேடிக் கொண்டது.

அதன் பிறகு திரு. பக்தவத்சலம் முதல்வராக வந்ததும் பார்க்குக்குள் சிறிது தள்ளி நல்ல கட்டடமாகக் கட்ட அரசாங்கம் அனுமதியளிக்கும்படி செய்தேன்.
பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டச் செய்து கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய முதல்வராக இருந்த திரு. மு. கருணாநிதி அவர்களால் பனகல் பார்க் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்றும் நான் மார்க்கட்டுக்குள் போனால் அங்குள்ள நன்றியுள்ளம் படைத்த வியாபாரிகள் - பெண்கள் - குழந்தைகள்
உட்பட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்துகிறார்கள்.

டி.கே.சண்முகம் அடைந்த பேரின்பம்

1960 - இல் "கடவுளின் குழந்தை' என்ற திரைப்படம் எடுத்தேன்.  அதில் சிவஞானபாரதி என்ற ஒரு தமிழ் ஆசிரியர் வேடம். தமிழை மூச்சாகக் கொண்டு தமிழ் பரப்பி வரும் கதாபாத்திரம். "தமிழனென்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா'  என்ற பாடலைப் பாடும் சிறந்த வேடம். 

அந்த வேடத்தை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்தேன். அப்போது தமிழரசுக் கழகத்தில் என்னுடன் மிகவும் ஈடுபாடு கொண்டு தமிழ்த்தொண்டு செய்து கொண்டிருந்த முத்தமிழ் கலாவித்வரத்ன அவ்வை டி.கே.சண்முகம் அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்  என்று முடிவு செய்தேன். 

இதை திரு. சண்முக அண்ணாச்சி அவர்களிடம் நான் சொன்னபோது, மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். 

"" நடிப்பதற்குப் பணம் எவ்வளவு வேண்டும்'' என்று கேட்டேன். ""  படம் முடிந்ததும் பணம் கொடுக்கலாம்''  என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு படத்திற்குப் பல யோசனைகள் சொன்னார். கூடவே இருந்து நடித்துப் படத்தை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தார். படம் முடிந்து வெளி வந்தது.  படத்திற்கு நல்ல பேரும் கிடைத்தது. 

அதன் பிறகு நான் ஒருநாள் திரு. சண்முக அண்ணாச்சி அவர்களிடம் சென்று, "" படம்தான் முடிந்து விட்டதே, தங்களின் ஒத்துழைப்பை ஒருநாளும் மறக்கமாட்டேன்.  இப்போதாவது சொல்லுங்கள். எவ்வளவு பணம் வேண்டும்'' என்று கேட்டேன். 

உடனே அண்ணாச்சி சண்முகம் அவர்கள் சொன்னதைச் சொன்னால் நம்பமாட்டீர்கள்.

"" நான் பெரிய  பணக்காரன் அல்ல. எனக்குப் பணம் தேவைதான். ஆயினும் நீங்கள் எனக்குக் கொடுத்த  என் மனதிற்கு மிகவும் பிடித்த வேடம். நமது கொள்கைகளைப் பரப்புவதற்கு நீங்கள் செலவு செய்து சினிமா எடுத்திருக்கிறீர்கள்.  இதில் என் பங்கும் இருக்கிறது என்ற பேரின்பம் ஒன்றே எனக்குக் கோடி கொடுத்தாற்போல. ஆகவே எனக்குப் பணம் வேண்டாம்'' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com