தோல்வி என்பது முடிவல்ல...

பெருமாள் மிகவும் பதட்டமாக இருந்தார். காரணம் அன்றைக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன.
தோல்வி என்பது முடிவல்ல...

பெருமாள் மிகவும் பதட்டமாக இருந்தார். காரணம் அன்றைக்கு ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன.

இந்த வருஷம் அவருடைய மகன் நவீன்குமாரும் ப்ளஸ் டூ தேர்வுகளை எழுதி இருந்தான். அவன் எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி அடைந்ததே பெரிய சாதனை. ப்ளஸ் டூவில் கண்டிப்பாக ஃபெயிலாகி விடுவானோ என்று பெருமாளுக்குப் பயமாக இருந்தது.

ஆனால் நவீனோ தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு எந்த ஆர்வமும் காட்டாமல் அவனுக்கு முன்னால் இருந்த மடிக் கணிணியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.

பெருமாளின் மனைவி சரோஜா பெருமாளிடம் எப்போதுமே,  ""நீங்கள் அவனுக்கு ஓவரா செல்லங் குடுத்துத்தான் அவன் கெட்டுக் குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறான். அவன் எது கேட்டாலும் வாங்கிக் குடுத்தே அவனைக் கெடுத்துட்டீங்க'' என்று கடிந்து கொள்வாள்.

பெருமாள் ஒரு தனியார் கம்பெனியில் சிவில் என்ஜினியராகப் பணியில் இருக்கிறார். காலையில் ஏழு மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கென்று கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் வீட்டிற்கே திரும்பி வருவார். சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்குப் போகவேண்டிய நிர்பந்தம் நேர்ந்துவிடும் அவருக்கு.

அவருடைய மனைவியும் எல்.ஐ.சியில் அதிகாரியாக இருக்கிறாள். அரசாங்க வேலை என்பதால் நேரத்தோடு வீட்டிற்கு வந்து விடுவாள். அவள்தான் மகனைக் கவனித்துக் கொள்கிறாள். அப்பா செல்லம் அதிகம் என்பதால் அவளால் எவ்வளவு முயன்றும் மகனை வழிக்குக் கொண்டு வரவே முடிந்ததில்லை.

படிப்பு விஷயத்தில்  நவீன்குமார் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அசட்டையாகவே இருக்கிறான். காரணம் அவனுடைய பாட்டி. பெருமாளின் அம்மா.

பெருமாளுக்கும் சரோஜாவிற்கும் நீண்ட நாட்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து மிகவும் காலதாமதமாகவே நவீன்குமார் பிறந்தான். இருவரும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்ததால் பெருமாளின் அம்மாதான் கிராமத்திலிருந்து வந்து அவனை வளர்த்துக் கொடுத்தாள்.

அவளுக்கு கிராமத்தில் நிலம், மாடு என்று நிறைய இருந்ததால் அவற்றைப் பராமரிக்க அவள் கிராமத்தில் இருக்க வேண்டி இருந்தது. அதனால் அவளும் தொடர்ந்து சென்னையில் இருக்க முடியாமல் நவீன்குமாரை கிராமத்திற்கே அழைத்துக் கொண்டு போய் விட்டாள்.

கிராமத்துப் பள்ளியில் தான் நவீன்குமார் ஐந்தாம் வகுப்பு வரை படித்தான். அவன் படிப்பில் மிகவும் பின்தங்கி இருப்பதைக் கவனித்து சரோஜா ஒருமுறை மகனைக் கண்டித்தபோது,  அவனுடைய பாட்டி மருமகளிடம் சண்டைக்குப் போனாள்.

