உங்கள் கண்களை கடன் தாருங்கள்!
By DIN | Published On : 26th May 2019 08:57 AM | Last Updated : 26th May 2019 08:57 AM | அ+அ அ- |

ஹைங்கேரி தலைநகர் புடா பெஸ்டில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் "பல்டஸார் நாடக நிறுவனம்'. இதில் உறுப்பினர்களாக உள்ள நடிகர், நடிகைகள் தொழில்முறை நாடகக்கலைஞர்கள் மட்டுமல்ல, டவுன் சின்ட்ரோம் எனப்படும் மன நலிவு நோய் உள்ளிட்ட மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களும் கூட. மனநலப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு திறமைகள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வர உள்ள தடைகளை அகற்றுவதே இந்த தியேட்டரின் முக்கிய பணியாகும்.
மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த உகந்த சூழலை உருவாக்குவதே இதன் குறிக்கோள் ஆகும். இதன் மூலம் மனநலம் குன்றியோர் குறித்த சமூகத்தின் பார்வையை மாற்ற முயற்சிக்கிறார்கள். முறையாக நடத்தப்பட்டு வரும் இந்த நாடக நிறுவனத்தில் மனநலப் பிரச்னையுடன் பிறந்து பின்னர் நாடகக் கலைஞர்களாக மாறியவர்கள் பங்கேற்கும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இதில் நாடகக் கலைஞர்களும் திரைப்படக் கலைஞர்களும் இவர்களுடன் இணைந்து நடிப்பது அரிதான ஒன்றாகும்.
சர்வதேச அளவில் மற்ற நாடக நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது "பல்டஸார் நாடக நிறுவனம்' சமூக அக்கறை கொண்ட மிகவும் அரிதான கலாசார நிலையமாகத் திகழ்கிறது. இந்த நாடக நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இந்தியாவை மிகவும் கவர்ந்துள்ளது. இந்தியக் கலாசாரத்துடன் தொடர்புடைய யோகா மற்றும் இதரகலைகளை இந்த நாடகக்குழுவினர் கற்றுக் கொள்கிறார்கள்.
இந்த நாடக நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இதன் கலைஞர்கள் இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தனர். இவர்களின் கனவு 2015 -ஆம்ஆண்டு ஜனவரி மாதம் நிஜமானது. "உங்கள் கண்களைக் கடன்தாருங்கள்- பல்டஸார்' என்ற தலைப்பிட்ட ஆவணப்படத்தில், தமிழகத்திற்கு இந்தக்குழு வருகை தந்தது முதல் வைத்தீஸ்ரன் கோயிலுக்குச் சென்றது வரை படமாக்கியிருக்கிறார்கள்.
இன்றைய உலகில் தமிழ்நாடு மிகவும் அரிதான ஒன்றாக திகழ்கிறது என்று இந்த நாடகக்கலைஞர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இம்மாநிலத்தில் மக்களிடையே அதிக ஆன்மிக நம்பிக்கை இருக்கிறது. இத்தகைய நம்பிக்கை இந்த நாடகக் கலைஞர்களைஆன்மிகரீதியாகத் தமிழகத்துடன் இணைத்துள்ளது.
2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த திரைப்படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்படவிழாவில் ஆவணப்பட பிரிவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றது. ஹங்கேரி வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் சமீபத்தில் இந்த திரைப்படம் ஹிந்தியிலும் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
"லென்ட் மீ யூவர் ஐஸ்- பல்டஸார்ஸ்' தமிழ் பேசும் முதல் ஹங்கேரி திரைப்படமாகும். தமிழக மக்களிடையே காணப்படும் ஆன்மிக ஆழத்தை ஹங்கேரியைச் சேர்ந்த மனநலம் குன்றிய நாடக்கலைஞர்கள் மூலமாக அந்நாட்டு மக்களிடம் கொண்டு செல்லும் பணியின் ஒரு பகுதியாக இந்தத் திரைப்படம் முழுவதும் தமிழகத்திலேயே திரைப்படமாக்கப்பட்டுள்ளது. ஆவணப்படத்திற்காக இந்தக் குழு தமிழகத்திற்கு வருகை தந்தது முதல் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றது வரை தமிழகத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.
விருதுபெற்ற ஆவணப்படத்தின் இயக்குநரும் பல்டஸார் நாடக நிறுவனத்தைத் தோற்றுவித்தவருமான எலெக் கூறுகையில், "எங்களுடைய நாடகக்குழுவின் வெற்றிகரமான 21-ஆம் ஆண்டு வரலாற்றுப் பயணத்தில் நாடகக்கலைஞர்களின் அற்புதமான செயல்பாடு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. கலையைக் கொண்டு மக்களை ஒருங்கிணைக்கவும், சமூகத்தில் உள்ள அடிப்படையான பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் முடியும் என்பதை நிலைநாட்டியுள்ளோம். சர்வதேச அளவில் ஒருசில நாடகக்குழுக்களே மனநலம் உள்ளிட்ட மக்களிடம் காணப்படும் பிரச்னைகளில் கவனம்செலுத்துகின்றன. அனைத்துக் கண்டங்களிலும் சர்வதேச அளவில் நடைபெறும் நாடக விழாக்களில் எங்களுடைய குழுவினர் பங்கேற்றுவருகின்றனர். எங்களுடைய நிறுவனமும், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தமிழகத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.
"ஹங்கேரி -இந்தியா இடையே கலாசாரம், சமூகம் ஆகியவற்றுக்கான இணைப்புப் பாலமாக இந்த திரைப்படம் திகழும்'' என்றும் அவர் மேலும் கூறினார்.
- ஜி.அசோக்