
சக.முத்துக்கண்ணன்
மணல் கடிகாரம் செய்து வரச் சொல்லியிருந்தேன். வகுப்பறையில் முப்பத்தைந்தில் முப்பது பேர் கொண்டு வந்திருந்தனர். அஞ்சுபேர் கைகட்டி நிற்பதுதான் ஒரிஜினல் வகுப்பறையின் டிசைன். வழக்கம் போல் பெண்குழந்தைகள் கூடுதல் அலங்காரத்தோடு செய்து வந்திருந்தனர். பசங்களில் சிலர் டைம் செட் பண்ணி, நேரம் முடியும் போது மணல் துகள்கள் துல்லியமாகத் தீரும்படி செய்திருந்தனர். மணல் கடிகாரத்திற்கு மணலைத் தேர்ந்தெடுப்பதும், ஈரம் நீக்கி குறுமணல்களைச் சலித்தெடுத்தலும் கற்க வேண்டிய கூறு. முந்தைய நாள் அந்த நுட்பங்களை விளக்கும் வீடியோவைக் காட்டியிருந்தேன். பலர் மிகச் சரியாகச் செய்திருந்தனர். வரிசையாய் ஒப்படைக்கப்பட்ட முப்பது மணல் கடிகாரங்களில் இருபதுக்கும் மேற்பட்டவை சாராய பாட்டில்கள். புரியும்படி சொல்லப் போனால் குவாட்டர் பாட்டில்கள்! ஒன்றின் மீதொன்று நிற்கையில் உயரம் கூடி தரையில் உட்காரச் சிரமப்படுகிறது. சில தொட்டதும் சாய்ந்திடும்படி. நாங்கள் படிக்கும்போது மை பாட்டிலில் தான் செய்வோம். இப்போதும் கூட மூன்று மைபாட்டில்கள் வரிசையில் இருந்தன. எல்லாம் முடிந்து வீடு வந்த பின்னும் அடுக்கி வைத்த மணல் கடிகாரங்களின் வரிசை நினைவில்...
காலத்தை அறிவிக்கும் மணல்கடிகாரங்கள் குழந்தைகளின் வாயிலாய் பெரிதான ஓர் செய்தியை நம்மிடம் அறைந்து சொல்வதாய்ப்பட்டது.
"ஏன் எல்லாரும் இந்த பாட்டில்ல செஞ்சிருக்கீங்க?''
"பவி வீட்ல இது நெறைய இருந்துச்சு சார்''. 13 குழந்தைகளுக்கான 26 பாட்டில்கள் அங்கு கிடைத்திருக்கின்றன. அந்த தகப்பன் வள்ளல். வாரி வழங்கியிருக்கிறார்.
"நீங்கதான சார் சொன்னிங்க, இதுக்கெல்லாம் காசு செலவு பண்ண வேணாம் கெடைக்கிறத பயன்படுத்துன்னு '' - சிலர்.
மீதப்பேர், "வீட்ல இருந்துச்சு சார்''.
உரையாடலில் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டிவருமிடத்தில், அப்பா செய்றத மறைக்கிறதா? சொல்றதா? தெரியாமல் சிரித்துக் கொண்டும், கூச்சப்பட்டுக் கொண்டும் நெளியுதுகள்.
ஒரு முறை மாவட்ட அறிவியல் கண்காட்சிக்கு போக, 7 மணிக்கெல்லாம் பஸ்டாண்டு வரச் சொல்லிருந்தேன். எயித் பி சாந்தி மட்டும் லேட். பஸ் போய்விட்டது.
வந்ததும் கடிந்து பேசிவிட்டேன். இந்த ஊரில் ஒரு பஸ்சை விட்டால் முக்கால் மணி நிற்கணும். அரியலூரில் இறங்கிய பின்னும் சாந்தி முகத்தில் சிரிப்பே இல்லை. கண்காட்சிக்கு வந்து எங்களுக்கான மேஜையில் எல்லாம் எடுத்து வைத்து தயாரான பின்னும் சோகமாகவே இருந்தாள். சமாதானம் செய்து உற்சாகப்படுத்தினேன். இருந்தும் அவள் பேசும் வார்த்தைகளில் கவலை. கண்காட்சி அரங்கு இரைச்சலாக இருந்தது. வெளியே கூப்பிட்டு விசாரித்தேன். ராத்திரி வீட்டில் பிரச்னை. அப்பா வழக்கம் போல் தண்ணி போட்டு வந்து அம்மாவுடன் சண்டை. நேற்று உக்கிரமான ஆட்டமாம். மகளின் ஸ்கூல் பேக்கைத் தூக்கி எறிந்து அட்டகாசம் பண்ணிருக்கான். இந்த மாதிரி சமயத்தில் குழந்தைகள் அம்மாவிடம் தானே அடையும். மகள்களையும் எதிரிகளாக்கி வாசலுக்கு வெளியே தள்ளிப் பூட்டிவிட்டானாம்.