""அவன் படிக்கிற வரைக்கும் படிக்கட்டும்; சும்மா புள்ளைய திட்டிக்கிட்டு இருக்காத'' கிராமத்தில் தொடர்ந்து இருந்தால் பையன் ஒன்றுக்கும் ஆகாமல் மண்ணாகப் போய் விடுவான் என்று அவனை சென்னைக்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். ஒரு தனியார் பள்ளியில் கெஞ்சிக் கூத்தாடி - அவர்கள் பிரிகேஜியில் மட்டுமே புது மாணவர்களைச் சேர்த்துக் கொள்வார்களாம் - பெருந்தொகையை டொனேஷனாகக் கொடுத்து ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். நவீன்குமார் தனியார் பள்ளியிலும் பெரிதாய் சோபிக்கவில்லை.

அவன் ஒன்பதாம் வகுப்பு முடித்ததும் பிரின்சிபால் அழைத்து, ""உங்க பையனுக்கு பாஸூன்னு போட்டு டீசி குடுத்துடுறோம். வேற எங்கயாவது கொண்டு போய் சேர்த்துக்குங்க'' என்றார்.

ஏனென்று விசாரித்தால், “""உங்க பையன் எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையில கண்டிப்பா ஃபெயிலாயிடுவான். எங்க ஸ்கூல்ல எப்பவுமே 100 சதவிகித தேர்ச்சி விகிதம் காண்பிக்குறது உங்க பையனால பாதிப்புக்கு உள்ளாகிடும்'' ன்று விசித்திரமான ஒரு காரணம் சொன்னார்.

மிகவும் கெஞ்சிய பின்பு நவீன்குமார் அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம் என்றும் ஆனால் பரீட்சை மட்டும் அவர்களுடைய பள்ளியின் ரோலில் வராமல் பிரைவேட்டாக எழுதுவது போல் ஓர் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்கள். ஆனால் ஆச்சர்யமாக எஸ்.எஸ்.எல்.சி. யில் நவீன்குமார் சுமாரான மார்க்குகளுடன் பாஸாகி விட்டிருந்தான். அதே தனியார் பள்ளியில் ப்ளஸ் ஓன்னில் சேர்த்து விட்டார். ஆனால் நவீன்குமார் அதற்கப்புறமும் படிப்பில் பெரிதாய் ஆர்வம் காண்பிக்க வில்லை.

எப்போதும் லேப்டாப்பிலேயே ஏதாவது செய்து கொண்டிருந்தான். அல்லது வீட்டின் மொட்டை மாடியில் அவன் வளர்க்கும் செடிகொடிகளைப் பராமரிப்பதில் மூழ்கி இருந்தான்.

நவீன்குமார் கிராமத்தில் பாட்டியிடம் வளர்ந்ததாலும் ஒவ்வொரு விடுமுறைக்கும் பாட்டி வீட்டிற்கே ஓடி அவளுடனேயே காடு தோட்டம் என்று அலைந்து கொண்டிருந்ததாலும் செடி கொடிகள் வளர்ப்பதில் அவனுக்கு எப்படியோ ஓர் ஆர்வம் வந்து விட்டிருந்தது.

அவனிடம் இருந்த விவசாயம் பற்றிய புரிதல்களிலிருந்து வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்துக் கொடுத்தான். ஒருமுறை பெருமாள் மகனிடம், ""ஏன்டா எப்பப் பார்த்தாலும் இந்த கம்யூட்டர் சனியனையே கட்டிக்கிட்டு அதுலயே விளையாண்டுக்கிட்டு இருக்குற?'' என்று கடிந்து கொண்டபோது, ""நான் அதுல கேம்ஸ் ஆடலப்பா; விவசாயம் பண்றதுக்கு ஒரு புரோகிராம் எழுதுறேன்'' என்றான். விவசாயம் பற்றிய நுணுக்கமான விவரங்கள் எல்லாவற்றையும் கணிணியில் பதிந்து அதன் மூலம் விவசாய வேலைகளைக் கண்காணிக்கிற சாஃப்ட்வேரை உருவாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தான்.

மழை, வெயிலின் அளவு, காற்றின் ஈரப்பதம் எல்லாம் அறிந்து எந்த நேரத்தில் விதைக்கலாம், எப்போது என்ன மாதிரியான எந்த அளவில் உரமிடலாம்? எப்போது களை பறிக்கலாம்? எப்போது அறுவடை செய்யலாம் என்றெல்லாம் கணிணியே விவசாயிகளுக்கு அறிவுறுத்துமாம்.

