
தேடலில் ஓய்ந்து ஒதுங்கினான். அடித்த வெய்யிலுக்கு ஒத்தடம் தந்தது பெரு மரம். நிமிர்ந்து பார்த்தான், வவ்வால்கள் தொங்கின. அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின. செக்கச் சிவந்த பழங்கள் தரையெங்கும் உருண்டன. பிராய காலங்களில் பொறுக்கித் தின்றவை. பொடி விதைகள் அடர்ந்து தித்திப்பாய் இறங்கும்.
இண்டு இடுக்குகளில் சூரியக் கதிர்கள் நிலை குத்தின. காற்று இருந்தது. விழுதுகள் தூரியாட அழைத்தன. அலைச்சலுக்கு வியர்க்கவே செய்தது. நடு வெய்யில் நடமாட்டங்கள் அருகின.
சலவைக்காரன் தேய்ப்பு வண்டியில் பாத்திரம் வைத்து உண்டான். "அவக் அவக்'கென்று அள்ளிப்போடும் விதம் பசியைத் தூண்டியது. இவன் பறித்துக்கொள்வானோ என்கிற பயத்தில் விரைவு கண்டிருக்கலாம். மொத்தச் சாப்பாட்டிற்கும் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் போதுமானதாக இருந்தது.
கட்டடங்கள் எழும்பி எழும்பி நின்றன. உயர்ந்தும் தாழ்ந்தும் வளைந்தும் வீதிகள் ஓடின. ஒன்றிரண்டாய்க் கடறும் வாகனங்கள் மலைமுகட்டில் ஏறுவது போல்திணறின.
புதுக் குடியிருப்புகள் வந்த பின் இதற்கு தனியொரு பெயரை வைத்திருந்தார்கள். வீடுகள் உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பில் மினுங்கின. தன் சொந்த ஊரே அந்நியமான உணர்வில் அரை நாள் கழிந்துவிட்டது.
டாக்டர் மலையன் இங்குதான் குடியிருக்கிறார் என்று மகேஸ்வரன் சொல்லியிருந்தான். அவனை வீடு காட்ட அழைத்து வந்திருக்கலாம். ஆனால் வெளியூர் சென்றவன் திரும்பியபாடில்லை.
கல்யாணத்திற்கு மூன்று நாட்களே இருந்தன. மகேஸ்வரன் சொன்ன அடையாளங்களுடன் சுற்றோ சுற்று என்று சுற்றியாகிவிட்டது. கிறுகிறுப்புத் தான் மிச்சம். இங்கு வரும்முன் ஆஸ்பத்திரிப் பலகையில் இருந்த டாக்டரின் போன் நம்பரைக் குறித்து வந்திருக்கலாம். முன் யோசனையற்ற முயற்சிகள் மூன்று மணி நேரத்தைக் காவு வாங்கிவிட்டன. இதற்குள் ஊருக்குள் முப்பது நாற்பது பேருக்குப் பத்திரிகை வைத்திருக்கலாம். நிச்சயம் அம்மா திட்டத்தான் செய்வாள்.
""அந்த ஓராளுக்காக ஊரையே ஒதுக்கி வச்சுட்டுப் போயிட்டியே... சாயந்தரம் வந்தா நைட்டுப் பன்னண்டு மணி வரைக்கும் ஆஸ்பத்திரில இருக்கிறவருதான...''
தேய்ப்புக்காரன் நிமிர்ந்து ஊடுருவினான்.
""நானும் பாக்குறே... பத்துத்தடவ இங்குனயே வந்து வந்து போனீக... ஆரப் பார்க்கனும்...?'' தேய்ப்பு மிசின் சட்டைச் சுருக்கங்களில் ஓடியது. வாகாக இழுத்தும் வளைத்தும் துணியில் அழுந்தியது. நொடிக்கொருதரம் வளையத்தில் விழுவதும் எழுவதுமாய் மிசின் சதுராடியது. வயோதிகனின் புறங்கை போல சாம்பிப் போன சட்டை புதுவடிவம் கொண்டிருந்தது. அப்போதுதான் துணிக்
கடையில் எடுத்தது போன்ற வாளிப்பு.
""டாக்டர் மலையன்...?''
""ஆமா... டாக்டர் மலையன்...! அவருக்கென்ன...?''