ஸ்கூல் பேக்கை பாத்ரூம் தூக்கிப் போய்...
"பேக் பூராம் நனைச்சு போட்டார் சார்'' என்று அழுகிறாள். ஏற்கெனவே ஆறாப்பு படிக்கையில் பேக்கில் மண்ணெண்ணெய்க் கேனைத் தூக்கி ஊற்றிவிட்டாராம். இந்தவாட்டி அசிங்கம் என்றாலும் காய்ந்துடும் என்கிறாள். அதைவிட தேவலை என்கிற ஒரு பெண் குழந்தையின் நிலை எத்தனை பெரிய வலி. அம்மாவுக்கு நெற்றியில் காயம். காலையில் அந்த மிருகம் மனிதனாக மாறி எழுந்திருக்க மணி ஒன்பதாகிவிடும். அத்தனை அலங்கோலங்களுக்கும் ஊடாக மகளுக்கு யூனிபார்ம் மாட்டி முப்பது ரூபாயைக் கையில் கொடுத்து அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அம்மா. கேட்டுக் கொண்டிருக்கும் போதே எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சாந்தி, முகத்தை வாசிக்கக் கூடியவளாய் இருந்தாள். நானும் வருத்தப்பட்டு விடக் கூடாதென அந்த சின்னப்பெண் எடுத்த முயற்சி தான் என்னை அந்த நிமிடத்தில் வாழ்வித்தது. "என்னை அவள் தேற்றினாள்'. பொதுவாக பெண் குழந்தைகளைத் தொட்டுப் பேசுவதில்லை. பிறந்த நாளெனில் உச்சந்தலைத் தொட்டு வாழ்த்துச் சொல்வேன். அதை பெரிய விசயமாய் அதுகளுக்குள் பேசிக் கொள்ளுங்களாம். இப்போது சாந்தியின் உச்சந்தலையில், உள்ளங்கையை வைத்துச் சிரித்தேன். கண்களைத் துடைத்தபடி மேஜைக்கு போனாள். கவர்ன்மெண்ட் ஸ்கூல் யூனிஃபாமில் வரிசை நெடுக நின்றிருந்த மாணவர்களின் நேற்றைய இரவு எப்படி இருந்திருக்கும்? எனத் தோன்றியது. நடுவர்கள் வந்தார்கள். குழந்தைகள் கத்திக்கத்தி அறிவியலைச் சொல்லிக் கொண்டிருந்தனர். எனக்கென்னவோ அவர்கள் யாரையோ திட்டிக்கொண்டிருப்பது போல இருந்தது.
நானும் இன்னோர் ஆசிரியரும் பள்ளியிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தோம். சாந்தி பின்னால் வந்துகொண்டிருந்திருப்பாள் போல. விரைந்து வந்து எங்களோடு இணைந்து கொண்டாள். "சார்.. பானிபூரி கடையில எங்கப்பா நிக்கிறார் பாருங்க.....'' என்றாள். என்னுடன் வந்த ஆசிரியர் சைகையில் கண்டித்தார். மாணவர்கள் எல்லா நேரங்களிலும் நம் பேச்சைக் கேட்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து தரக்குறைவான சொற்களையே பயன்படுத்திக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் இது மாதிரி நேரங்களில் ஈடுகொடுத்துப் பேசமாட்டேன். குறைந்த ஒலியில் ஒரு பக்க உரையாடலாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது. தெருமுனையில் பிரிந்து நடந்தோம். உடன் வந்த ஆசிரியரிடம் கண்காட்சிக்கு முந்தைய இரவு நடந்ததை பாதி மறைத்துச் சொன்னேன்.
அவர் சாந்தியைவிட கொடிய வார்த்தைகளைக் கையாண்டார். அவள் போலவே வீடு வரும் வரை ஒரு பக்க உரையாடல். இருந்தும் இவரிடம் ஓர் அக்கிரமம் ஒளிந்திருந்தது. இவரும் குடிப்பார் என்பதால் அது இருக்கத்தான் செய்யும். இத்துனூண்டு வக்காலத்தும், குடிப்பதன் அளவுகோலும் மறைத்து வைக்கப்பட்டபடியே இருந்தது.
ஒன்பதாம் வகுப்பில் "அடிமையாதலும் நலவாழ்வும்' என்கிற தலைப்பில் ஒரு பாடம். மது, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பற்றிப் பேசுகிற பாடம். இதுதான் சாக்கெனப் பிடித்துக்கொண்டேன். சாராயம், குடும்பச்சண்டை, வீட்டில் அம்மா சோறாக்காமல் அழுதுகொண்டே மூலையில் கிடப்பது என பேசிக்கொண்டே ஏதுவான சூழலைக் கட்டமைத்தேன்.
