நாய் வளர்த்த கதை!

என் அண்ணன் தியாகுவுக்கும் எனக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதல் உண்டு. பயமா தயக்கமா அல்லது மறுக்கப்பட்டதா என்று நினைவில்லை
நாய் வளர்த்த கதை!
Updated on
3 min read

என் அண்ணன் தியாகுவுக்கும் எனக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதல் உண்டு. பயமா தயக்கமா அல்லது மறுக்கப்பட்டதா என்று நினைவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு வக்கீலாக வந்து வீட்டு மாடியை இடித்துக் கட்டி குடி போக, குழந்தைகள் வந்த பிறகு நாய் வளர்க்கும் ஆசை மீண்டும் வந்தது. தேர்தல் விஷயமாக புளியங்குடி சென்றிருந்தபோது நண்பன் சேவியர் நாய்க்குட்டி வேண்டுமா என்றான். நாலு குட்டிகளில் எதை எடுப்பது!
 ஒரு யோசனை தோன்றியது. நான்கு குட்டிகளையும் கட்டிலில் போட்டு நான் கைதட்டி, ""குட்டி இங்கே வா'' என்றேன். ஒரு குட்டி தலையைத் தூக்கி என்னைப் பார்த்துவிட்டு என்னிடம் நடந்து வந்தது. அது பெண்குட்டி என்பதாலும் அப்போது ஒரு டிவி சீரியல் மாலு - நீலு அடிப்படையில் ஏற்கெனவே வீட்டில் மகள் மாலு இருந்ததால் நீலு என பெயர் சூட்டினேன்.
 காலம் ஓடியது. அது குட்டி போட்ட அன்றுதான் தென்காசி உள்பட தென்னிந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. உடனே கலெக்டருக்குப் போன் செய்து தென்காசியில் நிலநடுக்கம் என எச்சரித்தேன். அவர் நம்பாமல் சிரித்தார். செய்தி உறுதியானதும் பத்திரிகையாளர்களிடம் தென்காசி முன்னாள் எம்எல்ஏ தான் பூகம்பத்தை உணர்ந்து காலையில் எனக்குப் போன் செய்தார் என்று சொல்ல சன் டிவி என்னை விரிவாக பேட்டி எடுத்து செய்தியில் ஒளிபரப்பியது.
 மாலுவும் நீலுவும் இரட்டை குழந்தைகளாக வளர்ந்தனர். நீலு குட்டி போட்ட அன்று என் அண்ணன் சுந்தரம் வீட்டில் இல்லை. குட்டி போட்ட நாய் பிறரை அண்டவிடாது என்பது உண்மை அல்ல. பழகியவர்களை ஒன்றும் செய்யாது என்பது என் அனுபவம்.
 ஒவ்வொரு குழந்தையாகப் பெற்றெடுத்து அதை முழுமையாக சுத்தப்படுத்தி அடுத்த குழந்தையைப் பெற்றெடுத்தது வார்த்தையால் விவரிக்க முடியாத அழகு... அற்புதம்.
 இரண்டு நாள் கழித்து சுந்தரம் அண்ணா வீடு திரும்பினான். கீழ் வாசலில் அவன் சிம்மக்குரல் கேட்டது. துள்ளி எழுந்து ஓடிய நீலு, அவனைச் சுற்றிச் சுற்றி வந்து "என் குழந்தையை பார்' என மாடிக்கு அழைத்து வந்தது மறக்க முடியாத தாயன்பு.
 ஓர் ஆண்குட்டியை வைத்துக் கொண்டு மீதி ஆறு குட்டிகளை நண்பர்களுக்குக் கொடுத்து விட்டேன். தினசரி நீலுவை அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோயில் வழியாக ரத வீதியில் நடந்து வருவேன். ஒரு நாள் வீட்டை விட்டு இறங்கிய நீலு, இடது பக்கம் திரும்பாமல் என்னை வலது பக்கம் இழுத்து பரதன் டாக்கீஸ் வழியாக மட்டப்பா தெரு பாதையில் சென்றது. எனக்குப் புரிந்து விட்டது. அதன் போக்கில் விட்டேன் நேராக நண்பர் பாலு வீட்டுக் கதவைத் தட்டி குரைத்தது.
 பாலுவுக்கு ஒரே ஆச்சரியம். "என்ன நாயுடன் வந்திருக்கிறீர்கள்?'' என கேட்டார்.
 "இன்று காலை என்னைப் பார்க்க வரும் முன் உங்களுக்கு கொடுத்த இதனுடைய குட்டியை நீங்கள் தூக்கி கொஞ்சினீங்களா?'' என்றேன். அவர் ஆச்சரியப்பட்டு, "ஆமாம். நான் என்றும் நாயை மடியில் வைத்துக் கொள்ளமாட்டேன். இன்று காலை அது என் அருகே வந்த போது தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன்'' என்றார்.
