நெஞ்சம் கவர்ந்தவை!

தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது. பகட்டான ஜிகினா பொய்களும் அலங்கார மிடுக்குகளும் நிறைந்த தமிழ் சினிமா, மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத்
நெஞ்சம் கவர்ந்தவை!
Published on
Updated on
5 min read

தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது. பகட்டான ஜிகினா பொய்களும் அலங்கார மிடுக்குகளும் நிறைந்த தமிழ் சினிமா, மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறது. அப்படி அச்சு அசலாக நம் வாழ்க்கையை கடந்த ஆண்டில் பேசிய சினிமாக்களின் வரிசை!

அசுரன்

வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் அசுரன் நடத்தியது அற்புதப் பாய்ச்சல். கதையின் இறுதியில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் சொல்லும்
வசனம்: ""நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ... ரூவா இருந்தா பிடுங்கிக் கிடுவானுவ... படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம். அதிகாரத்துக்குப் போ. ஆனா, அவங்க நமக்குப் பண்ணதை நீ யாருக்கும் பண்ணாதே!'' இதுதான் இந்தக் கதையின் மையம். ஒரு நாவலை சினிமாவாக மாற்றுவது மிகப்பெரிய சவால். அதை வெற்றிகரமாகக் கையாண்டார் இயக்குநர் வெற்றி மாறன். ஒரு கொலையை நிகழ்த்தும் சிறுவன் சிதம்பரம், பதிலுக்கு அவன் கொலைசெய்யப்படாமல் காக்கத் துடிக்கும் சிவசாமியின் குடும்பம் என்று எழுத்தாளர் பூமணியின் "வெக்கை' நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்தது "அசுரன்'. அது, வெறுமனே சிதம்பரத்தின், சிவசாமியின் கதையை மட்டும் சொல்லவில்லை. ஆயிரம் ஆண்டுகால தமிழ் சமூக வரலாற்றையும் சமீபகால நிகழ்வுகள் அதில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சேர்த்துச் சொல்லி கவனம் ஈர்த்தது.

நெடுநல்வாடை

தாத்தாவுக்கும் மகள் வழிப் பேரனுக்குமான அன்பு எங்கெங்கும் நிரம்பி கிடந்ததுதான் கதையின் சிறந்த பலம். உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும் சொல்லுவதாக இருந்தது கதை. ""அம்மாவுக்கு சொத்துல பங்கு இருக்கா தாத்தா?''
""இருந்து என்னடா செய்ய... ஊரு பய கொடுக்க வுடுவானா...''
""ஏன்...?''
""பொம்பள பிள்ளையில்ல... அதுதான்...'' இதுதான் லைன். தாத்தா பாசம்தான் பாடு பொருள். பேரன்பும் ஈரமும் நிரம்பிய வெள்ளந்தியான தீவிரவாதி இந்த தாத்தா. கிராமத்து தெருக்கள், வரட்டிகள் ஒட்டப்பட்ட குட்டிச் சுவர், விவசாய பூமி, வெள்ளந்தி மக்கள், புன்னகை, விசாரிப்பு, சிநேகம், காதல், வலி என பட்டிக்காட்டு சுற்றுப் பயணம் காட்டும் விதத்தில் கவர்ந்தது அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணனின் இயக்கம்.
"பூ' ராமுவுக்கு இது ஃலைப் டைம் படம். ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிக்க வெகுளி தாத்தாவாக அபாரமான உழைப்பு. காதல் ரணகளம், மண் மணம், புழுதி, வயல் வரப்புகள், கரும்புக் காடு என ஒவ்வொரு இடத்தையும் கதையின் பார்வையில் நின்று பதிவு செய்த விதத்தில் கடந்த ஆண்டின்
முக்கியப் பதிவு இந்தப் படம். தமிழ் சினிமாவின் அசுரப் பசிக்கு, இது சங்கு பால் மட்டுமே. ஆனாலும்... இது தாய்ப் பால்.

