மீதி சில்லறை

பேருந்தில் ஏறினார் சாம்பசிவம். எல்ஐசி பேருந்து நிலையத்தில். மதிய வேளை. நல்ல வெய்யில். எல்லா வழித்தட பேருந்துகளும் வந்த வண்ணம் இருக்க, இவர் செல்ல வேண்டிய வழித் தட பேருந்துகள் வெகு நேரமாக வரவில்லை.
மீதி சில்லறை

பேருந்தில் ஏறினார் சாம்பசிவம். எல்ஐசி பேருந்து நிலையத்தில். மதிய வேளை. நல்ல வெய்யில். எல்லா வழித்தட பேருந்துகளும் வந்த வண்ணம் இருக்க, இவர் செல்ல வேண்டிய வழித் தட பேருந்துகள் வெகு நேரமாக வரவில்லை. பொதுவாகவே அப்படித்தானே ஆகும். நிறைய பேரின் அனுபவம் இது. சாம்பசிவம் தன் கைக்குட்டையின் 100 சதவிகித பரப்பையும் வியர்வையால் நிரப்பி அதை கனமாக்கியபோதுதான் தியாகராய நகர் செல்லும் பேருந்து வந்து நின்றது. கொஞ்சம் கூட்டமாக இருந்தாலும் மதிய வேளையாக இருந்ததால் பேருந்தில் ஏற முடிந்தது. வேகமாக ஏறினார் சாம்பசிவம்.

""கண்டக்டர் சார், ஒரு தியாகராய நகர் கொடுங்க''

இருபது ரூபாய் நோட்டை எடுத்து கண்டக்டர் முன்பு நீட்டினார்.

""இருக்கறதே ஒரு தியாகராய நகர்தானே சார். அதை உங்க கிட்ட முழுசா கொடுத்துடணுமா. அதுவும் இல்லாம அதை உங்க கிட்ட கொடுக்க எனக்கு சொந்தமானதா சார் அது?'' கண்டக்டர் கேட்க, பஸ்ஸில் சிரிப்பு அலை லேசாக எழுந்து அமர்ந்தது.

சாம்பசிவமும் சிரிப்பை உதிர்த்து முடிக்க, அவர் கொடுத்த நோட்டை வாங்கிய கண்டக்டர் கேட்டார் ""சில்லறை இல்லையா சார் ?''


""இல்லை கண்டக்டர். மீதி எல்லாம் நூறு ரூபாய் நோட்டா இருக்கு. சாரி'' அவர் சொன்னது கண்டக்டருக்கு வழக்கமாக எல்லாப் பயணிகளும் சொல்லும் எரிச்சலான பதிலாக இருந்தாலும், சாம்பசிவம் மரியாதையாக சொன்ன விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

""இந்தாங்க சார் டிக்கெட் பதினேழு ரூபாய். மீதி மூன்று ரூபாய் அப்புறம் தரேன். என் கிட்ட சுத்தமா சில்லறை இல்லவே இல்லை. யாருமே கரெக்டா சில்லறை கொடுக்கலேன்னா நான் என்ன பண்ண முடியும். வெயிட் பண்ணுங்க'' கை விரித்துக் காட்டி சொல்லியபடியே அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தார் கண்டக்டர்.

""டிக்கெட் டிக்கெட்... சீக்கிரம் வாங்குங்க... யாருக்கு டிக்கெட்?''

அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ஓர் ஓரத்தில் போய் நின்று கொண்ட சாம்பசிவம் அண்ணாசாலையின் மதிய வேளை பரபரப்பை நோக்க ஆரம்பித்தார். அலுவலகங்கள், சினிமா தியேட்டர்கள், ஸ்பென்சர் ப்ளாசா... ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்...

ஆனால் சாம்பசிவத்தின் மனதின் ஓரத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய மீதி மூன்று ரூபாய் நினைவிலேயே இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒன்றும் கஞ்சன் என்று இல்லை. ஆனால் நியாயமாக வர வேண்டிய பணம்... அது ஒரு ரூபாயாக இருந்தாலும் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு இருப்பது தவறு இல்லையே.

