

ஒரு சிலர் பொற்றாமரைக் குளத்தில் படகேறிச் சென்று சங்கப் பலகையில் தொற்றிக்கொள்ள முயன்றார்கள். சிலர் கட்டு மரம் கட்டிக்கொண்டு போய்ப் பலகையைத் துண்டு துண்டாக வெட்டிவிட வேண்டுமென்று கோடாலியுடன் புறப்பட்டார்கள்.
சிலர் ஜலத்துக்குள் கண் மறைவாக நீந்திப் போய் முக்குளித்துப் பலகையில் ஏறிவிடப் பிரயத்தனப்பட்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. ஏமாற்றத்துக்குள்ளான பண்டிதர்கள் பலர் ஆத்திரமடைந்து, பலகையைப் பொசுக்கி விட நெருப்புப் பந்தத்துடன் கிளம்பினார்கள். நெருப்புதான் அணைந்ததே ஒழியப் பலகையைப் பொசுக்க முடியவில்லை.
கடைசியாக, ""இது தெய்வீக சக்தி வாய்ந்தது. தமிழ் மக்களின் தரத்தையும் தகுதியையும் அறிந்து கொள்ளத் தமிழ்க் கடவுளால் அளிக்கப்பட்ட தராசு. இதில் ஏறுவதற்கு நம்மை நாம் தகுதியாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழிய பலகை மீது கோபப்படுவதில் பயனொன்றுமில்லை'' என்று கண்டு கொண்டார்கள்.
இப்படி மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த மேற்படி சங்கப்பலகை திடீரென்று ஒரு நாள் காணாமற் போய்விட்டது. சங்கப் பலகை எப்படி மறைந்தது? எங்கே போயிற்று என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் கையை நெரித்துக் கொண்டார்கள். செம்படவர்களை வரவழைத்துப் பொற்றாமரைக் குளத்தில் வலை போட்டுப் பார்த்தார்கள். ஊஹும்! சங்கப் பலகை கிடைக்கவேயில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் "கர்நாடகம்' என்ற பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலைகளைப் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். நாடகம், சங்கீதம், நாட்டியம் சம்பந்தமாக அவர் எழுதிய விமர்சனங்களைப் படிக்கப் படிக்கத் தமிழ் மக்களுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது.
""இப்படியும் தராதரம் அறிந்து எழுத முடியுமா?'' என்று அதிசயித்து மூக்கின் மேல் விரல் வைத்தார்கள்! தமிழ்நாட்டில் காணாமற்போன சங்கப் பலகைதான் இப்படி மனித உருவத்தில் "கர்நாடகம்' (கல்கி) என்ற பெயரில் தோன்றித் தமிழர்களுக்கு தராசாக இருக்கிறதோ என்றுகூடச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய சந்தேகம் நாளடைவில் ஊர்ஜிதமாயிற்று.
தமிழ்க்கடவுள் "சங்கப் பலகை'க்கு வேறு எந்த தேசமும் லாயக்கில்லை. அது தங்குவதற்குரிய இடம் தமிழ்நாடுதான் என்று முடிவு கட்டியிருக்க வேண்டும். எனவே, மேற்படி பலகைக்கு மனித ரூபமளித்து கல்கியை "கர்நாடகம்' என்ற பெயருடனே தமிழ் மக்களின் இதயத்திலே மிதக்கவிட்டிருக்கிறார். அன்று முதல் கல்கி ஏற்றுக்கொண்ட கலைஞர்தான் உண்மையான கலைஞர் என்ற மனப்பான்மை தமிழ் மக்களுக்கு உண்டாயிருக்கிறது.
ஆம்; தெளிந்த நீரோட்டத்தைத் தெளிந்த நீரோட்டமென்றும், பாசி பிடித்த குட்டையைப் பாசி பிடித்த குட்டை என்றும் கர்நாடகம் (கல்கி) எப்போதும் சொல்லத் தயங்கியதே கிடையாது. தம்முடைய ஊரில் ஓடும் சாக்கடையாயிற்றே என்பதற்காக அவர் அதற்கு விசேஷ சலுகை காட்டி அதைப் புண்ணிய தீர்த்தம் என்றும் கூறுவது கிடையாது. கல்கியின் பாரபட்சமற்ற கலை விமர்சனங்களுக்குத் தகுந்த உதாரணங்களும் உண்டு.