மண் பரிசோதனை முடிவுகளின்படி என்ன பயிரை வளர்க்கலாம்? வளரும் பயிர்களில் புழுவெட்டு மாதிரி ஏதும் பிரச்னை வந்தால் அவற்றிலிருந்து பயிர்களை எப்படி பாதுகாப்பது என்கிற விவரங்கள் அனைத்தும் அதில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறதாம்.

இதை வைத்திருக்கிற விவசாயி விதை தூவிய பின்பு அந்த விவரத்தை மட்டும் அதற்கான பாக்ஸில் கொடுத்து விட்டால் அவரைக் கணிணியே வழிநடத்தும்படி சாஃப்ட்வேரை உருவாக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தான் நவீன்குமார். அவன் பேசிய பல விவரங்கள் பெருமாளுக்குப் புரியவே இல்லை.

பெருமாள் அவருடைய மொபைல் போனில் ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் இணைய தளத்திற்குப் போய் நவீன்குமாரின் விவரங்களை உள்ளிடவும் ஊதாநிற வளையம் ஒன்று வேகவேகமாக சுற்றத் தொடங்கியது. பெருமாளின் இதயம் அதைவிடவும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

எஸ்.எஸ்.எல்.சியில் நவீன்குமார் அதிசயமாக பாஸாகி விட்டதைப் போன்ற அற்புதம் இப்போதும் நிகழ்ந்து விடாதா என்கிற நப்பாசையுடன் அலைபேசியின் ஊதாநிற வளையம் சுற்றி நிற்க காத்திருந்தார்.

இப்பொழுதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை செல்போனிலேயே பார்க்கும் வசதி வந்து விட்டது. ஆனால் பெருமாள் எஸ்.எஸ்.எல்.சி எழுதிய காலத்தில் தேர்வு முடிவுகள் தினப் பத்திரிக்கைகளில் மட்டுமே வெளிவரும்.

ரிசல்ட் வருகிற தினத்தில் எண்களாலேயே நிறைந்திருக்கும் தினப்பத்திரிக்கையின் பக்கங்களில் பரீட்சை எழுதி இருப்பவரின் ரோல் நெம்பர் கண்ணில் படுவதற்குள் இதயத் துடிப்பு எகிறிக் கொண்டேயிருக்கும்.

பெருமாளின் பால்ய நண்பன் பாண்டியன். அவன் பக்கத்து கிராமத்திலிருந்து - அவனூரில் ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது என்பதால் - பெருமாளின் கிராமத்திலிருந்த பள்ளிக்கு ஆறாம் வகுப்பில் சேர வந்தான். வந்ததுமே அதுவரை வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாக கோலோச்சிக் கொண்டிருந்த பெருமாளை ஓரம் கட்டி அவனின் இடத்தை மிக எளிதாகப் பிடித்துக் கொண்டான்.

ஆரம்பத்தில் அவனை எதிரியாகப் பாவித்து அவனுடன் படிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருந்த பெருமாள், என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும் அவனுக்கு அருகில் கூட தன்னால் நெருங்க முடியாது என்கிற நிதர்சனம் புரிந்ததும் அவனுடன் சிநேகிதமாய்ப் பழகத் தொடங்கி, அவனிடமிருந்தே பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான்.

பள்ளிப் பிள்ளைகள் எல்லோரும் பாண்டியனையே சுற்றிச் சுற்றி வருவார்கள். அவன் அவர்களுக்கு நிறைய விளையாட்டுகள் காண்பிப்பான். பாண்டியனிடம் எப்போதும் விதவிதமான தீ பெட்டிப் படங்களும் தனித் தனி சினிமா பிலிம்களும் நிறைய இருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு அக்கம் பக்கத்திலிருப்பவர்களையும் வீட்டிற்கு வரவழைத்து நிறைய வேடிக்கைகள் நிகழ்த்திக் காட்டுவான்.