தோழர் வெங்கடேசன்

அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் இந்தப் படம் பேசிய விதம் புதிது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. தன் பயணத்தில் சந்தித்த ஒரு பெண்... அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் புனைவு எல்லாவற்றையும் கதையாக்கி இருந்தார் இயக்குநர் மகா சிவன். அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்த சினிமா. காதலர்களுக்குள் நிரம்பி கிடந்த அன்பு உங்களைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

அழியாத கோலங்கள் 2

பத்திரிகை, எழுத்து, உலக சினிமா என எப்போதும் இயங்கி வந்த எம்.ஆர். பாரதியின் அறிமுக சினிமா. கடந்து போன காலங்கள்தான். காதல்தான். காதல் என்பது எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் என்பதைச் சொன்னது இப்படம். மலையின் முன் நிகழும் அற்புதம். காதலும் கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறப்புதான். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். கடந்த காலத்தில் நம் வாழ்வை அழகாக்கிய உறவை மீட்டெடுப்பது ஒருவேளை விபரீதத்தில் முடிந்தால், அதன் பின் வரும் இடர்களை எதிர்கொள்வதற்கு என்ன விதமான பக்க பலம் ஒருவருக்குத் தேவைப்படுகிறது என்பதே கதை. அர்ச்சனா, ரேவதி, பிரகாஷ்ராஜ் என எல்லோருமே அத்தனை பலம். கதாபாத்திரங்களில் ஒன்றியிருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நடக்கிற கதை. பாலுமகேந்திராவின் 40 ஆண்டுகால சினிமா பயணத்துக்கான நினைவைப் போற்றும் வகையில் வந்தது படம்.

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. போர் என்பது இனி ஆயுதங்களைக் கொண்டு நடக்காது. அப்படி நடந்தால் அவற்றுக்கு எல்லைகள் உண்டு. இனி மனித குலம் சந்திக்கும் போர்ச்சூழல்களுக்கு எல்லைகளே கிடையாது. சொல்லப் போனால் அந்தப் போருக்கு ஆயுதங்களே இருக்காது. எல்லாமே அணுக் கதிர் வீச்சுதான். அந்த கதிர்களுக்கு எல்லை இருக்காது. மனிதம் தெரியாது. பாகிஸ்தான் மனிதன், இந்திய மனிதன், அமெரிக்க மனிதன், ஈரான் மனிதன் என அந்த கதிர் வீச்சுகளுக்கு பிரித்துப் பார்க்கத் தெரியாது. இப்படி போர்ச் சூழல் அரசியலை காட்சிக்குக் காட்சி பேசியது படம். இதுவரை பயணிக்காத சூழல், எதார்த்தம் என கடந்த ஆண்டில் முக்கிய படம் அது. அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை.

தொரட்டி

ஒருவரின் வாழ்க்கையைப் படம்பிடிப்பது ஒரு வகை சினிமா என்றால், ஒரு வாழ்வியலையே படம் பிடிப்பது மற்றொரு வகை. இது இரண்டாவது வகை. ஒரு புவியியல் அமைப்பையும் அதில் வாழும் மக்களையும் இயல்பு மீறாமல், உண்மைத்தன்மையோடு காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மிகக் குறைவு. இதன் நம்பகத்தன்மை வாய்ந்ததாகத்தான் இருந்தது. பி.மாரிமுத்துவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், சில சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றது. "கிடை' மனிதர்களின் நட்பு, துரோகம், ஏமாற்றம் என பலவற்றை பேசும் சினிமா இது. நம்மில் பலர் பழகாத ஒரு வாழ்க்கை. இப்படியாகவும் சில மனிதர்கள் இருந்திருப்பார்கள் என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த வாழ்க்கைக்குள் கடத்திச் செல்லும் முனைப்பு. செல்போன் கோபுரம், கேபிள் வயர்கள், போக்குவரத்து சத்தங்கள் இல்லாத பகுதிகளில்தான் படப்பிடிப்பு என உழைப்பின் அசாத்தியம்.

