தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள்

நாங்கள் இருவர்தான்.  நாங்கள் என்றால்?  நானும் என் மனைவி ஜானகியும்தான். இந்த அடுக்ககத்தில் மொத்தம் 7 குடியிருப்புகள் எங்களையும் சேர்த்து.  
தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள்

நாங்கள் இருவர்தான்.  நாங்கள் என்றால்?  நானும் என் மனைவி ஜானகியும்தான். இந்த அடுக்ககத்தில் மொத்தம் 7 குடியிருப்புகள் எங்களையும் சேர்த்து.  நாங்கள்தான் இந்த அடுக்ககத்தின் சொந்தக்காரர்கள்.  

எங்களைத் தவிர்த்து மொத்தம் ஆறு குடியிருப்புகளின் வாடகை மூலமாகத்தான் எங்களுடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. தாரளமாகப் பணம் செலவு செய்ய முடிகிறது.   நான் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவன்.   எனக்கு வரும் பென்சன், மேலும் குடியிருப்புகளிடமிருந்து கிடைக்கும் வாடகை போதுமான அளவிற்கு மேலேயே இருக்கிறது.

எனக்கு 76 வயது.  ஜானகிக்கு 71.  நான் மோசம்.  என்னைவிட அவள் பரவாயில்லை. இப்போதெல்லாம் நான் வீட்டிற்குள்ளேயே நடமாடிக் கொண்டிருக்கிறேன்.  வெளியே செல்வதில்லை.  அப்படியே செல்ல வேண்டுமென்றால் பாஸ்கரனுக்குப் போன் செய்வேன்.  அவன் ஆட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிடுவான்.  சிலசமயம் அவனுக்குச் சவாரி இருந்தால், இந்த நேரத்திற்கு வருகிறேன் என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு போவான். 

நாங்கள் முதல் மாடியில் குடியிருக்கிறோம். மாடிப் படிக்கட்டுகள் இறங்கி கீழே போவதுகூட என்னால் முடியவில்லை.  அவ்வளவு மோசம் நான். 

எங்களுக்கு மஞ்சுளா, ஹம்சவள்ளி என்ற இரண்டு பெண்கள். கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு பையன்.  பையன் அமெரிக்காவில் வசிக்கிறான்.   வருடத்திற்கு ஒருமுறை எங்களைப் பார்க்க வருவான். சமர்த்தான பையன்.  எங்கள் பெண்களில் மஞ்சுளா வேளச்சேரியில் இருக்கிறாள்.  ஹம்சவள்ளி பெங்களுரில். ஹம்சவள்ளி எங்களைப் பார்த்து அடிக்கடி சொல்வாள், "" எங்களுடன் வந்து விடுங்கள்'' என்று.   ஆனால் மஞ்சுளா கண்டுகொள்ள மாட்டாள். அமெரிக்காவில் இருக்கும் பையனை நாங்கள் பார்க்கப் போக முடிவதில்லை.   எங்களுக்கு உதவி செய்ய எங்கள் அடுக்ககத்தில் குடியிருக்கும் பாபு என்ற பையன் அடிக்கடி வருவான்.  ப்ளஸ் டூ படிக்கிறான்.  

தினமும் நான் காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குள்ளேயே நடப்பேன்.

எப்போதும் கை, கால்கள் எல்லாம் உயிர் போகிற மாதிரி வலிக்கும்.  அதனால் கை கால்களை ஆட்டி உடல் பயிற்சி செய்வேன்.

சமீபகாலமாக நானும் ஜானகியும்  பேசிக் கொள்வதில்லை.    சண்டை.  அதுவும் ஒரு புத்தகத்தால் சண்டை.

ஒருநாள் பெங்களுரூவிலிருக்கும் என் பெண்ணிடமிருந்து போன்.  ""என்ன?''என்று கேட்டேன்.  

""செளம்யாவிற்குப் போரடிக்குதாம்... இன்னும் பள்ளிக்கூடம் திறக்கலை...கொஞ்ச நாட்கள் உங்களுடன் இருக்கட்டும்... கொண்டு வந்துவிட்டுப் போகிறேன்'' என்றாள்.

