சன்மானம்

காசி தாத்தாவுக்கு தன் பேரன் பழனியை கூத்துக் கலைஞனாக ஆக்குவதில் கிஞ்சித்தும் விருப்பமில்லை.
சன்மானம்

காசி தாத்தாவுக்கு தன் பேரன் பழனியை கூத்துக் கலைஞனாக ஆக்குவதில் கிஞ்சித்தும் விருப்பமில்லை. வாரக் கணக்கிலே குடும்பத்தை விட்டுப் பிரிந்து, ராவெல்லாம் துக்கமில்லாம, ஊர் ஊராக அலைகிற அந்த அலைச்சல் பொழப்பு தன்னோடு போகட்டும் என்றிருந்தார். ஆனால் பழனி பத்தாங் கிளாஸ் வரைக்கும் தான் ஒழுங்காய் படித்தான். அப்புறம் படிப்பு ஏறவில்லை. அவன் எண்ணம் பூராவும் கூத்து மேலதான் இருக்கு என்பதை ஒரு நாள் கண்டுபிடித்து விட்டார். ஒரு நாள் தோட்டத்தில் கிணற்றின் மேல் உட்கார்ந்து ஏகாந்தமாக பாடிக் கொண்டிருந்தான். பாட்டைக் கேட்டார். பதினெட்டாம் போர் கூத்து பாட்டு அது. தோடி ராகத்தில் , அட தாளம். தன் தொடையில தாள ஞானத்தோடு தாளம் தட்டிக் கொண்டிருந்தான். அசந்து போய் விட்டார். கேள்வி ஞானம்தான் இது. எந்த ஊரில் கூத்து என்றாலும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவான். எவ்வளவோ போராடி முடியாமல் விட்டு விட்டார். ஹும்... விடலைப் பசங்க விஜய், அஜீத்னு சுத்துகிற இந்த காலத்தில இப்படி ஒரு பிள்ளை. அவன் தலையிலும் கூத்தாடின்னு எழுதி வெச்சிருக்காப்பல இருக்கு. கூத்தாடி ரத்தம்தான அவன் உடம்புலேயும் ஓடுது? இவங்க வீட்டில் பரம்பரை பரம்பரையா எல்லாரும் கூத்தாடிகள்தான். இவருடைய அப்பன் கோவிந்தன் பெரிய லெவல்ல பெயரெடுத்தவர். அவரு இரணியன் வேஷங் கட்டினால் மேடை அப்படி அதிருமாம். காசி தாத்தாவும் லேசு இல்ல. முப்பது வருஷமா ஆடி ஓய்ந்து போனவர். ஆரம்பத்தில் இருந்தே ராஜபார்ட்தான். சில்லரை வேஷங் கட்டினதில்லை. பதினெட்டாம் போரில இவரு துரியோதனன் வேஷங் கட்டி ஆடுறதைப் பார்க்கணும், அவ்வளவு உருக்கமாக இருக்கும். ஜனங்க துரியோதனன் என்ற வில்லனுக்காக அழுவார்களாம். அவ்வளவு உருக்கமா நடிப்பாராம்.
 தாத்தாவுக்கும் பேரனுக்கும் இன்றைக்கு ஆதரவுன்னு உறவுகள் யாரும் கிடையாது. கிழவனுடைய பொண்டாட்டி போயி ரொம்ப காலமாச்சி. அவருடைய ஒரே புள்ளையும், மருமவளும் கிடந்து பட்றா கிழவான்னு பேரன் பழனியை இவர் தலையில் கட்டிவிட்டு ஒருத்தர் பின் ஒருத்தராய் போய் சேர்ந்து விட்டார்கள். மருமவ புள்ள பெறமாட்டாம போய் சேர்ந்தாள். பிள்ளை ஜுரத்தில ஜன்னி'' கண்டு போய் விட்டான்.
 "தோ பார்றா! கண்ணூ... சொல்றதை கேளு. வாணாண்டா.கூத்துன்றது அம்மாம் சுலுவு இல்லைடா... அல்லல் பொழப்புடா..''
 "ஒவ்வொண்ணா சொல்லிக் குடு தாத்தா. நான் புடிச்சிக்கிறேன்.''
