பேய் பங்களா!

கொடைக்கானல். மூஞ்சிக்கல் மெயின் சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்துபோகும் சிமெண்ட் சாலையில் போனால், சாலையின் முடிவில், சரிவில், தன்னந்தனியாகப் புல்தரையின் மத்தியில், ஐரோப்பியக் கட்டிடக்கலையின்
பேய் பங்களா!

கொடைக்கானல். மூஞ்சிக்கல் மெயின் சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்துபோகும் சிமெண்ட் சாலையில் போனால், சாலையின் முடிவில், சரிவில், தன்னந்தனியாகப் புல்தரையின் மத்தியில், ஐரோப்பியக் கட்டிடக்கலையின் மாதிரியில், பிரிட்டிஷ்காரர் ஒருவரால் கருங்கற்களால் கட்டப்பட்ட,  மேலே புகைபோக்கியுடன் கூடிய ஒரு பழைய குட்டி பங்களா இருக்கிறது. அங்கே, அதன் வாசல் முன்னால் வலதுபுறம் இருக்கும் நீலமலர்கள் பூத்துக்குலுங்கும் ஜகரண்டாமரம்,  அடியில் தரை முழுவதும் நீலநிற மலர்களை,  உதிர்த்துப் பரப்பி நீலப்பாய் விரித்திருந்தது. ஃபாரஸ்ட் ரேஞ்சர் பீட்டரும்  அவனுடைய மனைவி ரோஸியும் அந்த வீட்டுக்கு  அன்றுதான் குடிவந்தார்கள். 

இதற்குமுன் பீட்டர் திருநெல்வேலி மாவட்டத்தில்  களக்காடு ஃபாரஸ்ட் ரேஞ்சில் பணிபுரிந்ததால் அம்பாசமுத்திரத்தில் குடியிருந்தார்கள். ஒருமாதத்திற்கும் மேலாக கொடைக்கானல் முழுவதும் பல பகுதிகளிலும் வீடுதேடி அலைந்து திரிந்து இறுதியில் அந்த வீடு கிடைத்துக் குடிவந்தார்கள்.

அந்த வீட்டில்  இதற்கு முன் குடியிருந்தவர்கள் எவரும் அந்த வீட்டில் தொடர்ந்து குடியிருந்ததில்லை. ஓரிரண்டு மாதங்கள் மட்டும் குடியிருந்துவிட்டுப் போயிருந்தார்கள். கடந்த ஒரு வருடமாக அந்தவீடு பூட்டியே கிடந்தது. ஏதோவொரு அமானுஷ்ய சக்தி அங்கு உலவிக்கொண்டிருப்பதாகவும் அது இரவுநேரங்களில் அங்கு குடியிருப்பவர்களுக்குத்  தொல்லை தருவதாகவும், அதனால் அங்கு யாரும் தொடர்ந்து குடியிருப்பதில்லை என்றும் சொன்னார்கள். அதை எல்லோரும் "பேய் பங்களா' என்று அழைத்தார்கள்.
அவர்களுக்கு வேறு எங்கும் வீடு கிடைக்காத காரணத்தாலும், கொடைக்கானலில் வீடு  வாடகைக்குக் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு வாங்குவது போன்றது என்பதாலும்,  அந்த வீடு அழகான சூழ்நிலையில் அழகாக,  வசதியாக, குட்டி பங்களாவாக,  குறைந்த வாடகைக்குக் கிடைத்ததாலும் ஊரில் அதை "பேய் பங்களா' என்று அழைப்பது தெரிந்தும் அங்கு தைரியமாகக்   குடி வந்தார்கள்.

பீட்டரைப் போலவே ரோஸிக்கும் அந்த வீடு, அந்தச் சூழல் மிகவும் பிடித்திருந்தது. அங்கிருந்து பார்த்தால்  கோக்கர்ஸ்வாக், பக்கத்தில் பழைமையான தேவாலயம், பள்ளத்தாக்கில் பேரிக்காய்த் தோட்டங்கள், மஞ்சு தவழும் பெருமாள்மலை எல்லாம் ஏதோவொரு கைதேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியங்கள்போல் தெரிந்தன.

