காதலின் தீபம் ஒன்று

அமிர்தவர்ஷினி தன்னைப் பற்றியும் சொன்னாள். அவளின் தாத்தா வேலைக்காக மலேசியா வந்து இங்கேயே வேர் பிடித்து நிரந்தரமாகத் தங்கிவிட்டாராம்.
காதலின் தீபம் ஒன்று


சென்ற இதழ் தொடர்ச்சி...

அமிர்தவர்ஷினி தன்னைப் பற்றியும் சொன்னாள். அவளின் தாத்தா வேலைக்காக மலேசியா வந்து இங்கேயே வேர் பிடித்து நிரந்தரமாகத் தங்கி
விட்டாராம்.

அவர்களின் பூர்வீகம் தேனிக்கருகில் ஒரு குக்கிராமம் என்றும், ஆனாலும் அவள் அதை மேப்பில் கூடப் பார்த்ததில்லை என்றும் துக்கப்பட்டாள்.

வாழ்நாளில் ஒரே ஒரு நாளாவது தாத்தா, பிறந்து வளர்ந்து புரண்டு வாயில் போட்டுக் குதப்பிய மண்ணிற்குப் போய் காலடி வைத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்றாள்.

அவளுக்குச் சம்மதம் என்றால் நாளையே கூட அவளை இராவணன் போல் தூக்கிக் கொண்டு போய் இந்திய மண்ணில் இறக்கி விடச் சித்தமாக இருப்பதாகவும், அவளுடன் கைகோர்த்தபடி மதுரை வீதிகளில் அலைய ஆசைப் படுவதாகவும் அழகர்சாமி சொல்லவும் மனசுவிட்டுச் சிரித்தாள்.
அழகர்சாமிக்கு அவளிடம் பேசியதை நினைக்க நினைக்கவே சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. அவனால் இரவெல்லாம் தூங்கவே முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் வேக வேகமாய்க் கிளம்பி வந்து தொலைபேசியில் மணிக்கணக்காக அமிர்தவர்ஷினியுடன் பேசி மகிழ்ந்தான் அழகர்சாமி. அவளுடன் பேச முடியாத தினங்களை துக்கதினமாக உணர்ந்தான் அவன்.
ஆனால் அவளை அணுகுவது தான் மிகவும் சிரமமாக இருக்கிறது. எப்போதுமே 600- இல் ஆரம்பிக்கிற எண்களின் மூலம் இயந்திரக் குரலின் வழி நடத்தலில் நிறைய பொறுமை இழக்கச் செய்த பின்பு தான் அவளுக்கான குறியீட்டு எண்ணில் அவளுடன் பேச முடிகிறது.
அழகர்சாமி ஒருமுறை பேசும்போது, ""நேரடியாக உன்னிடமே பேச வழி எதுவும் இல்லையா அமிர்தா?'' என்று மிகவும் உரிமையாய்க் கேட்டான்.
""மன்னித்துக் கொள்ளுங்கள். அது சாத்தியமில்லை. ஏனென்றால் தனிப்பட்ட வகையில் எனக்கு போன்
எதுவும் இல்லை; எனக்காகப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா?'' என்று சிணுங்கினாள்.
""நீயாவது என்னைத் தொடர்பு கொள்ளலாமே?'' என்றான்.
""அதுவும் முடியாது; எங்கள் வீட்டில் போன் இல்லை. மேலும் நான் அத்தனை சுதந்திரமானவள் இல்லை. வேலை முடிந்து வீட்டிற்குப் போனால், நானொரு கைதி தான். வெளியில் எங்கும் போய் போன் பண்ணிக் கொண்டிருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்குச் சந்தேகம் வரும். வேலைக்குப் போக வேண்டாம் என்று வீட்டிலேயே முழுநேரமும் சிறை வைத்து விடுவார்கள். அப்புறம் நாம் இந்த அளவிற்குக் கூடப் பேச முடியாது. என் சின்ன வாழ்க்கையில் சந்தோஷத்தின் சாளரம் நீங்கள் மட்டும் தான். நான் மகிழ்ச்சியாய் உணர்வதே உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் கொஞ்ச நேரத்தில் தான். அதையும் கெடுத்துவிடாதீர்கள்'' என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள்.
மனசில் பூத்தூவுகிற சிரிப்பு. இவளின் சிரிப்பிற்காகவும் தேனில் இழைந்து வரும் குரலுக்காகவும் எதையும் சகித்துக் கொள்ளலாம் என்று அழகர்சாமிக்குத் தோன்றியது.
அப்போது தான் "காதல்கோட்டை' என்னும் சினிமா வந்திருந்தது. ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலேயே
கடிதம் வாயிலாக மட்டுமே காதல் மலரும் கதை. கொலீசியம் தியேட்டரில் நண்பர்களுடன் போய் அதைப் பார்த்துவிட்டு வந்த தினத்தில் தன்னை அஜித்தாகவும் அமிர்த வர்ஷினியை தேவயானியாகவும் கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான் அழகர்சாமி.
ஆனாலும் சில பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அமிர்தா
