அப்பாவின் சைக்கிள்

""இந்த நேரத்துக்கு யாரு நம்ம வீட்டுக்கு''  என்று அலுத்துக் கொண்டபடி அம்மா தான் எழுந்து போனாள். போன வேகத்தில் பதறியடித்தபடி என்னிடம் ஓடிவந்து, ”""ஒரு சின்னப் பொண்ணு இடுப்புல கைக்குழந்தையோட வந்து நின்னு
அப்பாவின் சைக்கிள்

""இந்த நேரத்துக்கு யாரு நம்ம வீட்டுக்கு'' என்று அலுத்துக் கொண்டபடி அம்மா தான் எழுந்து போனாள். போன வேகத்தில் பதறியடித்தபடி என்னிடம் ஓடிவந்து, ”""ஒரு சின்னப் பொண்ணு இடுப்புல கைக்குழந்தையோட வந்து நின்னுக்கிட்டு உன்னைக் கேட்குறாடா கணேசா''” என்றாள்.

அம்மா கேட்ட விதத்திலேயே நான் ஏதோ ஒரு பெண்ணிடம் தகாத உறவு வைத்திருந்து அவள் இப்பொழுது குழந்தையுடன் என்னைத் தேடி வந்திருக்கிறாளோ என்கிற சந்தேகம் துருத்திக் கொண்டு நின்றது. அகால வேளையில் ஒரு பெண் அதுவும் குழந்தையுடன் எதற்கு என்னைத் தேடிக் கொண்டு வர வேண்டும்? எனக்குமே பயமாகத் தான் இருந்தது.

அவசரமாய் எழுந்து போய்ப் பார்த்தேன். வாசலில் சுந்தரவள்ளி இடுப்பில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். ”

""என்னங்க இந்த நேரத்துல?''” என்றேன் பதட்டமாய். ”""வீட்டுக்குள்ளாற வந்து சொல்லட்டுமா?''” என்றாள் தயங்கியபடி.

""சரி வாங்க'' என்று வீட்டிற்குள் அழைத்துப் போனேன்.

வீட்டிற்குள் வந்ததும் வரவேற்பு அறையிலேயே குழந்தையை வெறும் தரையில் கிடத்திவிட்டு அம்மாவின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, “""என்னை நீங்கதான் காப்பாத்தணும்மா''” என்று அழத் தொடங்கினாள்.

""என்னம்மா இதெல்லாம்; நீ முதல்ல எழுந்திரும்மா'' ” என்று தூக்கி விட்டாள் அம்மா.

என்னிடம் திரும்பி, “""என்னடா நடக்குது இங்க? பெரிய வில்லங்கத்தை விலை குடுத்து வாங்கீட்டு வந்துருப்ப போலருக்கே''” என்றாள் கோபமாய். எனக்குமே குழப்பமாகத் தான் இருந்தது.

சுந்தரவள்ளியுடன் காவல் நிலையத்திற்குப் போவதற்காக சில நாட்கள் சேர்ந்து அலைந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நாளில் நாங்கள் தங்கி இருந்த வீட்டைக் கடக்க நேர்ந்த பொழுது இதுதான் எங்களின் வீடு என்றும் அம்மாவுடன் தான் தங்கி இருக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறேன். இப்படி அர்த்த ராத்திரியில் வந்து நிற்பாள் என்று ஒருநாளும் நினைத்ததில்லை.

சுந்தரவள்ளியின் வாழ்க்கையில் நானோ அல்லது என்னுடைய வாழ்க்கையில் அவளோ அறிமுகமாகிக் கொள்வதற்கு காரணமாக இருந்தது ஒரு சைக்கிள். அதுவும் என்னுடைய அப்பாவுடைய சைக்கிள்.

அப்பாவின் காலம் வரைக்கும் எங்களின் குடும்பத்தில் யாரும் சொந்தத்தில் வாகனம் எதையும் வாங்கி வைத்துக் கொண்டு உபயோகித்ததில்லை. எங்கு போவதென்றாலும் நடராஜா சர்வீஸில் தான்;அல்லது அரசாங்க பேருந்துகளில் தான்.

பத்து மைல் தொலைவில் வாழ்க்கைப்பட்டிருக்கும் அக்காவைப் பார்த்து வருவதற்கும் சலிக்காமல் நடந்து பழகிய அப்பா, நான் மூன்று மைல் தூரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குப் படிக்கப் போனதும், சைக்கிள் கடை வைத்திருந்த முனியாண்டி மாமாவிடம் சொல்லி வைத்து அவரும் பெல்லைத் தவிர எல்லா பாகங்களும் "லொட லொட' வென்று சத்தம் போடுகிற பழைய சைக்கிள் ஒன்றை மிகச் சல்லிசான விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தார். அதுதான் எங்கள் குடும்பத்தின் முதல் சொந்த வாகனம்.

