ஆடல்... பாடல்... அறிவியல்!

நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தன்னாலும் சாதித்துக் காட்ட முடியும் என நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.  
ஆடல்... பாடல்... அறிவியல்!

நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தன்னாலும் சாதித்துக் காட்ட முடியும் என நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.  

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சு.முருகன்தான் ஆடல், பாடலுடன் அறிவியலைக் கற்பிக்கும்  சாதனைக்குச் சொந்தக்காரர்.  

""புதுப்புது பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், படிப்பை ரசனை மிக்கதாக மாணவர்கள் மத்தியில்  மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில்  எனது மனதில் தோன்றிய சிந்தனைதான் ஆடல் பாடலுடன் அறிவியலைக் கற்பிக்க வேண்டும் என்பது.

பொதுவாக, பள்ளிகளில் 10 - ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலர் வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது முக்கியமான விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகின்றனர். இதனால் தேர்வு நேரத்தில் பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த பிரச்னையைத் தீர்க்க மாணவர்களுக்கு பிடித்த வழியில் சென்று பாடங்களை நடத்தி வருகிறேன்'' என்கிறார் முருகன். 

ஒரு மாலைப் பொழுதில் அவரது சொந்த ஊரான சாம்பவர்வடகரையில் வைத்து அவரைச் சந்தித்தோம். ""சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் கல்விதான் ஒருவரை சாதனையாளராக்கும் என்பதால் படிப்பில் முழு கவனம் செலுத்திப் படித்தேன். இதனால் 4 பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். 9 ஆண்டுகாலம் அரசு நூலகத்தில் நூலகராகப் பணியாற்றினேன். பின்னர் சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 

நூலகராக இருந்ததால் நூல்களை வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. நூல்களில் உள்ள முக்கியமான  விஷயங்களை மாணவர்களிடம் நேரடியாகக் கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் சினிமா மெட்டில் பாட்டமைத்து அவர்கள் முன் பாடுவேன். இது மாணவர்களுக்கு பிடித்துப் போனது. இதையடுத்து அறிவியல் பாடங்களையும் பாடல், ஆடல் என பாடி நடத்தத் தொடங்கினேன். இதை கடைசி பெஞ்ச் மாணவர்கள் கூட வரவேற்றனர்.  

மேலும், பல குரலில் பாடங்களை நடத்தத் தொடங்கினேன். இதனால் சொல்ல வேண்டிய விஷயங்களை மாணவர்கள் மத்தியில் எளிதாகக் கொண்டு செல்ல முடிந்தது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்து வருகின்றனர்'' என்றார். 

தமிழக ஆளுநரிடமிருந்து சாதனையாளர் விருது, பல்வேறு அமைப்புகள் மூலம் கலைமதி விருது, கலைஜீவன் விருது, கலை ஞாயிறு விருது, கலை வளர்மணி விருது, விவேகானந்தர் விருது, சீர்மிகு ஆசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 

மாணவர்களுக்காகப் பாடல்களை பாடி பாடம் நடத்தும் இவரை, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கும் அழைத்து பயிற்சி கொடுக்க சொல்கின்றனர் கல்வித்துறை அதிகாரிகள். 

"ஐயோ, இப்படியாகிவிட்டதே' என வருந்தி வாழ்வை முடக்கும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில்,  தான் மட்டுமல்ல தன்னாலும் சாதனையாளர்களை உருவாக்க முடியும் என ஆசிரியராகி சாதித்து வரும் முருகனின் முன்னேற்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும் என்றால் அது மிகையில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com