காதலும் கடந்து போகும் 

முகுந்தன் இந்த மாதிரி சொல்வான் என்று காயத்ரி எதிர்பார்க்கவேயில்லை. சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனா சொன்னான்...
காதலும் கடந்து போகும் 

முகுந்தன் இந்த மாதிரி சொல்வான் என்று காயத்ரி எதிர்பார்க்கவேயில்லை. சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனா சொன்னான்... இரு காதுகளாலும் கேட்டாள். அவன் தான் சொன்னான். உயிரோடு உயிராகக் காதலித்து அவளைக் கை பிடித்தவனா இப்படிப் பேசுகிறான்? அலுவலகத்தில் இருந்து வந்த அவளுக்கு முகம் கழுவக் கூடத் தோன்றாத அதிர்ச்சி நிலை. அப்படியே சோபாவில் உட்கார்ந்து விட்டாள். உடல் சோர்வில் சூடாக ஒரு காப்பி சாப்பிட்டால் தேவலை போல இருந்தது. ஆனால் முகுந்தனின் வார்த்தைகள் அவளை அடித்துப் போட்டல்லவா விட்டன?

""காயத்ரி, நான் உன்னைப் பார்த்த விநாடியிலிருந்தே என் மனசை உன் கிட்ட பறி கொடுத்துட்டேன். ஐ லவ் யூ. நீ இல்லாம என்னால வாழ முடியாது...'' தைரியமாக ஒரு பெண்ணிடம் காதலை வெளியிடும் முதல் வார்த்தைகளே இவ்வளவு ஆணித்தரமாக இருந்தது அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததோடு மட்டும் இல்லாமல்,கண்ணியமாகத் தெரிந்ததால் மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அது கழுதையின் முதுகில் வைக்கப்பட்ட கடைசிப் பொதிதான். ஏற்கெனவே இவளும் அல்லவா அவனிடம் மனதைப் பறி கொடுத்திருந்தாள். விழுந்துவிட்டாள். அவன் "ஐ லவ் யூ' சொல்ல, வார்த்தைகளை உபயோகப் படுத்த, இவள் கன்னங்களை உபயோகப் படுத்தினாள். கன்னங்கள் நாணத்தால் சிவந்தன. அவள் வேலை செய்து கொண்டிருக்கும் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஓர் இஞ்சினியர் முகுந்தன்.

""உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் முகுந்தன்'' முதல் முறை ஓர் ஓட்டலுக்குச் சென்ற போது சொன்னாள் அவள்.

""ஐ லவ் யூதான. அதான் முன்னாடியே சொல்லிட்டியே காயத்ரி''

""ம்...ம்... அது சொல்லித்தான் தெரியணுமாக்கும். நான் நீங்க பேங்குக்கு வரும்போது உங்களைப் பார்க்கற பார்வையை வைச்சுத்தானே தைரியமா உங்க காதலைப் போட்டுஉடைச்சீங்க...'' ஜூûஸப் பருகியவாறே சொன்னாள் அவள்.
""ஆப்பிள் ஜூஸ் உன் தொண்டையில இறங்கறது எப்படி அப்படியே தெரியுது...'' குழைந்தான்அவன்.
""காதலிக்கும் போதுதான் எப்படி வழியறீங்க?'' நாணினாள்.
""அப்ப எத்தனை பேரும்மா உன்னைக் காதலிச்சிருக்காங்க. அனுபவம் பேசுதா?'' செல்லக் கோபம்
காட்டினான்.
""ரெண்டு கோடியே முப்பது பேர்... அடச்சீ... படிச்சதை வைச்சு சொன்னா... அப்பா இந்த ஆம்பளைங்களே...''
