திரைக் கதிர்
By DIN | Published On : 26th May 2019 09:31 AM | Last Updated : 26th May 2019 09:31 AM | அ+அ அ- |

* வாழ்க்கை வரலாற்று கதைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பால்தாக்கரே, என்.டி.ஆர், மோடி என வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கையைத் தழுவிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் இந்திய வரலாற்றில் பெரும் கணக்கியல் மேதையாகத் திகழ்ந்த சகுந்தலாதேவியின் வாழ்க்கை படமாகிறது. கணினியை விடவும் அதிவேகமாக கணக்குகளுக்கு தீர்வு கண்டு, உலக கணித மேதைகளை ஆச்சரியப்படுத்தியவர், பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலாதேவி. தற்போது அவரது வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் படமாக்கப்படுகிறது. இதை அனு மேனன் இயக்குகிறார், விக்ரம் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். சகுந்தலா தேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். உலகையே வியக்க வைத்த மனித கம்ப்யூட்டர் ஒருவரது வேடத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வத்துடன் காத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார், வித்யா பாலன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகிறது.
* வில்லனாக நடிக்கத் தொடங்கிய ஆர்.கே.சுரேஷ் தற்போது கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் "கொச்சின் ஷாதி அட் சென்னை 03' என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். வினோத் கிருஷ்ணன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா, அக்ஷிதா, ரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, என்.அய்யப்பன். இசை, சன்னி விஸ்வநாத்.கதை, ரிஜேஷ் பாஸ்கர். ஆர்யா ஆதி இன்டர்நேஷனல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரிக்கிறார். மஞ்சித் திவாகர் இயக்கு
கிறார். பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கும் இந்தப்படத்தின் திரைக்கதை, கொச்சியில் இருந்து சென்னை வரை பயணிக்கிறது. 70 சதவீதம் தமிழ், 30 சதவீதம் மலையாளத்தில் என கதாபாத்திரங்கள் இப்படத்தில் பேசுகின்றன.
* தமிழைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் படங்களை இயக்கி வருகிறார், கே.எஸ்.ரவிகுமார். ஏற்கெனவே பாலகிருஷ்ணா நடித்திருந்த "ஜெய்சிம்ஹா' படத்தை இயக்கிய அவர், தற்போது மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து கே.எஸ்.ரவிகுமார் பேசும் போது... "தமிழில் முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், ஏழெட்டு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் படத்துக்கு தலைப்பு மற்றும் கதாநாயகி முடிவாகவில்லை. அடுத்த மாதம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. நான்கு மாதங்களில் இந்த படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் "மாநகரம்'. சந்தீப் கிஷன், ரெஜினா உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூல், விமர்சனம் என இரு தடங்களிலும் முத்திரை பதித்தது. இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிப்பில் "கைதி' படத்தை இயக்கி வருகிறார். படம் குறித்து அவரிடம் பேசும் போது... "மாநகரம் திரைக்கதையை போல், கைதி திரைக்கதையும் வித்தியாசமாக இருக்கும். கார்த்திக்கு ஜோடி கிடையாது. திரைக்கதையில் அது தேவைப்படவில்லை. அதனால் வலிந்து திணிக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன். நரேன், மரியம் ஜார்ஜ், ரமணா, ஹரீஷ் பெராடி மற்றும் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்த 25 வயதுக்குட்பட்ட ஏராளமான இளைஞர்கள் நடித்துள்ளனர். 61 நாள்கள் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் இது. ஜூலை மாதம் ரிலீசாகிறது'' என்றார். இந்த படத்துக்குப் பிறகு விஜய்யின் 64-ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கலன்க்'. வருண் தவன், அலியா பட், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக ஒரு சிறப்புப் பாடலை உருவாக்க கரண் ஜோஹர் விரும்புகிறார். அதில் ஷாருக்கான், அஜய் தேவ்கன், கஜோல், ராணி முகர்ஜி ஆகிய 4 பேரை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த 4 பேருமே கரண் ஜோஹருக்கு நெருங்கிய நண்பர்கள். அதே நேரம், சில வருடங்களுக்கு முன் ஷாருக்கானுக்கும், அஜய் தேவ்கனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லும் நிலை இருக்கிறது. எனவே, "கலன்க்' பட பாடலில் இவர்கள் சேர்ந்து நடிப்பது சந்தேகம்தான் என்கிறது, பாலிவுட் வட்டாரம்.