இடையிடையே கண்டக்டர் டிக்கெட் கொடுக்க பஸ்ஸில் முன்னும் பின்னும் சென்று வரும்போது அவரை மெதுவாக நோக்கினார் சாம்பசிவம். மீதி வர வேண்டியது என்பதோ மூன்று ருபாய். அதை மூன்றே ரூபாய்தானே என்று எண்ணி கண்டக்டர் வெறுப்பில் ஏதாவது சொல்லி விடுவாரோ என்று வாயில் வார்த்தைகளே வராமல் பார்வையால் மட்டும்தான் கேட்டார் சாம்பசிவம். அது கண்டக்டர் காதில் விழுந்ததோ இல்லையோ என்பது கண்டக்டருக்கு மட்டும்தான் தெரியும்.

எவ்வளவுதான் பொறுப்பார் சாம்பசிவம்? ஒரு தடவை கண்டக்டரைப் பார்த்து தன் வாயைத் திறந்தே விட்டார். ""கண்டக்டர்...''

""என்ன சார். டிக்கெட்டா. எங்கே போகணும். சீக்கிரம் பணம் கொடுங்க. ஏற்கெனவே பஸ் லேட்'' திடுக்கிட்டார் சாம்பசிவம்.

""என்னது எங்கே போகணுமா... டிக்கெட் வாங்கணுமா... என்ன சொல்றீங்க... எனக்கு நீங்க மீதி பணம் தரணும்'' சாம்பசிவம் குரலில் லேசான கதறல் தெரிய ஆரம்பித்தது.

""எவ்வளவு சார் தரணும் உங்களுக்கு?'' கேட்ட கண்டக்டரின் குரலில் வேலைப் பளுதான் தெரிந்தது.

""மூன்று ரூபாய்'' சொன்னார் சாம்பசிவம்.

""சார்... உங்களுக்கு மட்டுமா தரணும். நாலைஞ்சு பேருக்கு மீதி சில்லறை தரணும் சார்'' கண்டக்டர் சொல்ல, "என்னது?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தார் சாம்பசிவம். இந்த முறை அவர் பார்வைக் கேள்வியைப் புரிந்து கொண்டார் கண்டக்டர், ""என்ன சார் செய்ய முடியும். எல்லாரும் பத்து, இருபது, ஐம்பது, நூறு ரூபாய்னு கொடுத்தா எல்லாருக்கும் எப்படி சில்லரை கொடுக்க முடியும். தினம் தினம் இது ஒரு பிரச்னை. உங்களுக்கு உங்க சொந்தப் பிரச்னைதான். நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு. டிக்கெட் விலையை எல்லாம் பத்து ரூபாய் இருபது ரூபாய், முப்பது ரூபாய்னு ரெளண்டா மாத்தினா கொஞ்சம் ப்ராப்ளம் குறையும்னு நினைக்கறேன்'' புலம்பியபடியே, அப்பொழுதுதான் பேருந்தில் ஏறி தன்னைத் தாண்டிப் போய், கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்ட ஒரு பெண்மணிக்கு டிக்கெட் வழங்கச் சென்றார் கண்டக்டர். தனக்கு அருகிலேயே இருந்த இருக்கையில் அமர்ந்தால் என்ன என்று அந்தப் பெண்மணியைக் கேட்க என்னவோ நினைத்தார்தான். ஆனால் கேட்டுவிடவா முடியும்? மனதில் நினைத்ததோடு சரி. ஏன் வீண் வம்பு, வெய்யில் வேளையில் எல்.ஐ.சியில் தொடங்கிய பயணம் பல ட்ராஃபிக் ஜாம்களையும், ஒன்வேக்களையும் தாண்டி கடைசியில் தியாகராய நகரை அடைந்தது. எல்லோரும் இறங்கி விட, கடைசியாக பேருந்தில், டிரைவர், கண்டக்டரோடு சேர்த்து சாம்பசிவமும் இன்னொரு பயணியும்தான்.

