தமிழகப் பெண்மணி கேரளத்தில் பஞ்சாயத்து தலைவர்...!
By | Published On : 29th September 2019 10:00 AM | Last Updated : 29th September 2019 04:06 PM | அ+அ அ- |

தமிழ்நாட்டைத் தாண்டிவிட்டால், அரசியல் பல அவதாரங்களை எடுக்கிறது. பல திருப்பங்களைச் சந்திக்கிறது. கேரளத்தில் வேறெந்த மலரும் மலருகிறதோ இல்லையோ, "இரட்டை இலை' துளிர் விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது. அதுவும் காங்கிரஸ் கூட்டணியின் உதவி ஒத்துழைப்புடன். அந்த வகையில்,தமிழகத்தை ஒட்டி இருக்கும் வண்டிப் பெரியார், பீர்மேடு, மூணார் பகுதிகளில் தமிழ் மக்கள் தொகை அதிகம். அதனால், தமிழக அரசியல் மணம் பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் தருணங்களில் எதிரொலிக்கும். அதிமுகவில் இருக்கும் கேரள தமிழ் உறுப்பினர்கள் கேரள பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் யாரும் பஞ்சாயத்து தலைவர் ஆனதில்லை. காரணம் பெரும்பான்மை இல்லாததுதான்.
பிரவீணா. பீர்மேடு பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பிரவீணா சில நாட்களுக்கு முன்பாக பீர்மேடு பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பீர்மேடு பஞ்சாயத்தின் தலைவர் ரஜனி விநோத் சி.பி.எம். கட்சியைச் சார்ந்தவர். அவர் மீது காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பதவி இழக்கச் செய்தனர். காலியான அந்தப் பதவிக்கு பிரவீணாவை பஞ்சாயத்துத் தலைவராக காங்கிரஸ் கூட்டணி தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது.
பதினைந்து உறுப்பினர்கள் அடங்கிய பஞ்சாயத்து நிர்வாகக் குழுவில் இடது கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணிகளுக்குத் தலா ஏழு உறுப்பினர்கள். அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஓர் உறுப்பினர் பிரவீணா. அதனால், ஒரே ஒரு உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்றாலும்.. பரவாயில்லை... பிரவீணாவையே பீர்மேடு பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுப்போம். இடது கூட்டணியை பீர்மேடு பஞ்சாயத்து நிர்வாகத்திலிருந்து விலக்கி நிறுத்துவோம்' என்ற முடிவில் அதிமுகவைச் சேர்ந்த பிரவீணாவை காங்கிரஸ் கூட்டணி பஞ்சாயத்து தலைவராக்கியுள்ளது.
கேரளத்தில் அதிமுக உறுப்பினர் ஒருவர் அரசியல் நிர்வாகப் பொறுப்பிற்கு வருவது, அது பஞ்சாயத்தாக இருந்தாலும், இதுதான் முதல் முறை. அதைவிட தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி கேரளத்தில் பஞ்சாயத்து தலைவராக முதன் முதலாக வந்திருப்பது சாதனைதானே!
- பரிணாமன்