""ஐயோ ஆரம்பிக்காதம்மா... ஏதோ முக்கிய விஷயம் சொல்லணும்னியே என்னது அது.? ''
""முக்கியமான விஷயம்தான் முகுந்தன். என் அப்பா காலம் ஆயிட்டார்னு சொன்னேனே. நான்தான் என் வீட்டுல சம்பாதிக்கறவ. என் அம்மாவுக்கு ஃபேமிலி பென்ஷன் வருதுதான். ஆனா அது ரொம்பக் கொஞ்சம். குடும்பத்தை நடத்தப் போதாது. தங்கையும் தம்பியும் படிக்கறாங்க. úஸா... அவங்க ஒரு வேலைக்குப் போற வரைக்கும் என் சம்பளத்தை என் வீட்டுக்குத்தான் கொடுப்பேன். சம்மதமா?'' கேட்டாள்.
""ஏம்மா, நாம காதலிக்க ஆரம்பிச்சு ரெண்டு மாசமா அப்படித்தானே பண்ணறே?''
""ஐயோ...நான் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் சொன்னேன். இதோ பார்ரா. காதலிக்கும் போதே
காதலன் வீட்டுக்கு காதலி தன் சம்பளத்தை கொடுப்பாளாம். நல்லா இருக்கே நியாயம்''
""இதோ பார், இந்த ஆப்பிள் ஜூஸýக்காக நாம எவ்வளவு விலை கொடுக்கறோம் பார்த்தியா. அப்படி இருக்கும்போது இந்த ஆப்பிளுக்காக நான் என்ன விலையையும் கொடுக்கத் தயாரா இருக்கேன்...'' சொல்லியபடி அவளைக் காட்டினான்... அவன் முகம் முழுவதும் காதல் நடனம் ஆடியது.
""நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்?'' கேட்டாள்.
""அழகு அவ்வளவும் காயத்ரியா இருக்கு'' சொன்னான். வெட்கத்தில் தலை குனிந்தாள். அவள் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் முகுந்தன் கலந்து அவளை இன்பப் பாடுபடுத்தினான்.
அன்று ஒப்புக் கொண்டு இன்று... இப்படி குண்டைத் தூக்கிப் போடுகிறானே இந்த முகுந்தன்?
சம்பளக் கவரில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தாள். சாமி அறையில் இருந்து எடுத்து. ""கல்யாணம் ஆனதும் என்னோட முதல் சம்பளம். இந்தாங்க உங்க கையில ஆயிரம் ரூபாய். சென்டிமென்டலா...'' சொன்ன அவள் கையில் சம்பளக் கவர் இருந்தது.
""சென்டிமென்டல், டெசிமென்டல் எல்லாம் இருக்கட்டும். நல்லா இரு. ஆமாம் வெறும் ஆயிரம் ரூபாய்தானா. மீதி சம்பளம்?'' முகுந்தன் கேட்ட உடனேயே அவள் அதிர்ந்தாள்.
""மீதி சம்பளமா... என் வீட்டுக்கு... நான் ஏற்கெனவே உங்க கிட்ட கேட்டுக்கிட்டபடி. நீங்க ஒத்துக்கிட்ட படி. ஓகே''
அதைக் கேட்டதும் மாறிய முகுந்தன் முகம் போல மாற்றம் எதையும் அவள் இதுவரை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. "இந்த ஆப்பிளுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயாரா இருக்கேன்' என்று சொன்ன அதே முகுந்தனா இவன்...
""என்ன காயத்ரி...ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி டியர். நான் உன்னைக் காதலிச்சது உன் அழகுக்காக மட்டும் இல்லேம்மா. உன்னோட சம்பளத்துக்காகவும்தாம்மா...''
""நான் கேட்டப்போ நீங்க ஒத்துக்கிட்டது?''