ஆனால் அந்த பழைய சைக்கிளையும் அப்பா கொஞ்ச நாட்களிலேயே புதுசு போல் மாற்றி விட்டார். கையில் காசு புழங்கும் போதெல்லாம் சைக்கிளுக்கு பெயிண்ட் அடிப்பது, டைனமோ, வீல்களுக்குக் குஞ்சம், குஷன் வைத்த சீட் என்று ஒவ்வொன்றாக வாங்கி மாட்டிக் கொண்டிருந்தார்.

சைக்கிளை நான் தான் பாவித்தேன். ஆனால் அதைப் பராமரிப்பது அப்பா தான். வாரத்திற்கு ஒருமுறை என்னை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பது போலவே சைக்கிளுக்கும் எண்ணெய் குளியல் செய்து விடுவார். பழைய துணியை வைத்து சுத்தமாய்த் துடைத்து எப்போதும் பளபளவென்று வைத்திருப்பார்.

மேல்நிலைக் கல்வியை முடிப்பது வரைக்கும் சைக்கிளில் தான் பள்ளிக்குப் போய் வந்தேன். கல்லூரிப் படிப்பை நான் விடுதியில் தங்கி படிக்க நேர்ந்ததால் எனக்கும் சைக்கிளுக்குமான உறவு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு விட்டது. அதற்கப்புறம் அப்பா தான் சைக்கிளை உபயோகித்தார்.

அதுவும் அப்பா அம்மாவுடன் சைக்கிளில் கிளம்பினால் சைக்கிளுக்கு இறக்கை முளைத்து விடும். அம்மாவும் முகத்தில் பூசியிருக்கிற மஞ்சளையும் மீறிக்கொண்டு வெட்கம் ஒளிவீச, அப்பாவின் முதுகில் சாய்ந்தபடி பயணிப்பாள். சந்தோஷங்கள் சதிராடிய அழகான நாட்கள் அவை.

அப்பா அவருடைய சைக்கிளை ஒரு ரகசிய காதலியைப் போல் பேணினார் என்றால் அது மிகையில்லை. அவரைப் பொறுத்தவரை சைக்கிளும் ஓர் உயிருள்ள ஜீவன் தான். சைக்கிளும் அவரும் தனிமையில் உரையாடிக் கொள்வார்கள் என்று யாராவது துப்பறிந்து சொன்னால் அப்படியே நம்பி விடுவேன்.

ஆனால் நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வருவதற்குள் அப்பா இறந்து போனார். அப்பாவின் சைக்கிளும் அம்மாவும் மூலையில் முடங்கிப் போனார்கள்.

படித்து முடித்து சில காலத்திற்குப் பின்பு எனக்கு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. மேன்சன் சூழலும் ஹோட்டல் சாப்பாடும் ஒத்து வராததால், புறநகரொன்றில் வீடெடுத்து கிராமத்திலிருந்து அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்து என்னோடு தங்க வைத்துக்
கொண்டேன்.

நான் தங்கி இருந்த வீட்டிலிருந்து ரயிலடி நடந்து போகிற தூரத்தில் இல்லை. ஒரு சைக்கிள்இருந்தால் எளிதாக சமாளிக்கலாம் என்று தோன்றியது. அம்மா தான் ""ஊர்ல அப்பாவோட சைக்கிள் சும்மா தான கெடக்கு. எடுத்துட்டு வந்து பயன்படுத்திக்கோ'' என்றாள். அது சரியான யோசனையாகப் படவே உடனே கிளம்பிப் போய் சைக்கிளை எடுத்து வந்து விட்டேன்.

சைக்கிளை எங்கு நிறுத்திவிட்டு வேலைக்குப் போய் வருவது என்று தேடியபோது ஒரு கீற்றுக் கொட்டகை வேய்ந்த வாகன நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுத்தேன். முதல்நாள் சைக்கிள் நிறுத்தப் போனபோது அங்கு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

நெடுநெடுவென்று வளர்ந்து, சதைப்பிடிப்பே இல்லாத உடல்வாகுடன், மாந்தளிர் நிறத்தில் முகக்களையுடன் பார்ப்பதற்கு இலட்சணமாகவே இருந்தாள். சின்ன வயசுப் பெண் போலத்தான் தெரிந்தாள்.