பீஸாய்ப் போன குண்டு பல்பின் தலைப் பகுதியை இலேசாய் உடைத்து உள்ளே இருப்பவற்றையெல்லாம் நீக்கி விட்டு, பல்பில் தண்ணீர் ஊற்றி சூரிய ஒளியைக் கண்ணாடி மூலம் வீட்டுக் கதவின் சாவி துவாரத்தின் வழியாக அதன் மீது விழச் செய்து அதற்கு முன்னால் அவனிடமிருக்கும் பிலிமைக் காட்ட அது சுவற்றில் கட்டப் பட்டிருக்கும் வெள்ளை வேட்டியின் மீது பெரிது படுத்தப்பட்ட சினிமாவாகத் தெரியும். எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருக்கும்.
ஒன்பதாம் வகுப்பிலிருந்து பெருமாளும் பாண்டியனும் பக்கத்து கிராமமான குல்லூர்சந்தைக்குப் படிக்கப் போனார்கள். அது அவர்களின் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் - பாண்டியனின் ஊரிலிருந்து ஐந்து கி.மீ. - தூரத்திலிருந்தது. ஆரம்பத்தில் இருவரும் நடந்து தான் போய்ப் படித்தார்கள். சில நாட்களுக்கப்புறம் பாண்டியன் அவனுடைய அப்பா அவனுக்காக வாங்கித் தந்த புத்தம் புதிய சைக்கிளில் வரத் தொடங்கினான்.
குல்லூர்சந்தைப் பள்ளிக்குப் போன பின்பும் அங்கு அதுவரை  கோலோச்சிக் கொண்டிருந்த உள்ளூர் மாணவர்களை யெல்லாம் எளிதாக ஓரங்கட்டி விட்டுப் பாண்டியனே தான் முதல் மாணவனாக வந்தான். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் தினப் பத்திரிக்கைகளில் வந்த போது, ஆச்சர்யமாக தேர்ச்சி அடைந்தவர்களின் நம்பர்களில் பாண்டியனின் நம்பர் இல்லை. எல்லாரும் எப்படித் தேடியும் யார் கண்ணிலும் அவனுடைய நம்பர் அகப்படவே இல்லை.
எப்படியும் ஃபெயிலாகி விட்டோம். ஊரிலிருந்தால் அப்பாரு தொலியைக் கழட்டி விடுவார் என்று பயந்து ஊரிலிருந்து ஓடிப்போய் விட்டிருந்த மூக்கொழுகி மூக்காண்டி கூட பாஸாகி இருந்தான். ஆனால் பாண்டியனின் நம்பர் பாஸானவர்களின் பட்டியலில் இல்லை. பாண்டியன் பெயிலாவதாவது? எங்கோ ஏதோ பிசகு நடந்திருக்கிறது என்று எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரிந்தது. ஆனால் பாண்டியனைத் தான் யாராலும் சமாதானப் படுத்தவே முடியவில்லை.
எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே அடுத்த நாள் தினசரிகளில், தேர்ச்சி அடைந்து முந்தின நாள் விடுபட்டுப் போனவர்கள் என்று வருத்தம் தெரிவித்து சில நம்பர்களைப் போட்டிருந்தார்கள். அதில் பாண்டியனின் நம்பரும் இருந்தது. ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்கு பாண்டியன் தான் உயிரோடு இல்லை.
ரிசல்ட் வந்த இரவே பாண்டியன் அவர்களின் தோட்டத்திற்குப் போய் அங்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து விட்டு அங்கிருந்த மோட்டார் ரூமில் படுத்து நிரந்தரமாய்த் தூங்கிப் போய்விட்டான்.
