சொன்னால் நம்பமாட்டீர்கள் ! - 32
By சின்ன அண்ணாமலை | Published On : 09th June 2019 01:45 PM | Last Updated : 09th June 2019 01:45 PM | அ+அ அ- |

கட்டபொம்மன் படப்பிடிப்பு சென்னை கோல்டன் ஸ்டுடியோவில் ஆரம்பமானது. முருகன் கோவில் செட் போட்டிருந்தோம். விளக்கேற்றி வைத்து ஆரம்பிக்க வேண்டிய பணியை என்னைச் செய்யும்படி திரு.பி.ஆர்.பந்துலு சொன்னார்.
பக்கத்திலிருந்த அனைவரிடமும் இந்தப் படம் எடுக்க என்னைத் தூண்டியவர் சின்ன அண்ணாமலைதான். அதனால் அவர் விளக்கேற்றி வைப்பதுதான் முறை என்று சொல்லி எனக்கு மாலை அணிவித்தார்.
கட்டபொம்மன் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது.
"ஆசியாவிலே சிறந்த படம்' என்ற பரிசை கெய்ரோவில் அதற்குக் கொடுத்தார்கள்.
இதை எல்லாம் பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப் போலவே திரு.ம.பொ.சி. அவர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். கட்டபொம்மன் படத்தைப் போலவே "கப்பலோட்டிய தமிழன்' என்ற திரைப்படத்தை திரு. பி.ஆர்.பந்துலு எடுப்பதற்கு மூல காரணம் எனது முயற்சியே.
பந்துலு கூடவே நான் இருந்தபடியால் அவரிடம் அடிக்கடி பேசக்கூடிய வாய்ப்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் "கப்பலோட்டிய தமிழன்' பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
என் உள்ளத்தில் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்றவர்களைப் பற்றி பதிய வைத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.தான்.
திரு. ம.பொ.சி. இந்த முயற்சி எடுக்கவில்லை என்றால், கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழனுக்கு இவ்வளவு பேரும் புகழும் வந்திருக்குமா என்பது சந்தேகமே!
பின்னர் பி.ஆர்.பந்துலு "கப்பலோட்டிய தமிழன்' என்ற திரைப்படத்தை எடுத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வ.உ.சிதம்பரனாராக நடித்து இறவாத புகழ் பெற்றார்.
இந்தப் படம் தயாரித்து வெளியிட்ட போது இதை ஒரு காங்கிரஸ்காரன் கதை என்று சிலர் பிரசாரம் செய்துவிட்டார்கள். அதனால் அப்போது படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது அந்தப் படத்திற்குப் பெரிய வரவேற்பு மக்களிடமிருக்கிறது.
இன்னும் நாளாக ஆக கப்பலோட்டிய தமிழன் படமும், கட்டபொம்மன் படமும் மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.
"கட்டபொம்மன் - கப்பலோட்டிய தமிழன்' ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழில் வெளிவர அஸ்திவாரம் நான்தான் என்பது பலருக்கும் தெரியாது.
""அஸ்திவாரம் எப்போதும் கண்ணுக்குத் தெரியாது'' என்பது அனைவருக்கும் தெரியும்.
சிவாஜிக்கு என்ன தொழில்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழகத்தின் தவப்பயனால் அவதரித்தவர். நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி மாவட்டம்) தோன்றிய அந்த மாபெரும் கவிஞர் குழந்தை உள்ளம் கொண்டவர்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டினுள்ளே இருந்து வந்தார். நான் குமரி மாவட்டம் செல்லும்போதெல்லாம் "பாட்டாவை' பார்க்கத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடு முழுவதும் கவிமணியைப் "பாட்டா' என்றே அன்புடன் அழைப்பார்கள்.
கவிமணி வெளி உலகம் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. தமிழ் இலக்கியத்திலே ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர். தமிழ் உண்டு; கவிதாதேவி அருள் உண்டு; இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நானும் நடிகர்
திலகம் சிவாஜிகணேசன் அவர்களும் இன்னும் சில
நண்பர்களும் கன்யாகுமரி சென்றபோது கவிமணி
அவர்களைப் பார்க்கச் சென்றோம்.
எல்லோரையும் கவிமணி அன்புடன் வரவேற்றார்கள். ""இவர்தான் சிவாஜிகணேசன்'' என்று அறிமுகப்
படுத்தினேன். உடனே கவிமணி மிக்க மகிழ்ச்சி அடைந்து ""அப்படியா, தம்பிக்கு எந்த ஊரு, என்ன தொழில்
செய்கிறார்?'' என்றாரே பார்க்கலாம். வந்தவர்கள்
அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை.
நான் உடனே சமாளித்துக் கொண்டு ""பாட்டா அவர்கள் சினிமா பார்ப்பதில்லை. அதனால் அப்படிக் கேட்டுவிட்டார்கள்'' என்று சமாளித்து கவிமணி அவர்களைப் பார்த்து, ""பாட்டா இவர் உலகிலே சிறந்த நடிகர், தமிழ்நாட்டின் தவப்புதல்வர், சினிமாவில் இவர்தான் இமயம்'' என்றேன்.
""ஓ அப்படியா மகிழ்ச்சி'' என்று சொல்லி நடிகர் திலகத்தை வாழ்த்தினார். நாங்கள் கவிமணியிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்ததும் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், ""இன்னும் பெரிய அறிஞர்கள் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. ÷நாம் அதிகமாக உழைத்து அறிஞர்களின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். நாம் அதிகமாகப் புகழடைந்து விட்டோம் என்ற கர்வத்திற்கு இன்று சரியான சாட்டையடி கிடைத்தது'' என்று கூறினார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் அதற்குப்பின் ஒரு மாதத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த சினிமா ஒன்றைப் பார்த்தார்கள். அந்தப் படத்தின் பெயர் "கப்பலோட்டிய
தமிழன்.'