 உங்களுடைய மோப்பத்தில் தன் குட்டியைப் பார்க்க இது வந்திருக்கிறது என்று சொல்லி செயினை அவிழ்த்து விட்டேன். தாயான அந்த நாய் ஒரே ஓட்டமாக ஓடி தன் குட்டியை கொஞ்சி மகிழ்ந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
 நாய் குட்டி போட்ட விஷயம் அமெரிக்காவை அடைந்தது. என் தம்பி மகன் வியாஸ் குட்டிகளைப் பற்றி விசாரிக்க அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். விவரம் சொல்லி வியாஸிடம், ""நான் வளர்க்க இருக்கும் ஒரு குட்டிக்கு பெயர் வை'' என்றேன்.
 தயங்காமல் "கோலு' என்றான். அவன் சொன்ன விளக்கம்: என் மகன் கோவிந்திலிருந்து முதலெழுத்து "கோ' என் மகள் மாலுவின் இரண்டாம் எழுத்து லூ. அதுவே எங்களுடைய இரண்டாம் வளர்ப்பு குழந்தையின் பெயரானது. மிக உயரமாக வளர்ந்த "கோலு'விற்கு எங்கள் அக்கிரகாரத்து மாடி காணவில்லை. பின்னங்கால் லேசாக வளைய ஆரம்பித்தது.
 2004 - இல் உயர்நீதிமன்ற கிளைக்காக நான் தென்காசியில் இருந்து மதுரை திருநகருக்கு இடம் மாறினேன். திருநகரில் பங்களா வீடு கோலுவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. 25 சென்ட் நிலப்பரப்பின் நடுவே என் சகோதரியின் கணவர் வீடு. வீட்டைச் சுற்றி காலியிடம், கோலுவிற்கு ஒரே கொண்டாட்டம். காலையிலும் மாலையிலும் திருவண்ணாமலை கிரிவலம் போல் வீட்டை சுற்றி சுற்றி ஓடி அவன் கால் சரியாகி விட்டது.
 திருநகரில் திருட்டு பயம் என்றார்கள். கோலு இருக்க பயமேன்! அனுமதி இல்லாமல் வீட்டு வாசலில் நிற்கக் கூட ஒருவருக்கும் உரிமை கிடையாது. நாங்கள் அனுமதி தராமல் யாரும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர முடியாது. கோலு குரைத்தால் வாசலில் யாரோ நிற்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே அவனுக்கு "காலிங்பெல்' என்ற பட்டப் பெயர் வைத்தோம்.
 திருநகர் பார்க்கை சுற்றி நடை பழகுவது அவனுக்குப் பிடித்த ஒன்று. அவன் வரும்போது அந்தப் பகுதியில் வேறு நாய்கள் இருக்கக்கூடாது. அவனுக்கு இன உணர்வே இல்லை என்று நான் அடிக்கடி சொல்லுவேன்!
 நான் திருநகர் தெருவில் செல்லும் பொழுது "அந்த கருப்பு நாயின் முதலாளி' என்று என்னைப் பற்றி பேசுவார்கள்.
 நாங்கள் வாடிகனில் இருக்கும்பொழுது 15 வயதில் கோலு இறைவனடி சேர்ந்தான். அவனுடைய 21 குழந்தைகளை விட அவன் நீண்ட காலம் வாழ்ந்தான். என் மனைவி மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாசம் அவனுடைய நீண்ட வாழ்க்கைக்குக் காரணமானது. வாட்டிகன் தேவாலயத்தில் அவனுக்காகப் பிரார்த்தித்தோம். பின்னர் தாய்க்கும் மகனுக்கும் கயாவில் பிண்டம் போட்டது தனிக்கதை.
 விளையாட்டாக நான் என் மகள் மாளவிகாவை அடிப்பது போல் நடிப்பேன். அவள், "கோலு... கோலு' என்று அலறுவாள். எங்கோ இருந்து கொலைவெறியுடன் ஓடிவரும் அவன் என்னையும் மாலுவையும் பார்த்துவிட்டு செய்வதறியாமல் எங்களைச் சுற்றி சுற்றி வந்து குரைப்பான்.
 ""நாயைக் கன்பியூஸ் செய்யாதீர்கள்'' என என் மனைவி நந்தினி திட்ட, விளையாட்டு முடியும். வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பினால் முதல் 15 நிமிடம் அவனுக்குத் தான். நம்மைப் பார்த்த மகிழ்ச்சியில் அவன் குறி போட்டு கொஞ்சுவது தனி அழகு. நாய் வளர்ப்பவர்களுக்கு தான் அந்த அருமைதெரியும்.
 - பநத வேங்கடரமணா
 சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், தென்காசி .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com