"வைட் ஆங்கிள்' லென்ஸ் !

கடந்த 1980- இலிருந்து சுதாங்கனோடு எனக்கு  நட்பு ஏற்பட்டது.  நான் மயிலாப்பூர் சாலைத் தெருவில் வீடெடுத்துத் தங்கியிருந்தபோது,  
"வைட் ஆங்கிள்'  லென்ஸ் !


கடந்த 1980- இலிருந்து சுதாங்கனோடு எனக்கு நட்பு ஏற்பட்டது. நான் மயிலாப்பூர் சாலைத் தெருவில் வீடெடுத்துத் தங்கியிருந்தபோது,

விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் ஆகியோரும் என்னுடன் தங்கியிருந்தனர். என்னைச் சந்திக்க சுதாங்கன் வரும்போது பிரபாகரனுடன் பலமுறை உரையாடியது உண்டு.

இலங்கைக்கு வைகோ 1989- இல் ரகசியமாக சென்ற செய்தியை ஜூனியர் விகடனில் முதன் முதலாக வெளியிட்டார். அந்தச் செய்தியைக் கொண்டு காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் உயர்நீதிமன்றத்தில் இருந்த என்னை உடனே அழைத்து முதல்வர் அறையில் வைத்து கேட்டதெல்லாம் உண்டு.

கடந்த 1993 வரை நந்தனத்தில் நான் குடியிருந்தபோது, தினமும் அவரின் பணிகளை முடித்துவிட்டு இரவில் என்னைச் சந்தித்துவிட்டுதான் செல்வார். பல செய்திகள், சம்பவங்கள், நிகழ்வுகள் அவரோடு பின்னிப் பிணைந்து நட்போடு இருந்த நாட்களை நினைத்து பார்ப்பதுண்டு.

என் மீது தனிப்பட்ட அன்பும் பாசமும் கொண்டவர். 1989, 1996- இல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டபோது அங்கு வந்து இரண்டு முறையும் என்னோடு இருந்து தேர்தல் பணிகளைப் பற்றி கேட்டறிவார்.

கடந்த 1982 இறுதியில் ஜூனியர் விகடனில் நிருபராக சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கே பணி புரிந்தார் . 1986- ஆம் ஆண்டு கிராமப்புற ரிப்போர்ட்டிங்கிற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதைப் பெற்றார். இவரின் கட்டுரை தொகுப்பு தான் "தேதியில்லாத டைரி'.

நாடு முழுவதும் 1980 - களில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்தது. கொத்தடிமை முறை நடைமுறையில் உள்ளது என ஆதாரப்
பூர்வமாக நிரூபித்ததுடன் நிற்காமல் தமிழக காவல்துறை உதவியுடன் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாகச் சிக்கி இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்களைக் காப்பாற்றினார் சுதாங்கன்.

தமிழில் புலனாய்வு இதழுக்கு வழி வகுத்தவர்களில் நண்பர் சுதாங்கனும் ஒருவர். தனக்கு வந்த கமுக்கமான தகவல் ஆதாரங்களை எந்தச் சூழ்நிலையிலும் வெளிப்படுத்தமாட்டார். எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆவணப்படுத்தினார். ஜூனியர் விகடன், விகடன் போஸ்ட்
(ற்ஹக்ஷப்ர்ண்க்) போன்றவை நல்ல கட்டமைப்போடு வெளிவர சுதாங்கனும் ஒரு காரணம்.

புலனாய்வு இதழியலில் ஈடுபாடு மட்டுமல்ல, இவர் நடிகரும் கூட. மேடைகளிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பாலசந்தர், பாரதிராஜா இயக்கிய "அந்திமந்தாரை' என சிலவும், மற்றவர்களின் திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். திரையிசைப் பாடல்கள் குறிப்பாக, கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்களின் பாடல்களில் உள்ள அர்த்தங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடுவார். பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் இவருடைய பங்களிப்பு முக்கியமாக இருக்கும்.

பிரபல தமிழ் அறிஞர் பி.ஸ்ரீ சுதாங்கனின் அம்மாவிற்குத் தந்தைக்குத் தந்தை.1965- இல் பி.ஸ்ரீ எழுதிய ராமானுஜர் நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.1940-களில் அவர் ஆனந்த விகடன் ஆசிரியர் இலாகாவில் இருந்தபோது எழுதிய சித்திர ராமாயணம் மிகவும் பிரபலம். அவர் எழுதிய ஏராளமான பக்தி இலக்கிய நூல்களும், பல இலக்கிய நூல்களும் இன்றுவரை பிரபலம். தமிழகத்தில் மிகச் சிறந்த தமிழ் அறிஞர்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இன்றும் வானதி பதிப்பகம் வெளியிட்டு வரும் அவருடைய' நான் அறிந்த தமிழ்மணிகள்' நூல் ஒரு கையேடு என்று சொல்லலாம்.