 "அடத்தூ... சொல்றேன் கேக்காம அதே பாட்டை பாட்றியே''
 "எம்மா கஷ்டமிருந்தாலும் சமாளிப்பேம்பா''"
 ""கிழிச்சே. முப்பத்திரெண்டு அடவுகள் புடிக்கத் தெரியணும், குரல் வளமும், தாள ஞானமும் வோணும், கிறு கிறுன்னு அம்பது கிறிக்கிக்கு மேல அடிக்கணும், அப்புறம் வசனத்தை மனனம் பண்ணனும், இப்படி எல்லாத்தையும் கத்துக்கணும். ஆமாம் சொல்லிட்டேன்'' -அவன் எதுக்கும் ஜகா வாங்கறதா இல்லை. அப்புறம் வேற வழியில்லாமல் ஒரு நல்ல நாளில் கர்ணமோட்சம் கூத்து பாடத்தை கொடுத்து மனனம் பண்ண சொல்லி ஆரம்பித்து வைத்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு சங்கதியாய் நிதானமாக அடிப்படையிலிருந்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். பையனும் கற்பூரமாய் இருந்ததில் தாத்தாவுக்கு சந்தோஷம்.
 "இதோ பார்றா... கூத்து பாடம் முழுசையும் மனப்பாடம் பண்ணணும். அப்பத்தான் அதில எந்த வேஷங் கொடுத்தாலும் ஆடமுடியும். எடுத்தவுடனே மெயின் வேசம் தரமாட்டாங்க. ஒவ்வொரு குழுவிலயும் பத்து பதினைஞ்சி கூத்து பாடங்களுக்கு மேல பழக்கி வெச்சிருப்பாங்க தெரியுதா? எந்த ஊர்ல இன்னா கூத்து வேணும்னு கேட்டாலும் ஆடியாவணும். சில சமயங்கள்ல அந்த ஊருக்கு போன பின்னாலதான் இன்னா கூத்துன்னு ஊரார் சொல்லு
 வாங்க. அப்படியே ஒத்திகை பார்க்காம ஆடியாவணும். தெரிதா? நீயும் அந்த பத்து பதினஞ்சி கூத்து பாடங்களையும் முழுசா மனனம் பண்ணி வெச்சிக்கணும். எந்த ஊர்ல இன்னா கூத்துன்னாலும் இன்னா வேசம் உனக்குக் குடுத்தாலும் உன்னால ஆட முடியணும். அப்பத்தான் நீ சரியான ஆட்டக்காரன்... தெரிஞ்சிக்கோ''
 "சரி... கண்டிப்பாய் இதுல நான் ஜெயிப்பேன் தாத்தா. நீ வேணா பாரேன்''"
 ""பாக்கத்தான போறேன். தோ பார்றா... பாரதக் கூத்துன்றது மட்டுமே பதிமூணு நாள் கூத்து. குறவஞ்சியில ஆரம்பிச்சி பதினெட்டாம் போர் கூத்தோடு பதிமூணு நாள் தொடச்சியா கண் முழிக்கணும்''
 " தூத்தெரி யோவ் கெழவா... சொம்மா காபரா குடுக்கிறீயே. வுடு நான் சமாளிச்சிக்கிறேன்'' -பேரன் வெகுண்டான். தாத்தாவுக்கும் கோபம்.
 "இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு பேசாதடா நாயே. இன்னா சொல்றேன்னு கவனி''
 பேரன் முறுக்கிக் கொண்டு போனான்.
 பழனிக்கு இப்ப என்னா இருபத்தி இரண்டு வயசாகிறது. நல்ல உயரம், திடமான உடம்பு. இள வயசு மூளை. விடாத பயிற்சியில ஒவ்வொன்றாக கற்றுத் தேறி பத்து மாசத்துக்குள்ள கூத்துக் கலையின் அத்தனை சூட்சுமங்களும் அவனுக்கு ஓரளவு அத்துபடியாகி விட்டன. மேடையில் ரங்கராட்டினம் போல சுற்றி வரும் கிறிக்கியடிக்கிற கலையை கற்றுக் கொள்ளத்தான் நிறைய சிரமப்பட்டான். பத்து கிறிக்கி அடிக்கிறதுக்குள்ள தலை சுற்ற கீழே விழுந்திடுவான்.