""வந்தால் சந்தோஷமாகத்தான் இருக்கும்.. வரட்டும்..''  என் ஜானகிக்கு பேத்தி வருகிறாள் என்பதில் மகிழ்ச்சி.

செளம்யா வந்திருந்த ஒரு சில நாட்களிலேயே கண்டுபிடித்து விட்டாள்,  நானும் ஜானகியும் பேசிக்கொள்வதில்லை என்பதை. என் பெண்ணிற்குப் போன் செய்து சொல்லியும் விட்டாள்.


என் பெண் உடனே எனக்கு போன் பண்ணி, ""ஏன் அம்மாவிடம் பேச மாட்டேங்கறே?'' என்று கேட்டாள்.

""நீதான் உன் அம்மாவிடம் கேட்க வேண்டும்... நான் பேசினாலே எரிந்து எரிந்து விழுகிறாள்'' என்றேன். 

ஹம்சவள்ளி உடனே அம்மாவிடம் தொடர்பு கொண்டு பேசினாள்  ""ஏன் அப்பாவுடன் பேச மாட்டேங்கறே?'' என்று.  அவள் அதற்குப் பிடிகொடுத்துப் பேசவில்லை.  ""அதைத் தவிர வேற எதை வேண்டுமானாலும் பேசு'' என்று கூறிவிட்டாள்.

நாங்கள் இருவரும் பேசாமல் இருப்பது பேத்திக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது.  அவள் அம்மாவிடம் போன் பண்ணி, ""நான் அங்கயே வந்துவிடறேன்... இரண்டு பேரும் ஊமைக் கோட்டான் மாதிரி ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்க மாட்டேங்கறாங்க..''என்றாள்.

பெண்ணைச் சமாதானம் செய்தாள் ஹம்சவள்ளி.  ""நீ அங்கிருந்து இங்கு வருவதற்குள் அவங்க இரண்டு பேரையும் பேச வைத்துவிட வேண்டும்''
""அது முடியாது போலிருக்கிறது, அம்மா.  பாட்டியின் பிடிவாதம் தாங்க முடியவில்லை''

ஹம்சவள்ளிக்குப் புரியவில்லை.  நாங்கள் இருவரும் ஏன் பேசிக்கொள்வதில்லை என்று.மஞ்சுளாவிற்குப் போன் செய்தாள்.  ""அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வதில்லையாம்''

""சரியான லூசு... அப்படித்தான் இருக்கும் இரண்டும்''

""இதைச் சரி செய்ய வேண்டும்.  அப்படியே விடக்கூடாது''

ஹம்சவள்ளியும் மஞ்சுளாவும் பேசியபடி ஒருநாள் வந்தார்கள்.   அவர்கள் இருவரும் ஒன்றாக எங்களைப் பார்க்க வருவதை அறிந்து ஆச்சரியம். மகிழ்ச்சியும் கூட.

""வயதானவர்களை இப்படி அடிக்கடிப் பார்க்க வருவது நல்லது'' என்றேன்.
இருவரும் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்கள்.  ""நீ ஏன் அம்மாவுடன் சரியாகப் பேச மாட்டேங்கறே''

""காரணத்தை உன் அம்மாவிடம் கேள்''

இது மாதிரி பேசும்போது ஜானகி அங்கிருக்க விரும்பாமல் சமையலறைக்குப் போய்விட்டாள். 

ஹம்சவள்ளியும் மஞ்சுளாவும் எத்தனை முறை கேட்டாலும் அவள் சரியான காரணத்தைக் கூறவில்லை.

""இந்தப் பிடிவாதம் ஆச்சரியமாக இருக்கிறது'' என்றாள் மஞ்சுளா ஹம்சவள்ளியைப் பார்த்து.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்துப் பேசிக் கொள்ளவிட்டாலும், வீட்டிற்கு வேண்டியதை வாங்கி வைத்துவிடுவேன்.  ஜானகி சமையல் செய்துவிட்டு டைனிங்டேபிளில் சாப்பிட வைத்துவிடுவாள்.  நான் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடுவேன்.  

