களத்துக்கடை கருத்தையா

கருத்தையா முகம் வாடிப்போயிருந்தார். ஏதோ ஒரு சிந்தனையில் அவர் இருப்பதுபோல் தெரிந்தது.
களத்துக்கடை கருத்தையா

கருத்தையா முகம் வாடிப்போயிருந்தார். ஏதோ ஒரு சிந்தனையில் அவர் இருப்பதுபோல் தெரிந்தது. பலமுறை அவரை அந்த இடத்தில் நான் பார்த்திருக்கிறேன். இப்படி அவர் முகம் வாடியிருந்ததை ஒருநாளும் பார்த்ததில்லை. இன்றுதான் பார்க்கிறேன். 
கருத்தையா என்று கேட்டால், "எந்த கருத்தையா?" என்றுதான் ஊருக்குள் கேட்பார்கள். அவ்வளவு கருத்தையாக்கள் அந்த ஊரில். ஆனால் களத்துக்கடை கருத்தையா என்று கேட்டால், " வடகாட்டு வயலுக்குப் போகிற வழியில பாண்டியபுரத்தைத் தாண்டி இருக்கிற கொக்கு தென்னமரத்துக் களத்துக் கடையில் இருப்பார்" என்று கரிசல்பட்டி சின்ன பையன் கூடச் சொல்லிவிடுவான். அந்த அளவுக்குக் களத்துக்கடை அவரோடு ஒட்டிப் போயிருந்தது. கரிசல்பட்டிதான் அவருடைய சொந்த ஊர். அங்குதான் அவருடைய வீடும் இருந்தது. ஆனாலும் கொக்கு தென்னமரத்துக் களத்துமேடுதான் அவருடைய வாசஸ்தலம். அங்குதான் அவரைப் பெரும்பாலும் பார்க்க முடியும். அங்கே அவர் களத்துக்கடை போட்டிருந்தார். அதனால் களத்துக்கடை கருத்தையா என்று ஊருக்குள் பிரபலமாகிப்போனார். 
"பிரபலம் ஆனார்' என்று சொன்னதும் ஏதோ ஒரு பெரிய பல்பொருள் பேரங்காடி வைத்திருக்கிறார் என்று நினைத்துவிட வேண்டாம். பத்துக்கு எட்டு பரப்பினுள் அமைந்த ஓலைக்குடிசைதான் அவருடைய கடை. அதற்குள் ஒரு பாய்லர் இருக்கும். எப்போதாவது யாராவது வந்து கேட்டால் காபியோ, சாயாவோ கொடுப்பதற்கு. கொஞ்சம் தள்ளி ரெண்டு மண் அடுப்பு எரியும். ஒண்ணு நிலக்கடலை வறுக்க. இன்னொண்ணு பெரும்பயிறு அவிக்க. ஒரு பழத்தார் தொங்கும். கொஞ்சம் பீடி, சுருட்டு, ரெண்டு சிகரெட் பாக்கெட் இவ்வளவுதான் அவருடைய கடைச்சரக்கு. அவர் மட்டும் உட்கார ஒரு பழைய மடக்கு நாற்காலி இருக்கும். எப்போதாவது அதில் உட்கார்ந்திருப்பார். மற்றபடி ஒரு பெஞ்சோ, நாற்காலியோ எதுவும் இருக்காது. வாடிக்கையாளர்கள் எல்லாம் நின்றுகொண்டே வேண்டியதை வாங்கிக் கொறித்துக் கொண்டு, குடித்துக் கொண்டு போய்விடுவார்கள். கொக்குத் தென்ன மரக்களத்தில் களம் வைப்பவர்களும் அந்தப் பக்கம் வயலுக்கு வருபவர்களும்தான் அவருடைய வாடிக்கையாளர்கள். இந்த வியாபாரத்தை வைத்துத்தான் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 