 ""டேய்! மேடை ஏறினா அம்பது கிறிக்கிக்கு மேல அடிக்கணும் புரியுதா?... தலை சுத்தறப்ப உல்டாவா ரெண்டு கிறிக்கியடிச்சிப் பாரு சரியாப் போயிடும்''
 அவ்வளவுதான் வித்தையின் சூட்சுமத்தை பிடித்துக் கொண்டான். வெறித்தனமாய் பயிற்சி எடுத்தான். மூணு மாசத்துக்குள்ளே ஏக் தம் ஐம்பது கிறிக்கி அடிச்சிட்டு உல்டாவா அடிக்காமலேயே அசையாம நிற்கிற அளவுக்கு வித்தை கை வந்து விட்டது. ஒரு நல்ல நாளில் தாத்தா காலில் விழுந்து ஆசி வாங்கினான். தாத்தா அவனை கூட்டிப் போயி புதூர் மணிகண்டன் குழுவில் சேர்த்து விட்டார். முதல் நாள் கூத்தில் சகுனி வேஷங் கொடுத்துப் பார்த்தார்கள். சின்ன வேஷந்தான். ஆனால் சிறப்பாக ஆடினான். பாத்திரத்தின் கள்ளத்தனத்தையும், சேஷ்டைகளையும் நன்றாய் முகத்தில், நடையில் காட்டினான். காசி தாத்தாவுக்கு கொள்ளை சந்தோஷம். அப்படி இப்படி நகுலன், சகாதேவன், சல்லியன், அஸ்வத்தாமன், அபிமன்யூ, அப்புறம் திரௌபதி, பொன்னுருவி மாதிரி ஸ்த்ரீ பார்ட் வேஷமெல்லாம் கூட ஆடி, கடைசியாக பிரம்மதேசத்தில ஆடிய கூத்துல பத்து நாள் கட்டியக்காரன் வேஷம் கட்டி ஜனங்களை நன்றாகச் சிரிக்க வைத்தான். இடையிடையே சொந்த டயலாக்குகளையும் அள்ளி விட்டான். அவ்வளவுதான் அதுக்கப்புறம் ராஜபார்ட் வேஷந்தான். முதல் மெயின் வேஷமாக கிருஷ்ணன் தூதுவில் கிருஷ்ணனாக வேஷங் கட்டினான். முதல் நாளிலேயேஅந்த பாத்திரத்துக்கான அமைதி, நளினம், அலட்சியம், அத்தனையையும் காட்டி மக்கள்கிட்டே கைத்தட்டலைப் பெற்றான்.
 ரெண்டு வருஷத்துக்குள்ளேயே எல்லா ராஜபார்ட் வேஷங்களையும் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவனுடைய சம்பளமும் உயர ஆரம்பித்தது. ஒரு நாள் கிழவன் அரிசி, பருப்பு வாங்க ரேஷன் கடைக்கு போயிருந்தப்ப அவர் ஆடிய காலத்தில் கட்டியக்காரன் வேஷம் கட்டிய நாதமுனியை ரேஷன் கடை வாசலில் வைத்துச் சந்தித்தார். பரஸ்பரம் குசல விசாரிப்புகளுக்கு பின்பு ஓரமாய் உட்கார்ந்து தத்தம் பழைய நினைவுகளை பகிர்ந்து முடித்தார்கள்.
 "அண்ணா! இப்பல்லாம் சின்னச் சின்ன பசங்கள்லாம் ஆட வந்து சூப்பரா ஆட்றாங்கண்ணா கவனிச்சீங்களா? ராத்திரி குத்தனூர்ல கர்ணமோட்சம் கூத்து பார்த்தேன். மணிகண்டன் குரூப்தான் ஆட்னாங்க. உங்கிட்ட சொல்றதுக்கென்ன அதுல கர்ணன் வேசம் கட்னவன் யாருன்னு தெரியலபா. புதுசா இருக்கான். அறியாத பையன், சின்ன வயசுதான். இன்னா இன்னைக்கெல்லாம் ஒரு இருவத்தி மூணு இருவத்தி நாலு வயசுதான் இருக்கும்''
 கிழவன் அவன் தன் பேரன்தான்னு சொல்ல வில்லை.