""அவரத்தேம் பாக்கணும்...''
""அப்படியா...? வீடு இங்குட்டுதே.... போன்ல இருக்காரா இல்லையான்னு கேட்டுட்டு வந்திருக்கலாம்ல...''
""அதெல்லாம் இல்ல...''
""என்ன சார் நீங்க... இந்த நவீன காலத்துல... மொழுக்கையா வந்த நிக்கிறீங்களே....''
என்றவன் தேய்ப்பில் மும்முரமானான். தேய்ப்புக்காரன் துணி துணியாய் எடுத்துக் கொண்டிருந்தான். செவ்வக வண்டியின் ஓர் ஓரத்தில் எழும்பியிருந்த மலை கரைந்து கொண்டிருந்தது. வீட்டில் தேய்ப்பார் இல்லை போலும்.
இவன் தேங்கி நின்றான்.
""என்ன சோலியா அவரத் தேடுறீங்க...?''
தேய்ப்புக்காரன் விசாரணையில் இறங்கினான்.
வெய்யிலின் தீவிரத்திலும் காற்றலை நிரம்பிப் போனது. மரக்குளுமை வெப்பத்தை தணித்திருந்தது. மினிபஸ் அவ்வப்போது ரேசன்கடை முன் வந்து நின்றது. மற்றொன்று வர ஒன்று புறப்பட்டுப் போனது. வியப்புதான். காரற்ற வீடுகளே இல்லை. பஸ் பிடித்துச் செல்வது யாரெனத் தெரியவில்லை. நவீனக் குடியிருப்புக்களுக்கு அப்பால் இருக்கும் சிலர் ஏதோ வேலையாக வந்து போகலாம்.
""என்ன சார் ஒரே யோசனை?''
இவன், ""என்ன....?'' என்பது போல் விழித்தான்.
""தெருவுக்கு அஞ்சுவீடு பத்துவீடுதே, ஒவ்வொண்ணுக்கும் ஒரு பேரு, நீங்க லிவிங்ஸ்டன் தெரு போனா ஏழாவது வீடு டாக்டர்து... இங்குட்டு மொத்தம் பதினாறு தெருவுக இருக்கு.... இப்பிடியே மேக்கால போற தெருவுல வரிசையா எண்ணிக்கிட்டு பத்தாவதுல போயி எறங்குங்க... டாக்டர் வீடு வந்துரும்...''
இவனுக்கு வயிற்றில் பசி தென்பட்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல அது கூடும் என்றிருந்தது. அலைந்து திரிந்ததில் கிறக்கம், பசி மயக்கம் இத்துடன் டாக்டரைப் பார்ப்பது உசிதமாகப்படவில்லை. எனினும் இன்று விட்டால் இனியொரு தேடலுக்கு நாள் இல்லை. விடிந்ததும் முகூர்த்தக்கால் ஊன்ற வேண்டும். உள் பகுதியில் விடுபட்டவர்களுக்கு தேடி பத்திரிகை தரவேண்டும். அடுத்து அடுத்து என்று கல்யாண வேலைகள் கிடுக்கிப்பிடி போட்டுவிடும்.
இன்னொரு விளக்கத்தை தேய்ப்புக்காரனிடம் கோரவில்லை. ஃபேண்ட் பாக்கெட்டில் கர்சீப்பை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான்.
""இங்குன பக்கத்துல எதும் டீக்கடை இருக்கா?'' கர்சீப்பை ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்துக்கொண்டான்.
தேய்ப்புக்காரன் பதில் சொல்வதற்குள் ஒரு வயதான ஆள் கால் தாங்கி வந்தான். கவனம் அவன்மீது சென்றது. அந்த ஆள் கனத்த கட்டைப் பையை கம்புக்கூட்டில் இடுக்கியிருந்தான். சுமையும் சேர்த்து அவனை ஒரு சாய்ப்பில் செலுத்தியது.
அவனைப் பார்த்ததும் தேய்ப்புக்காரன் முகம் மலர்ந்தது. ""சார்... மலயன் டாக்டர் வீட்டுக்குப் போகனுமாம்... செத்த கூப்பிட்டுப் போறியா....?''
""அதுக்கென்னா... நா என்ன இவர செமந்துட்டா போறே.... தேச்சுக் குடு... வீட்டக் காட்றேன்...''
