ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அபராஜித தூபம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அபராஜித தூபம்!

வயது, பலம், எதிர்ப்பு சக்தி, இயற்கை, பழக்க, வழக்கம், மன தைரியம், உணவு ஆகிய எல்லாவற்றிலும் மனிதர்கள் வெவ்வேறு தரத்திலிருக்கிறார்கள்.
Published on

வயது, பலம், எதிர்ப்பு சக்தி, இயற்கை, பழக்க, வழக்கம், மன தைரியம், உணவு ஆகிய எல்லாவற்றிலும் மனிதர்கள் வெவ்வேறு தரத்திலிருக்கிறார்கள். வெவ்வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். அப்படியிருந்தும் ஒரே காலத்தில் பலருக்கு கரோனா வைரஸினால் வியாதி ஏற்படுகிறதே?

நடராஜன், திருச்சி.

மனிதர்களுடைய வியாதிகளின் காரணம் இருவகையானது.  சாதாரணம், அசாதாரணம் என்று. அவரவரின் அபத்தியத்தினால் அவரவரின் உடல் தாதுக்கள் கெட்டு வியாதி விளைதல் தனிப்பட்டதால் இது அசாதாரண காரணம். ஆனால் உலகில் வாயு, தண்ணீர், ஆகாயம், பூமி, நெருப்பு, காலம், தேசம் ஆகிய இவை எல்லாருக்கும் பொதுவானவை. இவற்றின் இயற்கை குணங்கள் மாறுபட்டால், பல தரங்களில் வேறுபட்டிருக்கும். அனைத்து மக்களையும் ஒரே மாதிரி வியாதி ஒரு சிலநாட்களுக்குள் பரவி பீடிக்கும். எல்லாருக்கும் வாயு முதலியவை பொதுவானதால் அவற்றினால் ஏற்படும் பொது வியாதிக்கான காரணம் சாதாரண காரணம் என்று அறியவும்.  

கெட்டுள்ள வாயு, தண்ணீர், கால தேசங்கள் நோய் மூலம் மக்களை நாடு முழுவதும் சூறையாடும்போது, மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தல் களான தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பு  போட்டு துப்புரவாகக் கழுவுதல், கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல் போன்றவற்றுடன் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் உணவுகள் பற்றிய பரிந்துரைகள், மிக அவசியமிருந்தாலொழிய  வெளியே செல்லாதிருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்  நாம் இருக்கிறோம். 

ஆயுர்வேத  பரிந்துரைகளான பஞ்சகர்மா எனும் சுத்திமுறைகள், பலம் புஷ்டிகளைத் தரும் ரசாயனங்களை உபயோகித்தல், பிரம்மசர்யத்தை அனுஷ்டித்தல், முறைப்படி ருதுசர்யா  எனும் பருவகாலங்களுக்குத் தகுந்தவாறு வாழ்க்கை முறையை  சீராக்கிக் கொள்ளுதல், தினசர்யா எனும் காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கையாளுதல், ராத்ரிசர்யா  எனும் இரவு வேளையில் அமைத்துக் கொள்ளும் உணவு மற்றும் படுக்கை வசதிகள், தேவதா பூஜைகள், நவக்கிரக சாந்தி ஜய ஹோமங்கள் முதலியவற்றின் மூலம் பாப பரிகார பிராயச்சித்தங்கள் பலமாய் விதிப்படிக்கு அனுஷ்டித்தல், சத்யம் தயாதாக்ஷிண்யங்களுடன் இருத்தல் இவையே உயர்ந்த  உண்மையானபடி ஒட்டுவாரொட்டி வியாதிகளைத் தடுக்க வல்லவை.

நாடு  எங்கும் சேர்ந்தாற்போல ஏக காலத்தில் நோய் வீசுவதால் இந்த வியாதியின் விதை எங்கும் நிறைந்த வாயு மண்டலத்தில் இருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. வியாதி விதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வியாதி விதை நிறைந்த வாயுவை சுவாசித்தாலும், ஸ்பரிசத்தினாலும் ஒரே நேரத்தில்  பலரையும் பாதித்துவிடுகிறது. 

கேரளத்தில் இதை உணர்ந்து "அபராஜித தூபம்' எனும் புகையை அதிலுள்ள மூலிகைகளினால் எழுப்பி காற்றைச் சுத்தப்படுத்தி, கிருமியை அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஊர் முழுவதும் புகையைப் போடுவது சாத்தியமில்லை என்பதால் வீட்டினுள்ளே போடும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. 

வசம்பு, நான்முகப்புல், அகில், வேம்பு, எருக்கு, தேவதாரு, குக்குலு, செல்செல்யம் ஆகிய மூலிகைகளைக் கொண்டு புகைபோடும் வழக்கத்தை அவர்கள் தொடங்கியுள்ளார்கள். தமிழகத்தில் இதைக் கொண்டு வந்தால் மிகவும் நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com