சுந்தரி மாமி

காலை ஐந்து மணிக்கு அலைபேசி ஒலித்தது. "இத்தனை அதிகாலையில் யார் போன் பண்ணுகிறார்கள்? நிச்சயமாக முக்கியமான விஷயமாகத் தான் இருக்க வேண்டும்' என்று யோசித்தவாறு பதட்டத்துடன் அலைபேசியை எடுத்தேன்.
சுந்தரி மாமி
Updated on
5 min read

காலை ஐந்து மணிக்கு அலைபேசி ஒலித்தது. "இத்தனை அதிகாலையில் யார் போன் பண்ணுகிறார்கள்? நிச்சயமாக முக்கியமான விஷயமாகத் தான் இருக்க வேண்டும்' என்று யோசித்தவாறு பதட்டத்துடன் அலைபேசியை எடுத்தேன்.


""நான் தான் ராஜன் பேசறேன், சுந்தரி அத்தை ரொம்ப சீரியஸ்ஸா இருக்கா. இன்னிக்கோ நாளைக்கோன்னு இழுத்துண்டிருக்கா'' என்று பட்டென்று விஷயத்தைப் போட்டுடைத்தான்.
""என்னடா, மாமிக்கு என்ன பண்ணறது? நீங்க கவனிச்சுக்கற லட்சணம் இவ்வளவு தானா?'' என்று கோபமாகக் கேட்டேன்.
""வழக்கமா வர்ற ஆஸ்துமா அட்டாக் தான். மூச்சுத் திணறிண்டிருக்கு. பிராணன் போறதுக்குள்ள உங்களையும் மாமாவையும் பார்க்கணுமாம். முக்கியமா ஏதோ சொல்லணுமாம். உடனே புறப்பட்டு வரச் சொல்றார்'' என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்து விட்டான்.
செய்தியைக் கேட்ட எனக்கு படபடப்பு அடங்க கொஞ்சம் நாழியாயிற்று. இது எதிர்பார்த்த செய்திதான் என்றாலும், இவ்வளவு சீக்கிரம் சுந்தரி மாமியின் காலம் முடிந்துவிடும் என்று நினைக்கவில்லை நான். ஒருவேளை கிராமத்திற்கு அனுப்பாமல் தில்லியில் நம்முடனேயே வைத்துக் கொண்டிருந்தால் மாமி இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருப்பாரோ என்ற குற்ற உணர்வு என்னை வதைத்தது. சுந்தரி மாமியை இவர்கள் கவனித்துக் கொண்ட லட்சணம் இவ்வளவு தானா? கிராமத்திற்கு அனுப்பி மூன்றே மாதத்திற்குள் அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு போய் விட்டார்களே! என்று எனக்கு மாமியின் குடும்பத்தினர் மீது ஆத்திரம் வந்தது.
ஒரு வருடமா, இரண்டு வருடங்களா, இருபத்தைந்து ஆண்டுகள் தில்லியில் எங்கள் வீட்டில் எங்களில் ஒருவராக வாழ்ந்தவர் சுந்தரி மாமி. இப்பொழுது கடைசியாக ஒரு முறை எங்களைப் பார்க்கவேண்டும் என்று சொல்லும் போது எப்படி போகாமல் இருப்பது? குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டு நானும் என் கணவரும் மாமியைப் பார்க்கப் போவதற்கு ஆயத்தமானோம். காலையிலே புறப்பட்டால் தான் திருச்சி வரை விமானத்தில் பயணித்து அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து மாலைக்குள் கிராமத்தைச் சென்றடைய முடியும்.
ஒரு வழியாக அடிச்சுக்கோ பிடிச்சுக்கோ என்று புறப்பட்டு விமானத்தில் உட்கார்ந்த பிறகு, நீண்ட பெருமூச்சு ஒன்று என்னிடமிருந்து வெளிவந்தது. முதன்முதலில் சுந்தரி மாமியைச் சந்தித்தது, அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தது என்று எல்லா நிகழ்ச்சிகளையும் மனம் அசைபோட ஆரம்பித்தது.