கிழவன் காதின் இடுக்கிலிருந்து பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். ""சின்னத்தம்பி அவசரமா இதத் தேச்சு வாங்கிவரச் சொல்லுச்சு... அங்குட்டு இங்குட்டு நகராம இருந்து கையோட கொண்டாரணும்னுச்சு.... தேச்சுக்குடு.... சேந்து போறம்...''
கிழவன் உறுமாலைக் கழற்றி வியர்வை போகத் துடைத்துக்கொண்டான். இடுப்பில் கைலி மட்டும் தொடுக்கிக்கொண்டிருந்தது. ஏற்றிக் கட்டினதும் அது இறங்கிக் கொண்டிருந்தது.
""ஒன்னையும் ஒரு ஆள்னு வச்சு அந்த இஞ்சீனியரு ஓடியாடிக்கிட்டிருக்காரு பாரு.... நீ என்னத்த பெரிசாக் கிழிச்சிடப் போறேன்னு சம்பளங் குடுத்து வச்சிருக்காரோ தெரியல...'' தேய்ப்புக்காரன் முகம் கோணல் மாணலாய் வளர்ந்தது.
நாய் ஒன்று அவனது காலடிக்கு வந்து சேர்ந்தது. "சே...சே...சை' என்றான். அது அசைவு காட்டவில்லை. பன்றிக்குட்டி போல விழுந்து கிடந்தது.
""ஒனக்கு லந்தாத் தெரியுது... நீயென்னா நோகாம நொங்கெடுக்க பய.... அங்க நா வெள்ளன அஞ்சு மணிக்கு வந்து தூத்துத் தெளிக்கிறதிலிருந்து பாத்திரம் பண்டங்கள கழுவுறது... தோட்டத்துக்கு தண்ணி பாச்சுறது... கடகண்ணிக்குப் போறது.... சமயக்கட்டுல ஒதவுறது... இப்பிடி தேய்ப்பு தெறப்புனு ஆயிரத்தெட்டு வேல செய்யுறதுக்கு நூறோ நுத்தம்பதோ குடுக்கிறான்... கஞ்சிப்பாடு தண்ணிப்பாடு பாத்து கெழவிக்கு மருந்து மாயம் பாத்து பேரம்பேத்திக்கு உண்டானதச் செஞ்சு, செய்மொற தலமொறன்னு ஒவ்வொண்ணுக்கும் இம்சப்பட்டு...மனுசப் பொறப்பு ஏன்டா எடுத்தமுன்னு மருகிக்கிட்டிருக்கே.... ஒனக்கு நெழல் சம்பாத்தியம்.... மப்பு அடிக்குதாக்கும்...'' கிழவன் சாமியாடினான்.
ஒண்ணு சொல்ல நூறை வாங்கிக் கட்டியவனாய் தேய்ப்புக்காரன் வம்பிழுப்பதை நிறுத்திக்கொண்டான்.
""குறுக்கால எறங்கி எரநூறு எட்டு நடந்தீங்கன்னா ஒரு டீக்கட வரும்... ரெண்டு பன்னுகின்னப் பிச்சுப்போட்டு வாங்க.... அதுக்குள்ள நா தேச்சு வெச்சுருவே... இந்தாளு கூடப் போனீங்கன்னா டாக்டர் வூட்லயே விட்ருவாரு... அதத் தாண்டிதா இவரு வேல பாக்குற இஞ்சினியரு வூடு...''
இவனுக்கு டீயும் பன்னும் முக்கியமாகப்படவில்லை. இப்போதைக்கு மலையன் டாக்டரைப் பார்க்க வேண்டும். அதுவும் மதிய நேரம் என்ன செய்கிறாரோ தெரியவில்லை. பெரிய வீடுகளில் சாப்பாடு நடக்கும். உண்ட மயக்கம் தொண்டனுக்கு வருகிறதோ, இல்லையோ இவர்களுக்கு வரும். மூடிய கண்கள் திறப்பதற்குள் திரைப்படம் தொடங்கி முடிகிற நேரம் வந்துவிடும்.
""இவருக்கு தேச்சுக் குடுங்க... நாகூடவே போயிக்றே... டீக்கட அங்குட்டு இங்குட்டுனு போனா அவரு சாப்பிட்டுப் படுத்திடுவாரு...''
