நனவாகிய கனவு

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சிவசைலம் மண்ணைத் தரிசிக்க முடிந்திருக்கிறது. 
நனவாகிய கனவு

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சிவசைலம் மண்ணைத் தரிசிக்க முடிந்திருக்கிறது. 
இந்த ஊர் அவரின் பிறந்த மண் இல்லை. சிலகாலம் பணியின் நிமித்தமாய் இங்கே வாழ நேர்ந்தது. அந்தக் காலத்தின் நினைவுகள்தாம் அப்படியே அச்சிட்டு வைத்தது போல் கலையாமல் இருக்கிறது. நெஞ்சைத் தொட்டு அப்படியே தங்கியும் விட்டது. 
மகனோடு டெல்லிக்குப் போன பின் சிவசைலம் மண்ணின் நினைவு மட்டும் மனதிற்குள் இருந்து கொண்டு ஏக்கப்பட வைக்கும். பொதிகை மலை மீது தவழ்ந்தபடி இருக்கும் வெண்பஞ்சு மேகங்களும், மேகங்களுக்கு தங்க நிற விளிம்புகளைக் கொடுத்துக் கொண்டு மேலை மலையில் மறையும் கதிரவன் காட்சியும், அப்படியே கிழக்கு முகமாகத் திரும்பினால், விண்முட்ட எழுந்து நிற்கும் சைலப்பநாதரின் ஆலயக் கோபுரமும் நெஞ்சை அள்ளும் காட்சிகளாக இருக்கும். 
ஆலய மதிற்சுவற்றை ஒட்டினாற் போன்று சல சலத்து ஓடும் கருணை நதியின் அழகுதான் என்னே! 
நீருக்கு அடியில் தங்க நிறத்தில் மணல் துகள்கள் ! காலை நீருக்குள் வைத்தால் காலடியில் குறு குறுக்கும் மணற் துகள்கள் ! மாசு மருவற்ற மலைநீர், மாசு மருவற்ற பொன் வண்ண மணற்பரப்பு! 
இருகரைகளும் விண்முட்ட உயர்ந்தோங்கிய தென்னை, மா, பலா, நெட்டிலிங்கம், புன்னை மரங்
களால் நிழல் படிந்து காணப்படும். 
அந்த மரங்களின் நிழல்களில் அமர்ந்து உரையாடும் பெரியவர்கள், விளையாடும் குழந்தைகள் என்று ஆற்றங்கரை கல கலப்பாக இருக்கும். 
ஆற்றங்கரை கல் மண்டபத்தில் எப்போதும் சில பெரியவர்கள் காணப்படுவார்கள். வீட்டுக்கதை, ஊர்க்கதைகளெல்லாம் பேசிப் பொழுதை ஓட்டுவார்கள். 
கருணை நதியில் நீராடிவிட்டு, உடை மாற்றிக் கொண்டு அப்படியே சிவசைலப்பரையும், பரமகல்யாணி அம்மனையும் தரிசனம் பண்ணி விட்டுப் போவது பெரும்பாலோரின் வழக்கம். 
இவற்றையெல்லாம் மனதிற்குள் அசைபோட்ட படியே ஆலயத்தை நோக்கி நடக்கலானார் ஆரூரன். எத்தனையோ ஊர்களில் பணியாற்றியிருக்கிறார், ஆனால் மறக்க முடியாத ஊராக இருப்பது சிவசைலம் தான்.
கோபுரம் கண்ணில் பட்டதும் கரங்கள் இரண்டையும் தலைக்கு மேல் குவித்து, "சிவ சைல நாதா ! சிவ சைல நாதா!' " என்று வாய்விட்டே உருகிக் கூறினார். 
சர்வலங்கார பூஜிதையான பரமகல்யாணி அம்மனை மனக்கண்ணால் சேவித்துக் கொண்டார். அம்மனின் புன்னகை எப்போதும் தாய்மைப் பரிவைக் காண்பிக்கும். மனமுருகிப் போவார் ஆரூரன். 
சிலநாட்கள் இங்கே தங்கி, கருணை நதியில் நீராடி ஆலய தரிசனமும் பண்ணிவிட்டுப் போவது என்கிற முடிவுடன் தான் டில்லியிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். 
ஆற்றின் தென்கரையில் சிவசைலம் ! வடகரையில் கல்யாணிபுரம். 
கல்யாணிபுரத்தில் நண்பரின் வீடு இருக்கிறது. வாய்ப்பிருந்தால் அங்கே தங்குவது என்றும், இல்லையெனில் அம்பாசமுத்திரம் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கிக் கொள்ளலாம் என்கிற முடிவுடன் தான் இருக்கிறார். 