கைதி

டூயட் இல்லை, கதாநாயகி இல்லை... ஆனால், பரபரப்புக்குப் பஞ்சமில்லாத எழுத்தால், திரைக்கதையால் கவனம் ஈர்த்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமிஷனர் அலுவலகம், பங்களா, காடு... மூன்றே தளங்கள். அத்தனை இடத்துக்கும் நாமும் சுற்றி வருவது போன்ற உணர்வைக் கொடுத்தது சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு. குறிப்பாக, ஆக்ஷன் காட்சி
களிலும், கமிஷனர் அலுவலகத்தில் நடக்கும் களேபரங்களிலும் ஒளிப்பதிவு உழைப்பு அபாரம். போலீûஸத் துரத்தும் வில்லன் கும்பல், வில்லன்களிடமிருந்து போலீûஸக் காப்பாற்றும் ஒரு கைதி. வித்தியாசமான களத்தில் முடிந்த அளவுக்கு லாஜிக் மீறல்கள் இருக்கக் கூடாது என மெனக்கெடல்.

திறக்கப்படாமல் இருக்கும் புதிய கட்டடம், பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய பில்டிங்கில் இருக்கும் சுரங்கம், கதைக்களமான திருச்சி ரயில்வே டிராக்கில் ஸ்பீக்கர் போட்டு பாட்டு கேட்டு மாட்டிய கல்லூரி மாணவர்கள்; பிறகு அந்த ஸ்பீக்கர் பயன்படும் இடம், புதிதாக வேலைக்கு வந்த கான்ஸ்டபிளின் சாதுர்யம், வில்லன் கேங்கில் இருக்கும் போலீஸ், போலீஸ் கேங்கில் இருக்கும் வில்லன்... என ஒரு பாதியில் நல்ல விவரங்கள். ஆனால், இரண்டாம் பாதியில் துரத்தல்... துரத்தல். ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.

ஹவுஸ் ஓனர்

சென்னைப் பெருவெள்ளத்தின் ஒரு துளி கோர முகம் இந்த ஹவுஸ் ஓனர்! 2015-ஆம் ஆண்டு சென்னைவாசிகளை அச்சுறுத்திய அந்தப் பெருவெள்ளத்தின் ஒரு நாள்... உதிரமாய், கண்ணீராய் வாழ்க்கையை மாற்றிவிட்ட அந்த நாளில் வீட்டுக்குள் இருந்து வெளியேற முடியாத கிஷோர் - ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு நடந்தது என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட வைத்தது கதை. பேய், அமானுஷ்யம் என எதுவும் இல்லாமல், தண்ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதித்தார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.அன்பை, அவஸ்தையை, பிரிவை, நினைவை அள்ளி அள்ளி இரைத்தபடி, பெய்கிற மழையைப் படம் பிடித்த விதத்தில் அத்தனை ஈரம். இமையில் பட்டுத் தெறிக்கும் ஒரு துளியைப் போல, ஜன்னலில் நடனமாடும் குல்மொஹரைப் போல, வெளியே எட்டிப் பார்த்தால் கொஞ்ச நேரத்தில் தலையில் சொட்டும் ஈரம் போல, குடையில் கொஞ்சம் பள்ளம் பறித்து முட்டியை நனைக்கும் நீரைப் போல திரையில் எங்கெங்கும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து நெகிழ வைத்தது.

தம்பி

15 ஆண்டுகளுக்கு முன்பும் சமகாலத்திலும் நடக்கும் பல சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறான் "தம்பி. ட்விஸ்ட், அதற்குள் ஒரு ட்விஸ்ட் என நம்மை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் திரைக்கதை மட்டுமே படத்தின் பெரிய பலம். இவரா, அவரா எனக் கணிப்பதிலேயே இரண்டாம்பாதி வேகமாகச் சென்றது. ஆனால் முதல்பாதி முழுக்க ஏற்கெனவே பார்த்துச் சலித்த காட்சிகள். இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் லாஜிக்குகளை மறக்கடிக்கும் மேஜிக் இந்தப் படத்தில் மிகக்குறைவு. கார்த்தியின் எனர்ஜிதான் படத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தியது. பாசக்கார - கோபக்கார அக்காவாக ஜோதிகா. காட்சிகள் குறைவென்றாலும் முகத்தில் மிளிரும் உணர்ச்சிக் கலவை திரையில் தெறிக்கிறது. சத்யராஜ், சீதா, சௌகார் ஜானகி என நட்சத்திர பட்டாளம். வாழ்க்கையின் ஒரு துளியாக ஒளிர்ந்தான் இந்த தம்பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com