நாங்கள் தனித்தனியாகத்தான் படுத்துக்கொள்கிறோம்.    ஜானகி கூடத்திலும் நான் என் அறையிலும்.  புத்தக அறை என்று தனியாக ஒன்று இருக்கிறது. எப்போதும் பூட்டியபடி இருக்கும். அறை முழுவதும் புத்தகங்களாகக் குவிந்திருக்கும். இரும்பு பீரோக்களில், கட்டிலின் மேலே என்றெல்லாம். கிட்டத்தட்ட  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்.   இந்த அறைதான் எல்லோருக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.   யார் கண்ணிலும் படாமல் இந்த அறையைப் பூட்டி வைத்திருக்கிறேன். 

ஹம்சவள்ளிதான் ஒருநாள் என்னிடம், ""அம்மாவை அழைத்துக்கொண்டு போகிறேன்''என்றாள்.

""வந்தால் அழைத்துப் போ'' 

அம்மாவைப் பார்த்து.  ""ஏம்மா நீயும் எங்களுடன் பெங்களூர் வருகிறாயா?'' என்று கேட்டாள். 

""வருகிறேன்.. இங்கே போரடிக்குது''

உடனே மஞ்சுளா, ""நான் அப்பாவை  அழைத்துக்கொண்டு போகிறேன். அப்பாவைத் தனியாக விட முடியாது'' என்றாள்.

""நான் இங்கேயே இருக்கிறேன்.  வரமுடியாது'' என்றேன்.

""நீ தனியாக இருக்கலாம்.  யார் உன்னை கவனித்துக் கொள்வார்கள். எங்களுக்குக் கவலை அதிகரித்துவிடும்'' என்றாள் ஹம்சவள்ளி.

""நான் என் இடத்தை விட்டு வரமுடியாது.   இங்கேதான் சாக விரும்புகிறேன். இங்கே உள்ளவர்கள் என்னைக் கவனித்துக் கொள்வார்கள்.  நீங்கள் இருவரும் கவலைப்பட வேண்டாம்''

""எனக்குத் தெரியும் நீ புத்தக அறையை விட்டு வர மாட்டாய்''

""அதுதான் உங்கள் எல்லோருக்கும் உறுத்தல்'' என்றேன் சோர்வோடு.  

வாழ்க்கை விசித்திரமானது.  அது குறித்து என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஜானகி ஹம்சவள்ளியுடன் பெங்களூர் கிளம்பி விட்டாள். போகும்போது கூட ""போய் வருகிறேன்.  உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லவில்லை.    என் முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை.  அப்படி ஒரு தீவிரமான வெறுப்பு.  முன்பெல்லாம் எங்காவது சென்றால் போன் செய்து என்ன சாப்பிட்டீர்கள் என்று விசாரிப்பாள்.  இப்போது இல்லை. பெங்களூர் போனபிறகு  வந்து சேர்ந்தோம் என்று கூட தெரிவிக்க வில்லை. இந்த ஹம்சவள்ளிக்கு என்ன வந்தது? அவளுக்கும் என் மீது கோபமா?

மஞ்சுளாவும், ""உன்னால் இங்கே இருக்க முடியவில்லை என்றால், என் வீட்டிற்கு வந்து விடு'' என்று அடிக்கடி போன் செய்து கூப்பிடுகிறாள்.  

""நீ  இங்கே இருக்கேன்னுதான் அப்பாவை விட்டுவிட்டுப் போகிறேன்'' என்றாள் ஹம்சவள்ளி போகும்போது மஞ்சுளாவைப் பார்த்து. 

ஜானகி வீட்டைவிட்டுப் போனவுடன் அன்று வீட்டில் தனியாக இருக்கும்போது என்னவோ போல் இருந்தது. இத்தனைக்கும் சமீபகாலமாக நாங்கள்  இருவரும் பேசாமல்தான் இருக்கிறோம்.  பேசாவிட்டாலும் அவள் இருப்பு என் மனதிற்குள் பட்டுக்கொண்டே இருக்கும்.  ஒருவர் பேசாமல் இருந்தால் என்ன?  மனரீதியாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் இல்லையா?  ஆனால் ஜானகி இப்போது இங்கு இல்லை என்பது அழுத்தமாகத் தெரிகிறது.   ஏன்?  ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்தால் இந்த அளவிற்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

கடைசிவரை அவளும் சரி நானும் சரி எங்களுக்குள் என்ன கோபம் என்பதை யாரிடமும் சொல்லவில்லை.  ஜானகிக்கு வீம்பு அதிகம்.   இதே வேற யாராவது இருந்தால், பேசாமல் இருப்பதற்கான காரணத்தைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.  எல்லோரிடமும் புலம்பித் தீர்த்திருப்பார்கள்.    