சாம்பசிவம் கண்டக்டரிடம் சென்றார். ""கண்டக்டர் மீதி மூன்று ரூபாய் கொடுங்க'' ஆணித் தரமாகவே கேட்டார். வேறு வழி இல்லையே. இப்பொழுதும் விட்டு விட்டால் அதற்குப் பிறகு போன பிறவியில் பெயர் தெரியாத இந்தக் கண்டக்டருக்கு தான் மூன்று ரூபாய் பண பாக்கி வைத்து விட்டோமோ என எண்ணி சமாதானம் மட்டுமே பட வேண்டி இருக்கும். அதில் வட்டி சேர்ந்து இருக்கின்றதோ இல்லை வெறும் அசல் மட்டும் தானோ...

கண்டக்டர் தன் பையில் கை விட்ட அதே வேளையில் அந்த இன்னொரு பயணியும் கண்டக்டரிம் வந்தார். ""உங்களுக்கும் சில்லறை மீதி தரணுமா?'' இப்பொழுது பொறுப்பாகவே கேட்டார் கண்டக்டர்.

""ஆமாம்பா. மீதி இரண்டு ரூபாய் தரணும்'' சொன்னார் அவர். கண்டக்டர் முகத்தில் இயலாமை படர ஆரம்பித்தது. கடைசியில் பணப் பையில் கை விட்டு அவர் கையில் எடுத்தது ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று.
""இந்தாங்க சார், நான் உங்களுக்கு மூன்று ரூபாய் தரணும். இவருக்கு இரண்டு ரூபாய் தரணும். சோதனையா பாருங்க, என் கிட்ட ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் காயின்ஸ் இல்லவே இல்லை'' கண்டக்டர் தன் பணப் பையை "உண்மையைச் சொன்னேன்' பாணியில் விரித்துக் காட்டினார். அவர் சொன்னது உண்மைதான். சரி என்னதான் செய்யப் போகின்றார் முடிவில்.
""இந்தாங்க ஐந்து ரூபாய். நீங்க உங்களுக்குள்ள பிரிச்சு எடுத்துக்குங்க'' சொல்லி விட்டு டீ சாப்பிட அழைத்த டிரைவர் தோளில் கை போட்டு பட்டென்று பேருந்தை விட்டு இறங்கிச் சென்று விட்டார்.
இப்பொழுது பேருந்தில் சாம்பசிவமும் அந்த மற்றொறு பயணியும்தான். சாம்பசிவம் அவரைப் பார்த்தார். அவர் இவரை விட ஓரிரு வயது பெரியவராகத் தெரிந்தார்.
""சார். ஐந்து ரூபாயை நீங்க எடுத்துக்கிட்டு எனக்கு மூன்று ரூபாய் இருந்தா தாங்க. என் கிட்ட சில்லறைக் காசே இல்லை. வெறும் நூறு ரூபாய் நோட்டுக்கள்தான்'' சொன்னார் சாம்பசிவம்.
""என் கிட்டயும் அதேதானே சார். சில்லரைக் காசே இல்லை... அதனால்தானே இருபது ரூபாய் நோட்டை கண்டக்டரிடம் கொடுத்தேன்'' சொன்னார் அவர்.
""சில்லறை இருந்திருந்தா கொடுத்திருக்க மாட்டேனா?''
""சார் அப்ப ஒண்ணு பண்ணுங்க. இந்த ஐந்து ரூபாயை நீங்களே வைச்சுக்குங்க. மூன்று ரூபாய்ல என்ன சார் வந்தது. நான் கிளம்பறேன்'' சொல்லி விட்டு பேருந்தை விட்டு இறங்கினார் சாம்பசிவம். கண்டக்டரிடம் தனக்கு நியாயமாக வர வேண்டிய மூன்று ரூபாய்க்காக பல தடவை கேள்வி முயற்சி செய்து பார்த்தவர் இப்பொழுது இந்த முடிவுக்கு வந்தார்.
""சார் சார்'' அந்த நபர் இவரைத் தொடர்ந்து இவர் பின்னால் பேருந்தை விட்டு இறங்கினார்.""ஒரு நிமிஷம் நில்லுங்க''அவர் சொல்ல நின்றார் சாம்பசிவம். ""என்ன சார்?'' கேட்டார்.