 "ஏன்டா! இன்னா விஷயம் நொளப்பிட்டானா?''
 " அய்யோ... அய்யோ... டி.எம். சவுந்தரராஜன் மாதிரி வெங்கலக் குரலுண்ணா. கணீர்னு இன்னா குரல் வளம்ன்ற? அம்சமான முகவெட்டு. இன்னாமாரி கிறிக்கி அடிக்கிறான் தெரியுமா? நம்பவே முடியலபா... சும்மா அம்பது கிறிக்கிக்கு மேல அனாயாசமா சுத்தறாம்பா. ஆச்சரியமா இருக்கு. சுத்திட்டு கிண்ணு'னு நிக்கிறான். ஒங்காலத்தில் நீ கூட அம்மாம் தரவசா கிறிக்கி அடிக்கலபா. என்னிக்கும் இருவதை தாண்டமாட்டியே நீ. கவனிச்சேன்... அவன் ஸ்டேஜ் மேல ஏறிட்டாலே மேளக்காரன் கூட குஷியாயிட்றான். இவனுக்கென்று ஒரே தம்ல முப்பத்தி ரெண்டு தாளக்கட்டையும் வாசிச்சி முடிக்கிறான். பையனும் சளைக்கலபா. அட... அட... முப்பத்திரெண்டு அடவுகளையும் இன்னா நளினமா புடிக்கிறான்பா. இதெல்லாம் தெய்வ கடாட்சம்தான்''
 - காசி தாத்தா தாள முடியாமல் அழுதார். வெகுஜன அபிப்பிராயத்துக்கும், ஆட்டக்காரங்களுடைய அபிப்பிராயங்களுக்கும் வித்தியாசமுண்டு. ஆட்டக்காரன் குறைகளைப் பட்டியல் போட்டுவிடுவான். நாதமுனியே இவ்வளவு பாராட்டியதில் கிழவன் உணர்ச்சிவசப் பட்டார். வந்தவுடனே பையனுக்கு திருஷ்டி சுத்தி போடணும்னு நினைத்துக் கொண்டார்.
 பழனி குத்தனூரில் பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளத்தை முடிச்சிக்கிட்டு மறுநாள்தான் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் மதியம் சாப்பிடும் போது பேரன் தாத்தாவிடம் பேச்சு கொடுத்தான்.
 " யோவ் தாத்தா... நேத்து கதை தெரியுமா? பதினெட்டாம் போர்ல நானு துரியோதனன் வேசங் கட்டினேன். துரியோதனன் புலம்பல் சீன்ல விருத்தத்தை எடுத்தேன்
 என்ன செய்வேன் நானே ஏது செய்வேன் நானே மன்னுமெந்தன் ஆவி மாய காலமாச்சேஅன்னையினுமேலாம் அம்மணியுனையான் பன்னியே வருத்தம் பாவியாகினேனே'' கணீரென்று உச்ச ஸ்தாயியில் நாலரை கட்டையில் குரலெடுத்து பாவத்துடன் பாடிக்காட்டினான், மாதிரிக்கு கிறு கிறுன்னு பத்து கிறிக்கி அடிச்சி காட்டினான்.
 "ஜனங்க என்னை மேல பாடவே வுடலபா தெரியுமா? ஓடியாந்து என்னை அலக்காக தூக்கிக்கினாங்க. ஐயோ! முத்தமெல்லாம் குடுக்கிறாங்கபா''
 லஜ்ஜையாய் சிரித்தான். கிழவரிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. எரிந்து விழுந்தார்.
 "அட பொறம்போக்கு... ரொம்ப பீத்திக்காத அடங்கு. மண்டையில கர்வத்த ஏத்திக்காதடா நாயே, வித்தை போயிடும். அடக்கமா இரு. போ... போ... டைம் ஆப்பட்றப்ப போயி தூங்கு. எப்பவொன்னாலும் கூத்தாட்றதுக்கு தகவல் வரும். அதுக்குள்ள நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ'' பேரனுக்கு சப்பென்றுபோய்விட்டது. எழுந்து உள்ளே போய்விட்டான்.