நாங்கள் இருவரும் இப்படி இருந்தது, மஞ்சுளாவிற்கும் ஹம்சவள்ளிக்கும் விசித்திரமாகப் பட்டது.

ஏன் ஜானகிக்கு என் மீது அளவுகடந்த கோபம்?  நான் யோசித்துப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.  புத்தகங்கள்தான் கோபத்திற்குக் காரணம் என்று. என்னுடைய நோய் என்னவென்றால் எங்கே புத்தகம் கிடைத்தாலும் அதை விலை கொடுத்து வாங்கிவிடுவேன். பிளாட்பாரத்தில் உள்ள கடைகளிலிருந்து நான் புத்தகங்களை விலை குறைவாக எப்போதும் வாங்கிக் கொண்டு வருவேன்.

முன்பெல்லாம் என்னால் வெளியே நடமாட முடிந்தது. அதனால் வாங்கிக் கொண்டு வர முடிந்தது. கடந்த ஒரு வருடமாக  வெளியே போய் புத்தகங்களை வாங்க முடிவதில்லை.  நாங்கள் இருக்கும் மாம்பலம் பகுதியில் ஒரு பழைய பேப்பர் கடை இருக்கும்.  அங்குதான் எல்லாப் புத்தகங்களையும் கிலோ 80 ரூபாய்க்கு வாங்குவேன்.  சில சமயம் அபூர்வமான பல புத்தகங்கள் அங்கு கிடைக்கும்.

பலர் அவர்கள் படித்த நல்ல நல்ல புத்தகங்களை பேப்பர்கடைகளில் கிலோ ரூ.7-க்குப் போட்டு விடுகிறார்கள்.   கடைக்காரனோ எனக்கு கிலோ ரூ.80 என்று கொடுப்பான்.  ஒரு முறை ஏ.கே. செட்டியார் எழுதிய "குமரிமலர்' இதழ் கிடைத்தது.    ஆனால் கடந்த ஒரு வருடமாக என்னால் நடக்க முடியாவிட்டாலும் புத்தகம் வாங்குவதை நிறுத்தவே இல்லை.  இதுதான் ஜானகிக்கு பெரிய ஆச்சரியம். வெறுப்பு, கோபம் எல்லாம்.

வீட்டில் என் பொழுது போக்கு புத்தகம் படிப்பது.  எப்போதும் புத்தகம் படித்துக் கெண்டிருப்பேன்.  நான் வெளியே போக முடியாவிட்டாலும், கணினி மூலம் புத்தகம் வாங்க ஆர்டர் செய்து புத்தகங்களை வாங்கி விடுவேன்.  சிலசமயம் போன் செய்து புத்தகம் வாங்குவேன். 

ஒருமுறை அப்படித்தான் தஸ்தயேவ்ஸ்கியின் "கரமாஸவ் சகோதரர்கள்' புத்தகத்தை ஆன் லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன்.  அதைத் தமிழில் மொழி பெயர்த்திருந்தார்கள்,  நேரிடையாக ருஷ்ய மொழியிலிருந்து.  அதைப் பார்த்தவுடன் தான் ஜானகிக்கு என் மீது கடுமையான கோபம்.  காரணம் புத்தக விலை.  இந்தத் தள்ளாத வயதில் இதையெல்லாம் யாராவது படிப்பார்களா?  ஜானகிக்கு புத்தகம் என்றால் பிடிக்காது.  எப்போதும் அவளுக்கு டிவிதான்.   

""ஏன்  வெறி பிடித்த  மாதிரி புத்தகங்கள் வாங்குகிறீர்கள்.  இருக்கிற புத்தகத்தைப் படிக்கக் கூடாதா?'' என்றாள் கடுப்பாக. 

நான் அதற்குப் பதில் சொல்லவில்லை.  சொன்னால் அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகிவிடும்.  எனக்கும் அவளுக்கும் கோபம் அன்றிலிருந்துதான் தீவிரமாகத் தொடங்கியது என்று சொல்லலாம்.

