

படப்பிடிப்புகள், இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டு இருப்பதால் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருக்கின்றனர். மேலும், ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாவதாக இருந்த "மாஸ்டர்' படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் நடித்துள்ள விஜய், மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வீடியோ கால் மூலம் பேசினர். இதனைப் புகைப்படமாக எடுத்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். அதனுடன் வெளியிட்டுள்ள பதிவில், "பிரச்னைகள் வரும்... போகும். வெளியே செல்லவே முடியாதபோது எப்படி வெளியே செல்வது? "மாஸ்டர்' படக்குழு சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறது. நீங்கள்?' என்று கேட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
------------------------------------------------------------------------------------------------------------
நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த பண உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், "பாகுபலி' திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸ் ரூ. 4 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ரூ. 3 கோடி ரூபாய் பிரதமரின் நிவாரண நிதிக்கும், ரூ. 50 லட்ச ரூபாய் ஆந்திர மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும், ரூ. 50 லட்ச ரூபாய் தெலங்கானா மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக பவன் கல்யாண் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்ச ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் என 2 கோடி ரூபாய் வழங்கினார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ராம் சரண் ரூ. 70 லட்சம் வழங்கினார்.இவர்களைத் தொடர்ந்து இரு மாநில முதல்வர் நிவாரண நிதியாக மகேஷ் பாபு 1 கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------
கரோனா வைரஸ் பிரச்னை காரணமாக சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. படத் திரையிடல் தள்ளிப் போயுள்ளன. பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் யாரும் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். இதற்கிடையே, நடிகை உத்ரா உண்ணி, மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி, தெலுங்கு ஹீரோ நிதின் ஆகியோர் தங்கள் திருமண விழாக்களை தள்ளி வைத்துள்ளனர். சிலர் எளிமையாக குடும்பத்துக்குள் நடத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் யோகிபாபுவும் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியைத் தள்ளி வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 5- ஆம் தேதி திட்டமிடப்பட்டு இருந்த அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மே மாதம் தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
ஷில்பா ஷெட்டி தமிழில் "குஷி', "மிஸ்டர் ரோமியோ' ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009 -ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2012 - ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு "வியான்' என்று பெயரிட்டனர். அதற்கு பிறகு சில நாள்களுக்கு முன்பு வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். குழந்தை பிறந்த 40 நாட்கள் ஆன பிறகு சம்பிரதாய முறைப்படி பூஜை செய்யவேண்டுமாம்; ஆனால் கரோனா காரணமாக அதை செய்ய முடியாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சில விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்காவிட்டாலும் நாம் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இது தனக்கு உணர்த்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------
கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலகெங்கும் உள்ள குழந்தைகளின் பசியை போக்குவதற்காக ஹாலிவுட் பிரபலம் ஏஞ்சலினா ஜூலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏழு கோடியே ரூ.50 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். "நோ கிட் ஹங்ரி' என்ற அமைப்பிடம் நிவாரணத் தொகையை வழங்கிய ஏஞ்சலினா ஜூலி, ""பள்ளிகளில் உணவு சாப்பிட்டு வந்த 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 கோடி குழந்தைகள் உணவின்றி தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "நோ கிட் ஹங்ரி' அமைப்பு குழந்தைகளின் நலனைக் காக்க சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக கூறிய ஏஞ்சலினா ஜூலி, இதனால் பல குழந்தைகளின் பசி போக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சலினா ஜூலி மட்டுமல்லாமல், ஹாலிவுட் பிரபலங்களான ரிஹானா, அர்னால்ட், ரியன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கரோனா பாதித்த மக்களுக்காக நிதி வழங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.