தனிமையை எழுதியவர்கள்!

இந்த ஊரடங்கு தருணத்தில் மனிதர்கள் கொள்ள வேண்டியது  நம்பிக்கை,  அதுவும் மாறாத நம்பிக்கை. வாழ்வின் மீதான உறுதியான பற்று. அந்தப் பற்றை அழுத்தமாகச் சொன்ன  இலக்கியங்கள் நிறையவே உள்ளன. 
தனிமையை எழுதியவர்கள்!

இந்த ஊரடங்கு தருணத்தில் மனிதர்கள் கொள்ள வேண்டியது நம்பிக்கை, அதுவும் மாறாத நம்பிக்கை. வாழ்வின் மீதான உறுதியான பற்று. அந்தப் பற்றை அழுத்தமாகச் சொன்ன இலக்கியங்கள் நிறையவே உள்ளன.

அதில் முக்கியமான நாவல், "ஒரு உண்மைமனிதனின் கதை'. பரீஸ் பொலெவோய் எழுதிய ரஷ்யநாவலிது.
இதில் செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய் மெரேஸ்யெவ் விமானத்தாக்குதலின் போது பனிப்பிரதேசம் ஒன்றில் தனி ஆளாகச் சிக்கிக் கொள்கிறார். பதினெட்டு நாட்கள் எப்படிப் பனிப்புயலைச் சமாளித்து அவர் தனியே நடந்து வந்தார்
என்பதை மிக அழகாக எழுதியிருக்கிறார் பரீஸ் பொலெவோய். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.
இது போல வேறுவேறு காரணங்களுக்காகத்தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட மனிதர்களைப் பற்றி உலக இலக்கியத்தில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் "பெத்ரோ சல்வாடர்ஸ்'
என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அதில் ஒருவன் தன்னைச் சர்வாதிகாரியின் அரசாங்கம் கைது செய்து விடுமோ எனப் பயந்து வீட்டின் நிலவறைக்குள் ஒளிந்து கொண்டுவிடுகிறான். அவன் தலைமறைவாகிவிட்டான் என்பதை நம்ப வைப்பதற்காக அந்த நிலவறையின் மீது கம்பளத்தை விரித்து அதன் மேலே டைனிங் டேபிளை போட்டு வைக்கிறாள் அவனது மனைவி.
அதனால் காவலர்களால் அவனைக் கண்டறிய முடியவில்லை நிலவறையில் ஒளிந்து கொள்ளும் அவன் ஒன்பது ஆண்டுகள் அதற்குள்ளாகவே வாழுகிறான். வெளியுலகின் ஓசைகள் மட்டுமே துணை.
அவனது மனைவி வீட்டு வேலையாட்களையும் அனுப்பிவிடுகிறாள். அவன் இருட்டிற்குள் தனிமையில் செய்வதறியாமல் வாழுகிறான். சொட்டுச் சொட்டாகக் காலம் நீண்டு போகிறது.
அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. குழிக்குள் ஒளிந்து கொண்டுவிட்ட மிருகத்தைப் போல அவன் வாழுகிறான். வெளியுலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. பெத்ரோ சல்வாடர்ஸ் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறான். ஆனால் அந்த ஒன்பது வருஷ கால வாழ்க்கை மிக நீண்ட இருண்ட ஒற்றை நாளே.
காலம் மாறுகிறது. சர்வாதிகாரி நாட்டை விட்டு ஓடுகிறார். பெத்ரோ சல்வாடர்ஸ் வெளியே வருகிறான். வெளிச்சத்தைக் காணுகிறான். இழந்து
விட்ட அவனது வாழ்க்கையை நினைத்து வருந்துகிறான். இக்கதையில் தண்டனையிலிருந்து தப்பஒருவன் தன்னை மறைத்துக் கொண்டு வாழுகிறான். அது மரணத்தைவிடவும் பெரிய தண்டனையாக மாறிப் போகிறது.
இது போலவே இன்றைய ஊரடங்கு சூழலுக்குப் பொருத்தமான கதையை ஆன்டன் செகாவ் எழுதியிருக்கிறார். அந்தக் கதையின் பெயர் "பந்தயம்' (பட்ங் க்ஷங்ற்). வீட்டிற்குள் தனிமைச்சிறையில் 15 ஆண்டுகள் வசிக்க முடியும் எனப் பந்தயம் கட்டிய ஒரு வழக்கறிஞரைப் பற்றிய கதைஅது. அக்கதையில் செகாவ் நாமாக வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் போது ஏற்படும் நெருக்கடியை, பல்வேறு விதமான நிலைகளை மிக அழகாக எழுதியிருக்கிறார். இதை அனுபவப்பூர்வமாகப் பலரும் இப்போது உணர்ந்து வருகிறார்கள் என்பதே நிஜம்.
முதல்நிலையில் வீட்டிற்குள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட மனிதர் ஆரம்ப நாட்களில் தனிமையிலும் வெறுப்பிலும் நிறையவும் அவதிப்பட்டிருக்