அம்பாசமுத்திரத்தில் தங்கினால், அங்கிருந்து பாபநாசம் போய்வருவது எளிது. 
சிந்தனை பண்ணிக் கொண்டே ஆற்றங்கரைக்கு வந்து விட்டார். 
அவ்வளவுதான்! அப்படியே அதிர்ந்து போய்விட்டார்! இதுவா கருணைநதி ? 
உடைந்து போன மனதுடன் கல்மண்டபத்தின் அருகே வந்து நின்று கொண்டு பார்வையை ஓட விட்டார். 
கருணை நதி சிறு ஓடைபோல நகர்ந்து கொண்டிருந்தது. 
அந்த நீரும் மாசுகளைச் சுமக்கும் ஒரு பாவியைப் போல எது எதையெல்லாமோ தன்மீது மிதக்க விட்டபடி ஊர்ந்து கொண்டிருந்தது. பொதிகை மலையில் புறப்பட்டு வரும்போது, பாறைகளுக்கு நடுவே பளிங்கு நீராகத்தான் வந்து கடனா அணையை நிரப்பும். 
அங்கிருந்து மதகுகளின் வழியே சாடிவரும்போது கூடத் தூய்மையாகத்தான் வரும். 
இத்தனைக்கும் சிவசைலத்திற்கும் அணைக்கட்டுக்கும் இடையே வெறும் இரண்டு மூன்று சிற்றூர்கள்தாம் உள்ளன. அவர்களா கருணை நதியை இவ்வளவு மோசப்படுத்துகிறார்கள் ! 
முக்கூடல் வரை ஓடவேண்டிய நதி! எவ்வளவு ஊர்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும், குளிப்பதற்கு உபயோகமாகவும் இருந்து கொண்டிருக்கிற நதி. 
நதியின் இருபுறமும் பசேலென்ற நெல்வயல்கள்! எவ்வளவு மக்களின் பசியை ஆற்ற நெல்லைக் கொடுக்கிறது. 
தெய்வமாய்ப் போற்ற வேண்டிய நதி அல்லவா! இப்படி மாசுபட்டுக் கிடக்கிறதே! கல் மண்டபத்தின் கீழ்ப்புறம் , உடைந்தும் உடையாமலுமாய் மதுப் புட்டிகள்! ஐயோ, காலில் பட்டால் என்னத்திற்கு ஆவோம்? 
குடிகாரர்கள் போதையில் இப்படிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்களே! "ஐயோ! "ஐயோ! என்று பதறிற்று ஆரூரனின் மனம்! 
அதோ வடக்குப் படித்துறைக்கு ஒரு பெண் வருகிறாள். கையில் ஓர் அலுமினிய வட்டச் சட்டி அது நிரம்பிவழிகிற குப்பையோடு காணப்படுகிறது. எந்த வித தயக்கமும் இல்லாமல், ஒரு சட்டி குப்பையும் அப்படியே ஆற்றில் கொட்டுகிறாள். கொஞ்சம் அமிழ்கின்றன! நிறையக் குப்பைகள் மிதந்து போகின்றன. 
பெரிய வேலம்மை அண்ணியும், சின்ன வேலம்மை அண்ணியும், கோதை ஆச்சியும் ஐப்பசி மாதம் முழுவதும் ஆற்றங்கரையில் துலா முழுக்காடி, பூஜை செய்வார்கள். நதி அன்னைக்கு வழிபாடு. காவேரி அன்னையாய்ப் பாவித்து, பாட்டுக்கள் பாடி, கும்மி அடித்து நதி நீரில் மலர்களையும், சந்தனத்தையும் சமர்ப்பித்து, வெற்றிலையில் சூடமேற்றி மிதக்க விட்டு வழிபாடு செய்வார்கள். நீரைத் தொட்டுச் சிரசில் தெளித்துக் கொள்வார்கள். 
அப்படியெல்லாம் வழிபட்ட கருணை ஆற்றின் மேலே, இப்போது குப்பையைக் கொட்டுகிறார்கள் ! 
என்ன கொடுமை இது! இவர்களை யார் தடுப்பது? 
அப்போது கூட்டமாகச் சிறுவர்கள் குளிக்க வந்தார்கள். 
அவர்களின் ஒன்று பட்ட கத்தலால் ஆற்றங்கரையே அலறியது. அவர்களில் ஒரு சிறுவன் மட்டும் கையில் ஒரு சிறு கல்லை எடுத்துக் கொண்டு வந்தான். 