சுதாங்கனின் தாத்தா வி.எஸ்.நாராயணன் தினமணி நாளிதழில் முப்பது ஆண்டுகள் உதவி ஆசிரியராக ஏ.என்.சிவராமனுடன் பணிபுரிந்தார். வீர ரஷ்யா, நேதாஜி என்ற இரண்டு நூல்களும் அவருக்குப் புகழைத் தேடிக்கொடுத்தன.

அவரது தாய்மாமா என்.சீனிவாசன் தமிழில் பல அறிவியல் நூல்களை எழுதி
யிருக்கிறார். தினமணியில் அவர் எழுதிய "இந்த நாளில் அன்று' ஆறு தொகுதிகள் வந்திருக்கின்றன. பல தொகுதிகள் கொண்ட "நம்மவர் செய்த விந்தைகள்'

போன்ற படைப்புகள் அவருக்குப் பெருமை சேர்த்தன. சுதாங்கனுக்குத் தமிழில் ஈடுபாடு வந்து பத்திரிகைத் துறைக்கு வந்ததற்குக் காரணமே இந்தப்
பின்னணிதான்.

இவர் எழுதிய "செலுலாய்ட் சோழன்' அனைவராலும் கவனிக்கப்பட்டது. 1992 - 94 ஆண்டில் அவர் தினமணி பொறுப்பாசிரியராக இருந்தபோது, "தினமணி கதிர்' இதழில் எழுதிய தொடர் "தேதியில்லாத டைரி' தொடருக்கு துக்ளக் ஆசிரியர் "சோ' எழுதிய முன்னுரை:

"எனக்கு "லாங் சைட்'. கிட்டே இருப்பது கண்ணுக்குத் தெரியாது. சில பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களைப் பார்க்கிறேன். அவர்களுடைய கண்கள் "வைட் ஆங்கிள்' லென்ஸ் மாதிரி செயல்படுகின்றன. அவர்களுக்கு அகலப் பார்வை - அது மட்டுமல்ல, கிட்டே இருப்பவற்றிலிருந்து தொலைவில் இருப்பவை வரை எல்லாமே அவர்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இப்படிப்பட்ட ஒருவருடைய பார்வையில் பட்ட பலதரப்பட்ட விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில்தான் சுதாங்கன் மிகவும் பாப்புலராகி இருக்கிறார் என்றாலும், ஏற்கெனவே கூட ஒரு சீரியஸ் எழுத்தாளர் என்ற முறையிலும் அவரை தமிழ் பத்திரிகை வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அவருடைய இந்த இரண்டாவது பரிமாணம் பளிச்சிடுகிறது.

அரசியல் உட்பட, பல விஷயங்களைப் பற்றி இக்கட்டுரைத் தொகுப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

பல மனிதர்கள் தன் மனதில் ஏற்படுத்திய பாதிப்புகளை, அந்த மனிதர்களின் குணாதிசயங்களை அலசுவதன் மூலமாகவே நமக்கு விளக்குகிறார் சுதாங்கன். இவற்றுக்கிடையே காவிரிப் பிரச்னை; அதையொட்டி ஒரு பிரபல எழுத்தாளருக்கும் சுதாங்கனுக்கும் இடையே நடந்த சுவையான கடிதப் போக்கு
வரத்து, கூவத்தில் வீசப்பட்ட கதிரியக்கக் கருவியின் சமாச்சாரம்... நல்ல வெரைட்டி.

இவற்றையெல்லாம் சுவைபடக் கூறுவதற்கு அவருடைய அனுபவம் உதவியிருக்கிறது. ஒரு நிருபரின் அவசர விசாரணை, ஓர் எழுத்தாளனின் உணர்ச்சி, வேகம் ஆகியவற்றை ஒரு பத்திரிகை ஆசிரியரின் பொறுப்புணர்வோடு தணிக்கை செய்து, ஒரு "ஸ்டைலிஸ்ட்' நடையில் நமக்கு கட்டுரைகளாக அளித்திருக்கிறார் சுதாங்கன்'' என்கிறார் துக்ளக் ஆசிரியர். சுதாங்கன் குறித்து சோவின் கருத்தே போதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com