கொக்குத் தென்னமரக்களம் கரிசல்பட்டி ஊரிலிருந்து வடக்கே நாலு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. அது ஒரு மேட்டுப் பகுதி. ஐம்பது அறுபது தென்னை மரங்கள் உள்ள பெரும் பரப்பு. அதில் இருந்த தென்னை மரங்கள். எல்லாம் வானத்தைத் தொடுவதுபோல் வளர்ந்திருந்ததாலோ அல்லது அவற்றில் கொக்குகள் நிறைய அடைவதாலோ என்னவோ தெரியவில்லை, அது கொக்குத் தென்னை மரம் ஆகிவிட்டது. அந்தக் காலத்தில் யாரோ சொல்லி வைக்க அதுவே வழக்கமாகிவிட்டது. கொஞ்சம் தள்ளி கட்ட தென்னமரம் என்று ஒருதோப்பும் இருந்தது கூடக் காரணமாகலாம். காரணம் என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்தக் கொக்கு தென்னமரத்துக்குள்ளே களம். அதனால் வந்த காரணப் பெயர் கொக்கு தென்னைமரக் களம். மற்றபடி அதைச் சுற்றி விரிந்த வயல்வெளி. தென்னமரக்களத்தின் மேட்டிலிருந்து ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேல் என்று நெல்பயிர் கண்ணுக்குத் தெரியும். சித்திரை, வைகாசிக் கோடையில் பார்த்தால் உளுந்து, எள்ளு, பெரும்பயிறு, சிறுபயிறு என்று தானியப் பயிர்கள் அசைந்தாடிக் கொண்டிருக்கும். இப்படி ஆடையிலும் கோடையிலும் பச்சைப் பசேல் நிறம் காட்டும் வயல் பரப்பு. அவ்வளவு செழித்த நஞ்சை பூமி. ரெண்டாயிரம் ஏக்கர் இருக்குமோ மூவாயிரம் ஏக்கர் இருக்குமோ தெரியல. ஆனால் தை மாதம் நெல் அறுப்பு தொடங்கினால் மாசி மாதம் கடைசிவரை அறுப்பு நடந்துகொண்டே இருக்கும். அவ்வளவு பரந்த வயல்காடு. அதில் முக்கால்வாசி வயல்களில் விளைந்த கதிர் அடிப்பு இந்த கொக்குத் தென்னைமரக் களத்தில்தான் நடக்கும் என்றால் கொக்கு தென்னைமரக் களத்தின் பெருமையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பெருமைவாய்ந்த களத்தில்தான் கருத்தையாவின் களத்துக்கடை இருந்தது. 
கருத்தையாவின் களத்துக்கடை நெல் அறுவடை நடக்கும் போது மட்டுமே கொக்குத் தென்னமரக் களத்து மேட்டில் இருக்கும் ஒரு பருவகாலக் கடையாகத்தான் முதலில் இருந்ததாம். திருவிழாக்காலத்தில் தோன்றும் திடீர்க்கடைகள் போல்தான் அப்பப்போ வந்து திறந்து நடத்திக் கொள்வாராம். அதற்குப் பிறகுதான் நிலையான கடையாகத் திறக்கத் தொடங்கினாராம். இதை அவரே ஒரு தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் அந்தக் களம் அவருக்குச் சொந்தமான இடம் இல்லை. காரை வீட்டு ராஜமணிக்குச் சொந்தம். கருத்தையா அவருக்கு நில வாடகை கொடுத்து வந்தார்.அந்தக் கொக்குத்தென்னமரக் களத்துக்கடை வாசலில்தான் முகவாட்டத்தோடு அவரைப் பார்த்தேன்.
"என்ன தாத்தா! முகத்தைத் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கீங்க?''"அவரை நெருங்கி விளையாட்டாகக் கேட்டேன். அவரை நான் தாத்தா என்றுதான் சொல்வேன். கொஞ்சம் விளையாட்டாகவும் அவரிடம் பேசுவேன். அவரும் என்னிடம் கேலியும் கிண்டலுமாக தமாஷ் பண்ணுவார்.
"காலம் போற போக்கில முகத்த தொங்கப் போடாம தூக்கியா வைக்க முடியும்?''
அவருடைய பதிலில் ஒரு விரக்தி இருந்தது. ஒரு நாளும் அப்படிப் பேசுபவரில்லை அவர். உண்மையில் ஏதோ ஒரு பிரச்னையில்தான் இருக்கிறார் என்பது புரிந்தது. 