ஒரு சமயம் காங்கிரஸ்வாதியும் கதர் அபிமானியுமான ஒரு பெண்மணியின் திரைப்பட நடிப்பு சுகமில்லை என்று கல்கி எழுதினார். உடனே சிலர், ""அடடா! அந்தப் பெண்மணி எப்போதும் கதர் அணிபவராயிற்றே, தேர்தல் கூட்டத்தில் வந்து கூட பாடுவாரே! அவரைப் பற்றி இப்படி எழுதலாமா?'' என்று கேட்டார்கள். அதற்கு கல்கி ""அந்தக் கதரபிமானமுள்ள பெண்மணி காங்கிரஸ் அபேட்சகராக எங்கேயாவது தேர்தலுக்கு நின்றால், அவருக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று பிரச்சாரம் செய்வேன். ஆனால் ஒருவர் காங்கிரஸ்வாதி என்பதற்காக அவருடைய அபஸ்வரங்களை ஸýஸ்வரங்கள் என்றோ, மோசமான நடிப்பை நல்ல நடிப்பு என்றோ நான் ஒப்புக்கொள்ள முடியாது. அம்மாதிரி நிலைமை ஏற்பட்டுவிட்டால் அப்புறம் டாக்டர் ராஜன் பாட்டுக்கச்சேரி செய்தால் நன்றாயிருக்கிறதென்று சொல்ல வேண்டும். ஸ்ரீ முத்துரங்க முதலியார் கதாகாலட்சேபம் செய்தால் அதற்கும் பலே போட வேண்டும். ஸ்ரீமதி ருக்மணி லக்ஷ்மிபதி பரத நாட்டியம் ஆடினால்கூடத் தலையை ஆட்ட வேண்டி நேரும், இப்படியெல்லாம் வந்துவிட்டால் தமிழ்நாட்டில் கலைகள் உருப்பட்டாற் போலத்தான்?'' என்றார்.
பரத நாட்டியத்திலும் சங்கீதத்திலும் அவருக்குள்ள அபிமானம் காரணமாகத்--தமிழ்நாட்டில் காலைத் தூக்கிக் குதிப்பவர்களையெல்லாம் உயர்ந்த நாட்டியக்காரர்களென்றோ, வாயைத் திறந்து பாடுபவர்களையெல்லாம் சிறந்த சங்கீத வித்வான்களென்றோ, வேஷம் போட்டு மேடையில் தோன்றுபவர்களையெல்லாம் சிறந்த நடிகர்களென்றோ கூறிவிட மாட்டார்.
ஒரு வித்வானுடைய சங்கீதம் கல்கிக்குப் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், மேற்படி வித்வான் பிடிவாதமாய் ""தமிழ்ப் பாட்டுப் பாடமாட்டேன் வேறு பாஷையில்தான் பாடுவேன்'' என்றால் அதற்காக அவருடைய சங்கீதம் நன்றாயில்லையென்று சொல்லும் வழக்கம் கல்கிக்குக் கிடையாது. ""ஐயோ! இந்தப் பாவி மனிதர் இவ்வளவு நன்றாகப் பாடுகிறாரே, இவர் தமிழ் அபிமானியாகவும் இருக்கக்கூடாதா?'' என்று எண்ணித்தான் வருந்துவார்.
திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் சிறு பையனாக இருந்தபோது, நமது இந்தியாதேசம் அவருடைய சேவையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயமே அவருக்குத் தெரியாமலிருந்ததாம். அப்போதெல்லாம் அவர் மனதறிந்து தேசத்திற்காக ஒரு விதச் சேவையும் செய்ததில்லையாம். ஒரே ஒரு தடவை செய்ய முயன்ற சேவையும் விபரீதமாக முடிந்ததாம்.
அந்தக் காலத்தில் ஒருநாள் தேசம் அவருடைய பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலிருந்த பாழும் கிணற்றில் விழுந்து விட்டதாம்!, முழுகுவதற்கு வேண்டிய தண்ணீர் இல்லாமல் தேசம் தத்தளித்துக் கொண்டிருந்த சமயம் பக்கத்திலிருந்த தேசபக்தர்கள் சிலர் கல்கியைப் பார்த்து, ""அப்பா தேசத்தைக் காப்பாற்ற ஒரு துரும்பையாவது நீ எடுத்துப்போடக் கூடாதா?'' என்று சொன்னார்களாம்.