 காசி தாத்தா வாய்க்கு சர்க்கரைதான் கொட்டணும். இரண்டு நாள்தான் ரெஸ்ட். காஞ்சிபுரம் டவுனில் இரண்டு நாள் கூத்து. கிருஷ்ணன் தூது, கர்ணமோட்சம். தாம்பூலம் பிடித்தாகி விட்டது. வருகிற வியாழன், வெள்ளிக் கிழமை. இடம் பிள்ளையார் பாளையம்மந்தைவெளியில் என்று வாத்தியாரிடமிருந்து செய்தி வந்து விட்டது. பேரனின் உடம்பைப் பற்றி தாத்தா கவலைப் பட்டார். தயார் தீனி கொடுக்கணும்னு நாலு நாளும் கோழிக் குழம்பு வெச்சி சாப்பாடு போட்டார்.
 என்னதான் தாத்தாவும் பேரனும் காரசாரமாக சண்டை போட்டாலும் வெளியூருக்கு கூத்தாட கிளம்பறப்போ தாத்தா கால்ல விழுந்து ஆசி வாங்கிட்டுத்தான் பழனி கிளம்புவான். நாலு நாளும் நிம்மதியாக சாப்பிட்டுத் தூங்கி அன்னைக்கு மதியம் காஞ்சிபுரம் கிளம்பினான்.
 ""டேய்... உனுக்கு ஒரு விசயம் சொல்லணும். நம்ம குடும்பத்தில பரம்பரை பரம்பரையா கூத்தாடி வந்தாலும் யாரும் சாராயத்த தொட்டதில்ல. அத எப்பவும் மனசில வெச்சிக்கோ'' -அவன் அவர் கன்னத்தை தட்டினான்.
 "என்னைக்கும் சாராயத்த தொடமாட்டேன் கெழவா. கவலைப் படாதே. சரி தாத்தா... என் கூத்தை பாக்கறதுக்கு புள்ளபாளையம் வர்றியா?''
 "இல்லடா ஒடம்பு ஒத்துழைக்காது. அப்புறம் அங்க வந்து தூசுல இழுப்பு வந்துட்டதுன்னு வையி கஷ்டமாயிடும்''
 இதுவரைக்கும் பழனி சில்லரை வேஷங்களை கட்டி ஆடியதைத்தான் தாத்தா பார்த்திருக்கிறார். மெயின் வேஷங்கட்டி பார்த்ததில்லை. பார்க்கக் கூடாதுன்னு இல்லை. மெயின் வேஷங் கட்டினதுக்கப்புறம் அக்கம் பக்கத்தில தாத்தா போற தூரத்தில எங்கியும் கூத்து நடக்க வில்லை.
 "நீ கர்ணமோட்சத்தில கர்ணனா வேசங் கட்றத பாக்கணும்னு மனசு அடிச்சிக்குதுடா இன்னா பண்றது?'' - பேரன் சிரித்தான்.
 "எனுக்கும் என் கர்ணன் ஆட்டத்த நீ பார்க்கணும் தாத்தா. உன் எதிர்ல ஆடிக்காட்டணும். ஆசையா இருக்குதுபா'' சொல்லும்போதே பழனி கலங்கினான். கிழவர் அவனை தட்டிக் கொடுத்தார்.
 "சரி கெழவா! அன்னிக்கு மத்தியானம் யாரையாவது புடிச்சி காரு அனுப்பறேன் வந்து சேரு. செரியா?''
 பழனி வழக்கம்போல கிழவன் காலில் விழுந்து ஆசி வாங்கிட்டு காலையிலேயே கிளம்பிவிட்டான். கிழவன் எதிர்பார்ப்போடு காத்திருக்க ஆரம்பித்தான்.