அது டிசம்பர் மாதம். அன்று இரவு கடும்குளிர். அவர்கள் தூங்கும்போது படுக்கை அறையில் இருந்த ஹீட்டர் உஷ்ணத்தையும், போர்த்தியிருந்த கம்பளிப் போர்வைகளையும் தாண்டி உள்ளே நுழைந்த கடுமையான குளிர், அவர்கள் தாங்க முடியாத அளவிற்கு உடலில் கூர்மையான ஊசி குத்துவதுபோல் குத்தியது. 

இரவு மணி இரண்டு என்று சுவரில் இருந்த பழைய காலத்துக் கடிகாரம் மணியடித்துச்சொல்லி நிசப்தத்தைக் கலைத்தது.  அசதியில்  பீட்டர் தூங்கிவிட்டான். தூக்கம் வராமல் ரோஸி படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தாள். அறையில் எங்கோ மறைந்துகொண்டு சுவர்க்கோழி ஒன்று "கிரீச் கிரீச்' என்று இறகுகளைக் கால்களில் இருக்கும் கூர்மையான முற்களால் வருடி ஓசை எழுப்பி நிசப்தத்தைக் குலைத்தது. எங்கோ ஓர்  ஆந்தையின்  "கர்... கர்...' குரலோடு  ஒரு கூகையின்   "கூ... ...கூ...' குரலும், ஒரு கோட்டானின் "கும்ம்... கும்ம்' என்ற  உறுமலும் இனம்புரியாத கலவையாக குழப்பமான சப்தமாக இரவின் உறைந்துகிடந்த அமைதியை உடைத்து, அவளுக்குள் பீதியைக் கிளப்பியது.  இடையிடையே மிக மிக அருகில் குதிரை  கனைக்கும்  சத்தம் கர்ணகொடூரமாய் ஒலித்து அவளுடைய காதைக் குடைந்தது. இதுவரையிலும் இப்படிப்பட்ட  சப்தங்களை அவள்  கேட்டதில்லை  என்பதால் பயத்தில் அவளுடைய உடல் சிலிர்த்தது.

ரோஸி முகத்தை மூடியிருந்த கம்பளிப் போர்வையை  விலக்கிக் கொண்டு பார்த்தாள். ஹீட்டரின் மங்கலான வெளிச்சத்தில் கருமையாகத் தோன்றிய நீலநிற ஜன்னல் திரைகள் காற்றில் ஆடி யாரோ பின்னால் மறைந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. வீட்டுக்கு வெளியே மெலிதாக ஏதோ அரவம் கேட்பது போலிருந்தது. காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு மன ஓர்மையுடன் கூர்ந்து கவனித்தாள். வீட்டுக்கு வெளியே காய்ந்து தரையில் பரவி இருந்த இலைச்சருகுகள்மீது யாரோ  நடந்துபோவதுபோல் மெல்லிய காலடி ஓசை.  "சர... சர...'  என்ற சத்தம். பயம் தலைக்கேற உடல் முழுவதும் ஒரு நொடி இரத்தம் உறைந்துவிட்டது போன்றதோர் உணர்வு. அடுத்தவிநாடி அச்சத்தில் அந்தக் கடுங்குளிரிலும் உடல் முழுதும் வியர்த்துக்கொட்டியது. 
அதேநேரம் "டம்' என்று  ஏதோ விழுவதுபோன்று  ஒரு பெரும் சத்தம். அதைத் தொடர்ந்து  பாத்திரங்கள் சிதறி ஓடும்  ஓசை.  பயமும்,  பதட்டமும் தொற்றிக் கொள்ள சப்தநாடிகள் முழுதும்  ஒடுங்கியவளாய் போர்வையை உதறிவிட்டு எழுந்து உட்கார்ந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பீட்டரை ""எழுந்திருங்க, ஏதோ சத்தம் கேட்குது''  என்று சொல்லிக் கொண்டே அவனை உலுக்கி எழுப்பினாள். 

சட்டென்று போர்வையை  உதறிவிட்டுத் துணுக்குற்று எழுந்து உட்கார்ந்த பீட்டர், ""என்னாச்சு  ரோஸி,  நீ தூங்கலையா?'' என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.  