படத்தைப் பார்த்து பரவசமடைந்து சிவாஜி அவர்களை வாழ்த்தி ஓர் அருமையான கடிதம் ஒன்று பாராட்டி எழுதியிருந்தார்கள்.
பெரியார் தந்த பத்து ரூபாய்!
பெரியார் ஈ.வெ.ரா. அவர்களை மிகவும் தாக்கிப் பேசுவது என் சுபாவம். சொல்லப்போனால் என் அளவு தாக்கிப் பேசுபவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். இருந்தாலும் பெரியாரின் தைரியத்தைக் கண்டு அவரிடம் எனக்குத் தனி மரியாதை உண்டு.
ஒரு சமயம் திருச்சிக்குப் போயிருந்தபோது பெரியாரைப் பார்க்கப் போனேன். அதுதான் முதன்முறை நான் அவரைச் சந்திப்பது.
என்னைக் கண்டதும் அந்த தள்ளாத வயதிலும் எழுந்து நின்று அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தார்.
""நான் உங்களை அதிகமாகத் தாக்கிப் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறேன். மன்னிக்க வேண்டும்'' என்று கூறினேன்.
""இதுக்கு எதுக்கு மன்னிப்பு? உங்க எண்ணத்தை நீங்க சொல்றீங்க. ஏதாயிருந்தாலும் பயப்படாம சொல்லுங்கள். ஆமா... கதையெல்லாம் சொல்லிப் பேசுவீங்களாமே?'' என்று பெரியார் கேட்டார்.
""ஏதோ சில கதைகள். பேசும்போது தானாக வரும். நான் அதிகம் படித்தவன் அல்ல'' என்றேன்.
"" எனக்குக் கூட அந்தப் பாணி ரொம்பப் பிடிக்கும். ரொம்பப் படிச்சவன் மனசு திறந்து பேசமாட்டான். உங்க பேச்சை நான் ஒரு நாள் கேட்கணுமே'' என்றார்.
""ஐயாவுக்கு முன்னாலே நான் என்ன பேசமுடியும்?'' என்றேன்.
""ஏன் என்னைத் தாக்கிப் பேசுங்கள். நான் கோபப்பட மாட்டேன். ரசிப்பேன்'' என்றார்.
""சரி சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்'' என்று கூறிவிட்டு அன்புடன் விடைபெற்றுக் கொண்டேன்.
அடுத்த ஒரு மாதத்தில் "பெரியார் பிறந்த தினவிழா பொதுக்கூட்டம்' ஒன்றில் பேச அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டு அதன் பிறகு கொஞ்சம் குழப்பமடைந்தேன். பெரியாரை நேரில் வைத்துக் கொண்டு அவரையே எப்படித் தாக்குவது? என்ற யோசனையில் ஆழ்ந்தேன். எனினும் கூட்டத்திற்குப் பெரிய விளம்பரம் செய்து விட்டார்கள். ""வந்தது வரட்டும்'' என்று கூட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
கூட்டத்திற்கு வந்திருந்த மக்களில் பெரும்பாலோர் பெரியார் பக்தர்கள். பலர் கறுப்புச் சட்டை வேறு போட்டு பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
எதிரில் உட்கார்ந்திருந்த சிலருடைய மீசை அச்சத்தைக் கொடுத்தது. இத்தனைக்கும் மத்தியில் இருட்டில் பூரண சந்திரன் போல பெரியார் ஒரு பரங்கிப் பழமாகக் காட்சியளித்தார்.
அன்புடன் என்னை அவரும் அவர் அருமையாக வளர்க்கும் நாய்க்குட்டியும் வரவேற்றார்கள். பலர் பெரியாரைப் புகழ்ந்து பேசினார்கள். கூட்டம் ஒரே உற்சாகமாக இருந்தது. என்முறை வந்ததும் நான் எழுந்தேன். என்னைக் கண்டதும் சபையில் ஒரு கலகலப்பு ஏற்பட்டது. பேச ஆரம்பித்தேன்.
""தலைவர் அவர்களே, பெரியார் அவர்களே, நான் என்ன பேசினாலும் பொறுமையுடன் கேட்பது என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டு வ ந்திருக்கும் பெரியாரை பக்தர்களே'' என்று ஆரம்பித்ததும் சபையில் களைகட்டியது.
"" நான் ஒரு முட்டாள்'' என்றதும் மீண்டும் கரகோஷம். ""ஆமாம். நான் அறிவாளியாக இருந்தால் இந்தக் கூட்டத்திற்கு வந்து மாட்டிக்கொள்வேனா?'' என்றதும், பெரியார், "" முட்டாளைத்தான் நாங்க மதிப்போம். இங்கே எல்லாரும் முட்டாள்கள்தான்'' என்றாரே பார்க்கலாம். கூட்டத்தில் வெடிச்சிரிப்பு ஏற்பட்டது.
""பெரியார் கடவுள் இல்லை என்பவர். நான் கடவுள் உண்டு என்று நினைப்பவன். தமிழ் மக்கள் பலர் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர் பெரியார். இவருடைய செய்கை பலருக்குப் பிடிக்காது. இவர் சொல்வது அநேகருக்கு வேம்பாக இருக்கிறது.
ஆயினும் தமிழ் மக்கள் இவரிடம் தாயன்பு காட்டுகிறார்கள். எதிரிலிருப்பவர்களை முண்டங்களே என்கிறார். முட்டாள்கள் என்கிறார். ஆயினும் மக்கள் அன்பு காட்டுகிறார்களே எப்படி? அதுதான் தாயன்பு''
( தொடரும்)