 இவனை ஒரு வயசு குழந்தையாக விட்டுவிட்டு பிள்ளையும், மருமகளும் போனதில இருந்து ஒவ்வொரு கட்டமாக நெனைச்சிப் பார்த்து அசை போட்டுக் கொண்டிருந்தார். எவ்வளவு கஷ்டம்? குழந்தையையும் பார்த்துக்கணும், கூத்தும் ஆடணும். பலநாள் மேக்கப் ரூமில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வெச்சிட்டு மேடையேறுவார். அவனுக்கு ஏழெட்டு வயசு வரைக்கும் அப்படித்தான் காலம் ஓடியது. பழனி சொல்லிட்டு போன பிரகாரம் வெள்ளிக்கிழமை மதியம் கார் வந்தது. பெட்டி அடியில உபயோகமில்லாம மடிச்சி வெச்சிருந்த பட்டு வேஷ்டி, பட்டு சொக்காய், பட்டு அங்கவஸ்திரம் சகிதம் ஜபர்தஸ்த்தாக கிளம்பிவிட்டர்.
 மேடைக்கு எதிரில் சற்று ஓரமாய் பிரதானமான இடத்தில் பழனி தாத்தாவுக்கு சேர் போட்டு உட்கார வைத்து விட்டான். இரவு ஒன்பது மணிக்கு கூத்து விசில் கொடுத்தாச்சி. களறி கட்ட ஆரம்பித்தார்கள். மிருதங்கம், ஆர்மோனியம், முகவீணை, எல்லாம் சேர்ந்து எல்லா தாளகட்டுக்கும் வாசித்து முடித்தார்கள். அதுக்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. அடுத்து முருகன், சிவன், சரஸ்வதி, துதிகள், அடுத்து ஆலாபனைகளுடன் ஒரு பொது விருத்தம் பாடி களறி கட்டி முடித்தார்கள். அடுத்ததாக பத்து நிமிஷங்களுக்கு கட்டியக்காரன் அறிமுகப் படலம் முடிந்தது. அடுத்து கர்ணராஜன் பிரவேசப் படலம்தான். ஆரம்பித்தது. மேடையில் கம்பீரமாய் வெளிப்பட்ட கர்ணமகாராஜனை பார்த்துக் கிழவர் உணர்ச்சிவசப்பட்டார். இமைக்க மறந்தார்.
 "கதிரவன் ஈன்ற மைந்தன், தான தரும தயாள குணசீலன் அதி வீர தீர பராக்கிரமன் கர்ணமகாராஜன் வந்தேன். மேதினியோர்களும் வீசிட சாமரம், மாதவராகிய வேதியர் சூழ்ந்திட''
 நாலரை கட்டையில் பாட்டை எடுத்தான். கிழவர் அசந்து போய்விட்டார். என்னா குரல்?, வெங்கலக் குரல், வார்த்தை உச்சரிப்பு, என்னா மிடுக்கு, என்னா குதிப்பு, கரகரவென்று அம்பது கிறிக்கிக்கு மேல அடித்துவிட்டு நிற்கிறான். அடவுகளை சடசடவென்று மாற்றுகிறானே... கிழவருக்கு கரகரவென்று கண்ணீர் ஊற்றுகிறது. அடக்க முடியவில்லை. அதிலிருந்து விடிய விடிய நடந்த கூத்தில் பல தடவைகள் கிழவர் உணர்ச்சிப் பெருக்கில் அழுது தீர்த்துவிட்டார்.
 ஆயிற்று... கூத்து முடிந்து போய்விட்டது. தெய்வமும், மனுஷங்களும் சேர்ந்து படிப்படியாக சதித் திட்டம் போட்டு பாவப்பட்ட கர்ணனை மோட்சத்துக்கு அனுப்பி வெச்சிட்டாங்க. பொழுது விடிந்ததும் எல்லாரும் பெரியதனம் வீட்டில் டிபன் சாப்பிட்டுவிட்டு பேசிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். தாத்தாவும், பேரனும் வீடு போய் சேர மதியமாகிவிட்டது. கிழவனுக்கு பேரன் ஆடிய ஒவ்வொரு அடவுகளும், வெங்கலக் குரல் பாடல்களும், கிறிக்கியும் சேர்ந்து உள்ளே அலையடித்துக் கொண்டிருந்தன.
 மறுநாள் காலையில் சாவகாசமாக தெரு வராண்டாவில் ஈஸி சேரில் படுத்துக் கொண்டிருந்தார். கர்ண மோட்சத்தில் பேரன் பாடிய பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். வெளியே நிழலாடியது.