அவள், "" ஏதோ டமால்னு விழுந்தமாதிரி,  பாத்திரங்கள் சிதறி ஓடுனமாதிரி சத்தம் கேட்டுச்சுங்க'' என்றாள்.  

அதேநேரம் எங்கிருந்தோ கற்பூரமணம் வீசியது.  பயம் ரோஸியின் நெஞ்சைக் கவ்வி,  அவளுடைய அடிவயிற்றைப் பிசைந்தது. 

பீட்டர் படுக்கையைவிட்டு எழுந்து விளக்குகளைப்போட்டு  எல்லா அறைகளையும் பார்த்தான். குறிப்பாக  சமையல் அறையில் பாத்திரங்கள் ஏதாவது தரையில் விழுந்து கிடக்கிறதா? என்று பார்த்தான். பாத்திரங்கள் அடுக்கி வைக்கும் ஸ்டேண்டில் பாத்திரங்கள் அப்படியே அடுக்கி வைத்தபடியே இருந்தன. 

டார்ச் லைட்டை எடுத்து ஒளிபரப்பிக் கொண்டு முன்வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனான். முன்னால் நிறுத்தி வைத்திருந்த ஜிப்ஸி ஜீப்பின் மேல் இரண்டு நெருப்புத் துண்டங்கள் தெரிந்தன. அதைப் பார்த்தவுடன் உடல் புல்லரித்தது.  அங்கு படுத்திருந்த ஒரு கரும் காட்டுப்பூனையின் கண்கள் அவை. அவனைப் பார்த்ததும் சட்டென்று அவன் தலைக்குமேல்  தாவிக் குதித்து அந்த இடத்தைவிட்டு ஓடி மறைந்தது. 

ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தவன் அடுத்த நொடியில் தாரித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கும் கருப்பு மையை அப்பி வைத்ததுபோல்  கும்மிருட்டு.  எங்கும் மூடுபனி.  அமானுஷ்யம் இரவின்  பயங்கரத்தை இன்னும் அதிகமாகக் கூட்டிக்காட்டியது. 

அதே நேரம் திடீரென்று பள்ளத்தாக்கிலிருந்து "ஊ......ஊ...' என்று  ஒரு நரியின் ஊளைச்சத்தம். அந்த திசையில்  டார்ச்லைட் ஒளியைப் பாய்ச்சினான். ஏதோ ஒன்று வெண்மையாக நகர்ந்துபோவது தெரிந்தது. திடுக்கிட்டு மூச்சு நின்றதுபோல் ஆனான். உடனே தன்னிலைக்கு வந்து அதன்மீது ஒளியைப் பாய்ச்சினான். அது காற்றில் நகர்ந்துபோன ஒரு மஞ்சுக்குவியல். அடுத்த கணத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே  போனான். 
ரோஸி அல்ட்டார் அறையில், சிலுவையில் அறையப்பட்ட ஜீசஸ் சிலைமுன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து  தரையில் மண்டியிட்டு அமர்ந்து கண்களை மூடி இரண்டு  உள்ளங்கைகளையும் முன்னால் உயர்த்தி நீட்டி, ""ஓ, ஜீசஸ், எங்களுடைய வலதுபுறமும், இடதுபுறமும், மேலும், கீழும் இடங்கொண்டு பெருகுவீராக. உங்கள் பரிசுத்த ஒளி எங்களையும், எங்கள் வீட்டையும், எங்கள் உடமைகளையும், என்றும், என்றென்றும் பாதுகாப்பதாக. ஆமென்'' என்று பிரார்த்தித்தாள். 

பிரார்த்தனை முடித்துவிட்டு  எழுந்துநின்ற ரோஸியிடம் பீட்டர், ""ரோஸி, முன்னால் வாசல் பக்கத்தில் எதுவும் இல்லை, ஒருவேளை வீட்டுக்கு ரெண்டு பக்கமும்,  பின்னாலும் ஏதாவது இருக்கான்னு பார்த்திட்டு வர்றேன். பயப்படாமல் இரு'' என்று சொல்லிவிட்டு டார்ச்லைட்டோடு வெளியே போனான். 