அவளைக் காதலிக்கத் தொடங்கி விடலாமா? என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, ஓர் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று அழுதபடி தத்தக்க பித்தக்கா என்று ஓடிவர, ""என் செல்லம் அம்மாவைத் தேடுதா'' என்று கொஞ்சியபடி தூக்கிக் கொண்டாள். குழந்தை மாதிரி இருக்கிற இவளுக்கே குழந்தையா என்று ஆச்சரியமாகவும் என் காதலைத் துளிர்ப்பதற்கு முன்பேயே கருகச் செய்த விதியின் மீது கோபமாகவும் இருந்தது.

நான் சைக்கிள் நிறுத்துவது பற்றி அவளிடம் விசாரித்த போது, தினசரி வாடகை 3 ரூபாய் என்றும் இரவு சைக்கிளை எடுக்கவில்லை என்றால் அடுத்தநாள் காலையில் டபுள் வாடகை தர வேண்டும் என்றும் சொன்னாள். நான் சைக்கிளை நிறுத்திவிட்டு, "" டோக்கன் மாதிரி எதுவும் தருவீர்களா?'' என்று கேட்டேன்.

""அதெல்லாம் தேவையில்லை. சாயங்காலம் வந்து எடுத்துக்குங்க. யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. சைக்கிள எடுக்கும் போது வாடகை குடுத்தால் போதும்'' ” என்றும் சொன்னாள்.

தொடர்ந்து இரண்டு நாட்களாக அவளைப் பார்க்க முடியவில்லை. வாடகையைத் தருவதற்கு வழியும் தெரியவில்லை. சரி அவளைப் பார்க்கும் போது கொடுத்துக் கொள்ளலாம் என்று நான் பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். மூன்றாவது நாளும் ஷெட்டில் அவள் இல்லை. ஆனால் என்னுடைய சைக்கிள் செயின் போட்டுப் பூட்டப் பட்டிருந்தது.
சைக்கிள் ஷெட்டிற்கு எதிரில் இருந்த பெட்டிக் கடையில் விசாரித்தேன். “

""மாடியில தான் அவங்க வீடு. போய்ப் பாருங்க''” என்றார்.

அகலம் குறைந்த மிகவும் ஒடுக்கமான படிக்கட்டுகளின் வழி நான் மாடியேறிப் போனேன். வீடு திறந்து தான் கிடந்தது. வழக்கமாக ஷெட்டில் இருக்கிற பெண்ணும் ஓர் ஆணும் கடுமையான வார்த்தைகளில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் சண்டையை நிறுத்தி, ”""உனக்கென்னையா வேணும்? இங்க யாரும் அவுத்துப் போட்டு ஆடுறாங்களா, வேடிக்கை பார்க்க?''” என்றார் அங்கிருந்த ஆண் கோபமாய்.

""என்னோட சைக்கிள், செயின் போட்டுப் பூட்டியிருக்கு'' ” என்றேன் பயந்த குரலில்.

""நீங்க கீழ போயிருங்க ஸார்... நான் வர்றேன்'' ” என்று என்னை அனுப்பி வைத்தவள், அதிகம் காத்திருக்க வைக்காமல் உடனேயே வந்து விட்டாள். முகமெல்லாம் வீங்கி கண்ணீர் ஓடிய தடங்களும் இருந்தன.

""நீங்க வாடகையே தரல; அதான் பூட்டிட்டேன்''” என்று தன்னிலை விளக்கம் தந்தபடி சைக்கிளைத் திறந்து விட்டாள்.

""நான் சைக்கிள எடுக்க வரும்போது நீங்க இல்ல; அதான் வாடகையத் தர முடியல''”

""நீங்க ரொம்ப லேட்டா வந்துருப்பீங்க''” அவள் சொல்வது சரிதான். கடந்த இரண்டு நாட்களாக அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம் இருந்ததால் முடித்து விட்டு வருவதற்கு தாமதமாகி விட்டிருந்தது.

நான் மூன்றுநாள் வாடகையைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது, “""இனிமே மாடிக்கெல்லாம் வராதீங்க. என் புருஷன் ஒரு முசுடு. அசிங்கமாப் பேசிடுவான்'' ” என்றாள்.

மறுபடியும் சில நாட்களுக்கு அப்புறம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு அவளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் சைக்கிளும் பூட்டப்படவில்லை. ஐந்தாவது நாள் சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாகவே போனபோதும் ஷெட்டில் அவள் இல்லை. அவளுடைய புருஷன் தான் நின்று கொண்டிருந்தார்.