"என்ன தாத்தா! எதுவும் பிரச்னையா? ஏதோ வேதனையில் பேசுற மாதிரி இருக்கு'' 
"ஆமா! பிரச்னைதான். வயித்துப் பிரச்னை. அதைப் பத்திதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்''
"இந்த வயசில அப்படி என்ன வந்திட்டு வயித்தில?''"நான் கொஞ்சம் விளையாட்டாகக் கேட்டேன். 
"வயித்துல எது வந்திருந்தாலும் விதின்னு செத்துட்டுப் போகலாம். ஆனால் வயித்துப் பிழைப்பில அல்லவா இடி விழுந்துகிட்டு இருக்கு''" அவர் பேச்சில் ஏதோ ஒரு ஏமாற்றத்தால் வந்த கோபம் தென்பட்டது.
"அப்படி என்னதான் நடந்துட்டுன்னு கோபம் வருது உங்களுக்கு?''" தாத்தாவின் மனத்தில் ஏதோ ஒரு ஏக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு, கொஞ்சம் இரக்கத்தோடு கேட்டேன்.
"அப்படி என்னதான் நடக்கல? எல்லாம் நடந்துகிட்டுதான் இருக்கு. அதோ அங்க நடக்குதுல்லா அதைத்தான் சொன்னேன்'' இப்படிச் சொல்லிக்கொண்டே களத்தின் கிழக்குப்பக்கம் இருந்த வயல்காட்டை நோக்கிக் கையை நீட்டினார். 
அவர் கைநீட்டிய பக்கமாக நான் பார்த்தேன். அங்கே கொஞ்சம் தள்ளி, நெல் அறுக்கும் இயந்திரங்கள் இரண்டு வயலை அறுத்துக் கொண்டிருந்தன. வேறு ஒன்றும் தெரியவில்லை. அதனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல், "நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை'' என்று சொல்லிக்கொண்டே முகத்தை அவரின் பக்கம் திருப்பினேன்.
"உனக்கு எப்படிப் புரியும்? அங்கே ரெண்டு எருமை உழப்புதுல்லா. அதைச் சொன்னேன்''
அறுவடை இயந்திரத்தை எருமை என்று அவர் சொல்கிறார் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது. ஆனால் ஏன் அப்படிச் சொல்கிறார் ? என்று தெரியவில்லை. விழித்தேன்.
"என்ன முழிக்கிறாய்? இந்த எருமை மாடு வந்தாலும் வந்துச்சு, என்னுடைய பிழைப்பும் போச்சு தெரியுமா? உனக்கு என்ன தெரியும்? உங்க அய்யா மாதிரி ஆள்க கிட்ட கேட்டுப்பார். அந்த ஆட்களுக்குத்தான் தெரியும். ஒருகாலத்துல கொக்குத் தென்னமரக்களமும் இந்தக் கருத்தையாவோட களத்துக் கடையும் எப்படி இருந்துச்சு தெரியுமா?'' " என்று சொல்லிக் கொண்டு அவரே தம் பழைய காலத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். 
"அப்போ எல்லாம் வருஷத்துக்கு ரெண்டு பூ நெல் விளையும்''" இப்படி அவர் சொன்னதும்,
"நம்ம ஊரிலா? உண்மையா? இப்போ ஒரு போகம் கூட தக்கிமுக்கிதான விளையுது'' நான் இடையில் பேசினேன்.
"அதாம்ல உனக்கு எங்கே தெரியப் போவுது? நம்ம ஊரிலதான் ரெண்டு பூ நெல் வெளஞ்சது. நான் என்ன வேற ஊரைப்பத்தியா சொல்லப் போறேன். நம்ம ஊரிலதான் ரெண்டு பூ வெளஞ்சது" இப்போ ரெண்டு பூ வெளஞ்சது என்பதில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தார். 