வீட்டின் பக்கவாட்டில்  பார்த்தான். ஒன்றும் இல்லை. பின்புறம் போனான். கற்பூரமணம் மூக்கைத் துளைத்தது. எங்கிருந்து வருகிறது என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை. பின்புறத்தில் தகரம் வேய்ந்த ஓர் அறை இருந்தது. அதன் தகரக்கதவு ஒருக்களித்துச் சாத்தியிருந்தது. டார்ச் விளக்கின் ஒளியை அதன்மீது பாய்ச்சிக் கொண்டே கதவைக் காலால் மெதுவாகத்  தள்ளித் திறந்தான்.  

அடுத்தநொடி பூனைக்குட்டி சைசில் கருப்பாக ஏதோ ஒன்று அவன் கால்களை நோக்கிப் பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் வெலவெலத்துப்போய் விசுக்கென்று ஒதுங்கி நின்றபோது பெருச்சாளி ஒன்று அவனைக் கடந்துபோனது. அதேநேரத்தில் "கிரீச்' என்ற சத்தமிட்டுக்கொண்டே கன்னங்கரேலென்று ஏதோ ஒன்று உள்ளேயிருந்து அவனுடைய முகத்திலடிப்பதுபோல் பறந்துவந்தது. திடுக்கிட்டுச்  சட்டென்று உடலைச் சற்று கீழிறக்கிக் குனிந்தான்.  அது அவனுடைய தலைக்குமேல் பறந்துபோய் இருளில் மறைந்தது.  அது ஒரு பழம்தின்னி வவ்வால்... 

சர்வநாடிகளும் ஒடுங்கியவனாய் டார்ச் லைட் ஒளியை அறைமுழுவதும் தெரியும்படியாகப் பரப்பினான். அந்த தகரக் கூரை வேய்ந்த அறையில். தகரத்திற்குக் கீழே மரப்பலகைகளும், மரச்சட்டங்களும் அடித்திருந்தார்கள். மரப்பலகைகள் மற்றும் மரச்சட்டங்கள்கொண்டு பரண் அமைத்திருந்தார்கள். பரணில் இருந்த பெரிய தகர டிரங் பெட்டி. கீழே தரையில் விழுந்து திறந்து வாய் பிளந்து கிடந்தது. திறந்திருந்த அந்த தகரப் பெட்டியிலிருந்த பாத்திரங்களும், பரணில் இருந்த தட்டுமுட்டுச் சாமான்களும் தரையில் விழுந்து இங்கும் அங்குமாய்ச் சிதறிக் கிடந்தன. பார்ப்பதற்கு அந்தக் காட்சி அலங்கோலமாக இருந்தது. பரண் அமைக்கப் பயன்படுத்தி இருந்த மரப்பலகைகளும்,  மரச்சட்டங்களும் விரைத்துக் கொண்டும்,  திருகிக்கொண்டும் விகாரமாகக் காட்சியளித்தன. அந்த அறையிலிருந்து "குப்' பென்று வந்த  கற்பூரமணம் அவனுடைய முகத்தில் மோதி மூக்கைத் துளைத்தது. 

அந்த அறையில்...  இருந்த தகரப்பெட்டி,  தட்டுமுட்டுச் சாமான்கள், பாத்திரங்கள் எல்லாம் அந்த  வீட்டின் உரிமையாளரின் பணியாளருடைய உடமைகளாக இருக்கலாம்  என்று நினைத்துக்கொண்டே  அங்கிருந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டுத் திரும்பினான்.

அவனுடைய வருகைக்காக எதிர்பார்ப்போடு வாசல் கதவருகே நின்றுகொண்டிருந்த ரோஸி  அவனைப்  பார்த்தவுடன், ""என்னாச்சுங்க, ஏன் இவ்வளவு நேரம்?''  என்று ஆவலோடு கேட்டுகொண்டே அவனுடைய முகத்தைப் பார்த்தாள். 

உடனே  அவன், ""பயப்படுறதுக்கு ஒன்னுமில்லே ரோஸி''  என்று சொல்லிக்கொண்டே உள்ளேவந்து,   ""உட்கார் சொல்கிறேன்''  என்று சொல்லிக் கொண்டே சோபாவில் அமர்ந்து சுவரில் மாட்டி இருந்த டிஜிட்டல் உஷ்ணமானியைப் பார்த்தான். அதன் சிவப்பு எழுத்துகள் ஏழு டிகிரி செல்சியஸ் காட்டியது. 

