ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரோனா தொற்றைத் தடுக்க...!

சமூக இடைவெளியைச் சற்றும் பார்க்காமல் கும்பலாக ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு டவுன் பஸ்ஸில் எங்கள் ஊர்ப்பக்கம் மக்கள் பயணிக்கின்றனர்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரோனா தொற்றைத் தடுக்க...!
Updated on
2 min read

சமூக இடைவெளியைச் சற்றும் பார்க்காமல் கும்பலாக ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு டவுன் பஸ்ஸில் எங்கள் ஊர்ப்பக்கம் மக்கள் பயணிக்கின்றனர்.  கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன்.  உடலைத்  திடப்படுத்திக் கொள்ள வழி என்ன?

ராஜேந்திரன், விருதுநகர்.

மூச்சுக் காற்று, இருமல், தும்மல், காரி உமிழ்தல் போன்றவற்றால் வைரஸ் தொற்று உள்ளவர், மற்றவர்களுக்குப் பரப்பிவிடுகிறார்.  கண், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் மிக எளிதாக உள்ளே நுழைந்துவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால், நீங்கள் இந்த மூன்று பாதைகளையும் மிக முக்கியமாக, வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கான சில ஆயுர்வேதத்தின் அறிவுரைகளைப் பின்பற்றுவது நலம் தரும். 

நயனாமிருதம் எனும் கண் சொட்டு மருந்தை இரண்டு சொட்டுகள் கண்களில் விட்டுக் கொள்ளவும். இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?  கண் பார்வைக்கு வலுவூட்டும், கண்புரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், கண்களில் நீரைத் தாரையாக வார்த்து அதை வெளியேற்றும் சக்தியை ஏற்படுத்தித் தரும்.  கண் நரம்புகள் பலவீனமடையாமல் என்றும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். வெண்மை, கருமை மற்றும் இமைகளைப் பிரித்தால், அதன் அடியில் காணும் சிவப்பு ஆகிய நிறங்கள் தெளிவுறுவதால், கண்கள் பார்ப்பதற்கும் அழகாக  விளங்கும். நேத்ராமிருதம், இளநீர்க்குழம்பு போன்ற கண் மருந்துகளும் இதே நன்மைகளைச்  செய்பவை.

கண்களைச் சார்ந்த அழுக்குகள், தூசி மற்றும் கப - பித்த தோஷங்களின் சீற்றம் போன்றவை, மேற்குறிப்பிட்ட சொட்டு மருந்துகள் மூலம்  இளக்கப்பட்டு, மூக்கினுள் நுழைந்துவிடுவதால், அவற்றை அவ்விடம் விட்டு அகலச் செய்ய வேண்டிய அவசியமும்  தங்களுக்கு இருக்கிறது.  அதற்கு இரண்டு - நான்கு சொட்டுகள் அணுதைலம் எனும் மருந்தைப் பயன்படுத்தவும். தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. 

அழுக்கை மட்டும்  நீக்கும் பணியை இது செய்வதுடன் நில்லாமல், மேலும், பல நன்மைகளைச் செய்கிறது.  வலுவான தோள்கள், கழுத்து, முகத்தின் வசீகரம், வாய் சுத்தம், வலுவான மார்பகங்கள்,  தோல் சுருக்கமின்மை, நரைமுடி ஏற்படாதவாறு பாதுகாத்தல், முகத்தில் ஏற்படும்  கரும் திட்டுகளைக் குணப்படுத்துதல் ஆகியவையுமாகும்.

கண் மற்றும் மூக்கின் வழியாக வெளியேறும் அழுக்குகள், தூசி, வைரஸ் போன்றவை புவி ஈர்ப்பு விசையின் இயற்கையான குணத்தினால், கீழ் நோக்கிப் பயணித்து, வாயினுள் தஞ்சமடைகின்றன.  அவற்றை அங்கிருந்து அகற்ற, அரிமேதஸ் தைலம் எனும் மூலிகைத் தைலத்தை, சுமார் ஐந்து மி.லி. வாயினுள் விட்டு, ஐந்து  முதல் எட்டு நிமிடங்கள் வரை கொப்பளித்து பிறகு துப்பி விடுவது மிகவும் நல்லது. இதனால், மேலும் சில நன்மைகள் கிடைக்கின்றன. வாய் அழுக்கு, நாக்கில் படியும் வெண்படலம், ருசியின்மை, பற்களில் ஏற்படும் காரை, ஈறுகளின் வலுவற்ற தன்மையினால் பற்கள் வலுவிழந்து ஆடுதல், உதடு வெடிப்பு,  வாய்  வறட்சி, வாய் சார்ந்த நரம்புகளின் பலவீனம், ஒற்றைத் தலைவலி, வாய் துர்நாற்றம் போன்றவை விலகிவிடும். 

மேற்குறிப்பிட்ட  மூன்று தைல மருந்துகளையும் நீங்கள் பஸ் பயணம் மேற்கொள்வதற்கு முன் செய்து கொண்ட பிறகு, பயணம் செய்ய முற்படலாம்.  ஆனாலும், பிறருக்கு நல்ல எடுத்துக்காட்டாக நீங்கள் இருக்க வேண்டியதும் கட்டாயம் என்பதால்,  தலையைத் துணியால் மறைத்து, கண்பாதுகாப்பிற்காக, நல்லதொரு கூலிங் கிளாûஸயும் அணிந்து, முகத்தில் மூக்கையும், வாயையும் மறைக்கும் முகக் கவசமும் அணிந்து செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும். அதைப் பார்த்து பிறரும் திருந்தக் கூடும் அல்லவா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com