 ""யாரது?''
 "அய்யா நாங்க காஞ்சிபுரத்திலிருந்து வர்றோம். கூத்து சம்பந்தமாய்''
 "ஐயா... நானு இப்பல்லாம் ஆட்றதை விட்டுட்டேனுங்க''"
 "இல்லீங்க, நாங்க பழனி சாரை பார்க்க வந்தோம்''
 கிழவருக்கு முகம் சுருங்கி விட்டது. உள்ளே திரும்பி குரல் கொடுத்தார்.
 ""டேய் பழனீ! யாரோ உன்னை பார்க்க வந்திருக்காங்க பாரு''
 பழனி கை கூப்பியபடியே வெளியே வந்தான்.
 ""சார்... நாங்க காஞ்சிபுரம் தமிழ்ச் சங்கத்திலிருந்து வர்றோம். ரெண்டு நாளா நீங்க ஆடின ரெண்டு ஆட்டத்தையும் பார்த்து சொக்கிப் போயிட்டோம். எங்களால முடிஞ்ச ஒரு சின்ன அன்பளிப்பு இதை நீங்க ஏத்துக்கணும்''
 அவர்கள் கிழவரை எழ சொல்லி அவர் கையால அரை சவரனில் தங்க மோதிரம் ஒன்றை போட்டுவிடச் செய்தார்கள். சால்வை போர்த்தினார்கள். பேரன் தாத்தாவைப் பார்த்தான்.
 ""தாத்தா! வந்தவங்களுக்கு நம்ம கையால ஒரு டீயாவது தர்றதுதான் மரியாதை. அய்யா எல்லாரும் உட்காருங்க''
 கிழவர் எதுவும் சொல்லாமல் எழுந்து டீ போட உள்ளே போனார். எல்லாம் முடிந்தது. வந்தவர்கள் மீண்டும் ஒருமுறை பழனியை வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். பழனி கெத்தாய் உள்ளே போனான். அப்புறம் கூட யாரோ ரெண்டுபேர் சங்கம்னு சொல்லிக்கிட்டு பழனிசாரை தேடி வந்து சன்மானத்தை கொடுத்து வாழ்த்திட்டு டீ குடிச்சிட்டு போனார்கள். கலை இலக்கிய மன்றம்னு ஆளுங்க கும்பலா பழனிசாரை தேடி வந்தாங்க. மாலைக்குள் நாலைந்து சால்வைகள் சேர்ந்து விட்டன.
 அன்றைக்கே இரவு ஏழு மணியிருக்கும். பழனி உள்ளே அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். கிழவர் ராத்திரி உணவுக்காக சப்பாத்தி மாவை பிசைந்துக் கொண்டிருக்கிறார். தொட்டுக் கொள்வதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. எதுவும் இல்லேன்னாலும் நாட்டு சர்க்கரையை தொட்டுக்கிட்டு ஒப்பேத்தி விடலாம் என்கிற தெளிவு. யாரோ கதவைத் தட்டினார்கள். கிழவர் மெதுவாக எழுந்து போய் கதவைத் திறக்க, ஒரு ஏழெட்டு பேர் இருக்கும். வெளியே கார் நிற்கிறது.
 ""யாரு நீங்கள்லாம்?''
 "இங்க கூத்தாட்றவர் ஒரு...த்...த....ர்''
 ""நாந்தான். பேரு காசி. ஆனா இப்பல்லாம் நானு ஆட்றதை விட்டுட்டேனே''
 "ஐயா.. பழனி சார் உங்களுக்கு இன்னா உறவு வேணும்?''
 "என் பேரன்''
 "சந்தோசம். அவரைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்க கூத்துப் பட்டறையிலிருந்து வர்றோம்''
 அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனார். கொஞ்ச நேரத்தில் முகத்தை கழுவிக் கொண்டு பழனி வந்தான். பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள்.