"ஆச்சரியமாயிருக்கே" 
"ஆச்சரியப் படுவதற்கு என்ன இருக்கு. அதுதான் உண்மை. அப்பல்லாம் தண்ணி செழிப்பா இருந்துச்சு. ஆட்களும் கஷ்டப்பட்டு உழைச்சாங்க''
"இப்பவும் தண்ணி செழிப்பா கிடைக்கு. மனுஷங்களும் இஷ்டப்பட்டுக் குடிக்கிறாங்க'' நான் சும்மா சொல்லி வைத்தேன்.
"ரெண்டு பூ வெளஞ்ச அந்தக்காலத்தில வருசத்துக்கு ரெண்டு தடவ இந்தக் களத்தில கடைபோடுவேன். முதல்ல இப்படிக் குடிசையெல்லாம் போடல. ஒரு ஓலப் பெட்டியில, கொஞ்சம் வறுத்த நெலக்கடலையும் அவிச்ச பெரும்பயிரும்தான் கொண்டுவருவேன். காலையில பத்துமணிக்கு வந்தால் மதியம் ஒரு மணிக்குள்ள எல்லாம் வித்திடும். அப்புறம் வீட்டில போய், சாப்பிட்டுவிட்டு மூணு மணிக்குப் போல பழையபடி வருவேன். அஞ்சு ஆறு மணிக்குள்ள வியாபாரம் முடிஞ்சிடும். பெறகு மறுநாள் தான் வியாபாரம். இப்படி வருஷத்துக்கு ரெண்டு தடவ மொத்தம் நாலு மாசம் வீட்டுக்கும் களத்துக்குமா அலைவேன். அப்புறம்தான் இப்படி அங்கேயும் இங்கேயும் அலைவதைவிட ஒரு குடிசை போட்டு இங்கேயே தங்கிவிட்டால் என்னன்னு யோசிச்சேன். யோசிச்சபடியே தங்கிவிட்டேன். வீட்டில எட்டு மாசம் களத்துக்காட்டுல நாலு மாசம்னு இருந்த என் வாழ்க்கையை ஒருகட்டத்தில வருஷம் முழுதும் களத்திலே தங்கும்படி ஆக்கிட்டேன். ஆமா... கடையை வருஷம் பூராவும் திறக்க ஆரம்பித்தேன்''
"சரி... அப்படி ஒருநாளைக்கு எவ்வளவு ரூபாய்க்குத்தான் விற்கும்?''
"ரூபாயாவது மண்ணாங்கட்டியாவது. ரூபாயை யார் கண்ணில பார்த்தது. எல்லாம் பண்டமாற்றுதான். நெல்லுக்குத்தான் வியாபாரம். வீட்டிலிருந்து யாரும் பைசாவை முடிஞ்சுட்டு களத்துக்காட்டுக்கு வர்றதில்ல. வயல்ல வெளஞ்சிகிடக்கிற நெல்ல நம்பித்தான் வருவாங்க. காப்படி நெல்லுக்கு அரைக்காப்படி கடலை என்பது கணக்கு. இப்படி பண்டத்துக்கு ஏத்த மாதிரி நெல்லு வாங்கிக்கிடுவேன். என்னைப் போல எல்லாக் களத்துக் கடைக்காரங்களும் தங்களுக்குக் கட்டுப்படியான ஒரு கணக்கு வைத்திருப்பாங்க. அதன்படி வியாபாரம் பார்ப்பாங்க'' 
"இந்த வியாபாரத்தை வைத்து உங்களால பிழைக்க முடிந்ததா தாத்தா?''
"முடிஞ்சதான்னா கேட்ட? முடிஞ்சது. முப்பத்தஞ்சு வருஷமா இந்த களத்துக்கடையை வைத்துத்தானே என் பிழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கேன். வியாபாரத்துல மட்டுமில்ல. களத்து வாடகையாகவும் நெல்லு கிடைக்கும். ஒரு சூட்டுக்கு இவ்வளவு நெல்லுன்னு வயல்காரங்க வாடகை தந்திடுவாங்க. வயல் அளவைப் பொறுத்து நெல்லு கிடைக்கும்''
"வயல் அளவை எல்லோரும் சரியாச் சொல்வாங்களா?''