"இப்ப ஒண்ணு கேட்பேன் எல்லாரும் உண்மைய மட்டும் சொல்லணும்''
"சரிங்க சார்...''
"எல்லாரும் கண்ண மூடுங்க!''
மூடிக் கொண்டதுகள்.
"எங்கப்பா குடிப்பாரு சார்... அதுனால தான் சண்டையே வருது -அப்டின்றவங்க கைதூக்குங்க. யாரும் கண்ண தொறக்கக் கூடாது. மனச்சாட்சிப்படி கை
தூக்கணும்.''
வகுப்பே கைதூக்கிருந்தது. ஒரே ஒரு மாணவன் தவிர.
"சரி எல்லாரும் கைய கீழ போடுங்க. இப்ப கண்ணத் திறக்கலாம்.'' கிளாஸ் முடிந்ததும் அந்த ஒருத்தனைக் கூப்பிட்டுக் கேட்டேன். அவனுக்கு அப்பா இல்லை!
இந்த பாடத்தில் உள்ள புள்ளிவிவரங்கள், அறிவியல் பதங்கள், நோய்களின் பெயர்கள், என்றால் என்ன? டைப் கொஸ்டின்கள் இவற்றையெல்லாம் ஓத ஒரு நாள் போதும். இது மற்றதைப்போல் வெறும் பாடம் மட்டுமல்ல. இக்களத்துக்கான விதை நெல். பாடநூலை மூடிவைத்து விட்டு, தலைப்பை வைத்துக் கொண்டு மாணவர்களும் நானுமாக பாடம் எழுதினோம். வாரம் முழுக்க உரையாடலாகக் கொண்டு போனேன். "ஒனக்குத் தெரிஞ்ச போதைப் பொருள்களைச் சொல்லு பாப்போம்?'' எனக்கே தெரியாத சில பெயர்களை மாணவன் சொன்னான்! பெண்பிள்ளைகளும் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதில்லாமல் புக்கில் உள்ளபடி சர்வதேச சந்தையில் போதைப் பொருள்களின் பெயர்கள், அதன் சீரழிவுகள் குறித்து பேசிட்டேன். (போதை வஸ்துகளின் பெயர் பட்டியலை மாணவர் அறிந்து கொள்ளுதல் கற்றல் நோக்கங்களில் ஒன்றாக பாடத்திட்டத்தில் உள்ளது)
ஆண்கள் என்றாலே குடிப்பார்கள் என குழந்தைகள் புரிந்து வைத்திருக்கின்றனர். அப்பா குடிக்கக் கூடாதென நேர்த்திக் கடன் போட்ட குழந்தைகள், குடிகாரன் என தெருவுக்குள் பேரெடுத்த அப்பாவை யாரும் உதவ வராத ஒரு மழை நாளில் தெருவிலிருந்து தூக்கி வர முடியாமல் அம்மாவும் தானுமாக போட்டு இழுத்த- ஈஸ்வரனின் அனுபவம். அடி வாங்கும் அம்மாவுக்காக கண்ணீர் வடித்த லெட்சுமி. ஆனாலும் அப்பா நல்லவருன்னு சொன்ன பாசப்பிள்ளை பத்மா. அப்பன் தண்ணி வண்டியாக இருந்ததால் அம்மா தடம் மாறிப் போய் விட அத்தை வீட்டில் வளரும் அசோக் என காயங்களை வெளிப்
படையாகவும், என்னிடம் தனியாகவும் பகிர்ந்து கொண்டனர். இப்படியான குழந்தைகளின் உலகில் கல்வியின் தரம் குறித்து என்னென்னத்தையோ எழுதி வைத்துக்கொண்டு புதுமையென பீற்றிக்கொண்டு திரிகிறோம். வகுப்பில் திரும்பும் இடமெல்லாம் மது குறித்த ஒரு சோகக் கதை அழுதபடியே இருக்கிறது.
வார இறுதியில் ஒரு வழியாகப் பாடத்தை நிறைவு செய்ய வேண்டியிருந்தது. செயல்திட்டமாக ஒரு முடிவெடுத்தோம். மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது. சனி, ஞாயிறில் மாணவர்கள் வீட்டிலும், அருகாமையிலும் கையெழுத்துப் பெறுவது. திங்களன்று மாலை நானும் மாணவர்களுமாக வீதிவீதியாக விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் நடத்துவது.
"மது கெட்டதுமா. . இனியாரும் குடிக்கக் கூடாதுன்னு . . எங்க ஸ்கூல்லர்ந்து சொல்ல வந்திருக்கோம்.'' மாணவி சாந்தி அழகாகச் சொல்லி ஆரம்பித்தாள்.
