ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அஜீரணம் ஏற்பட்டால்...?

எனக்கு வயது 54. அடிக்கடி அஜீரணம் எனும் செரிமானமின்மை உபாதை ஏற்படுகிறது.  வெறும் அரிசிக் கஞ்சி, மிளகு ரசம், மோர் சாதம் என்று சாப்பிட்டால் பரவாயில்லை.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அஜீரணம் ஏற்பட்டால்...?


எனக்கு வயது 54. அடிக்கடி அஜீரணம் எனும் செரிமானமின்மை உபாதை ஏற்படுகிறது. வெறும் அரிசிக் கஞ்சி, மிளகு ரசம், மோர் சாதம் என்று சாப்பிட்டால் பரவாயில்லை. செரிப்பதற்குக் கடினமான மைதா, சோளம் போன்றவற்றைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறு ஏற்படுகிறது. பால் பொருட்களைச் சாப்பிட முடிவதில்லை. இதை எப்படிக் குணப்படுத்துவது?

தியாகு, தஞ்சாவூர்.

அஜீரணத்தின்போது ஏற்படும் அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், அஜீரணம் என்பது கப- பித்த - வாத தோஷங்களின் கெடுதியினால் அவற்றுக்குரிய அறிகுறிகளைக் காண்பித்துக் கொண்டு ஏற்படும்.

கபதோஷத்தின் கெடுதியினால் ஏற்படும் அஜீரணத்தில் - கண்களைச் சுற்றியும் கன்னக் கதுப்பிலும் வீக்கம் ஏற்படுதல், சாப்பிட்டு இரண்டு மூன்று மணி நேரமாகியும், ஏதோ அப்போதுதான் சாப்பிட்டது போல ஏப்பம் விடுதல், உமிழ்நீர் அதிகம் ஊறுதல், குமட்டல் மற்றும் உடல் கனத்தல்... இதுபோன்ற அறிகுறிகளில் அடுத்த உணவை ஏற்காமல், வயிற்றைப் பட்டினி போடுதல் அவசியமாகும். பசி ஏற்படும் வரை பட்டினியிருந்து, அதன் பிறகு அடுத்த உணவை எடுத்துக் கொண்டால், செரிமானக் கோளாறு எனும் உபாதையிலிருந்து விடுபடுவதுடன், உணவின் சத்தானது நன்கு உள்வாங்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியானது இயற்கையாகவே நன்கு ஏற்படும்.

வாயு தோஷத்தின் கெடுதியால் ஏற்படும் அஜீரணத்தை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளால் அறியலாம். உடல் நன்றாக வியர்க்கக் கூடிய வகையில், கம்பளியால் உடலைப் போர்த்திக் கொண்டு ஓர் அறையில் அமர்ந்திருந்தாலே போதும், இந்த உபாதைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

பித்த தோஷத்தின் ஆதிக்கத்தினால் ஏற்படும் அஜீரணத்தில் - கடும் தண்ணீர் தாகம், குழப்பம், தலைசுற்றல், புளித்த ஏப்பம் மற்றும் உடல் எரிச்சல் ஆகியவை ஏற்படும் என்பதால், கெட்டுப் போன பித்தத்தை வாந்தி செய்து வெளியேற்றிவிடுதல் மிகவும் நல்லது.

அஜீரணத்தில் சிலருக்கு ஏப்பம் சுத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் பசியின்மையும் நெஞ்சுப் பகுதியில் வலியும் கூடவே காணப்படும். அதுபோன்ற நிலையில் சிறிது நேரம் இடது பக்கம் சரிந்து படுத்திருந்து எழுந்து கொண்டால் சரியாகிவிடும்.

எல்லா அஜீரண உபாதைகளிலும் பகலில் சிறிது நேரம் படுத்திருந்து உறங்கிவிட்டு (உணவு ஏதும் ஏற்காமல்) பசி ஏற்பட்டவுடன் எளிதில் செரிக்கும் உணவை, மிதமான அளவில் வெதுவெதுப்பாக எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.

அதிக அளவில் உணவை உண்பது, தனக்கு விருப்பமில்லாத உணவை, வீட்டிலுள்ளவர்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடுதல், மலக்கட்டை ஏற்படுத்தும் உணவு, அதிகம் வெந்தும் அல்லது வேக வைக்காமலேயே சாப்பிடுதல், கனமானது, வறட்சியானது, குளிர்ச்சியானது, அழுக்குடன் சேர்ந்தது, உடல் உட்புற எரிச்சலை ஏற்படுத்துவது, எண்ணெய்ப் பசையற்றது, அதிகம் தண்ணீரில் ஊறியது, வருத்தம், கோபம் போன்ற மனநிலையில் உணவை ஏற்பது, கடும் பசியுள்ள நிலையில் உண்பது போன்றவை அஜீரணத்துக்குக் காரணமாகலாம்.

ஜீரக பில்வாதி லேகியம், அஷ்ட சூரணம், ஹிங்குவசாதி சூரணம், லவண பாஸ்கரம் சூரணம், பஞ்சதீபாக்னி சூரணம், அக்னிகுமாரம் குளிகை, தசமூலாரிஷ்டம், வைச்வாநரம் சூரணம், தாடிமாதி கிருதம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் அஜீரணக் கோளாறை நீக்குவதில் தோல்வி அறியாதவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com