அப்பொழுது என் மகளுக்கு ஏழு வயது. மகனுக்கு முதல் ஆண்டு நிறைவு நடந்து முடிந்திருந்தது. வேலைக்குச் செல்லும் நான், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள நல்ல ஆளாகத் தேடிக்கொண்டிருந்தேன். சென்னையிலுள்ள தூரத்து உறவினர் மூலம் சுந்தரி மாமியின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. திருவல்லிக்கேணி பகுதியில் சிரார்த்தம், சுமங்கலிப் பிரார்த்தனை போன்ற விசேஷங்களுக்கு வீடுகளில் சமைக்கப் போவது, முறுக்கு சுற்றுவது என்று நாலு காசு சம்பாதித்துக் கொண்டிருந்தார் அந்த மாமி. தில்லிக்குப் போகிறீர்களா, குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக் கொள்ள, கணிசமான சம்பளம் தருவார்கள் என்று எனது உறவினர் அவரைக் கேட்கவும் உடனே "சரி' என்று சொல்லி விட்டார். எனக்கு ஒரே ஆச்சரியம்! தில்லியில் ஒரே குளிர், யாருமே "நம்ப பாஷை' பேசமாட்டார்கள் போன்ற காரணங்களினால் எல்லோரும் தில்லிக்கு வரத் தயங்குவார்கள். ஆனால் சுந்தரி மாமியோ நான் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் தலையை ஆட்டியதோடல்லாமல் மறுநாளே பெட்டி படுக்கையுடன் என்னுடன் தில்லிக்குப் புறப்பட்டு விட்டார்.
இரண்டே வருடங்கள்தான் தில்லியில் இருப்பேன் என்ற நிபந்தனையுடன் எங்கள் வீட்டில் காலடியெடுத்து வைத்த சுந்தரி மாமி, இருபத்தைந்து வருடங்கள் எங்களை விட்டுப் போகவில்லை. எங்களிடம் வந்தபொழுது அவருக்கு சுமார் ஐம்பத்தைந்து வயது இருக்கலாம். இறுதியாக நாங்கள் அவரை கிராமத்தில் கொண்டு விடும்போது எண்பது வயதைத் தாண்டி விட்டார்.
சுந்தரி மாமி தில்லி வரை வருவதற்கு ஏன் ஒப்புக்கொண்டார் என்பது போகப் போகத்தான் எனக்கும் என் கணவருக்கும் புரிய ஆரம்பித்தது. முப்பது வயதிலேயே கணவனை இழந்து விட்ட சுந்தரி மாமிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பெற்றோரும் இறந்து விட்ட நிலையில் வேறு கதியின்றி தனது ஒரே சொந்தமான தம்பியின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்.
தம்பிக்கோ ஒழுங்கான வேலை கிடையாது. ஏதோ பரம்பரைச் சொத்தாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் என்று அடுக்கடுக்காக நான்கு குழந்தைகள் வேறு. சொற்ப வருமானத்தில் ஆறு ஜீவன்கள் சாப்பிட வேண்டும். இதில் அக்காவை வேறு வைத்துக் கொண்டு தண்டச்சோறு போட முடியுமா?
தம்பிக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை சுந்தரி மாமி. பக்கத்து டவுனில் பெரிய மனிதர் வீடுகளில் சமையல் வேலை செய்ய ஆரம்பித்தார். அப்படியே முழுநேர வீட்டு வேலையாளாக ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார். தன்னுடைய கைச்செலவுக்கென்று கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு மீதிப் பணத்தை தனது தம்பியின் குடும்பத்துக்குக் கொடுக்க ஆரம்பித்தார்.
அவ்வளவுதான்... தம்பியின் குடும்பம் சுந்தரி மாமியின் சம்பாத்தியத்திற்குப் பழகிப் போய்விட்டது. அந்த மாமி அனுப்பும் பணத்தில்தான் குடும்பமே நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. குழந்தைகள் வளர வளர தம்பி குடும்பத்தின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போனது. இந்தக் காலகட்டத்தில்தான் நான் நல்ல சம்பளம் தருகிறேன் என்று கூப்பிட்டவுடன் சட்டென்று என்னுடன் தில்லிக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்.
ஒவ்வொரு மாதமும் நான் அவருக்குச் சம்பளம் கொடுத்தவுடன் அதை அப்படியே தம்பிக்கு மணியார்டர் பண்ணி விடுவார். சொன்னபடி இரண்டு வருடங்கள் கழித்து கிராமத்திற்குப் போனவர் மறுபடியும் எங்கள் வீட்டிற்கே வேலைக்கு வந்து விட்டார். காரணம் வேறு ஒன்றும் இல்லை. சுந்தரி மாமியின் தயவில் தம்பி குடும்பத்தில் நிறைவேற வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய பாக்கி இருந்தன. ஒவ்வொரு குழந்தையையும் கல்லூரி வரையில் படிக்க வைப்பது, அவர்களுக்கு கல்யாணம் செய்து கொடுப்பது என்று எல்லாச் சுமைகளையும் சுந்தரி மாமியே தாங்கிக் கொண்டார்.