கிழவன் வேகமாகக் குறுக்கிட்டான், ""அவர யாரு படுக்க விடுறாக... யாராச்சும் தேடி வந்துக்கிட்டே இருப்பாக... ஊர்ல பெரிய டாக்டரில்ல... கைராசிக்காரர் வேற.... நேரங்கெட்ட நேரத்துல வந்தாலும் நெலமரமா நின்னு பேசிக்கிட்டே இருப்பாரு... பத்தாக்கொறைக்கு மக்கமாரும் டாக்டருக... பொண்டாட்டிக்கும் ஊசி போடத் தெரியும்... ஒருத்தரு மாத்தி ஒருத்தரு என்னான்னு வந்து கேட்டுக்கிட்டே இருப்பாக...?'' கிழவன் அடுக்கிக்கொண்டே போனான்.
இதற்குள் தேய்ப்புக்காரன் எஞ்சினியரின் துணிகளைத் தேய்த்திருந்தான். சீராக மடித்து பேப்பரில் சுற்றி கட்டைப் பையில் அலுங்காமல் வைத்தான்.
இப்போது கிழவன் கையை இடுக்கிக்கொள்ளவில்லை. தொங்கவிட்டு நடந்தான்.
மரங்கள் "பழைய நெனப்புடா பேராண்டி' என்பது போல இங்கொன்றும் அங்கொன்றுமாய் சாமரம் வீசின. வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள். இருந்தும் வளர்க்காதவர்களும் இருக்கிறார்கள்.
""என்ன தம்பி கம்முனு வாறே... புள்ள குட்டிக எத்தன....? ஆன மாதிரி ஒரு பைய அழகா ஒரு பையனா...?'' கிழவன் லந்தடித்தான். ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது என்பது போல நடை கூடியது. தான் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்க வேண்டும். அவனது வெள்ளந்தித்தனம் கோபத்தை ஏற்படுத்தவில்லை. மெதுநடையாகக் கால் தாங்குவதும் சேர்ந்து சுருங்கியது.
வெய்யில் இறங்கிக் கொண்டிருந்தது. மரங்களைத் தழுவிவரும் காற்று அனலைக் குறைத்தது. இவன் அசுவாரசியமாகக் கிழவனைப் பார்த்தான். பிள்ளைகளுக்குப் பஞ்சமில்லை என்பது போல் அந்தக் கண்கள் கூவின.
டாக்டர் வீடு வந்துவிடும் என்கிற பதைப்பில் கிழவனே முந்தினான்.
"எனக்கு நாலு புள்ளைக... ரெண்டு பொட்ட, ரெண்டு ஆணு... எதுக்குடா இந்தக் காலத்துல நாலுன்னு கேப்பே... எந்தக் காலம்னு என்ன பெத்துப் போடணும்னு நெனச்சா அதுல ஒரு கன்ட்ரோல் இருக்கா என்ன....? நாமிருவர் நமக்கிருவர்னு ஏங்காலத்திலேயே சொன்னாங்க.... கொறஞ்ச பாடில்லைனு. நாமிருவர் நமக்கொருவர்னு அப்பவே வந்துச்சு..... யாரு கேட்டாக.... பட்டு மாளணும்னு இருக்கில்ல.... படத்தே வேணும்..."
கிழவன் பெரிய பேச்சுக்காரனாய் இருந்தான். வழிப்போக்கில் கிடைத்தவன் அவனது அத்தனை கதைகளும் தனக்கு எதற்கு என்று நினைத்தான். மணிக்கணக்கில் நடக்க வாய்த்தால் அவனிடமிருந்து வரலாறுகள் வந்துவிடும். ஏனோ தனக்கும் நான்கு என்று சொல்லத் தோன்றவில்லை. சொன்னால் கிழவன் பரிகாசமாய் சிரிக்கக்கூடும். ""நாந்தே அறிவில்லாம நடந்தா நீயும் அப்பிடியா...?'' என்பான். பேச்சை வேறு விதமாய் மாற்ற வேண்டும்.
""இந்த ஏரியா ஒரு காலத்துல ஆள் நடமாட்டமே இல்லாம கெடந்துச்சாமில்ல... மிருகங்கூட இருந்துச்சுன்னாங்க...''