""நீ நம்பிட்டியா. உன் கிட்ட என் காதலைச் சொன்ன அதே ஸ்டைல்ல சொல்றேன். உன் சம்பளப் பணத்தை அப்படியே முழுசா என் கிட்ட கொடுத்துடணும். ஒரு பைசா கூட உன் வீட்டுக்குத் தர முடியாது. வேணும்னா மாசா மாசம் உன் வீட்டுக்கு ஒரு முழம் மல்லிப்பூ, ஒரு டஜன் வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துடு... சம்பளத்தன்னைக்கு. ஓகே'' ஆணித் தரமாக சொல்லி விட்டு ஸ்டைலாக நின்றான்.
""சும்மா விளையாடறீங்கதானே?'' கேட்டாள்.
""உன் சம்பளக் கவரை என் கிட்ட கொடுக்காம நீதான் விளையாடறே'' - சொன்னான்.
""ஏங்க... ஏங்க... என் தங்கை தம்பி ஒரு வேலைக்குப் போற வரைக்கும்தாங்க. அது வரைக்கும்தானே கேட்டேன்''
""நீ எவ்வளவு கெஞ்சினாலும் அலவ் பண்ண முடியாது காயத்ரி'' அவன் சொல்ல, காயத்ரியின் குரல் தடித்தது.
""வாட், நீங்க அலவ் பண்ணறதா. வாட் நான்சன்ஸ் யூ ஆர் டாக்கிங். உங்க பர்மிஷன் எனக்குத் தேவை இல்லை. என் சம்பளம் என் வீட்டுக்குத்தான். நீங்க யார் பர்மிஷன் கொடுக்கறதுக்கு?''
""அப்ப உன் சம்பளத்தை உன் வீட்டுக்குத்தான் கொடுப்பே?''
""நிச்சயம்''
""நான் இவ்வளவு சொல்லியும்''
""நீங்க யார் சொல்ல?”
அதிர்ந்தான். அடுத்த கணம் இடித்தான்.
""அப்ப உடனே நடையைக் கட்டு இப்பவே உன் வீட்டுக்கு. இனிமே ஒரு நொடி நீ இங்க இருக்க முடியாது'' கையை வெளிப்புறம் நோக்கி காட்டினான்.
இப்பொழுது இவள் முறை. அதிர்ச்சியின் விளிம்பில் இவள்.
""என்ன சொல்றீங்க. என் மேல உயிரையே வைச்சிருக்கேன்னு சொல்லிட்டு இப்ப.. .''
""அதுல இப்பவும் எந்த வித மாற்றமும் இல்லை. நீ உன் சம்பளக் கவரை என் பாக்கெட்டுல வைச்சா... மறுத்தா கெட் அவுட். எனக்கு உன் சம்பளம் வேணும். நாம எப்படிப் பட்ட வளமான வாழ்க்கை வாழணும்னு கோட்டை கட்டி வைச்சிருக்கேன்னு தெரியுமா?''
""அந்தக் கோட்டையெல்லாம் நிச்சயம் கட்டலாம்க. கொஞ்ச நாள். என் தம்பி, தங்கை...''
""ஷட் அப்...'' கத்தினான்.
""உன் தம்பி தங்கை நாச...''
""யூ ஷட் அப்...'' அவன் பேச்சைத் தடுத்துக் கத்தினாள்.
""என் தம்பி தங்கையைப் பற்றி ஒரு வார்த்தை
பேசினீங்க...''
""நான் உன் சம்பளத்தைப் பற்றி மட்டும் பேசறேன். அதை என் கிட்ட கொடு. இல்ல உன் வீட்டுக்குப் போ'' அவன் பேச, அவள் யோசிக்கத் தொடங்கினாள். அவன் முகத்தில் ஒரு விபரீத புன்முறுவல் தோன்றத் தொடங்கியது.
""உன்னால பெட்டி படுக்கையைத் தூக்கிட்டு உன் வீட்டுக்குப் போக முடியாதே....ஹே ஹே...''
""வாட் டூ யூ மீன்?'' கேட்டாள்.