விடம், ""நாம் நேரில் சந்திக்க முடியுமா அமிர்தா?'' என்றான் அழகர்சாமி.
""வேண்டாம்... நம்மைப் பற்றி நாமே உருவாக்கியிருக்கும் பிம்பங்களைக் கலைக்க வேண்டாமே'' என்றாள், நாசுக்காக. தவிர்க்கிறாள் என்பது அழகர்சாமிக்குப் புரிந்தது.
""நாம் எத்தனை நாட்களுக்கு போனிலேயே பேசிக் கொண்டிருப்பது? அடுத்த கட்டத்திற்கு நம் உறவை நகர்த்த வேண்டாமா?''
""அடுத்த கட்டம் என்று எதைச் சொல்கிறீர்கள் தோழரே?''
""காதல், கல்யாணம், தாம்பத்யம்... எக்ஸ்ட்ரா;
எக்ஸ்ட்ரா...''கண் சிமிட்டினான்.
""ஆண், பெண் நட்பென்பது எப்பொழுதுமே காதலாகி கல்யாணத்தில் கருக வேண்டும் என்பது தான் காலந்தோறும் உள்ள விதியா? நாம் ஏன் அதை மாற்றக் கூடாது! நமக்குள் எந்த சந்திப்பும் நிகழவே வேண்டாம். நாம் குரல்களால் மட்டும் ஒருத்தரை ஒருத்தர் அறிந்து கொண்டு நண்பர்களாகத் தொடர்வோம்''
அழகர்சாமிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
""அமிர்தா... வெறும் குரல்களால் மட்டும் தொடர்பில் இருப்பதில் எனக்கு ஆர்வமில்லை. நிஜம் சொல்லு. என்னை நீ நேசிக்கிறாயா இல்லையா?'' என்று நேரடியாகக் கேட்டான்.
""இப்படியெல்லாம் கேட்டு என்னுடைய பிரியத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள். நான் உங்களுக்கு என்னுடைய மனதில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அளித்திருக்கிறேன். அது காதலுக்கும் கடவுளுக்கும் மேலானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்'' குரலில் கோபம் வழிந்தது.
""மனதில் இத்தனை ஆசைகளை வைத்துக் கொண்டு ஏன் என்னை சந்திக்க மறுக்கிறாய்?''
""சாத்தியமில்லாததற்கு நாம் ஆசைப்படக் கூடாது என்பதனால் தான்''
""ஏன் சாத்தியமில்லை அமிர்தா? உன்னை உனக்குப்
பிரியமான தமிழ் மண்ணிற்கு அழைத்துப் போய் கரம் பிடித்து காலமெல்லாம் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன். என்னுடைய அம்மா நான் சொன்னால் மறுபேச்சே பேச மாட்டார்கள்''
""நீங்கள் நிறைய சினிமாப் பார்த்து கெட்டுப் போய் விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்பது
நீங்கள் வாசிக்கும் கதைகளில் நிகழும் சம்பவங்களை போல் அத்தனை சுலபமானதில்லை தோழரே''
அமிர்தவர்ஷினியிடம் தொடர்ந்து பேசி நச்சரித்ததில் ஒரு வழியாய் அழகர்சாமியை நேரில் சந்திக்க ஒத்துக் கொண்டாள்.
ஒரு சனிக்கிழமை சாயங்காலம் ""ஸன்வே பிரமிடு என்னும் ஷாப்பிங் காம்ப்ளஸிற்கு வாருங்கள், சந்திக்கலாம்'' என்று சொன்னாள்.
""ஆனால் நிறைய கற்பனைகளுடன் வராதீர்கள்; நான் அத்தனை அழகானவள் இல்லை'' என்றும் சொன்னாள்.
""எப்படி உன்னைக் கண்டுபிடிப்பது?'' என்ற அவனுடைய கேள்விக்கு,
""உங்களுக்கு மிகவும் பிடித்த இளம் ஊதா நிற சேலையில் மாராப்பை வலப்புறம் போட்டு, தலையில் மயில் தோகை விரித்தாடும் குப்பி அணிந்து கொண்டு வாசலிலேயே உங்களை எதிர்பார்த்து விழிமேல் வழிவைத்துக் காத்திருக்கிறேன்'' என்று சொன்னாள்.
அவள் சொன்னவிதமே அத்தனை கவிதையாக அழகர்சாமியை ஆகர்ஷித்தது. ஆனால் அன்றைக்கு இரவு ஒன்பது மணி வரைக்கும் காத்திருந்தும் சேலை அணிந்து கொண்டு எந்தப் பெண்ணும் ஸன்வே பிரமிடில் தட்டுப்படவே இல்லை.
அடுத்தநாள் காலையில் அமிர்தவர்ஷினியிடம் போனில் தொடர்பு கொண்டு கடிந்து கொண்டபோது, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், ""மன்னித்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத அவசர வேலை வந்து விட்டது; அதனால் வர முடியவில்லை'' என்றாள்.
""என்னைச் சந்தித்தே ஆக வேண்டுமென்று துடிக்கிறீர்களே, அப்படி என்னைச் சந்தித்து என்ன தான் செய்யப் போகிறீர்கள்?''