பாண்டியனைப் பற்றி நினைத்ததுமே பெருமாளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு விழிகளில் திரையிட்டது.
பாண்டியன் அப்படி ஒரு பெரிய மேதையாக மலர்ந்திருக்க வேண்டியவன்; ஆனால் அற்பக் காரணத்தினால் அகாலத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள நேர்ந்து விட்டது.
சுற்றிக் கொண்டிருந்த நீலவளையம் நின்றதும் நவீன்குமாரின் தேர்வு முடிவுகள் அலைபேசியின் சின்னத் திரையில் விரிந்தது. அவன் கணிதத்திலும் இயற்பியலிலும் ஃபெயிலாகி இருந்தான்.
பெருமாளுக்கு கண்கள் இருண்டு மயக்கம் வரும் போலிருந்தது. சமாளித்துக் கொண்டு மகனைப் பார்த்தார். கொஞ்ச தூரத்தில் அவன் கணிணியில் மூழ்கி செய்து கொண்டிருந்ததைத் தொடர்ந்து கொண்டிருந்தான். பெருமாளின் மனதுக்குள் அடுத்த பிரச்னை தலை தூக்கியது. தேர்வு முடிவுகளை மகனிடம் எப்படித் தெரிவிப்பது?
ஃபெயிலாகி விட்டோம் என்று தெரிந்ததும் அவன் விபரீதமாக ஏதும் செய்து கொண்டால் என்ன செய்வது என்று பதறத் தொடங்கினார் பெருமாள்.
மகனிடம் எப்படி அவனுடைய மனதை நோகடித்து விடாமல் தேர்வு முடிவுகளை சாமர்த்தியமாய் தெரிவிப்பது என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த போது, அவன் ""சக்ஸஸ்; சக்ஸஸ்''  என்று சந்தோஷமாய்க் குரல் எழுப்பினான்.
பெருமாள் ஆச்சரியமாய், ""என்னாச்சுப்பா?'' என்றார் அவரிடத்தில் இருந்தபடியே.
""நான் சொல்லிக்கிட்டு இருந்தேன் இல்லப்பா, விவசாயம் சம்பந்தமான சாஃப்ட்வேருக்கு புரோகிராம் எழுதுறதா? அது வெற்றிகரமா முடிஞ்சுருச்சுப்பா. இதை ஏதாவது ஒரு கம்பெனியில குடுத்து மார்க்கெட் பண்ணனும்ப்பா. இதை வாங்குற என்னைப் போன்ற இளைஞர்களுக்கெல்லாம் விவசாயம் பண்ணிப் பார்க்கலாம்னு ஒரு ஆர்வம் வரும்ப்பா''
பெருமாள் மெதுவாய் எழுந்து மகனிடம் போய் ஆதரவாய் அவனுடைய தோளைத் தொட்டார். 
""என்னப்பா ஃபெயிலாயிட்டனா?'' என்றான் நவீன் சிரித்தபடி.
பெருமாள் துக்கம் பொங்கும் முகத்துடன் தலை அசைக்கவும், ""விடுப்பா; ஒரு பரீட்சையில தேறலைன்னா எல்லாமே முடிஞ்சு போயிருச்சா என்ன? தோல்விங்குறது எப்பவுமே வாழ்க்கையோட முடிவு இல்லப்பா. அதுவும் ஒரு நிகழ்வு; அவ்வளவு தான். அதைக் கொஞ்சம் கவனமாக் கடந்து வந்துட்டம்னா அது நம்மளப் பெரிசா பாதிக்காது. நீ கவலைப் படாதப்பா; கொஞ்ச நாள்ல இப்ரூமெண்ட் எக்ஸாம் வைப்பாங்க. அதுல எழுதி கண்டிப்பா பாஸாகிடுவேன்ப்பா''” என்றான் நம்பிக்கையாக.
அப்போது பெருமாளின் கண்களுக்கு அப்பன் சிவனுக்கே பாடம் சொன்ன முருகப் பெருமானாகத் தெரிந்தான் அவருடைய மகன் நவீன்குமார். அவணை அணைத்துக் கொண்டார் கண்ணீர் மல்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com