"எல்லோரும் சரியாத்தான் சொல்லுவாங்க. கொறைச்சியெல்லாம் சொல்லமாட்டாங்க. சம்சாரிகள் ஏமாத்தமாட்டாங்க தம்பி. இந்த வட்டாரத்தில யார் யாருக்கு எவ்வளவு வெதப்பாடு இருக்குன்னு நம்ம ஊரு கணக்குப் பிள்ளைக்குத் தெரியுமோ தெரியாதோ? எனக்கு நல்லா தெரியும். அதனால யாரும் ஏமாத்தமாட்டாங்க. என்னை ஏமாத்தவும் முடியாது. நெல்லு மட்டுமில்ல. சூடு அடிக்க வர்ற மாடுகள் போடுற சாணியும் களத்துக்காரங்களுக்குத்தான். எப்படியும் ரெண்டுமூணு வண்டி சாணி சேர்ந்திடும். அது கூடுதல் வருமானம். அது மட்டுமில்லப்பா. ஒவ்வொரு வயல்காரங்கிட்டயும் ஒரு கட்டு வைக்கோல் கட்டிக்கொள்வேன். இப்படி பல லாபம் இருக்கும். இப்படிப் பட்ட எம்பொழப்பில் மண்ணள்ளிப் போட்ட மாதிரி இந்த மெஷின் வந்து சேர்ந்திடிச்சி''" சொல்லிக்கொண்டே தன் வலது கையைத் தூரத்தில் தெரிந்த அறுவடை இயந்திரத்தை நோக்கி நீட்டினார். 
"இனிமேல் நாம என்ன பண்ணப் போறோம். எப்படிப் பிழைக்கப் போறோம்னுதான் கவலைப்பட்டுகிட்டு இருக்கேன்''
-" இதைச் சொல்லும்போது அவருடைய குரல் கம்மி, கண்களில் நீர் திரண்டது. 
"தாத்தா... உங்கள் ஒருத்தருடைய வாழ்க்கை பாதிக்கிறது என்பதற்காக ஊருக்கு நல்லது வேண்டாம்னு சொல்லலாமா?''
"என் ஒருத்தனுடைய வாழ்க்கை மட்டும் பாதிக்கல தம்பி. எவ்வளவோ பேருடைய வாழ்க்கை இருட்டாகியிருக்கு. முன்னால எல்லாம் அறுப்பு நடக்கும் போது இந்தக் களம் எவ்வளவு கலகலப்பா இருக்கும் தெரியுமா? ஒரு நாளைக்கு அஞ்சு சூடு விழும் இந்தக் களத்தில. அஞ்சு முழு ஆம்புள நின்னு கதிர் அடிப்பான். கதிர் எடுத்துக் கொடுக்க ஆளுக்கொரு கையாள். கேலிப் பேச்சு, முந்தின நாள் பார்த்த சினிமாப் பாட்டு, வசனம், சிரிப்புன்னு ஒரே ஆரவாரமா இருக்கும். நம்ம ஊரில மட்டும் நாலைந்து கூறோடிகள் இருந்தாங்க. அதுபோக கூட்டம்புளி, போடம்மாள்புரம்னு பக்கத்து ஊர்லேயும் பல கூறோடிகள்''
"கூறோடியா? அப்படின்னா யாரு?'' அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்துக் கேட்டேன். 