ரோஸி கதவுகளைச் சாத்தித் தாளிட்டுவிட்டு அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தவுடன் சொன்னான் : 

""நாம் பயப்படுறதுக்கான விஷயம் எதுவும் நடக்கலே. வீட்டுக்குப் பின்னால் இருக்கிற அறையிலே தகரக்கூறைக்குக் கீழே ஒரு மரப் பரண் போட்டிருக்காங்க. 

அந்தப்பரணை அமைக்கிறதுக்கு கற்பூரநாரி மரப்பலகைகளையும், கற்பூரநாரிமரக் கட்டைகளையும் பயன்படுத்தி இருக்காங்க. கற்பூரநாரி மரப்பலகைகளும், கட்டைகளும் குளிர்காலத்தில் உஷ்ணநிலை. எட்டு டிகிரிக்குக் கீழே  வரும்போது விரைச்சுத் திருகிக்கிரும். அப்ப கற்பூரமணத்தை வெளியிடும். குளிர் இன்னும் அதிகமாகும்போது அதுல இருந்து கற்பூரமணம் இன்னும் அதிகமா வரும். இங்கே அந்தப் பரண்மேல பாத்திரங்கள் வச்ச தகரப்பெட்டி,  தட்டுமுட்டுச் சாமன்களையெல்லாம் வச்சிருந்திருக்காங்க. இன்னைக்கு உஷ்ணநிலை ஏழு டிகிரிக்கு  வந்ததனாலே பலகைகளும், கட்டைகளும் முறுக்கிக்கிட்டு தகரப்பெட்டியையும், அதில வச்சிருந்த சாமான்களையும் கீழே தள்ளியிருக்கு. அதெல்லாம் தரையில விழுந்து சிதறி ஓடின சத்தம்தான் உனக்குக்  கேட்டிருக்கு''  நிறுத்தினான். 

அதைக்கேட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்ட ரோஸி அவனிடம், ""கற்பூரநாரி மரத்துக்கு இப்படிஒரு குணம் இருக்கா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு''  என்றாள். 

உடனே பீட்டர், ""அந்த மரம் தொட்டாச்சிணுங்கிச்செடி மாதிரி உணர்ச்சியை வெளிப்படுத்தும் வித்தியாசமான மரம்... "சென்சிட்டிவ் ட்ரீ'ன்னு சொல்லுவாங்க. குங்கிலியம்,  சந்தனம்,  சாம்பிராணி,  சுக்குநாரி, மிளகுநாரி, புனுகுநாரி மரங்கள் மாதிரி அதுவும் ஒரு  வகை வாசனைத் திரவிய  மரம். தேவாலயங்களில் தூபம் போடுறதுக்காக உபயோகிக்கிற ஃப்ராங்கின்சென்ஸ்னு சொல்ற வாசனைப் பிசின்கூட ஒருவகைக்  குங்கிலிய மரத்தில இருந்துதான் எடுக்கிறாங்க'' சொல்லிவிட்டு...  அவளுடைய முகத்தைப் பார்த்தான். அதில்  பயம் விலகி ஒரு தெளிவும் நிம்மதியும் தெரிந்தது. அதைப் பார்த்து அவனுடைய மனதிலும் நிம்மதி பிறந்தது.

உடனே ரோஸி, ""கர்த்தரே,  எங்கள் பரமபிதாவே, உங்களை என்றென்றும், எப்போதும் விசுவாசிக்கும் எங்களது பயத்தைப் போக்கி  ரட்சித்துப் பாதுகாத்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். பரமபிதாவே,  உமக்கு நன்றி, நன்றி, நன்றிகள். ஆமென்'' மனதிற்குள்ளேயே நன்றி  சொன்னாள்.

இப்படி இந்த வீட்டில் அமானுஷ்யமாக  நடப்பதன்  உண்மையான காரணம் என்னவென்று  அறியாததால்தான் எல்லோரும் இந்த பங்களாவை   "பேய் பங்களா'  என்று சொல்லிச்சொல்லி  எவரும் இந்த வீட்டுக்குக் குடிவராமல் செய்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பீட்டர் ஆச்சரியப்பட்டான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com