""அவங்க இல்லைங்களா''?” என்று அவரிடம் விசாரித்தேன். “

""நீ ஏன் அவளைத் தேடுற?'' ” என்றபடி என்னை முறைக்கவும், “""சைக்கிள் நிறுத்துறதுக்கு வாடகை தரணும்; அதான்'' ” என்றேன் பலவீனமான குரலில். “

""என்கிட்டவே கொடு...''” என்றார்.

""அஞ்சு நாள் வாடகை பாக்கி'' என்று சொல்லி 20 ரூபாய்த் தாளொன்றைக் கொடுத்தேன். வாங்கி பையில் சொருகிக் கொண்டார். ஆனால் மீதிச் சில்லறை தரவில்லை. நான் அவரையே பார்த்துக் கொண்டு நிற்கவும், ”""அடுத்த வாரம் சைக்கிள் நிறுத்துறப்ப கழிச்சுக்கோ...''” என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.

திங்கட்கிழமை காலையிலேயே அந்தப் பெண் ஷெட்டில் நின்றிருந்தாள். “

""நீங்க அஞ்சு நாள் வாடகை பாக்கி தரணும் ஸார்...''” என்றாள்.

""அய்யோ, சனிக்கிழமையே உங்க வீட்டுக்காரர்கிட்டக் குடுத்தேட்டேன்ங்க. அவரு சொல்லலீங்களா? மீதி அஞ்சு ரூபாய் சில்லறையைக் கூடத் தராம இந்த வாரம் கழிச்சுக்கச் சொல்லீட்டார்''

""அவர்கிட்ட ஏன்ங்க குடுத்தீங்க. அவர் வீட்டுச் செலவுக்கே காசு குடுக்குறதில்ல. சைக்கிள் வாடகைய வச்சுத்தான் நானும் குழந்தையும் சமாளிச்சிக்கிட்டு இருக்குறோம்''” ஆங்காரமாய்ப் பொங்கியவள், தன்னிலைக்கு வந்து தணிந்து, “""சரி போனது போயிருச்சு. இனிமே அவர்கிட்ட க் குடுக்காதீங்க''” என்றாள்.

நான் சைக்கிளை நிறுத்திவிட்டுக் கிளம்பியபோது, “""பேசாம மாத வாடகைக்கு கார்டு போட்டுக்குங்களேன். மாசத்துக்கு 60 ரூபாய் தான். உங்களுக்கு இருபது முப்பது ரூபாய் மிச்சமாகும். இராத்திரி சைக்கிள் நிறுத்துனாலும் எக்ஸ்ட்ரா வாடகை எதுவும் கொடுக்க வேண்டியதில்ல''” என்றாள்.

நானும் சம்மதித்து உடனேயே பணம் கொடுக்கவும் வாங்கிக் கொண்டவள், “""கார்டு போட்டு வச்சிருக்கேன். சாயங்காலம் வந்து வாங்கிக்குங்க''”
என்றாள்.

சாயங்காலம் ஒரு சிகரெட் அட்டையில் கடையின் முகவரியை ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்திக் கொடுத்தாள். அதில் சில கட்டங்களும் அச்சிடப் பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் அன்றையத் தேதியை எழுதி அடுத்ததில் ரூ.60 என்றெழுதி கடைசிக் கட்டத்தில் சுந்தரவள்ளி என்று அவளின் பெயரைக் குண்டு குண்டாக எழுதிக் கொடுத்தாள். அன்றைக்குத் தான் அவளுடைய பெயரையே தெரிந்து கொண்டேன்.

இதற்கிடையில் எங்களுடைய கம்பெனிக்கு ஆர்டர்கள் நிறைய வந்ததால் இரண்டு ஷிப்ட்களில் வேலை செய்யத் தொடங்கி, நானும் ராத்திரியிலும்
பகலிலுமாக மாறிமாறி வேலைக்குப் போகத் தொடங்கினேன்.

ஒருநாள் இரவு ஷிப்ட் வேலைக்குப் போய்விட்டு அடுத்தநாள் காலை வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது ஷெட்டில் சைக்கிள் இல்லை. மாடிக்கு ஓடிப்போய்ப் பார்த்தேன். வீடும் பூட்டிக் கிடந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் சைக்கிள் ஷெட்டிற்கு எதிரில் இருந்த பெட்டிக்கடைக்காரரிடம் விசாரித்தேன்.

