பசுமைத் தூதுவராக ஐந்தாம் வகுப்பு மாணவி!

பசுமைத் தூதுவராக ஐந்தாம் வகுப்பு மாணவி!

"மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்', "மரத்தை வளர்த்து ஓசோனைப் பாதுகாப்போம்' என்ற முழக்கங்கள் ஒரு புறம். நவீனமயமாக்கலுக்காக மரங்களை வெட்டும் போக்கு மற்றொரு புறம் என

"மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்', "மரத்தை வளர்த்து ஓசோனைப் பாதுகாப்போம்' என்ற முழக்கங்கள் ஒரு புறம். நவீனமயமாக்கலுக்காக மரங்களை வெட்டும் போக்கு மற்றொரு புறம் என நாடு முழுவதும் ஏதோ ஒரு பகுதியில் மரங்கள் நடப்படுவதும், எங்கோ ஒரு பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
முன்பெல்லாம் சமையல் பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வந்தன. ஆனால், சமையல் எரிவாயுவின் வரவால் இது கணிசமாகக் குறைந்து விட்டது. பெரிய நிறுவனங்களும் தற்போது பேப்பரால் தயாராகும் பில் வகைகளை குறைத்து இ-பில்லிங் முறையைச் செயல்படுத்தி வருகின்றன. இப்படி ஒவ்வொருவரும் அவரவர் நிலைக்கேற்ப மரங்களின் பயன்பாட்டினை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
சாலை விரிவாக்கம், புதிய தொழிற்சாலை நிறுவுதல், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுதல், மரச்சாமான்கள் செய்தல் உள்ளிட்ட எண்ணற்ற காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வந்தாலும் கூட, மரங்களின் அத்தியாவசியம் குறித்த புரிதல் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதன் விளைவாக வெட்டப்பட்டு வரும் மரங்களுக்கு இணையாக புதிய மரங்கள் நடப்பட்டு வருகின்றன. அரசும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் இப்போது மரம் நடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. வீதி தோறும் மரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தேறி வருகின்றன. அதுவும் தற்போது விதைப்பந்து முறையில் மரம் நடுதல் பிரபலமடைந்து வருகிறது. 
மரம் குறித்த விழிப்புணர்வு சிறுவர், சிறுமிகளிடமும் அதிகரித்து வருவது பாராட்டத்தக்கது. மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து கதறி அழுத 9 வயது சிறுமி ஒருவர், பசுமைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார், மணிப்பூர் மாநிலத்தில். 
மணிப்பூர் மாநிலம், கக்சிங் மாவட்டம், ஹியாங்லாம் மக்கா லேக்காய் பகுதியைச் சேர்ந்தவர் வாலென்டினா எலங்பாம் (Valentina Elangbam). 5 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், தன் வீட்டின் அருகே கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2 குல்மோகர் மரங்களை நட்டுள்ளார். நடுவதுடன் நின்று விடாமல், தினமும் தண்ணீர் ஊற்றி அதைப் பராமரித்தும் வந்திருக்கிறார். அவருக்கு அந்த மரங்களுடன் பேசுவது பிடித்தமான விஷயமாக இருந்துள்ளது. இந்நிலையில், அந்த மரங்களை ஒட்டியுள்ள ஆற்றினைச் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, சிறுமி வளர்த்த இரண்டு மரங்களும் வெட்டப்பட்டன. 
மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்த அந்தத் சிறுமிக்கு தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. இதனால் சாப்பிடக் கூட பிடிக்காமல் வீட்டில் இருந்து கண்ணீர் வடித்துள்ளார். மரங்களுக்காக அவர் தேம்பியழும் காட்சியைப் பதிவு செய்த அவரது உறவினர்கள் சமூகவலைதளங்களில் அதைப் பதிவேற்றம் செய்தனர். 
இந்த வீடியோ வைரலாகியது. ஏராளமானோர் அவரைப் பாராட்டியதுடன், மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இந்நிலையில், சிறுமியின் வீடியோ அம்மாநில முதல்வர் மற்றும் வனத்துறை அமைச்சரின் பார்வையிலும் பட்டது. இதைத் தொடர்ந்து அந்த சிறுமி வசிக்கும் பகுதியில் மரக்கன்றுகளை நடுவதற்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். உடனடியாக மரம் வெட்டப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், 500 மரக்கன்றுகளை அப்பகுதியில் நடவும் அரசு உத்தரவிட்டது.அனைத்தையும் தாண்டி மரங்களின் மீது தீராத காதல் கொண்ட அந்த சிறுமியை மணிப்பூர் மாநில பசுமைத் தூதுவராக அம்மாநில அரசு நியமித்து கெüரவப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
உண்மையான அன்பிற்கும், உண்மையான கண்ணீருக்கும் என்றும் மரியாதை உண்டு. மரங்களின் மீது கொண்ட உண்மையான அன்பினால் உருவான சிறுமியின் கண்ணீர் மேலும் பல மரங்களை வளர்ப்பதற்கு உதவியிருக்கிறது. 
சிறுமியின் வேதனையை தீர்த்து வைத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய மரத்தின் மீதான பாசத்தைப் பாராட்டி மரியாதை தந்த மாநில அரசும் 
பாராட்டுக்குரியதுதான். 
-வி. குமார முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com