

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் கமல் நடிக்கும் "இந்தியன் 2' படம் உருவாகி வருகிறது. சென்னை பூந்தமல்லியில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கமல், அவ்வப்போது முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திருவல்லிக்கேணி பகுதியில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக கமல் உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத் செல்கின்றனர். இதில் ஏற்கெனவே காஜல்அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், வித்யூத் ஜம்வால், சமுத்திரகனி, டெல்லி கணேஷ் என பிரபலங்கள் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலிவுட் பிரபலமான அனில்கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அனில்கபூர் ஏற்கெனவே "முதல்வன்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான "நாயக்' படத்தில் நடித்துள்ளார். "இந்தியன் 2' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 2021-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இப்படத்தைக் கொண்டு வருவதற்காக முயற்சிகளில் இறங்கியுள்ளார் ஷங்கர்.
---------------------
விஜய்யின் 63-ஆவது படமாக உருவாகியிருப்பது "பிகில்'. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, இந்துஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் தீபாவளி பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் 64 - ஆவது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. "பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64-ஆவது படத்தை "மாநகரம்', "கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார். இதில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். விஜய் - விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வில்லத்தனம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், இதில் நடிப்பதற்காக மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், மலையாளத்தில் வெளியான "அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்தவர். மற்றொரு கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
---------------------
முன்பை விட தமிழில் தற்போது அதிக படங்களில் நடிக்கிறார் தமன்னா. விஷால் ஜோடியாக ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ் என்ற படத்திலும் நடிக்கிறார்.
தெலுங்கில் "தட் ஈஸ் மகாலட்சுமி' படத்தில் நடித்து வரும் தமன்னா, மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சம்பத் நந்தி இயக்கும் இப்படம், கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகிறது. கபடி பயிற்சியாளர் வேடத்தில் தமன்னா நடிக்கிறார். இதற்காக அவர் கபடி விளையாடி பயிற்சி பெறுகிறார். தமன்னா பேசும் போது... ""கபடி விளையாட்டை மையப்படுத்திய கதை இது. எல்லா மொழிகளிலும் ஏராளமான படங்களில் நான் நடித்திருந்தாலும், இதில் ஏற்றுள்ள பயிற்சியாளர் வேடம் மிகவும் வித்தியாசமானது. இதை நான் சிறந்த முறையில் நடிப்பதற்காக தற்போது கடினமான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். முதலில் கபடி விளையாட்டைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வருகிறேன். அதன் பின் அதற்கான பயிற்சிகளையும் எடுக்கப் போகிறேன். என் சினிமா பயணத்தில் இது அடுத்த கட்டமாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
---------------------
ஒரு காலத்தில் சினிமா பிரபலங்கள் தங்களது குழந்தைகளை வெளியே காட்டாமல் இருந்தனர். நடிகர்கள், நடிகைகள் என பலரும் தங்களது குழந்தைகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதை விரும்பாமல் இருந்தனர். இப்போது நிலைமை மாறி விட்டது. நந்திதா தாஸ் போன்ற நடிகைகள் படப்பிடிப்புக்கு தங்களது குழந்தைகளுடனே வந்து செல்கின்றனர். சமீபத்தில் சமீரா ரெட்டி, எமி ஜாக்ஸன் தங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு பழைய சென்டிமென்ட்டை உடைத்தனர். சமீரா ஒரு படி மேலே போய் கைக்குழந்தையுடன் விபரீத விளையாட்டு நடத்தியிருக்கிறார்.
சமீபத்தில் கர்நாடகாவிற்கு தனது 2 மாத கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தவர்.
இடுப்பில் தொட்டில் கட்டி குழந்தையை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் முல்லயனாகிரி சிகரத்தில் மளமளவென ஏறத் தொடங்கினார். அந்த சிகரம் 6,300 அடி உயரம் கொண்டது. ஆக்சிஜன் குறைந்த நிலையில் வேறு வழியில்லாமல் உச்சிக்கு செல்லும் முயற்சியை கைவிட்டு கீழே இறங்கினார். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ""தாய்மை அடைந்த பெண்களுக்கு தைரியம் வர வேண்டும் என்பதை உணர்த்தவே இப்படி செய்தேன்'' என கண்டனங்களுக்கு பதில் அளித்துள்ளார் சமீராரெட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.