நான் செய்து கொண்டிருக்கும் எந்தக் காரியமும் என் மனைவிக்கு மட்டுமல்ல, என் பிள்ளைகளுக்கும் பிடிப்பதில்லை. புத்தகங்களை வாங்கிக்கொண்டிருப்பது என் வழக்கம்.  புத்தகங்களைப் படிக்க வேண்டாமா? படித்து முடித்தவுடன் யாருக்காவது கொடுத்து விட வேண்டாமா?  இதை நான் செய்வதில்லை.  என் பெண்களும் புதல்வனும் புத்தகம் என்றால் வெறுப்பார்கள்.  எனக்கும் அவர்களுக்கும் அடிக்கடி புத்தகத்தால்தான் சண்டை வரும். 

அன்றும் அப்படித்தான் நான் "கரமாஸவ் சகோதரர்கள்' நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  மனைவி  காலை வேளையில் கஞ்சி சாப்பிடக் கூப்பிட்டாள். நான் எழுந்து போகவில்லை.  அவளுக்குக் கோபம்.  கூப்பிட்டாள்.  திரும்பவும் போகவில்லை. அவள் அங்கிருந்து வந்து என் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கித் தூர எறிந்தாள்.  புத்தகத்தின் கெட்டி அட்டை நசுங்கி விட்டது.  என் கண் கலங்கி விட்டது. 

நானும் கோபம் அடைந்து  அவள் கன்னத்தில் ஓர் அறை அறைந்து விட்டேன். நான் இப்படி நடந்துகொள்வேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.   நானும் அப்படிப்பட்டவன் இல்லை.  ஆனால் புத்தக வெறியால் ஏற்பட்டுவிட்டது. அன்றிலிருந்து  பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டாள்.  ஏன்  என்னைப் பார்க்கக் கூட விரும்பவில்லை.  என் வாழ்க்கையில் புத்தகத்தால் இப்படி ஒரு விரிசல் வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இதோ ஜானகி பெங்களூர் சென்று ஒரு வாரம் மேல் ஆகிவிட்டது.  மஞ்சுளா போன் செய்துகொண்டிருக்கிறாள்.   மனைவியிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

நான் எப்படியோ தடுமாறிக் கொண்டு எனக்கு வேண்டியவற்றை இன்னொருவர் உதவியுடன் செய்துகொண்டு வருகிறேன்.  மனைவி இல்லாத வெறுமை பெரிய சுமையாக இருக்கிறது.  திரும்பவும் "கரமாஸவ் சகோதரர்கள்' புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.   ஓடவே இல்லை.   புத்தகம் வைத்திருக்கும் அறையைத் திறந்து பார்த்தேன்.  தூசி படிந்து அந்த அறை குப்பையாக இருந்தது.  பல புத்தகங்களை நான் புரட்டிக் கூடப் பார்க்காமல் வைத்திருந்தேன்.  எந்தத் தேதியில் புத்தகம் வாங்கியிருக்கிறேன் என்ற குறிப்பு மட்டும் எழுதியிருப்பேன்.

நான் இன்னும் எவ்வளவு வயது வரை இருப்பேனோ?  தெரியாது.  இந்தப் புத்தகங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்?  இதை ஏதாவது ஒரு நூல்நிலையத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டால் என்ன?  ஒருநாள் முழுவதும் இது குறித்து யோசனை செய்துகொண்டே இருந்தேன்.  தூங்காமல் இரவெல்லாம் யோசித்தபடி இருந்தேன்.   முன்புபோல் இல்லை. கண்ணும் சரியாகத் தெரியவில்லை.  ஆனால் எப்படி என் பொழுதைக் கழிப்பேன்? ஏதோ சில புத்தகங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்ற புத்தகங்களைக் கொடுத்துவிட்டால் என்ன? அல்லது லைப்ரரியில் போய் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்கலாம்.