அவனை அழைத்தார் ஆரூரன். 
"தம்பி, கையிலே கல்லை எடுத்துட்டு வர்றியே, கல் எதுக்குப்பா?''" என்று மென்மையாக வினவினார்." 
அவன் உடம்பைக் கோணலாக வைத்துக் கொண்டு, பதில் கூறாமல் சிரித்தான். 
"ஐயா, அவன் தினமும் ஒரு கல்லை எடுத்துட்டு வந்து, அங்கே கிடக்கிற பாட்டில்கள் மேலே போட்டு உடைப்பான்''" என்றான் வேறொரு சிறுவன். 
சொன்ன பையனை இவன் முறைத்தான். 
"அப்படியா தம்பீ?''" என்று கேட்டார் ஆரூரன். ஒப்புதல் சிரிப்புச் சிரித்தான் அந்தப் பையன்.
"தம்பீ, படிப்பில்லாத தற்குறிகள் குடிச்சிட்டு பாட்டில்களை வீசிட்டுப் போயிருக்காங்க. அது முதல் தப்பு. இப்ப நீ அதுகளை உடைக்கப் போறது ரெண்டாவது தப்பு, போற, வர்றங்க அதை மிதிச்சிட்டாங்கன்னா, கால்கள்ல குத்திப் புண்ணாயிருமே ! செய்யலாமா தம்பீ ?'' என்று கேட்டார். அவன் பேசாமல் நின்றான்.
அது தப்பு" என்று சில சிறுவர்கள் கோரஸாக முழங்கினார்கள்.
அப்போது காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் கும்பலாக வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள் இதை."தப்புப் பண்ணக்கூடாது தம்பீ. கல்லைத் தூர வீசு''" என்றார் ஆரூரன்.
சிறுவன் கல்லைத் தூர வீசி விட்டான்.
"வெரி குட்! வெரிகுட் ! படிக்கிற பிள்ளைகள் யாராவது நல்லதைச் சொன்னால் கேட்டு நடக்கணும். நடப்பீங்கள்ல?''" என்று கேட்டார். 
"நடப்போம்''" என்றனர் கோரஸாக.
"எங்கேர்ந்து வர்றீங்க''" என்று கேட்டார்.
"ஒளவை ஆஸ்ரமத்திலேர்ந்து'' என்றனர் கோரஸாக.
"எங்கே படிக்கிறீங்க ?''
"அத்திரி கலா நிலையத்திலே''" என்றான் ஒருவன்.
"நல்ல பிள்ளைங்க !''" என்று பாராட்டியவர், 
"சுத்தம் சுகம் தரும்னு சொல்லித் தந்திருக்காங்கதானே?'' என்று கேட்டார்."ஆமாம்''" என்றனர் கோரஸாக.
"இந்தக் கல் மண்டபவம், படித்துறை, ஆற்றுநீர் எல்லாமே அசுத்தமாய் இருக்கே. இந்த அழுக்குநீரிலே குளிச்சால் உள்ள சுத்தமும் போய்டுமே'' என்றார். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, முகங்களைச் சுளித்தனர்.
"குளிப்பதே சுத்தமாக இருப்பதற்குதானே! குப்பை, கூளங்கள், பழந்துணிகள் என்று மிதந்து வரும் அழுக்கு நீரில் நீராடலாமா?'' கொஞ்சம் தயங்கியவர்கள், "கூடவே கூடாது''" என்றனர்.
மேலும் சிலர், " அப்ப நாங்கெல்லாம் எங்கே போய்க் குளிப்பது ?''" என்று கேட்டனர்.
"வெரிகுட், சரியான கேள்வி ! நீங்க இதில்தான் குளிச்சாகணும்''"
"இப்ப நீங்கதானே ஐயா இதை அழுக்கு நீர் என்றீர்கள். அதில் போயா நீராடச் சொல்கிறீர்கள் ?''" என்று கேட்டான் சிவசைலநாதன். ஏழாம் வகுப்பில் படிக்கிற மாணவன்.