கிழவன் சுவாரஸ்யமாய் இவனைப் பார்த்தான். ஒரு கதை முடியவில்லை. இன்னொன்று தொடங்க வேண்டும். அதற்கென்ன எல்லாக் கதைகளும் முழுசாகச் சொல்லப்படுவதில்லையே. அரைகுறையாக நிற்கும் கதைகள் அவசரத்தில் பிறப்பவை. குறைப்பிரசவப் பிள்ளைகள். வெண்டிலேட்டரில் வைத்துக் காக்கவேண்டும். பிழைத்தால் ஆயிற்று.
""நா சின்னப் பிள்ளையா இருக்குறப்ப இது பொதர் மண்டுன காடு. காட்டு வாச்சர் ஆபீஸ் மட்டுந்தே ஒத்தக் கொலானா நிக்கும். இப்பவும் அது இருக்கு... போர்டு கூட போட்டிருக்குமே...''
""நாம் பாத்ததில்ல... வனச்சரகர் அலுவலகமா...?''
""எந்தக் கழுதையோ.... குட்டிச் சொவரோ.... எல்லாம் தலகீழாப் போச்சுப்பா.... அதுக குடியிருந்த எடம்பூரா நாம குடியிருக்கோம்... கழுதப்புலி, காட்டெரும... மானு... மயிலுனு ஒரே கும்மரச்சம் போட்ட எடந்தே... மரம் மட்டைக கொளம் குட்டைகனு ஒன்னக் கூடக் காணோம்... மழதண்ணி எப்பிடி பேயும்... ''
கிழவன் அங்குலம் அங்குலமாய் நகர்ந்தான். சுளுவில் இடம் வந்துவிடக் கூடாது என்கிற தவிப்பு அவனில் இருந்தது. கிளம்பக் கிளம்ப வந்துகொண்டே இருக்கும் அவனிடமிருந்து, ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
இவனுக்கு அவனிடம் சொல்ல விசயங்கள் அற்றுப் போனதைப் போலிருந்தது. மனம் முழுக்க டாக்டரின் நினைவுகளே வந்து போயின. அவர் என்ன செய்து கொண்டிருப்பார், அவரை எப்படி அணுக வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டு நடந்தான்.
ஒன்றை ஒன்று விரட்டுவதைப் போல் வந்த நாய்களில் ஒன்று இவனை மோதுகிறாற்போல் நெருங்கி விலகி ஓடியது. இவன் பதறிப் பின் வாங்கினான்.
""பிள்ளைக இல்லாத வூட்ல கெழவன் துள்ளி வெளாண்டது மாதிரி இதுக கொட்டந்தே,.. ஆள் நடமாட்டமில்லாத சந்துகள இதுகதே ஆளுதுக...'' கிழவன் காலிடுக்கில் சிக்கிய கல் ஒன்றை லாகவமாய் மேல்விட்டுப் பிடித்துக் கொண்டான். வீசிய கல் நாய் மீது படாமல் ஒரு வீட்டின் கதவில் அடித்தது. வீட்டுக்காரன் என்னவோ ஏதோ என்று பதறி கதவைத் திறந்தான்.
கிழவன் திரும்பிப் பார்க்கவில்லை. யாருக்கோ வந்த விதிபோல் தன் போக்கில் நடந்தான். வீட்டுக்காரன், "கண்ட கண்ட நாய்களெல்லாம் கல்லெறியிறதுக்கு ஏ வீட்டுக் கதவுதே கெடச்சுச்சா.... வக்கால்லி சிக்குனா...." என்றான்.
கிழவன் நையாண்டியாய்ச் சிரித்துக் கொண்டே கால்களை எட்டிப் போட்டான். ""நாயக் கல்லவிட்டு எறிஞ்சோம்... கடைசீல எந்த நாய் வீட்லயோ பட்ருச்சு... அது வள்ளு வள்ளுனு வந்து வுழுகுது...''
இவனுக்கு கவனமாய் நடக்கவேண்டும் போலிருந்தது. வில்லங்கமான கிழவன், எழுபதைத் தாண்டலாம். விடலைத்தனம் மாறவில்லை. டாக்டர் வீட்டை அடைவதற்குள் வேறு எதையாவது செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது.