""இல்ல சார். வேற வழியே இல்லையா என்ன? பக்கத்துல இருக்கற கடைக்குப் போய் மாத்திக்கலாம் வாங்க'' சொல்லி விட்டு, வேண்டாம் என்று எவ்வளவோ சொன்ன சாம்பசிவத்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லலானார் அவர். சாம்பசிவத்துக்கு எரிச்சலாக வந்தது.
""சார், உங்களுக்கு அப்படி மனசு வரலேன்னா, ஐந்து ரூபாயையும் என் கிட்டயே கொடுத்துடுங்க...'' இவர் பேச்சை அவர் காதில் வாங்கிக் கொண்டால்தானே... தியாகராய நகர் பேருந்து நிலையத்திற்கு வெளியில் இருக்கும் சிறிய காப்பிக் கடை முன்னால் நின்றார் அந்த ஆசாமி.
""இரண்டு காப்பி கொடுப்பா''
கடைக்காரரிடம் சொல்லி விட்டு சாம்பசிவத்தைத் திரும்பிப் பார்த்தார்.
""இந்தக் கடையில் காப்பி நல்லா இருக்கும் சார். நீங்க கூட சாப்பிட்டு இருக்கலாம்... உங்களுக்கு சர்க்கரை போடலாமா?''
சாம்பசிவத்துக்கு அந்த ஆசாமியின் செயல் எரிச்சலைத் தந்தாலும், ஆச்சரியமாகவும் தோன்ற ஆரம்பித்தது. ஐந்து ரூபாயைத் தானே எடுத்துக் கொள்ளலாமே என்று சொன்னாலும் வேண்டாம் என்கின்றார். என்னிடம் கொடுத்து விடு என்றாலும் அதையும் செய்யவில்லை. காப்பி வாங்கிக் கொடுத்து என்னதான் செய்து கொண்டிருக்கின்றார் இவர்... புரியவில்லை.
கடைக்காரன் இரண்டு காப்பிக் கோப்பைகளை இவர்கள் முன்னால் நீட்ட ஒன்றை தான் எடுத்துக் கொண்டு மற்றொன்றை சாம்பசிவத்தின் கையில் கொடுக்க, சுடும் வெய்யில் வேளையிலும் சூடான காப்பி சுவையாகவே இருக்க, நாவிற்கு இதமாகவே இருந்தது சாம்பசிவத்துக்கு. என்ன, ஏற்கெனவே கனமாகிப் போன கைக்குட்டை
இன்னும் கனமாகும் அபாயம் தோன்றியது. சூடான காப்பி குடித்து உடலில் வழிய ஆரம்பித்த வியர்வையை பிறகு எதைக் கொண்டு துடைப்பதாம்.
""சார், உங்க பெயர்... நீங்க இங்கேதான் இருக்கீங்களா... என்ன பண்ணறீங்க...?'' கேட்க ஆரம்பித்தார் அந்த ஆசாமி.
""சாம்பசிவம். ரிடையர் ஆயிட்டேன். இங்கேதான்
பக்கத்துல இருக்கேன்''
சுருக்கமாகத்தான் சொன்னார் சாம்பசிவம். வெய்யிலிருந்து தப்பித்து சீக்கிரம் வீட்டுக்குள் நுழைந்து விட வேண்டும் என மனது சொல்லியது. அதுவும் இல்லாமல் அவர்தான் "மீதி மூன்று ரூபாய் நீங்களே எடுத்துக்குங்க' என்றுதானே சொல்லியிருந்தார். வற்புறுத்தலால்தானே வந்திருக்கின்றார்.
காப்பிக் கோப்பையை வைத்து விட்டு அந்த நபர் கடைக்காரரிடம் இருபது ரூபாய் நோட்டை நீட்டினார்.
""தயவு பண்ணி நாலு ஒரு ரூபாய் காயினா கொடுங்க சார். ரெண்டு காப்பிக்கு பதினாறு ரூபாய் போக...'' விண்ணப்பித்துக் கொண்டார். கடைக்காரரும் அவ்வாறே செய்தார்.