""பயப்படாதே, ஒன்றுமே செய்ய மாட்டேன். பார்த்துக் கொண்டு இருப்பேன்; நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்புறம் நம்முடைய எதிர்கால வாழ்க்கை பற்றி நிறையப் பேசலாம்'' என்றான் அழகர்சாமி ஒருவித கிறக்கத்துடன்.
""முன்பே சொல்லி இருந்தேனே, நான் அத்தனை அழகாய் இருக்க மாட்டேன்''
""பரவாயில்லை; அழகு என்பது உடல் பாகங்களின் திரட்சியில் இல்லை. அது மனதில் இருக்கிறது. உங்களுக்கு ஒரு லைலா இருக்கிறாளா? இல்லையென்றால் உங்களின் வாழ்க்கையை நஷ்டக்கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள் என்று அப்துல்ரகுமான் சொல்லி இருக்கிறார். லைலாக்கள் சாதாரணமான பெண்களாக இருந்தாலும் மஜ்னுவின் கண்களின் வழிப் பார்த்தால் அவர்கள் பேரழிகளாகத் தெரிவார்கள் - இதுவும் அப்துல்ரகுமான் சொன்னது தான். நீ என்னுடைய லைலா. நான் உன் மஜ்னு'' அழகர்சாமி கண்களில் போதையுடன் பேசிக்கொண்டு போனான்.
""ரொம்பவும் கவித்துவமாகப் பேசுகிறீர்கள். எனக்கும் உங்களைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. கண்டிப்பாக இன்னொரு சந்தர்ப்பத்தில் நாம் சந்தித்து நேரடியாக நிறைய உரையாடலாம்'' என்று ஆசையை மூட்டினாள்
அமிர்தவர்ஷினி.
இரண்டு நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டபோது, "விலாயா காம்ப்ளெக்ஸிற்கு வந்தால் சேர்ந்து படம் பார்க்கலாம்' என்று அமிர்தவர்ஷ்னி அழைப்பு விடுத்தாள்.
ஆனால் அன்றைக்கும் கடைசி வரை அவள் வரவே இல்லை.
வரவர அவளின் குரலில் அலைக் கழிப்பும் இயந்திரத் தன்மையும் அழகர்சாமியைத் தவிர்ப்பதற்கான முனைப்புமே அதிகமாக இருப்பது போல் தெரிந்தது.
அபார்ட்மெண்டிற்கு டெலிபோன் பில் வந்த தினத்தில் அழகர்சாமிக்கு அமிர்தவர்ஷினியின் மீதிருந்த காதல் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. டெலிபோன் பில்லில் பெருந் தொகையைப் பார்த்து அபார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அரண்டு போனார்கள்.
அவரவர் பேசிய இந்திய நம்பரை வைத்து அவர்கள் தொகையைப் பிரித்துக் கொண்டார்கள். அது மிகவும் குறைந்த தொகை தான்.
அதற்கப்புறமும் மலைக்க வைக்கும் பெருந்தொகை கண்ணாமூச்சி காட்டியது. 600- இல் தொடங்கும் விளம்பர தொலைபேசி எண்ணுக்கான கட்டணம் சாதாரண எண்களைப் போல் சுமார் 90 மடங்கு கட்டணம் என்பதை பில் வந்த பின்பு தான் அழகர்சாமி முதற்கொண்டு அனைவருமே அறிந்து கொண்டார்கள்.
பார்த்திபன் தான், அது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை என்றும் குரலை வைத்து நடக்கிற விபச்சாரம் என்றும் சொன்னார். அழகர்சாமி தன்னுடைய முதல்மாதச் சம்பளத்தின் பெரும்பகுதியையும் - சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய் - அவன் அமிர்தவர்ஷினியிடம் பேசியதற்காக செலவழிக்க வேண்டி இருந்தது.
அழகர்சாமிக்கு அப்புறம் தான் புரிந்தது. அமிர்தவர்ஷினி என்பது ஒரு கற்பனைப் பாத்திரம். கானல்
நீரின் மினுக்கில் கிறங்கி அதைப்போய்க் காதல் என்று நம்பி அள்ளிப் பருகும் ஆசையில் வாய் சுட்டுக் கொண்ட அவலத்திற்காக வெட்கப்பட்டான்.
அமிர்தவர்ஷினி என்பது நிஜப் பெண்ணாகவும் இருக்கலாம்; அல்லது ஆணின் குரலை இயந்திரத்தில் உள்ளிட்டு அதை பெண்ணின் குரலாக வெளிப்படுத்தும் எந்திரவித்தையாகவும் இருக்கலாம்.
மொத்தத்தில் அது ப்ரண்ட்ஷிப் என்னும் போர்வையில் ஆசை காட்டி அதிக நேரம் பேச வைத்து, நேரங் கடத்தி, பணம் பண்ணுகிற மோசடி.
அதற்கப்புறம் அழகர்சாமி தொலைபேசியைத் தொட்டுப் பார்க்கவே அஞ்சினான்.
அவன் அன்றைக்கு இரவே அம்மாவிற்குக் கடிதம் எழுதினான் - கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும்படி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com