""ரெண்டு நாளா அந்தப் பொண்ணோட குழந்தைக்கு உடம்பு சுகமில்லப்பா. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா ஓடிக்கிட்டு இருக்கு. அதோட புருஷனும் ஒரு வாரத்துக்கும் மேல வீட்டுக்கே வரல. பொதுவா இந்த சைக்கிள் ஷெட்ல ராத்திரி யாரும் சைக்கிள் நிறுத்துறதில்ல; உன் சைக்கிள் மட்டும் தனியா இருக்கவும் இதைத் தெரிஞ்சுக்கிட்ட எவனோ நைஸா லவட்டிக்கிட்டுப் போயிட்டான் போலருக்கு. பழைய சைக்கிள்னாலும் அந்தக் காலத்து மாடல். இப்பல்லாம் அவ்வளவு அம்சமான சைக்கிளே வர்றதில்லையே''-ஆதங்கப்பட்டார்.

நடந்தே வீட்டிற்குப் போய் விட்டேன். அம்மாவிடம் சைக்கிள் தொலைந்து போன தகவலைச் சொன்னதும் அவளின் முகம் இருளடைந்து போய் விட்டது.

""அந்த மனுஷன் ஆயுள் குறைஞ்சுடுமின்னு போட்டோ கூட எடுத்து வச்சுக்கல. அவரோட ஞாபகமா இருந்தது அவர் பயன்படுத்துன சைக்கிள் மட்டும் தான். அதையும் தொலைச்சுட்டியா?''” என்று ஆற்றாமையில் புலம்பினாள்.

அப்பாவின் ஆகிருதியை அவர் பயன்படுத்திய சைக்கிளில் பார்த்த அம்மாவால் அது தொலைந்து போனதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

""எப்படியும் தேடிக் கண்டுபிடிச்சுடலாம்மா''” அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன். ஆனாலும் சைக்கிளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் எனக்கே நம்பிக்கை இல்லை.

அடுத்தநாள் காலையில் சுந்தரவள்ளியைத் தேடிக் கொண்டு போனேன். அவள் சைக்கிள் ஷெட்டில் நின்று கொண்டிருந்தாள்.

""ஏங்க... என்னோட சைக்கிளக் காணலைங்க'' ” என்றேன் கோபமாய்.

""சைக்கிள் நிறுத்துற இடத்துக்குத் தான் வாடகை தர்றீங்க. அதுக்கு நாங்க 24 மணி நேரமும் செக்யூரிட்டி போட்டா காவல் காக்க முடியும்?''”

""இப்படிப் பொறுப்பில்லாம பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா கன்ஸþமர் கோர்ட்ல உங்கமேல கேஸ் போட்டுருவேன்ங்க'' ”கோர்ட் என்று சொன்னதும் அவளின் முகத்தில் பயம் சூழ்வதைப் பார்க்க முடிந்தது.

நாங்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், பெட்டிக் கடைக்காரர் எழும்பி வந்தார். ”