கிறார். இரவும் பகலும் அவரிடமிருந்து பியானோவின் இசை வந்த வண்ணமிருந்தது. ஒயினும் புகையும் தமக்கு வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார். "ஒயின் ஆசைகளைக் கிளறிவிடும். ஆசைகளே தனிமையில் வசிப்பவரின் பிரதான எதிரிகள். அதோடு நல்ல ஒயினைத் தனியாகச் சாப்பிடுவதை விடப் பெரிய வேதனை வேறொன்றுமில்லை' என நினைத்தார் வக்கீல். அந்த நாட்களில் அவர் எளிய கதைகளை விரும்பி வாசித்தார். அதாவது சிக்கலான காதல் விவகாரங்களுள்ள நாவல்கள், கொலை, கொள்ளைக் கதைகள், வேடிக்கைக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் முதலியவற்றை வாசித்தார்.
இரண்டாம் நிலையில் இந்த நிலையில் வக்கீலின்கவனம் இலக்கியம் பக்கம் திரும்பியது. தீவிரமாகஇலக்கியம் படித்தார். நிறைய வாசித்துத் தள்ளினார். பின்பு திடீரென மனச்சோர்வு கொண்டு எதையும் படிக்கவில்லை. தனக்கு விருப்பமானதை எழுத ஆரம்பித்தார். எழுதியதை தனக்குத் திருப்தியில்லை என்பது போலக் கிழித்துப் போட்டார். எழுதுவது அவருக்கு மன ஆறுதல் தருவதாக இருந்தது.
மூன்றாம் நிலையில் இப்போது அவர் பிறமொழிகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். சரித்திரம்மற்றும் தத்துவ நூல்களை ஆசையாகப் படித்தார். புதிய பாஷையை வேகமாகக் கற்றுக் கொண்டார். ஆறு மொழிகளில் எழுத முயன்றார். அதில்வெற்றியும் கண்டார்.
நான்காம் நிலையில் இப்போது அவரது கவனம் ஆன்மிக விஷயத்தில் திரும்பியது. நாள் முழுவதும் பைபிள் படித்துக் கொண்டேயிருந்தார். பைபிளின் ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து பயின்றார்.
ஐந்தாம் நிலையில் இப்போது அதிலிருந்தும் விடுபட்டு அறிவியல் பற்றிய நூல்களை வாசித்தார். ஷேக்ஸ்பியர் பைரன் கவிதைகளை விருப்பத்துடன் வாசித்தார். உடைந்த பலகைகளோடு கடலில் நீந்துபவரைப் போல அவர் தீவிரமாகப் படித்தார்.
இப்படி மாறிவரும் மனநிலைகளைச் செகாவ் அழகாகக் கதையில் பதிவு செய்திருக்கிறார். கதையின் முடிவு நாம் எதிர்பாராத திருப்பம். கதை வழியாக நாம் அடையும் உணர்வென்பது மனித மனம் தனித்திருக்கையில்எப்படி இயங்கும் என்பதைப் பற்றிய எழுத்தாளரின் அவதானிப்புகளாகும். அதுவும் ஆன்டன் செகாவ் ஒரு டாக்டர் என்பதால் மிகத்துல்லியமாக மனதின் செயல்பாடுகளை அறிந்து எழுதமுடிந்திருக்கிறது.
இது போலவே டேனியல் டீபோ எழுதிய "ராபின்சன் குரூசோ'வில் புயலில் மாட்டிக் கொண்டு உடைந்தகப்பலிலிருந்து தப்பி ஒரு தீவில் கரை சேருகிறான் ராபின்சன் குரூசோ. அங்கே கிடைத்தவற்றைக் கொண்டு தனது வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பிக்கிறான். அவனது தனிமையும் போராட்டமும் வாழ்க்கையின் மீதான பற்றும் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறான். ஆனால் அது வெற்றியடையவில்லை. பதினைந்து ஆண்டுகள் அந்தத் தீவில் ஒற்றை மனிதனாக வாழுகிறான்.
இது போலவே ஷேக்ஸ்பியரின் "டெம்பஸ்ட்' நாடகத்தில் புயலில் சிக்கிய மனிதனின் துயரம் விளக்கப்படு
கிறது. பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யூ "பிளேக்' என்ற நாவலை எழுதியுள்ளார். இது காலரா நோயினை ஒரு குறியீடாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். "டெக்கமரான் கதை'களும் காலரா காலத்தில் சொல்லப்பட்ட கதைகளே.

""நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் போது மனித மனம் தீவிரமாகச் செயல்படுவதோடு மிகுந்த தைரியம் கொள்ளவும் செய்யும்'' என்கிறார் மருத்துவர் விக்டர் பிராங்கல்.
இன்றைய தேவை அது போன்ற உறுதியான நம்பிக்கையும் தைரியமும். அதை இலக்கியம் நிறையவேதருகிறது. ஆகவே வீட்டில் தனித்திருக்கும் இந்த நாட்களில் நல்ல நூல்களை வாசியுங்கள். படித்தவற்றை நண்பர்களுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பேரழிவுகளிலிருந்து மனிதகுலம் மீண்டு வந்திருக்கிறது- ஆகவே எந்த நிலையிலும் மனம் தளர வேண்டாம். வீண் வதந்திகளை விலக்கி மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வாசிப்பு மிகுந்த வழிகாட்டியாக அமையும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com