இவரைப் பார்த்தார் அந்த நபர். ""இந்தாங்க சார்'' சொல்லியபடி இவர் கையில் மூன்று ஒரு ரூபாய் காயின்
களைக் கொடுத்தார். ""சரியா சார்'' கேட்டார். தன் சட்டைப் பாக்கெட்டில் மீதி ஒரு ரூபாயைப் போட்டவாறே.
இவ்வளவு நேரம் ஒரு அந்நியர் அருகில் ஏதோ வேண்டா வெறுப்பாகவே நின்றிருந்த நம் சாம்பசிவம், முதல் முறையாக மனதில் இருந்து மகிழ்ந்தவாறு ""ரொம்ப தாங்க்ஸ் சார்.. ..காப்பிக்கு'' சொன்னார்.
""ஒரு காப்பி வாங்கிக் கொடுத்ததுக்கு தாங்க்ஸா...என்ன சார் இது...'' வியர்வை நிறைந்த தன் முகத்தைத் துடைத்தவாறே சொன்னார் அந்த நபர்.
தன் மனதில் எழுந்த அந்த சந்தேகத்தைக் கேள்வியாக மாற்றினார் சாம்பசிவம்.
""சார்...ஒரு சந்தேகம் கேட்கலாமா?''
""தாராளமா கேளுங்க சார்'' சொன்னார் அவர்.
""நான் சொன்னபடி நானோ இல்ல நீங்களோ அந்த ஐந்து ரூபாய் எடுத்துட்டு இருந்திருக்கலாம். முதல்ல நீங்க ரொம்ப கரெக்டான ஆசாமின்னு நினைச்சேன். இரண்டு ரூபாயை விடவும் மனசு வரலையா? அதுவா? இதுவான்னு ஏதோதோ யோசிச்சுப் பார்த்தா கடைசியில காப்பிக்கு இவ்வளவு செலவு பண்ணி... நமக்கு பரிச்சயமும் இல்லையே... என்ன காரணம் சார்'' கேட்டார் சாம்பசிவம். அவர் பதிலை ஆர்வத்துடன் எதிர் நோக்கியவாறே...
அந்த நபரின் முகத்தில் லேசான சோகம்தான் படற ஆரம்பித்ததோ... அது போலத்தான் தோன்றியது சாம்பசிவத்துக்கு.
""பதில் சொல்ல வேண்டாம்னா சொல்ல வேண்டாம் சார். நான் கேட்டதும் உங்க முகம் வாடின மாதிரி தெரியுதே சார். கேட்கக் கூடாதது ஏதேனும் கேட்டுட்டேனா... சும்மாதான் கேட்டேன்'' - சொன்னார்
சாம்பசிவம்.
""என்னத்தைச் சொல்ல சார். என் ரெண்டு பையன்களும் அமெரிக்காவுல இருக்காங்க. பேரன் பேத்தியெல்லாம் அங்கேதான். நானும் என் மனைவியும் மட்டும்தான் இங்கே ஒரு ப்ளாட்ஸ்ல தனியா இருந்தோம்''
""இருந்தோம்னா''
"" போன வருஷம் என்னைத் தனியா தவிக்க விட்டுட்டு அவ போய் சேர்ந்துட்டா சார்... இந்த சில்லறை பங்கு போடற சாக்குல உங்க கூட ஒரு பத்து இருபது நிமிஷம் செலவு பண்ணினேன் பாருங்க. ஏதோ ஓரிரண்டு வார்த்தைகள் பேசினோம் இல்லையா... சக மனுஷனோட... அதனாலதான் சார் சில்லறை விஷயத்தை உபயோகப்
படுத்திக்கிட்டேன். தனிமை தாங்க முடியல சார். என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. உங்க நேரத்தை நான் வீணடிச்சிருந்தேன்னா என்னை மன்னிச்சுடுங்க'' சொல்ல ஆரம்பித்த அவர் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர்த்திவலைகள் வழிய ஆரம்பித்தன.
அவரை ஆறுதலாகத் கட்டிக் கொண்ட சாம்பசிவத்தின் மனம் கனத்திருந்தது. கண்கள் கலங்கி இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com