""சைக்கிள் தொலைஞ்சு போச்சுன்னு போலீஸ்ல போய் புகார் பண்ணுய்யா. அதை விட்டுட்டு தனியா இருக்கிற பொம்பளைகிட்ட தகராறு பண்ணிக்கிட்டு இருக்கிற?''”
""அப்படின்னா என்கூட வாங்க. நாமபோய் போலீசுல புகார் குடுத்துட்டு வரலாம்'' ” என்றேன். “
""உங்க சைக்கிள் தொலைஞ்சதுக்கு நீங்க போய் புகார் குடுங்க. நான் எதுக்குங்க வரணும்?'' “ என்றாள்.
""சைக்கிள் உங்க இடத்துல இருந்து காணாமப் போயிருக்கு. கைநீட்டி காசு வாங்குனதுக்கு நீங்கதான்... போலீசுல சொல்லி தொலைஞ்ச சைக்கிள மீட்டுக் குடுக்கணும்''.”
ஒரு வழியாக என்னுடன் காவல் நிலையம் வரு
வதற்கு சம்மதித்தாள் சுந்தரவள்ளி. ஆனால் சைக்கிள் தொலைந்து போனதான புகாரை அங்கு பதிவு செய்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இரண்டொரு தடவைகள் இருவரையும் அலைய விட்ட பின்புதான் புகாரை எடுத்துக் கொண்டார்கள்.
அவளுடன் சேர்ந்து அலைந்து கொண்டிருந்த போது சுந்தரவள்ளியின் சோகக்கதையைத் தெரிந்து கொண்டேன். அவளுக்கு சொந்தத்தில் தான் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். கல்யாணமான புதிதில் எல்லாம் அவளுடைய புருஷன் அவளை மிகவும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ""அப்ப எல்லாம் நான் வேம்பைக் குடுத்தாலும் இனிக்கிதுன்னு சொல்லி சாப்புடுவார்''
""ஆனால் புள்ளைப் பெத்துக்கிறதுக்காக ஊருக்குப் போயிட்டு வந்தப்புறம் ஆளே மாறிப் போயிட்டார். பக்கத்துல போனாலே பால் கவுச்சி அடிக்குதுன்னு எரிஞ்சு விழுந்தார். அப்புறம் தான் அவருக்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுப் போச்சுன்னு தெரிஞ்சது. வீட்ல போய்ச் சொன்னால் ஆம்பிளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் சாமர்த்தியமா நடந்துக்கிற விதத்துல உன் புருஷன் அவளை விட்டுட்டு உன்கூடவே நிரந்தரமா வந்துடனும்னு அறிவுரை சொல்லி அனுப்பீட்டாங்க. இப்போ என் புருஷனோட தொடர்பில் இருந்த பெண்ணின் புருஷனும் செத்துப் போயிட்டதால், என் புருஷன் நெறையா நாளு வீட்டிற்கே வராமல் அவ வீட்லயே தங்கிடுறார். அதைப் பற்றி ஏதாவது கேட்டா... சண்டை போடுறார்'' -சுந்தரவள்ளியின் கண்கள் பொங்கி விட்டன.
நாங்கள் திருப்பித் திருப்பி காவல் நிலையம் போகவும் சலித்துப் போய் ஒருமுறை காவல் நிலையத்தின் பின்னால் அழைத்துப் போய் அங்கு நிறுத்தப் பட்டிருந்த சைக்கிள்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார் காவலர் ஒருவர்.
அங்கு ஒன்றிரண்டு நல்ல சைக்கிள்களும் இருந்தன. ஆனால் நான் எதையும் எடுத்துக் கொள்ள சம்மதிக்கவில்லை. காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் கோபித்துக் கொண்டாள் சுந்தரவள்ளி.
""நீங்க அங்க இருந்த சைக்கிள்கள்ல இருந்து ஏதாச்சும் ஒன்னை எடுத்திருந்திருக்கலாம்ல. உங்க சைக்கிள விடவும் பரவாயில்லாத சைக்கிள்களும் அங்க இருந்துச்சே''.”
""அது எங்க அப்பாவோட சைக்கிளுங்க. இப்ப எங்க அப்பா உயிரோட இல்ல; அவரோட ஞாபகமா அந்த சைக்கிள் மட்டும் தான் இருக்கு. எனக்கு எங்க அப்பாவோட சைக்கிள் மட்டும்தான் வேணும்''.”
சில நாட்களுக்கு அப்புறம், ஒருநாள் நான் சாயங்காலம் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். சைக்கிள் ஷெட்டைத் தாண்டி நடக்கத் தொடங்கியதும் பெட்டிக் கடைக்காரர் என்னை மறித்து, “""இன்னைக்குக் காலையில போலீஸ்காரர் ஒருத்தர் வந்து உன்னோட சைக்கிள் சம்பந்தமா சுந்தரவள்ளிகிட்ட ஏதோ சொல்லிட்டுப் போனார்ப்பா''”என்ற தகவலைச் சொன்னார்.