ரொம்ப எதார்த்தமாவே பேசுதுங்க. கொஞ்சம் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தேன். ரொம்ப சந்தோசமா இருந்தது. ஏதாவது ஓரெடத்துல யாராவது வில்லங்கமா பேசுனா நான் தலையிடுகிற தயாரிப்புல இருந்தேன். இது போன்ற முயற்சிகளில் ஏதேனும் சர்ச்சை வந்தால் நம்மைத் தூற்ற ஆள் ரெடியாருக்கும்.
"நாந்தேன் அப்போவே சொன்னன்ல '' என்று முந்திக்கொண்டு நம்மை கவிழ்த்த, உடன் பணியாற்றும் ஆட்கள் எல்லாப் பள்ளிகளிலும் உண்டு. அந்த இயலாமைக்காரர்களிடமிருந்து சூதானமாகத் திட்டமிடுதல் தான் இந்தப் பணியை விட முக்கியமான பணி. நல்லவேளை, கடைசி வரை எந்த வில்லங்கக் கேள்விகளும் எழவில்லை.
பெரும்பாலும் பெண்களைக் குறிவைத்தே மாணவிகள் நகர்ந்ததைக் கவனிக்க முடிந்தது. தொடங்கும் முன் வகுப்பில் அரைமணி நேரம் மாணவிகளோடு உரையாடியது நல்ல பயன்தந்தது.
தர்மபுரியில் டாஸ்மாக் கடையடைப்பு போராட்டமும் அதன் தொடர்ச்சியாக நடந்த கடைக் குறைப்பு நடவடிக்கைகளையும் கூட பேசியிருந்தேன்.
அந்த டாஸ்மாக் கடை நோக்கி முதல் கல்லை எறிந்த ஒற்றைத் தமிழச்சியின் துணிச்சலுக்கு கரகோஷம் வகுப்பறையே அதிர எழுப்பப்பட்டது.
நிறைய குழந்தைகள் முதல் நாள் தன் அப்பாவிடம் கையெழுத்து வாங்கப் போவதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.
கிராமம் என்பதால் பெரும்பாலும் தெரிந்த முகங்களே. கையெழுத்திட்ட ஆண்கள் தந்த ஆதரவும்,
அன்பும் கவனிக்கத் தக்கது. தன் பிள்ளைகளும் கலந்து நிற்பதாலோ என்னவோ, அடுத்தவர்களையும் அழைத்து கையெழுத்திடச் செய்தனர்.
குடிப்பதைக் காட்டிக் கொள்ளாமலே பலர் கையெழுத்துப் போட்டனர். மறைக்க முடியாமல் "அதில்' பேமஸான சிலர் "சரி முயற்சி பண்றேன்'' சொல்லியபடி கையெழுத்துப் போட்டனர். சாந்தியின் அப்பா சிரித்துக் கொண்டே கையெழுத்துப் போட்டார். நிஜமாகவே அவர் கையெழுத்து அழகாக இருந்தது. "உங்க கையெழுத்து ரொம்ப அழகா இருக்கு'' என்றேன். வெட்கப்பட்டுக் கொண்டார். டீ சாப்பிட சொன்னார். எல்லா குழந்தைகளுக்கும் பிஸ்கட் வாங்கித் தந்தார். அவர் வீட்டிலேயே நிறைவு செய்தோம். ப்ளான்ல்லாம் இல்லை; தற்செயல் தான்.
இது உங்கள் பிள்ளைகளின் கோரிக்கை!
மது இல்லா தேசத்தை உருவாக்குவோம்!
உறவுகளே !
படிக்கும் பிள்ளைகள் கேட்கிறோம்!
குடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்!
போன்ற பல வாசகங்களை முகப்பில் கொண்ட அட்டைகளில், பொதுமக்களிடம் என் பிள்ளைகள் ஆளுக்கு நூறென இலக்கு வைத்து கையெழுத்துப் பெற்றிருந்தனர்.
ஒரு மாத இதழில் இச்செய்தி சிறப்புக் கட்டுரையாக கையெழுத்துப்பெறும் மாணவிகளின் படங்களோடு பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதை ஆறாம் வகுப்பில் பவி எல்லோர் முன்னிலையில் வாசித்துக் காட்டினாள். சாந்தியின் தங்கையென்பதால் பவிக்கு, அக்காவின் போட்டோவை புக்கில் பார்த்த மகிழ்ச்சி. சந்தோஷத்தில் கத்திக் கத்தி வாசித்தாள். பவி வீட்டிலிருந்து வந்த அநேக பாட்டில்கள் மணல் கடிகாரங்களாக நின்றிருந்தன. ஒன்றைத் தலை மாற்றி வைத்தேன். மணல் துகள்கள் கீழாக விழத்தொடங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.