ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாய் வறண்டு போனால்...? 

எனக்கு வயது 78. கடந்த ஒரு வருடமாக, இரவு படுத்தால், வாய்ப்பகுதி (நாக்கு, உதடு) முழுவதும் ஒன்றரை மணி வித்தியாசத்தில் கடும் வறட்சி ஏற்படுகிறது. தூக்கம் கெடுகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாய் வறண்டு போனால்...? 
Updated on
2 min read

எனக்கு வயது 78. கடந்த ஒரு வருடமாக, இரவு படுத்தால், வாய்ப்பகுதி (நாக்கு, உதடு) முழுவதும் ஒன்றரை மணி வித்தியாசத்தில் கடும் வறட்சி ஏற்படுகிறது. தூக்கம் கெடுகிறது. பகலில் முகபாரம் ஏற்பட்டு காது அடைக்கிறது. எனது SCAN REPORT--இல் MUCOSAL THICKENING IN BILATERAL MAXILLARY & SPHENOID SINUSES-SUGGESTIVE OF SINUSITIS, MILD DEVIATION OF NASAL SEPTUM, WITH CONVEXITY TOWARDS LEFT SIDE, RHINITIS & INFERIOR NASAL TURBINATE HYPERTROPHY என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு என்ன?

 -ரா. கோவிந்தன்,  வாடிப்பட்டி.

இரவின் இறுதிப்பகுதியான 2 மணி முதல் 6 மணி வரை உடலில் வாயுவின் ஆதிக்கம் கூடும் வேளையாகும். அதற்குக் காரணம், இரவில் உண்ட உணவு அனைத்தும் செரித்து இரைப்பை வெற்றிடமாகியிருக்கும். அந்த சமயத்தில் பலருக்கும் நாக்கு, உதடு முழுவதும் வறண்டு கடும் வறட்சியை உணர்வர். உங்களுக்குப் படுத்த  ஒன்றரை மணி நேரத்திலேயே வாய்ப்பகுதி வறண்டு விடுவதால், இரைப்பையில் உணவு செரித்து வெற்றிடப்பகுதியில் வாயு சேருகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. அது போன்ற நிலையில், வாயைக் கொப்பளித்துத் துப்பிவிட்டு, அவசரமின்றி நிதானமாய் சிறிது சிறிதாக கோரைக்கிழங்கும் சுக்கும் போட்டுக் காய்ச்சிய தண்ணீரைப் பருகுவது நல்லது. இதனால், தங்களுடைய SCAN REPORT-இன் படி காணப்படும் SINUSITIS எனும் தலையில் உட்பகுதியில் அடைபட்டுள்ள கபத்தின் சீற்றத்தைக் குறைக்கவும், வாயுவினால் ஏற்படும் வறட்சியைக் குணப்படுத்தவும் முடியும். தண்ணீராக இல்லாமல் இளஞ்சூடான பதத்தில் இருந்தால் மேலும் நன்மை தரும். புதிதாக இந்தப் பழக்கத்தை நீங்கள் தொடங்க விருப்பதால், சுமார் 100 மி.லிட்டரில் தொடங்கிப் பழகிய பின் சுமார் 300 மி.லிட்டர் வரை சாப்பிடலாம். பகலில் முகபாரம் ஏற்பட்டு காது அடைப்பு ஏற்படுவதிலிருந்து தங்களுக்குத் தலைப்பகுதியில் நீர் கோர்த்துக்கொள்வது தெளிவாகிறது. இந்த நிலையில் ஏலக்காயையும் கிராம்பையும் வெற்றிலைச்சாறு விட்டரைத்து லேசாகச் சூடாக்கி நெற்றியில் பற்றுப் போடலாம். சாம்பிராணியையும் மஞ்சளையும் அல்லது மஞ்சளையும் குங்குமப்பூவையும் அல்லது குங்குமப்பூவை மட்டும் இழைத்து லேசாகச் சூடாக்கிப் பற்றுப் போடலாம். இவற்றுடன் புழுங்கலரிசியையோ அவலையோ சேர்த்து ஒன்றிண்டு மிளகு கூட்டிப் பற்றுப் போட, நீர் கோர்வையினால் மிகவும் அதிகமான தலைக்கனம் நன்கு குறைந்துவிடும். நீர்க்கோர்வையை எளிதில் பழக்கச் செய்து வெளியேற்றவும், அதன் நீர் அம்சத்தை வறளச் செய்து வேதனையைக் குறைக்கவும் ராஸ்னாதி சூரணம் எனும் விற்கப்படும் மருந்தை உச்சந்தலையிலும் பிடரியிலும் தேய்த்து விட்டுக் கொள்ளவும். வால்மிளகை ஊசியின் முனையில் குத்திக்கொண்டு அதை நெருப்பில் கொளுத்திப் புகையும் போது அந்தப் புகையை மூக்கின் வழியே உறிஞ்சுவதால் தலைபாரம் மற்றும் காது அடைப்பு நன்கு குறையும்.

உணவில் நீங்கள் இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையை மிதமாகச் சேர்க்கலாம். பகலில் படுத்து உறங்குதல் கூடாது. கடுமையான நீர்க்கோர்வை இருக்கும் போது கர்ப்பூராதி சூரணம், தாளீசாதி வடீ, மஹாலஷ்மீ விலாஸரஸம், வ்யோஷாதி வடீ போன்ற மருந்துகள் நல்ல பலன் தருபவை.

வயோதிகத்தில் உடலின் சகிப்புத் தன்மை குறைவால் ஏற்படக் கூடிய உபாதையானதால், நீங்கள் உடலிற்கு வலுவூட்டக் கூடியதான தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாதி லேகியம், சியவனபிராசம், கூஷ்மாண்டரசாயனங்களை இடைவிடாமல் சாப்பிடுவதையும், தோலின் சக்தியைப் பாதுகாக்க அஸன வில்வாதி தைலத்தைத் தலைக்கும், ஏலாதி தைலத்தை உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தவும். தலைக்குத் தலையணைக்குப் பதிலாக புழுங்கலரிசி, துவரம் பருப்பு இவற்றைத் துணிப்பையில் அடைத்து வைத்துக் கொண்டு படுப்பதால் சுகமாக இருக்கும்.

வீட்டினுள்ளேயும் வெளிசுற்றுப் புறங்களிலும் தூசி நிரம்பிய நிலையில், நீங்கள் குறிப்பிடும் விதம் உபாதைகள் தோன்றக் கூடும். அதனால், நீங்கள் படுக்கும் அறை ஜன்னல்கள், படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வை ஆகியவற்றில் தூசி படியாதவாறு அவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  படுக்கும் அறையில் தட்டு முட்டுச் சாமான்கள் ஏதுமில்லாமல் சுத்தமாகவும் தரையை அடிக்கடி துடைத்து விட்டும், மின் விசிறியில் தூசி படியாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியமாகும். முடிந்த வரை சூரிய உதயத்திற்குப் பிறகு, நிதானமாக அதே சமயத்தில் ஆழமாக மூச்சுப் பயிற்சியை நீங்கள் செய்து வருவதன் மூலம் நுரையீரல் விரிவடைந்து வலுப்பெறும். சுத்தமான காற்றோட்டமுள்ள பகுதியில் அமர்ந்து செய்வது நலம். 

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com