"நமக்கு நீராதாரம் இந்தக் கருணை ஆறுதானே! இதில்தானே குளித்தாக வேண்டும். ஆனால் நீரை மாசில்லாத நீராக மாற்ற வேண்டும். படித்துறைகளையெல்லாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கல் மண்டபம், சுற்றுப்புறம் எல்லாவற்றையும் சுத்தப்படுத்த வேண்டும்''
"யார் ஐயா, இவ்வளவு வேலைகளையும் செய்ய இயலும் ?''" என்று கேட்டான் அத்திரிகிரி. "
"நாம்தான். நாம் எல்லோரும் தான்" கூடிச் செய்தால் கோடி நன்மை. நம்மால் முடியும் என்கிற திட நம்பிக்கையோடு செய்ய ஆரம்பிப்போம் நம்மைப் பார்த்து நாலுபேர் உதவிக்கு வருவார்கள்''
"மாட்டார்கள்! கிண்டல் வேணுமானால் பண்ணுவார்கள். இப்படி உதவிக்கெல்லாம் வர மாட்டார்கள் ஐயா''" என்றான் நெல்லையப்பன். "
"வருவார்களா, மாட்டார்களா என்பது பிறகு பார்க்க வேண்டிய காரியம். இப்ப நீங்க ரெடியா?''" என்று ஆரூரன் கேட்கவும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 
"க்கீங் !'" என்ற ஒலியை எழுப்பிய ஒரு வாய் பேசாதோர் பள்ளி மாணவன் தனது கையை மேலே உயர்த்தி "தான் ரெடி" என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தினான்.
அவ்வளவுதான், அவனைத் தொடர்ந்து மற்ற அனைவரும் கைகளை உயர்த்தினர்.
தாங்கள் தயார் என்பதைக் காண்பித்தனர்.
"வெரி குட், வெரி குட்! இப்பவே ஆரம்பிப்போம். கொஞ்சம் பெரிய பையன்களாக இருப்பவர்கள், கல் மண்டபம் பக்கம் கிடக்கிற கண்ணாடிப் புட்டிகள், உடைந்த கண்ணாடிச் சில்லுகளை எல்லாம் கவனமாக ஒன்று திரட்டி ஒரு பக்கமாய்க் குவியுங்கள்''" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே சில மாணவர்கள் பொறுக்கிக் குவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
"கொஞ்சம் பேர் படித்துறைகளைச் சுத்தம் பண்ணுங்கள்''" என்றார் ஆரூரன்.
படித்துறையில் கிடந்த கற்கள் , மண், கிழிந்த துணிகள் என்று, ஒவ்வொன்றையும் தனித்தனியே குவித்தவர்கள், சிலர் கொண்டு வந்திருந்த வாளிகளில் நீரை மொண்டு வந்து மேற்படியில் நின்று கொண்டு நீரை ஊற்றி அலம்பி விடலானார்கள். 
அரைமணி நேரத்திற்குள் படித்துறை, கல்மண்டபம், ஆற்றங்கரை என்று எல்லாமே சுத்தம் பண்ணப்பட்டு, "பளிச்' என்று ஆகிவிட்டன. "
"பார்த்தீங்களா, வெறும் அரைமணி நேர உழைப்பு, இத்தனை சுத்தமாக ஆக்கிவிட்டீர்களே, தினமும் இதுபோல் சில நிமிடங்கள் உழைத்தால் போதும், இந்தப் படித்துறை பார்க்கவே அழகாக இருக்கும். நீங்கள் கூசாமல் கொள்ளாமல் குளித்து விட்டுப் போக முடியும்''" என்றார் ஆரூரன்."
"உண்மைதான், ஐயா !'' என்றான் அத்திரிகிரி."
"ஐயா, ஆற்று நீரில் கண்டதையும் போட்டிருக்கிறார்களே! அதற்கு என்ன ஐயா செய்யலாம் ?''" என்று கேட்டான் மாடசாமி.
"எல்லோரும் ஊர்வலமாகப் போவோம். கோஷம் போட்டுக் கவனத்தை ஈர்ப்போம். மக்கள் கூடி விடுவார்கள். அப்போது, நமது ஆற்றை நாமே காப்போம். அசுத்தமாக்காமல் சுத்தமாக வைப்போம்," என்று கூறி அதனால் நோய்கள் வராது என்று விளக்குவோம்''
"நமது ஊருக்கு மேற்கேயும் கிழக்கேயும் உள்ள ஊர்களில் எப்படி ஐயா சொல்லி விளக்க முடியும்?'' என்று கேட்டான் சைலப்பன். 
"வாகனங்களில் அங்கெல்லாம் போய் விளக்குவோம்'' என்றார். 
"எப்படி ஐயா சாத்தியப்படும் ?'' என்று கேட்டான் அத்திரி கிரி.