 "இன்னைக்கி காஞ்சிபுரம் பூரா உங்க நடிப்பைப் பற்றித்தான் பேச்சு. கிருஷ்ணன் தூதிலேயே அப்படி பேசினாங்களேன்னு கூத்துப் பட்டறையிலிருந்து நாங்க ஒரு பத்து பேர் வந்து கர்ணமோட்சம் ஆட்டத்தைப் பார்த்தோம். அடடா என்னா ஆட்டம்? நேரிலே சொல்லக்கூடாது... ஆனா சொல்லாம இருக்க முடியல. என்னா குரல்வளம், அடவு கட்றது, கிறிக்கி அடிக்கிறது, பாவம் புடிக்கிறது... அத்தனையிலும் நீங்க ஏ ஒன்னுங்க. வித்தியாசமாக பண்றீங்க. கடைசி கட்டத்தில கண்ல தண்ணி வந்திடுச்சிங்க. சமீபத்தில இந்த மாதிரி ஆட்டத்தை நாங்க யாரும் பார்த்ததில்லை. வாழ்த்துகள். ஆமா உங்களுக்கு வாத்தியார் யாருங்க?''
 "என் தாத்தாதான். அவரும் கூத்து கட்டினவர்தான்''
 கை நீட்டி அவரைக் காட்டினான். அவருக்கு வணக்கம் சொன்னார்கள்.
 "அதான பார்த்தேன். கூத்து உங்க ரத்தத்திலேயே ஊறிக் கிடக்குது. இந்தாங்க. இது எங்க அன்பளிப்பு. மகிழ்ந்து போய் குடுக்கிறோம் ஏத்துக்கணும்''
 ஒரு தட்டில் பழங்கள், இனிப்பு, பூச்சரம் வைத்து அதுக்கு மேலே பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு அங்கவஸ்திரம் வைத்து நீட்டினார்கள். பழனி வாங்கிக் கொண்டான். கிழவரையும் கிட்டே வந்து நிற்கச் சொல்லி கூப்பிட்டார்கள். இருக்கட்டும் பரவாயில்லை என்று மறுத்து விட்டார். அப்புறம் பழனி பரிசுப் பொருட்களுடன் உள்ளே போக பெரியவருடன் பேச்சு கொடுத்தார்கள்.
 "ஐயா உங்க பேரு?''
 ""காசி. நானு பூண்டி உத்தமன் குழுவுல மெயின் ஆட்டக்காரனா இருந்தேன்''
 ""ரொம்ப சந்தோஷம். உங்க பேரன் இவ்வளவு தூரம் பெரிய பேர் எடுத்திருக்கிறது ஒரு குடுப்பினை, வரம், அய்யா. அவருக்கு நடிப்பு என்னா அருமையா கை
 வருது பாருங்க. நாங்கள்லாம் விடிய விடிய பார்த்துக்கிட்டே இருந்தோம்யா. பேரன் இவ்வளவு சிறப்பா ஆட்றதில உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்?''
 "சந்தோஷம் தான். சந்தோஷமில்லாம வேற என்ன?''
 "கத்துக்கிட்டு ரெண்டு ரெண்டரை வருசமாத்தான் ஆட்றான். அதுக்குள்ள இம்மா புகழ், சன்மானம் எல்லாம் வீடு தேடி வருது. எவ்வளவு பேரு?, கும்பல் கும்பலா சன்மானத்தோட வந்து போனாங்க''
 கொஞ்ச நேரம் மவுனமாய் தலை கவிழ்ந்தார்.
 "ஒண்ணுமில்லே நானும் முப்பது வருஷமாகூத்தாடியா மெயின் வேஷம் கட்டி ஆடினேன்யா. எல்லா வேஷங்களையும் இவனுக்கு மேலயே ஆடிட்டேன். பதினெட்டாம் போர்ல துரியோதனன் வேஷங் கட்னா ஜனங்க துரியோதனனுக்கோசரம் அழுவாங்கய்யா. ஆனா எனுக்கு வாழ்க்கையில ஒரே ஒரு தடவை கூட இந்த மாதிரி ஒரு புகழோ, சன்மானமோ கிடைக்கவே இல்லையே''
 சொல்லிவிட்டு அதுக்கு மேல் அடக்க முடியாமல் வேகமாய் மறைவில் போய் நின்று அழுதார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பேரன் பின்னாலேயே ஓடிப்போய் அவரை அணைத்து கொண்டான்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com