நான் அவளைத் தேடி மாடிக்குப் போனபோது, வழக்கம் போல் கணவனும் மனைவியும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் சுந்தர வள்ளியின் புருஷன், “""நீயென்ன எப்பப் பார்த்தாலும் இவள் கூடவே திரிஞ்சுக்கிட்டு இருக்கிற? ஒருவேளை நீ என் பொண்டாட்டிய வச்சிருக்கியாடா?'' ”என்றார் கடுமையான தொனியில்.
""ஸார் வார்த்தைய அளந்து பேசுங்க'' ” என்று நானும் முறைக்கவும், ""“நீயென்ன பெரிய புடுங்கியா?''” என்றபடி என்னை அடிப்பதற்குப் பாய்ந்து வந்தார்.
புருஷனை மறித்த சுந்தரவள்ளி, ""ஸார் தயவுபண்ணி நீங்க கீழபோய் இருங்க நான் வர்றேன்'' ” என்று என்னிடம் கைகூப்பி இறைஞ்சினாள். நானும் அவசரமாய் கீழே இறங்கி வந்து விட்டேன்.
""ஏன் ஸார் வீட்டுக்கெல்லாம் வந்து அந்த மனுஷன்கிட்ட அசிங்கப் படுறீங்க'' ” என்றாள்.
""இல்ல; காலையில போலீஸ்காரர் வந்து என் சைக்கிள் சம்பந்தமா ஏதோ விவரம் சொன்னதா பெட்டிக்கடைக்காரர் சொன்னார். அதான்'' ”
""ஆமா. நாலைஞ்சு திருட்டுச் சைக்கிளை ஸ்டேஷன்ல புடிச்சு வச்சிருக்கதாகவும் வந்து உங்களோடது இருந்தா எடுத்துக்குங்கன்னும் சொன்னார். ஆனால் நான் போகல'' ”
""ஏங்க... வாங்கபோய்ப் பார்க்கலாம்'' என்றேன் ஆர்வமாய்.
""எனக்கென்னவோ அவங்க காசு புடுங்குறதுக்காக அல்லது புகார முடிச்சு வக்கிறதுக்காக அடி போடுறாங்கன்னு தோணுது. உங்க சைக்கிள் அங்க இருக்காதுன்னு என்னோட உள் மனசு சொல்லுது. அங்க போறதெல்லாம் வெட்டி அலைச்சல் தான். நீங்க போய்ப் பாருங்க. ஒருவேளை உங்க சைக்கிள் அங்க இருந்தா எனக்கு போன் பண்ணுங்க. அப்புறம் நான் கிளம்பி வர்றேன்'' ” பிடிவாதமாக மறுத்து விட்டாள்.
சுந்தரவள்ளி சொன்னது தான் நடந்தது. காவல் நிலையத்தில் என்னுடைய சைக்கிள் இல்லை. எனக்குப் பிடித்த ஏதாவது ஒரு சைக்கிளை எடுத்துக்
கொண்டு சைக்கிளுக்காக ஒரு தொகையைக்
கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டு வந்து விட்டேன்.
இப்பொழுது சுந்தரவள்ளி அர்த்த ராத்திரியில் வீட்டிற்கே வந்து நிற்கிறாள். “
""என் புருஷன் எப்பப் பார்த்தாலும் நான் உங்கள வச்சிக்கிட்டு இருக்கிறதா வெறுப்பேத்திக்கிட்டே இருந்தான். நானும் வெறுத்துப் போய் "ஆமாடா; நீ ஒருத்தி கூடச் சேர்ந்து குடும்பமே நடத்துறப்ப, நான் ஒருத்தனை வச்சிருந்தா என்னடா தப்புன்னு' இன்னைக்கு சண்டையில சொல்லீட்டேன். உடனே அந்த காவாலிப்பய என்னை கழுத்தைப் புடிச்சு வெளிய தள்ளி கதவைப் பூட்டீட்டான். இந்தக் குழந்தை இல்லைன்னா ரயில் தண்டவாளத்துல தலையைக் குடுத்துருப்பேன். ஆனால் பச்சை மண்ணை வீதியில் உட்டுட்டுச் சாக மனசில்ல.
இந்த அர்த்த ராத்திரியில எனக்கு போக்கிடம் ஏது? அக்கம் பக்கத்துல என் புருஷனப் பத்தித் தெரிஞ்சவங்க யாரும் எனக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டாங்க. அதான் உங்க ஞாபகம் வந்தது. இன்னைக்கு ஒரே ஒரு ராத்திரி மட்டும் உங்க வீட்ல தங்க அனுமதி குடுங்கம்மா. நாளைக் காலையில என் வழியப் பார்த்துக்கிட்டுப் போயிடுறேன்'' ” என்று அழத் தொடங்கினாள் சுந்தரவள்ளி.
சுந்தரவள்ளியின் கதையைக் கேட்ட அம்மாவும் உடனேயே சம்மதித்தாள். ஆனால் அடுத்தநாள் சுந்தரவள்ளி சொல்லியிருந்தபடி அவள்
எங்களின் வீட்டிலிருந்து வெளியேற வில்லை. அவளை அம்மா தனக்குத் துணையாகவும் வீட்டு வேலைகளுக்கு உதவியாகவும் இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டாள். அம்மா அவளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை சம்பளமாகவும் தரத் தொடங்கினாள்.
இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். ஒருநாள் நண்பகலுக்கு மேல் நான் கம்பெனியில் இருந்த போது அம்மா அலைபேசினாள். ”
""இந்த சுந்தரவள்ளிப் பொண்ணு எங்க போயித் தொலைஞ்சதுன்னு தெரியலப்பா. வெளிய போயிட்டு வாறேன்னு சொல்லிட்டுப் போனபுள்ள இன்னும் வீட்டுக்கே வரலப்பா''
""அவளுக்குப் போன் பண்ணிப் பாரேன்ம்மா''
""அந்தக் கழுதை போனை சார்ஜு ஏறுறதுக்காக கரண்ட்ல போட்டுட்டுப் போயிருக்குப்பா''”
ஒருவேளை அவளுடைய புருஷனுடன் சமாதானமாகிப் போய் விட்டாளோ என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் அந்த எண்ணமே மனசுக்கு சங்கடம் தருவதாக இருந்தது. அவள் புருஷனுடன் அவள் போய்ச் சேர்ந்து வாழ்ந்து விடுவதில் எனக்கு என்ன பிரச்னை? அதை ஏன் என் உள்மனம் ஏற்க விரும்பவில்லை என்றுதான் புரியவில்லை. “
""குழந்தை உன்கிட்ட இருக்கா, அவளே கொண்டு போயிருக்காளாம்மா?''”
""அவள் கிளம்புறப்ப குழந்தை தூங்கிக்கிட்டு இருந்ததால இங்கதான் இருக்கு'' ” மனசுக்குள் ஏதோ இனம் புரியாத நிம்மதி பரவியது. “
""அப்ப வருவாள்ம்மா; பதட்டப்படாம இருங்க'' ”
ஒருவேளை குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு அதை நாங்கள் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை வந்ததால், தன்னுடைய முடிவைத் தேடிக் கொள்ள கிளம்பிப் போய் விட்டாளா? மனசுக்குள் மறுபடியும் பாரம் அழுத்தத் தொடங்கியது. அதற்கப்புறம் என்னால் அலுவலகத்தில் நிம்மதியாக உட்கார்ந்து வேலை செய்யவே முடியவில்லை. வீட்டிற்குக் கிளம்பிப் போய் விட்டேன்.
நான் வீட்டிற்குப் போன கொஞ்ச நேரத்திலேயே சுந்தரவள்ளியும் வீட்டிற்கு வந்து விட்டாள். வரும்போது தொலைந்து போயிருந்த எங்களுடைய சைக்கிளையும் கொண்டு வந்தாள். ஆச்சர்யமாக இருந்தது.
""எப்படிங்க? போலீஸ்ல கண்டுபிடிச்சுக் குடுத்துட்டாங்களா?''” என்றேன் சந்தோஷ அதிர்ச்சியுடன். “
""தொலைஞ்சு போயிருந்தாத்தான கண்டு புடிச்சிக் கொடுக்குறதுக்கு. அன்னைக்கு என் குழந்தைக்கு ரொம்பவும் முடியாமப் போயிருச்சு. கையில சுத்தமா காசு இல்ல. என் புருஷனுக்கு போன் பண்ணுனா அந்தப் படுபாவி போனைக் கட் பண்றான். என்ன பண்றதுன்னு தெரியாமல் அவசரத்துக்கு உங்க சைக்கிள எடுத்துட்டுப் போயி வித்துட்டேன். உங்ககிட்டச் சொன்னா கோபப்
படுவீங்கன்னு தான் திருடு போயிருச்சுன்னு சொல்லீட்டேன். இப்பத்தான் கையில காசு சேர்ந்துச்சு. சைக்கிள யார்கிட்ட வித்தேனோ அவரத் தேடிப்போனால் அவர் வெளியூருக்கு வேலை மாறிப் போயிட்டதாச் சொன்னாங்க. அதான் அந்த ஆளத் தேடிப்போயி சைக்கிள மீட்டுக்கிட்டு வந்தேன். மன்னிச்சுக்குங்க''” என்றாள்.
சைக்கிளைத் திரும்பவும் பார்த்ததில் அம்மாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம். அப்பாவே திரும்பி வந்து விட்டதைப் போல குதூகலித்தாள் அம்மா.
""நான் நாளைக்கு எங்க ஊருக்கே திரும்பப் போகப் போறேன் ஸார். இத்தனை நாள் என்னை ஆதரிச்சதுக்கு ரொம்ப நன்றி''” என்று கை குவித்து வணங்கினாள். அவளின் கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
""ஊருக்குப் போயி என்ன செய்யப் போறே? இங்கேயே இருந்துடு'' என்றாள் அம்மா என்னை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
என்ன சொல்வதென்று என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்று கொண்டிருந்தேன் நான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com