என் வயதையொத்த ராமதுரை என்னிடம் ஒவ்வொரு முறை பேசும்போது அறிவுரை கூறுவார்.  "" ஏன் புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிக்கிறே? நூல் நிலையத்திலிருந்து எடுத்துப் படி'' என்று.  அவருக்கும் நான் புத்தகங்களை ஓர் அறை முழுவதும் சேகரித்து வைத்திருப்பது பிடிக்கவில்லை. எனக்கு இன்னொரு பிரச்னை.  புத்தகங்களைப் படிக்கப் படிக்க படித்ததெல்லாம் மறந்து போய்விடும் வியாதி.  அதனால் படித்த  புத்தகங்களில் அந்தப் புத்தகத்தின் கதைக் குறிப்புகளை எழுதி வைத்திருப்பேன்.

ஒருவழியாக யோசித்து என் எல்லாப் புத்தகங்களையும் புதுக்கோட்டையில் இருக்கும்  நூல்நிலையத்திற்கு தானம்  செய்யத்  தீர்மானித்தேன். உண்மையில் என் முடிவை யாருக்கும் தெரிவிக்கவில்லை.  நான் போன் செய்தவுடன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்.  புத்தகங்கள் வைத்திருக்கும் ஷெல்புகளையும் விற்றுவிட்டேன்.  புத்தகம் இருந்த அறை என்னைப் பார்த்து பயமுறுத்தியது.  என் நெடுநாளைய நண்பர்களை இழந்துவிட்டதுபோல் தோன்றியது.  படிக்க முடியாவிட்டால் என்ன? பார்த்துக் கொண்டாவது இருந்திருப்பேன்.  அன்று முழுவதும் நான் சரியாக இல்லை.

என் உலகத்திலிருந்து ஏதோ ஒரு பகுதி கழன்று போனதுபோல் தோன்றியது. 

பதினைந்து நாட்கள் கழித்து ஹம்சவள்ளி போன் செய்தாள்.  அம்மாவும் அவளும் வருவதாக.  நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.  இனிமேல் என்ன சொல்வதற்கு இருக்கிறது?  நான் ஜானகியைப் பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை.  ஜானகியும். 

பெங்களூரிலிருந்து கிளம்பி ஹம்சவள்ளியும், ஜானகியும் ஒருநாள் மதியம் வந்தார்கள்.  அவர்களை வரவேற்றேன். வழக்கம்போல் ஜானகி முகம் கொடுத்துப் பேசவில்லை. 

ஊரிலிருந்து வந்த ஹம்சவள்ளி ஒன்றைக் கவனித்தாள்.  புத்தக அறை.  அது திறந்திருந்தது.  அவளுக்கு ஆச்சரியம்.   உள்ளே போய்ப் பார்த்தாள். ஒரு புத்தகமும் இல்லை.  அங்கு ஒன்றுமே இல்லை.  வெறுமையாக இருந்தது அறை.
ஜானகியும் போய்ப் பார்த்தாள்.

ஹம்சவள்ளி என்னைப் பார்த்து,""புத்தகங்கள் எல்லாம் எங்கே?'' என்று கேட்டாள்.

""கொடுத்துவிட்டேன்''

""யாருக்கு?''

""லைப்ரரிக்கு.  புதுக்கோட்டையில் ஒரு லைப்ரரிக்கு.. வந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்''

அவளால் நம்ப முடியவில்லை.

""உன்னால் புத்தகம் இல்லாமல் இருக்க முடியாதே?''

""சில புத்தகங்கள் மட்டும் வைத்திருக்கிறேன்.  அதையும் படித்துவிட்டு இங்கே லோக்கல் லைப்ரரிக்குக் கொடுத்துவிடுவேன்''

உண்மையில் இதைச் சொன்னபோது ரொம்பவும் சோர்வாக இருந்தேன். பித்துப் பிடித்த நிலையில் இருந்தேன் என்று சொல்வது சரியாக இருக்கும்.   தினசரி ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தேன்.  சிறிது நேரம் கழித்து,  ஜானகி ஒரு தம்ளர் காப்பி எடுத்துக்கொண்டுவந்து, ""காப்பி குடியுங்கள்'' என்றாள்.  முதன் முறையாக என்னுடன் பேசினாள். அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

எனக்கு ஆச்சரியம்.  ஜானகியா என்னுடன் பேசுகிறாள்?  

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 
பெற்ற கதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com