""என்ன தம்பி கம்முனு வறே.... நீ யாரோ நாயாரோன்னு செத்த நேரத்துக்கு முந்திவர இருந்தோம்... இப்ப ஒண்ணுக்கொண்ணு பாத்துக்கிட்டோம்.. ஒண்ணு மண்ணா கலந்துக்கிட்டோம்... மூஞ்சில முழிக்காதது மாதிரி இருந்து என்னத்த அள்ளிக்கட்டப் போறோம்...''
கிழக் கோட்டான் தத்தித் தத்தி முன்னேறியது. விட்டால் வீடுவரை வந்து குசலம் விசாரிக்கும் போல் இருந்தது. இன்னும் ஏன் எதற்கு டாக்டரைப் பார்க்க வந்தாய் என்று கேட்கவில்லை. மொதப் பையனுக்கு கல்யாணம் என்றால் "எனக்கும் ஒரு பத்திரிக்கை கொடு' என்பான். பந்தலில் முதல் ஆளாய் உட்கார்ந்து கொள்வான். மொய் செய்தால் போ என்று விட்டு விடலாம். சும்மா முழுங்கிக்கொண்டு போனால் என்ன செய்துவிட முடியும்?
""இதோ அங்கதே வீடு... அந்தா பார் ஒரே மரஞ்செடி கொடியா இருக்கே... அதே டாக்டர் மலையன் வீடு...'' கிழவன் வீட்டருகில் வந்து விட்டுவிட்டுச் சொன்னான், ""ஏங்கத பூராஞ் சொன்னே... நீ பேசா மடந்தையா சாதிச்சிட்டே... இப்ப இருக்கிற ஆள பெறகு இல்ல... இதுல ஒழிக்கிறதுக்கு என்ன இருக்கு... புது ஆள்கிட்ட என்னத்த அளக்குறதுனு வுட்ருக்கலாம்... மனுசன்ல புதுசென்ன பழசென்ன... ஒண்ணுக்கொண்ணு பேசி ஆத்திக்கிறலாம்ல...''
இவன் கிழவன் கையைப் பிடித்தான். கிழவன் துணிப்பையை ஒரு கையில் பிடித்தபடி கிந்தி நின்றான். நெருக்கமாய்ப் பார்த்ததில் அவனது முகக் கோணல் விளங்கியது. பற்கள் காரை விழுந்து சந்து சந்தாக நின்றன. கூட்டிக் கழித்தால் பத்துப் பதினைந்து தேறும். அடிக்கடி தாடி மீசை மழிக்கும் பழக்கம் உள்ளவன் போலும். அகன்று உட்குழிவான முகத்தில் சுருக்கங்கள் மயிர்க் கால்களாய் பரவியிருந்தன.
""அப்படியெல்லாம் வித்தியாசம் பாக்குறவன் நானில்ல.... மனுசர்ல இவரு முக்கியம் அவரு முக்கியம்னு என்ன இருக்கு...'' என்றபடி பையைத் திறந்தான்.
கிழவன் ஒரு பேழையை வாங்குவதைப் போல பத்திரிகையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான். முகமெல்லாம் பல்லாக மாறியது. இமாலய உயரத்தில் தான் வைக்கப்பட்டதைப் போல சிலிர்த்து நின்றான். கண்கள் பனித்தது.
""கண்டிப்பா நா வர்றே.... பேச்சுக்குச் சொல்லலப்பா.... உறுதியா வந்திர்றே... இப்பவே ஏம் பேர்ல ஆயிரத்தி ஒன்ன மொய்யா எழுதிக்க...''உற்சாகமும் நம்பிக்கையும் அதில் இழையோடியது.
புதுச் செய்முறை இப்படித்தான் வழிப்போக்கில் அமையும் போலும். நெடிதுயர்ந்த டாக்டரின் வீட்டைக் கண்களால் அளவெடுத்தான். முன்பின் தெரியாத ஒருவன் அதுவும் கிழவன். அறிமுகமாகிய அரைமணி நேரத்தில் ஆயிரத்தொன்றை எழுதுவதாக வாக்குறுதி அளிக்கிறான். பத்துப் பதினைந்து வருடமாய் குடும்ப வைத்தியர் போலிருக்கும் டாக்டர் மலையன் குடும்ப சமேதராய் வந்து பத்தாயிரத்து ஒன்றாவது எழுதுவார் என்கிற நம்பிக்கையுடன் காலிங் பெல்லை அழுத்தினான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.