சமையல் செய்யும் தானியங்கி இயந்திரம்!

இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவரும், மனைவியும் இணைந்து வேலை செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.
சமையல் செய்யும் தானியங்கி இயந்திரம்!
Published on
Updated on
2 min read

இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவரும், மனைவியும் இணைந்து வேலை செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. அதனால் சமையல் செய்வது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால்  ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து  சாப்பிடும் பழக்கம்  அதிகரித்து இருக்கிறது.

சுவையான, சுகாதாரமான, ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடு என்பது தொடர்ந்து கனவாகவே இருந்து வருகிறது. இவர்களின் கனவை நனவாக்குவதற்காகவே இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கிறது தானியங்கி முறையில் சமையல் செய்யும் இயந்திர மனிதன்.  

இது குறித்து இந்த இயந்திர மனிதனை அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான சரவணன் சுந்தரமூர்த்தி பேசுகையில்,“""இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் மிக்சி, கிரைண்டர், ஜுஸ்மேக்கர், காபி மேக்கர், காய்கறிகளை வெட்டும் கருவி, இன்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோ ஓவன்,  ப்ரட் டோஸ்டர்,  குக்கர் என தனித்தனியாக கருவிகள் இருக்கின்றன.  இத்தனை கருவிகள் இருந்தும், உணவு  தயாரிப்பதற்காக பெண்கள் சமையலறையில் செலவிடும் நேரம் இன்னும் குறையவில்லை.

ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவை வரவழைத்தாலும் சுவை எதிர்பார்ப்பதைப் போல் இருப்பதில்லை. சுவையாக இருக்கும் என்று பிரபலமான உணவகங்களுக்குச் சென்றால், அங்கு கிடைக்கும் உணவின் சுவை என்பது எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. 

வேறு சிலர் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்காக பிரபலமான சமையல் கலைஞரை ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால் அவருடைய கைப்பக்குவம் என்பது நம்முடைய இல்ல சுபநிகழ்ச்சிகளின் போது எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் போது, மனநிறைவின்மையும், சலிப்பும் ஏற்படுகிறது. 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே எங்களது ரோபோசெஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறோம். சுவை, சுகாதாரம், ஆரோக்கியம் என்ற சமையலுக்குத் தேவையான மூன்று விஷயங்களை தாரக மந்திரமாகக் கொண்டு இதனை வடிவமைத்திருக்கிறோம். இந்த இயந்திர மனிதனை 600 ரெசிபிகளை தயாரிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம். 

அதில் இந்தியன், சைனீஸ்,தாய்லாந்து, வியட்நாமீஸ் என பல நாட்டு உணவு வகைகளும் அடக்கம். இந்த இயந்திர மனிதன் மூலம் ஒரே சமயத்தில் மூவாயிரம் நபர்களுக்கு சமைக்க இயலும். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பொங்கல், சர்க்கரை பொங்கல், கேசரி, சாம்பார், ரசம் என பல உணவுவகைகளை இதில் தயாரிக்கலாம்.

நாங்கள் ஹோட்டல், மெஸ்,கேன்டீன் என வணிக நோக்கத்திற்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் என இரண்டு வகையான இயந்திர மனிதனை உருவாக்கியிருக்கிறோம். இதனைப் பயன்படுத்துவது எளிது. நீங்கள் ரோபோசெஃப்பில் சமைக்கத் தொடங்கும் முன்னர், என்ன வகையான உணவைத் தயாரிக்கவேண்டுமோ, அதற்கு தேவைப்படும் பொருள்களை கடையிலிருந்து வாங்கிஅல்லதுவீட்டின் சமையலறையிலிருந்து எடுத்து இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறிய வடிவிலான பெட்டி போன்ற ஹாப்பர்ஸில் நிரப்பவேண்டும். இது மட்டும் தான் இயந்திர மனிதனுக்கு நீங்கள் செய்யும் ஒரேயொரு வேலை.

இந்த இயந்திரத்திற்குள் முப்பதிற்கும் மேற்பட்ட ஹாப்பர்ûஸ இடம் பெற வைத்திருக்கிறோம். இதைத் தவிர சாலிட் இன்கிரிடன்ட்ஸான காய்கறிகள் மற்றும் இறைச்சிக்காக தனியாக பத்திற்கும் மேற்பட்ட ஹாப்பர்ஸ் அமைத்திருக்கிறோம். 

அத்துடன் நீங்கள் என்ன வகையான உணவைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்காக ஆப்ûஸ டவுன்லோடு செய்து, கிளிக் செய்தால் போதும்.ரோபோசெஃப் குறைவான நேரத்தில், சுவையான உணவைத் தயாரித்து தரும்.   சமைத்து ஆறு மணி நேரம் வரை உணவு சூடாகயிருக்கும். அத்துடன் சமைத்து முடித்தபிறகு பாத்திரங்களை கழுவிச் சுத்தப்படுத்தவும் பிரத்யேகமான முறையை வடிவமைத்திருக்கிறோம்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.