"நினைத்தால் முடியும். நீங்கள் தங்கும் ஆசிரமத்திற்கும், படிக்கும் பள்ளிகளுக்கும் நானே வந்து பொறுப்பாளர்களிடம் சொல்கிறேன். அண்டை ஊர்களுக்கப் போகும் போது, வாடகை வாகனத்திற்கு நானே ஏற்பாடு செய்து அழைத்துப் போகிறேன். இந்த வாரம் தொடர்ந்தாற் போல் மூன்று நாட்களுக்குப் பள்ளி விடுமுறை வருவதால், அந்த நாட்களில் போகலாம். சரியா ?''" என்று கேட்டார்.
"வெரி குட் ! வெரி குட் ! வெறும் அரைமணி நேரத்திலேயே இந்தப் பகுதியை ஜொலிக்க வைத்து விட்டீர்களே. இதைப் பார்க்கிற ஊர்மக்கள் சந்தோஷப்பட்டு முழு ஒத்துழைப்புத் தருவார்கள். ஆற்றங்கரைகள் சுத்தமாகிவிட்டால், கருணை நதி பளிங்கு போல் ஓட ஆரம்பித்து விடும். இப்போது தென்மேற்கு மழையின் அருளால் கருணை அணை நிரம்பி வழிகிறது. இந்தச் சந்தோஷமே மக்களை நம் பக்கம் அழைத்து வந்து விடும்''" என்றார் ஆரூரன். 
"ஆமாம் ஐயா''" என்றனர் கோரஸாக.
ஆரூரன் அவர் கூறியது போலவே ஆசிரமத்திற்கும், பள்ளிகளுக்கும் சென்று அனுமதி வாங்கி ஊர்வலம் போய், விளக்கினார். தங்கள் ஊரின் ஆறு சுத்தமாவதில் மக்களுக்குப் பரம திருப்தி.
பொதுமக்களில் கொஞ்சம் பேரும் மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள்களுடன் வந்து, கரை நெடுக நின்ற செடி, கொடி, முள் மரங்களை வெட்டிக் குவித்து விட்டனர். 
ஆற்றுப்பாலத்தில் பயணிக்கிறவர்கள் இந்த ஆற்றின் கரைகள் சுத்தமாக்கப்பட்டதை வியப்புடன் நின்று பார்த்தனர். தங்கள் பகுதிகளையும் இதைப் போன்று சுத்தமாக்கி விட உறுதி எடுத்துக் கொண்டு போயினர். வாகனங்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு சம்பன்குளம், செட்டிகுளம் , ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் போன்ற ஊர்களுக்குக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தனர். 
இதற்குப் பலன் இருந்தது.
அந்தப் பகுதிகளின் ஆற்றின் கரைகளெல்லாம் சுத்தமாயின.
பத்திரிகைகள், இந்த தன்னார்வத் தொண்டைப் பாராட்டிப் படங்களுடன் செய்திகள் வெளியிட்டன. இதைப் படித்தவர்கள், சிவசைலம் - கல்யாணிபுரம் பகுதியிலுள்ள கருணை ஆற்றைப்போல், தங்கள் ஊரின் வழியே ஓடும் ஆறுகளையும் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
ஊடகங்கள் இதை விரிவாக வெளியிட வெளியிட, தமிழக மெங்கும் ஆறுகளைப் பற்றிய விழிப்புணர்வு பரவியது. ஆரூரனைப் பேட்டிக் கண்ட தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளி பரப்ப, ஒளி பரப்ப, இந்த இயக்கம் நாட்டை விழிக்க வைத்துவிட்டது. 
ஆரூரன், கனவாகப் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தது தேவையற்றதாகிவிட்டது. இப்போது நனவாகப் பரிணமித்து விட்டதே! 
கருணை நதி மட்டுமா, நாட்டிலுள்ள நதிகளை எல்லாம் அல்லவா சுத்தம் பண்ணத் தொடங்கி விட்டனர். 
யாரோ ஒருவர், ஒரு நல்ல காரியத்தை துணிந்து செயல்படுத்த முனைந்து விட்டால், அவரைப் பின்பற்ற நிச்சயமாய் முனைவார்கள். 
தாமிரபரணிக்கு புஷ்கரத் திருவிழா நடத்துவதற்காக அந்த நதியைச் சுத்தம் செய்வது போல் ஒவ்வொரு நதிக்கும் புஷ்கரத் திருவிழா நடத்தலாம். அந்தந்த நதிக்கரையோர மக்கள், தத்தமது சொந்த முயற்சியினால் மும்முரமாகச் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.ஆரூரன் டில்லிக்குப் புறப்படும் போது மன நிறைவுடன் கிளம்பினார். 
ஊர்மக்கள் திரண்டு ஆழ்வார்குறிச்சி ரயில்வே நிலையத்திற்கு வந்து வழி அனுப்பினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com