"அதான் தம்பி தலைவர்...கேப்டன். அவர்தான் ஆள்களைக் கூட்டிக்கிட்டு வருபவர். உப்பளத்துக்கு ஆள் கூட்டிட்டுப் போற தலைவரைக் கங்காணின்னு சொல்றது போல நெல் அறுக்க ஆள் கூட்டிட்டு வர்ற தலைவரைக் கூறோடின்னு சொல்வோம். அவர்தான் ஆளுக்குத் தக்கபடி அறுக்க வேண்டிய பகுதிய பங்கு வச்சு கொடுப்பார். ஒவ்வொரு கூறோடி கையிலும் ஆம்பிளையும் பொம்பிளையுமா இருபது, இருபத்தைந்து ஆட்கள் இருப்பாங்க. ஆளுங்கள வேலை செய்யுற அளவுக்கு ஏற்ப முழு ஆள், முக்கால் ஆள், அரையாள்னு பிரிச்சுக்கிடுவாங்க. இப்படி சிறுசும் பெருசுமா உள்ளவங்க மொத்தமா வேலைசெய்யும்போது பார்க்க எப்படி இருக்கும் தெரியுமா? " 
கதிர் கட்டுகள் வந்து விழுந்துகொண்டே இருக்கும். வந்து விழவிழ அடித்து நெல்லு அம்பாரமா குவியும். வைக்கோல் சூடு மலை போல உயர்வது அழகா இருக்கும். நெல்லுலதான் எத்தனை பிரிவு? கொட்டாரஞ்சம்பா, பொன்னுருவி, ஈக்குச்சம்பா, பனைமரச்சம்பா, பொனக்குளம், சிறுமணி அப்பப்பா! அதுக்குத்தான் எத்தனை பெயர்கள். அள்ளி கண்ணுல ஒத்திக்கிடலாம் போல மணிமணியாய் சிரிக்கும். அதை ராகம்போட்டு கூறோடி அளக்கும்போது கேட்டுகிட்டே இருக்கச் சொல்லும். இன்னைக்கு களத்துமேட்டுக்கு ஒருகட்டு கதிர் வருதான்னு பாரு''" சொல்லிவிட்டு என்னைப்பார்த்தார். 
நான் பேசாமல் இருந்ததைப் பார்த்து, அவரே தொடர்ந்தார்.
"வரலை. ஒருகட்டு கதிர்கூட களத்துமேட்டுக்கு வரல. நீ பார்த்துகிட்டுதான இருக்க. டிராக்டர்விட்டு அடிக்கும்போதுகூட களத்துக்கு கதிர்கட்டு வரும். இப்போ இந்த யானை வந்த பிறகு ஒரு கட்டு கதிர் கூட களத்துமேடு வருவதில்லை. எல்லாம் யானைக்காலில் மிதிபட்டு நாசமா போகுது'' 
அறுவடை இயந்திரத்தை எருமை என்று முதலில் சொன்னவர் இப்போது யானை என்று சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்தது. 
சிரிப்பை அடக்கிக் கொண்டு,"அவ்வளவு தூரத்தில் இருந்து கழுத்து ஓடிய சுமக்கிற கஷ்டம் மனுசனுக்கு இல்லாமல் இந்த யானைதான பண்ணியிருக்கு. இது நல்லதுதானே? " என்றேன். 
"எளியவன் வெள்ளாம களம் வந்து சேராதுன்னு ஒரு சொலவடை உண்டு. கேள்விப் பட்டிருக்கியா? 
அப்படின்னா என்ன அர்த்தம்? கஷ்டப்படாமல் விவசாயம் செய்ய முடியாதுன்னு அர்த்தம். விவசாயத்துல ரொம்ப சிரமம் இருக்குனு அர்த்தம். அதைத் தாங்குகிறவன்தான் விவசாயி. வயல்ல வெளஞ்சத களத்துக்குக் கொண்டுவந்து அடித்து நல்லா பொலிவுட்டு தூத்தி சுத்தமாக்கி வீட்டுக்கு எடுத்துட்டுப் போகணும்ங்ற அர்த்தத்திலதான் அப்படி சொல்லியிருக்காங்க... இன்னக்கி அப்படி நடக்குதா? சாவியும் சண்டுமா அள்ளி கொட்டிடுது. சரி!
அதாவது நெல்லு வந்து சேருதுன்னு விட்டுட்டு போவோம். இந்த வைக்கோல் வந்து உருப்படியா சேருதான்னு பாரு. மாடு திங்க முடியாத குப்பையால்லா நசுங்கி போவுது. முன்பெல்லாம் வைக்கோல் எவ்வளவு வாசமா இருக்கும் தெரியுமா? சூடு அடிக்கும்போது சுத்திவரும் மாடுகள் ஆவு ஆவுன்னு திங்கும் தெரியுமா? நமக்கு மட்டும் சாப்பாடு கிடைச்சா போதுமா? நாம வளர்க்கிற மாட்டுக்கு இரை வேணாமா? முன்னாலயெல்லாம் களத்துமேட்டுல இருந்த சூடும் போச்சு வைக்கோல் வாசமும் போச்சு தெரியுமா?"
"விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காத இந்தக் காலத்தில இந்த மெஷின் வந்தது நல்லது தான. என்ன இருந்தாலும் மனுசனுக்குக் கஷ்டமில்லாமல் சீக்கிரமா வேலை
முடிஞ்சிடுதில்லா'' என்றேன்.
"ஆட்கள் தட்டுப்பாடுங்றது உண்மைதான். அதை நான் ஒத்துக்கிறேன். இலவசத்த அள்ளிக் கொடுத்து மனுஷங்கள சோம்பேறியாக்கிட்டு அரசாங்கம். ஆனால் என்னைக்காவது ஒருநாள் அவங்க உழைக்க வந்துதான ஆகணும்? அது ஒரு பெரிய பிரச்னை இல்ல. நம்ம நாட்டுக்கு இந்த மெஷின் தேவையில்லாத ஒண்ணு'' 
"அது சரி! காலையில இருந்து சாயங்காலம்வரை மனுஷங்க பட்ட கஷ்டம் இப்போ இல்லாமல் இந்த மெஷின் ஆக்கிடுச்சுல்லா'' 
"கஷ்டம்தான். அது உண்மைதான். விவசாயமே கஷ்டமான வேலைதான். அதுவும் அறுப்பு வேலை கஷ்டமானதுதான். காலையில வயல்ல இறங்கினால் அறுத்து, கட்டி, சுமந்து, களம்கொண்டு சேர்த்து, அடித்து, பொலிவுட்டு, தூத்தி, மணியாக்கி சாக்குல அளந்து போட சாயங்காலம் ஐந்து, ஆறு மணி ஆகிவிடும். கஷ்டம்தான்.இந்தக் கஷ்டம் எல்லாம் "கொத்து' வாங்கும்போது காணாமல் போய்விடும் தெரியுமா? கொத்துன்னா மம்பட்டி கொத்து, அரிவாள் கொத்துன்னு நெனைச்சிடாத. நீ அப்படி நெனைச்சாலும் நெனைப்பே. கொத்துன்னா கூலி.அறுப்பு ஆளுக்குக் கொடுக்கிற கூலிதான் கொத்து. அதுவும் நெல்லுதான். பணமில்ல. ஒருமரக்கால் வயல் அறுக்க இவ்வளவு நெல் தரணும்னு கூலி பேசிதான் கூறோடி அறுக்கச் சம்மதிப்பார். அதுவும் வயலின் வெளச்சலைப் பார்த்த பிறகுதான் பேசுவார். அந்தக் கொத்தை ஆளாளுக்குப் பகிர்ந்து கொடுப்பார். இப்படி ஒரு விவசாயியின் விளைச்சல் பலபேருக்குக் கிடைத்தது. இந்த மெஷின் நெல் வேண்டாம், பணம் தாங்கன்னுலா கேக்குது. அதுவும் வயலையே பாராமல் மணிக்கு ரெண்டாயிரம் தா மூவாயிரம் தான்னுலா புடுங்குது. முன்பெல்லாம் அறுப்புக்கூலி உழைப்பாளிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இந்த மிஷின் யாரோ ஒரு முதலாளிக்கும் எவனோ ஒரு இடைத்தரகருக்கும் அல்லவா கொண்டு சேர்க்கிறது?'' 
களத்துக்கடை கருத்தையா தாத்தா பேசப் பேச, அவர் முகத்தில் வாட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. அவர் முகவாட்டத்திலும் ஒரு நியாயம் இருப்பதாக எனக்குப்பட்டது. இருந்தாலும் நெல் அறுக்கும் இயந்திரம் என் வயலுக்கு வந்துவிட்டதை அறிந்து நடையைக் கட்டினேன்.

தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி - 2019
ரூ.1,250 ஆறுதல் பரிசு பெறும் சிறுகதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com