அவ்வப்பொழுது என்னிடமிருந்து பத்தாயிரம், இருபதாயிரம் என்று கடன் வாங்கி கிராமத்திற்கு அனுப்பிவிட்டு அதை மாதா மாதம் தனது சம்பளத்திலிருந்து திருப்பிக் கொடுப்பார். அவர் இரண்டு வருடங்களுக்கொரு முறை கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தது, ஐந்தாறு வருடங்களுக்கொரு முறை என்று குறைந்தது. தம்பி குடும்பத்தில் கல்யாணம், சீமந்தம் என்று ஏதாவது விசேஷம் நடந்தால் கூட, சுந்தரி மாமியின் வரவை விட அவர் அனுப்பும் பணத்தையே அவர்கள் எதிர்பார்த்தனர்.
""தம்பியின் பெண்களையும் பிள்ளையையும் ஒரளவுக்கு முன்னுக்குக் கொண்டு வந்தாயிற்று, இனி அவர்கள் தங்கள் காலிலேயே நிற்கப் பழகிக்கொள்ள வேண்டாமா, உங்களுக்கென்று நாலு காசு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டாமா'' என்று நானும் என் கணவரும் மாமிக்கு புத்திமதி சொல்ல ஆரம்பித்தோம். அவருக்குமே தன்னை தனது குடும்பத்தினர் கறவை மாடாக நடத்துகிறார்களோ என்று தோன்ற ஆரம்பித்தது. வயது ஆக ஆக அவரால் முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை. நாம் நமக்கென்று நாலு காசு சேர்த்து வைத்துக் கொள்ளாமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட ஆரம்பித்தார்
அந்தச் சமயத்தில்தான் மாமியின் தம்பி மகன் ராஜன் கிராமத்து வீட்டைப் பழுதுபார்க்க ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதினான்.
""நீ கேட்கும் இவ்வளவு பெரிய தொகையை என்னால் அனுப்ப முடியாது. எனக்கு வயதாகி விட்டது. நீ வேறு ஏதாவது ஏற்பாடு பண்ணிக் கொள்''” என்று கடிதம் எழுதிப் போட்டுவிட்டார் சுந்தரி மாமி. அதுவே சுந்தரி மாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே நடந்த கடைசி கடிதப் போக்குவரத்து. பணம் அனுப்பிக் கொண்டிருந்த வரையில் மாதா மாதம் கடிதம் எழுதிக்கொண்டிருந்த தம்பி மகனும், பெண்களும் அதற்குப் பிறகு, சுந்தரி மாமியை இருக்கையா செத்தையா என்று கூட விசாரிக்கவில்லை.
சுந்தரி மாமியைக் கட்டாயப்படுத்தி மாதாமாதம் நான் கொடுக்கும் சம்பளத்தை வங்கியில் போட வைத்தேன். கடந்த ஆறு வருடங்களில் அவருடைய சேமிப்பு வட்டியும் முதலுமாக ஒரு லட்சத்தைத் தாண்டியிருந்தது. சுந்தரி மாமிக்கு கடந்த ஓராண்டு காலமாகவே தான் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டோம் என்ற பயம் உண்டாக ஆரம்பித்திருந்தது. வயதும் எண்பதைத் தாண்டிவிட்டதால் அடிக்கடி உடல் நலக் கோளாறுகள் உண்டாகின. நான் என்னதான் கவனித்துக் கொண்டாலும் கடைசி காலத்தில் தன் வீட்டு மனிதர்களுடன் வாழ வேண்டும் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. “
""என்னை கிராமத்தில் கொண்டு விட்டு விடுங்கள். எனக்கு ஏதாவது நடந்தால், என் தம்பியோ, அவன் பிள்ளையோதான் கொள்ளி போடவேண்டும்''” என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.
தம்பிக்கு வயதாகி விட்டதால் தம்பியும் அவன் மனைவியுமே பிள்ளையின் தயவில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதால் தம்பி மகன் ராஜனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அத்தையை வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவன் பிடி கொடுத்துப் பேசவில்லை. எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. நான் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை சுந்தரி மாமி தனது தம்பி குடும்பத்தினரையே நம்பிக் கொண்டு, அவர்களுக்காகவே தனது வாழ்க்கையை, தனது சம்பாத்தியத்தை அர்ப்பணித்தவர். கடைசி காலத்தில் அவரை வைத்துக் கொள்ளத் தயங்குகிறானே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. அப்படியாவது கிராமத்தில் போய் வேண்டாத விருந்தாளியாக அவர்களுடன் இருக்கவேண்டுமா? நானே கடைசி வரை உங்களை வைத்துக் காப்பாற்றுகிறேன்” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லையே சுந்தரி மாமி!
