திரைக்கதிர்

நயன்தாரா தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை பலர் தமிழில் நடிக்க வந்த போதும், மஞ்சுவாரியர் மட்டும் தமிழ்ப் படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு "அசுரன்' தமிழ்ப்படத்தில் நடித்தார்
திரைக்கதிர்

* நயன்தாரா தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை பலர் தமிழில் நடிக்க வந்த போதும், மஞ்சுவாரியர் மட்டும் தமிழ்ப் படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு "அசுரன்' தமிழ்ப்படத்தில் நடித்தார். இதில் தனுஷ் ஜோடியாக நடித்தார். முதல்படமே மஞ்சுவாரியருக்கு பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதுவுமில்லாமல் படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
"அசுரன்' படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் தனுஷ் ஏற்ற வேடத்தை வெங்கடேஷ் ஏற்க உள்ளார். அதேபோல் மஞ்சுவாரியர் வேடத்தை ஸ்ரேயா ஏற்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே ஸ்ரேயா தமிழில் நடித்துள்ள "நரகாசூரன்' படம் முடிந்து வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இதுதவிர தமிழ் மற்றும் ஹிந்தியில் 2 படங்கள் நடிக்கிறார். இந்தநிலையில்தான் ஸ்ரேயாவுக்கு "அசுரன்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது.

* பேண்டஸி பட பாணியில் உருவாகி வரும் படம் "ஆலம்பனா'. குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கவனம் ஈர்க்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
"விஸ்வாசம்' படத்தை பெரிய அளவில் வெளியிட்டு பெரும் வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பாளர் சந்துருஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். பாரி.கே.விஜய் கதை எழுதி இயக்குகிறார். 
வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே இந்தப் படம்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. முனிஷ்காந்த், திண்டுக்கல் லியோனி, ஆனந்த்ராஜ், காளி வெங்கட், கபீர்துபான் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்தவர்களின் அடுத்த இலக்காக இருப்பது ஹிந்தி சினிமா. ஸ்ரேயா, சிம்ரன், அசின் உள்ளிட்ட பலர் இந்த வரிசையில் ஹிந்தி சினிமாவுக்கு சென்றனர். இதில் குறிப்பிடும்படியாக அசின் மட்டுமே சில காலம் தாக்குப் பிடித்தார். இந்த வரிசையில் பாலிவுட் சினிமாவுக்குச் செல்கிறார் வேதிகா. தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகிறார். மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அப்படத்துக்கு, "தி பாடி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிணவறையில் இருந்து ஒரு சடலம் திடீரென்று காணாமல் போகிறது. அதைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபடும்போது, பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின்றன. "எல் க்யூர்போ' என்ற ஸ்பானிஷ் திரில்லர் படத்தின் ரீமேக்காக இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வேதிகா, இம்ரான் ஹாஸ்மி, ரிஷிகபூர், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி படம் ரிலீசாகிறது.

* சூர்யாவின் "சிங்கம் 3' படத்தில் இறுதியாக நடித்தார் ஸ்ருதிஹாசன். அதன் பின் புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். சிலர் அவருக்கு வாய்ப்புகள் இல்லை என்று பேசி வந்தனர். இந்த நிலையில் 2 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது விஜய்சேதுபதியுடன் "லாபம்' மற்றும் ஹிந்தியில் உருவாகும் "பவர்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் டிம்கின் இயக்கவுள்ள அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இதற்கிடையில் வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் "ப்ரோஸன் 2' படத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதி. அனிமேஷன் படமான இது ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வரும் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. "ப்ரோஸன்' படத்தின் முக்கிய கதாபாத்திரம் எல்சா. அந்த கதாபாத்திரத்துக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். 3 பாடல்களும் பாடியிருக்கிறார். இப்படத்தை கிறிஸ் பக், ஜெனிஃபர் லீ இயக்கி உள்ளனர். தமிழில், "ப்ரோஸன் 2'விற்கு ஸ்ருதி டப்பிங் பேசியதுபோல் ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா, தெலுங்கில் நித்யா மேனன் குரல் கொடுத்
திருக்கின்றனர். 

* தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் போஜ்புரி, பெங்காலி மொழி படங்களில் நடித்தவர் சாயாசிங். தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சில படங்களில் ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடினார். சீரியல் நடிகர் கிருஷ்ணாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் படம் இயக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் பேசும் போது... "தனியாக படம் இயக்கும் அளவுக்கு இன்னும் நான் தகுதி பெறவில்லை. நான் நடித்த சில படங்களின் படப்பிடிப்பில், ஓர் உதவி இயக்குநரைப் போல் பணியாற்றி சில விஷயங்கள் கற்றுக் கொண்டேன். கதை எழுதி வைத்துள்ளேன். எப்போது படம் இயக்குவேன் என்று தெரியவில்லை. தற்போது "தமிழரசன்', "மகா' ஆகிய படங்களில் நடிக்கிறேன். "ஆக்ஷன்' படம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து தமிழில் நடிப்பதற்காக சென்னையிலேயே குடியேறி விட்டேன்'' என்றார் சாயாசிங்.
ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com