""உடனே கல்கி துரும்பு என்னத்திற்கு? கல்லைத் தூக்கியே போடுகிறேன்'' என்று கூறிவிட்டு ஒரு கல்லைத் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டாராம். உடனே, தேசம் அந்த நாலு விரற்கடைத் தண்ணீரில் தலைகீழாக அமிழ்ந்து பிராணனை விட்டுவிட்டதாம்!
இதன் பலனாக கல்கியின் தகப்பனார் ஒரு வராகன் தண்டம் கொடுக்கும்படி நேர்ந்ததாம். தகப்பனாரிடம் மூன்றரை ரூபாய் வாங்கிக் கொண்டு போய் புதிய இந்தியா தேசப் படம் ஒன்றை வாங்கி வந்து பள்ளிக்கூடத்துச் சுவரில் மாட்டிய பிறகுதான் உபாத்தியாயர் அவரைப் பெஞ்சு மேலேயிருந்து கீழே இறக்கினாராம்.
அதற்குப் பிறகு வெகுகாலம் வரையில் தேசம் என்றாலே கல்கி வெறுப்புக் கொண்டிருந்தாராம். அப்புறம் ஒரு நாள் தற்செயலாக "தேசத்திற்காக உழைக்க ஜென்மம் எடுத்தோம்' என்ற பாட்டை அவர் கேட்க நேர்ந்ததாம். உடனே ஜன்ம தேசத்திற்கு உழைக்க வேண்டுமென்ற ஆசை அவர் பிடறியைப் பிடித்து உந்தியதாம்.
மேல் சட்டை, மேல் வேஷ்டி எல்லாவற்றையும் கழற்றித் தலையைச் சுற்றி எறிந்துவிட்டு, காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினாராம்.
"மகாத்மாஜி! நான் தேசத்திற்கு உழைக்கத் துணிந்து விட்டேன். அவ்விடம் நான் வரட்டுமா? அல்லது தேசத்தை இங்கே அனுப்பி வைக்கிறீர்களா?' என்று கேட்டாராம்.
மகாத்மாஜி, கேட்டதற்குப் பதில் சொல்லாமல், "கைராட்டையில் தினம் இரண்டாயிரம் கெஜம் நூல் நூற்றுவா! உன் மனது தெளிவடையும்' என்று பதில் கடிதம் எழுதினாராம்.
"ரொம்ப லட்சணம்! நான் தேசத்துக்கு உழைக்க வந்தேனா? நூல் நூற்க வந்தேனா?' என்று கல்கி தமக்குத்தாமே கேட்டுக் கொண்டு மகாத்மாஜியை விட்டுவிட்டாராம்.
பின்னர், திடீரென்று தம் உடையை மாற்றினாராம். ஒரு கதர் ஜிப்பாவும், அதன் மேல் கம்பளி "வெயிஸ்ட் கோட்டும்' அணிந்து தலையில் ஒரு காந்திக் குல்லா தரித்துக் கொண்டாராம். உடனே அச்சமயம் காங்கிரஸ் தலைவராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினாராம்.
"தேச சேவைக்குத் தயார்! காங்கிரஸ் தலைமைப் பதவி வகிப்பது சிரமமாயிருந்தால் தந்தியடிக்கவும்; உடனே புறப்பட்டு வருகிறேன்!' என்று குறிப்பிட்டிருந்தாராம். ஜவஹர்லால்ஜியிடமிருந்து பதில் வந்ததாம்.
"தற்சமயம் இந்தியாவுக்குச் சேவை சீனப் போர்க்களத்தில் செய்ய வேண்டும். உடனே புறப்பட்டு போகவும்' என்பதுதான் அந்தப் பதில்.
இதைப் பார்த்ததும் கல்கிக்கு கோபம் கோபமாய் வந்ததாம். உடனே வெயிஸ்ட் கோட்டையும் காந்திக் குல்லாவையும் எடுத்தெறிந்து விட்டுத் தலையில் உச்சிக்
குடுமி வைத்துக்கொண்டாராம். கருப்புக் கண்ணாடியும் வாங்கி மாட்டிக்கொண்டாராம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.