என்ன இருந்தாலும் அவன்தான் எனக்கு கொள்ளி போடவேண்டும்” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மேல் அவரைக் கட்டாயப் படுத்த விரும்பவில்லை நான்.
மாமியை வைத்துக் கொள்ளும் செலவிற்கு மாதா மாதம் பணம் அனுப்புகிறேன் என்று நான் சொன்ன பிறகுதான் தனது அத்தையை கவனித்துகொள்ள அவன் சம்மதித்தான். மாமியின் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விவரமெல்லாம் தெரிந்துகொண்ட அவன், மாமியுடைய சேமிப்பு எல்லாவற்றையும் தனக்கே கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனை வேறு போட்டான்.
சுந்தரி மாமியை அழைத்துக்கொண்டு கிராமத்தைச் சென்றடைந்தால் யாருமே எங்களை சரியாக வரவேற்கவில்லை. "ஆயுசு முழுக்க உங்களுக்காகவே உழைத்து ஓடாகிப்போன ஒரு ஜீவனை இப்படியா நடத்துவது' என்று நாலு வார்த்தை கேட்கலாம் போல் எனக்கு ஆத்திரம் வந்தது. தம்பி மகன் ராஜனோ நான் கொண்டு போயிருந்த ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை பிடுங்காத குறையாக பறித்துக் கொண்டான். மாமியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு துக்கம் தொண்டையை அடைக்க வாசலில் காத்திருந்த வாடகைக் காரில் ஏறிப் புறப்பட்டேன்.
கடந்த மூன்று மாதங்களில் நான்கைந்து முறை சுந்தரி மாமியிடம் ராஜனின் அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் ராஜனோ, ""அத்தை செளக்கியமாத்தான் இருக்கா, நீங்க போன் பண்ணதாச் சொல்லிடறேன்''” என்று தானே பேசிவிட்டு போனைத் துண்டித்து விடுவான். மாமியின் செலவுக்காக நான் அனுப்பிய பணத்தை மட்டும் பெற்றுக் கொள்ளத் தவறவில்லை.
நாங்கள் கிராமத்தைச் சென்றடையும் பொழுது மாலை மணி ஆறாகிவிட்டது. இருட்டடைந்து கிடந்த அந்த வீட்டின் ஒரு மூலையில் கிழிந்த நாராகக் கிடந்த சுந்தரி மாமியைக் கண்டதும் நானும் என் கணவரும் திடுக்கிட்டுப் போய் நின்று விட்டோம். மூன்றே மாதங்களில் இப்படி ஒரு சீரழிவா? தாங்க முடியவில்லை எனக்கு. துக்கம் தொண்டையை அடைத்தது. அந்த இருட்டிலும் எங்களை அடையாளம் கண்டு கொண்ட மாமி, என் கைகளைப் பிடித்துக் கொண்டு தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார். நிரம்ப சிரமத்துடன் மூச்சு வாங்க என் கணவரைப் பார்த்து,
""உங்களுக்காகத்தான் இந்த பிராணன் காத்திண்டிருக்கு. இருபத்தஞ்சு வருஷம் என்னை உங்க தாய் மாதிரி பார்த்துண்டேள். எனக்குக் கொள்ளியும் நீங்களேதான் போடணும். அந்த பாத்தியதை உங்களுக்கு மட்டுமே இருக்குன்னு இப்பத்தான் நான் புரிஞ்சுண்டேன்'' என்று கெஞ்சாத குறையாக முறையிட்டார்.
எதையுமே அனுபவிக்காமல் தம்பி, தம்பியின் குழந்தைகள் என்று தனது வாழ்க்கையே அர்ப்பணித்த சுந்தரி மாமி, தம்பி கையால் கொள்ளி போட வேண்டும் என்பதற்காகவே கிராமத்திற்குத் திரும்பிய சுந்தரி மாமி, தனக்கு யார் கொள்ளி போட வேண்டும் என்ற முடிவை ஏன் மாற்றிக் கொண்டார் என்று அவர் சொல்லத் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com