""என்ன வாட் டூ யூ மீன். உன் அம்மாவுக்கு ஹார்ட் ரொம்ப வீக்குன்னுதான் சொல்லி இருக்கியே. இந்த அதிர்ச்சியை அவங்களால தாங்க முடியாது. அவங்களுக்கு ஒண்ணு ஆயிடுச்சுன்னா உன்னால தாங்க முடியாது. úஸா சமர்த்தா சம்பளக் கவரை என் கிட்ட கொடுத்துடு செல்லம். போ... உள்ள போய் காப்பி போட்டுக் கொண்டு வா. எனக்கு வேணும் போல இருக்கு. நீயும் டயர்டா இருக்கே. போடா செல்லம். சம்பளத்தை மட்டும் என் கிட்ட மாசா மாசம் கொடுத்துடுடா என் செல்ல ஆப்பிள்...'' அவள் கன்னத்தைக் கிள்ளினான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சூடான இரண்டு கோப்பைகளில் காப்பியோடு வந்தாள் காயத்ரி. அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். காப்பியைப் பருகி முடித்தாள். அவனும்.
""முகுந்தன்...நீங்க சொன்னது... என் தம்பி, தங்கை படிச்சு முடிச்சு வேலைக்குப் போற வரைக்கும்... என் சம்பளத்தை...'' ஆரம்பித்தாள்.
""உன் சம்பளத்தைப் பற்றி மட்டும்தான் பேசறேன். அதை நீ என் கிட்ட தான் கொடுக்கணும். உன் வீட்டுக்குக் கொடுக்க முடியாது'' ஆணித்தரமாகச் சொன்னான். கண்களில் கண்ணீருடன் வீட்டுக்குள் சென்றாள். திரும்ப வரும் போது அவள் கையில்...
""வாட் காயத்ரி...அப்ப உன் அம்மாவைப் பற்றின கவலை உனக்கு இல்லையா. அவங்க இதய பலவீனம்...'' அவள் கையில் பெட்டியைப் பார்த்துக் கேட்டான்.
""இருக்கு மிஸ்டர் முகுந்தன். இருக்கு. ஆனா என்ன செய்யறது?''
""என்னம்மா சொல்ற. அதிர்ச்சியில அவங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆனா...நோ நோ அது தப்பு இல்லையா?''
""சினிமா வில்லன் மாதிரி பேசறீங்களே. உங்க உண்மையான ஸ்வரூபம் தெரியாம... சே. இதோ பாரு முகுந்தன், என் நிலைமையைப் பார்த்து என் அம்மாவுக்கு ஒண்ணு ஆனாலும் ... ஆக வேண்டாம்... ஆனாலும் வேற வழி இல்லை. ஏன்னா இப்ப அதை விட என் தம்பி, தங்கையோட வாழ்க்கைதான் முக்கியம். என் அம்மா கிட்டத்தட்ட 70 வயசு வாழ்ந்துட்டாங்க. என் தம்பி, தங்கை, வாழ்க்கையின் முக்கியமான கட்டத்துல இருக்காங்க. úஸா எது முக்கியம்னு எனக்குத் தெரியும்'' வீட்டு வெளிக் கதவை அடைந்தவள் திரும்பினாள்.
""இனிமே நீ மனம் திருந்தி வந்தாலும்... ஒரு வேளை... என் முடிவு முடிவுதான். மாறாது. ஒரு மிஷினோட என்னால வாழ முடியாது. என் வாழ்க்கையில முகுந்தன்கிற ஒரு மிருகத்தை நான் அணுவளவும் நுழைய விட மாட்டேன்... டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பறேன்...'' படார் என்று கதவைத் தள்ளி விட்டுச் சென்றாள் காயத்ரி. ஓடினான். திறக்க முடிந்தது கதவை மட்டும்தான். மூடப்பட்ட இவன் சொந்த வாயை இவனால் திறக்க முடியவில்லை. காயத்ரியின் நிழல் கூட இவன் பார்வையை விட்டு மறைந்தது. மெது மெதுவாக... கடைசி முறையாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com