என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

சுந்தர ராமசாமியின் உற்ற நண்பர் கிருஷ்ணன் நம்பி. அநேகமாக இருவரும் ஒரே வயதினர். இலக்கியப் பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமி வழியாக கிருஷ்ணன் நம்பியையும், கிருஷ்ணன் நம்பி வழியாக 
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்


சென்ற இதழ் தொடர்ச்சி...

சுந்தர ராமசாமியின் உற்ற நண்பர் கிருஷ்ணன் நம்பி. அநேகமாக இருவரும் ஒரே வயதினர். இலக்கியப் பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமி வழியாக கிருஷ்ணன் நம்பியையும், கிருஷ்ணன் நம்பி வழியாக சுந்தர ராமசாமியும் தமிழக இலக்கிய உலகம் தெரிந்து கொண்டது. அவர்களின் நட்பின் இறுக்கத்தையும்.

சுந்தர ராமசாமி, தன் காலத்தில் மிகவும் மதித்த எழுத்தாளர் என்றால் அது க.நா.சுப்பிரமணியம்தான். அவர் படைப்புகள், மொழி பெயர்ப்புகள், இலக்கிய அபிப்பிராயங்கள், அவற்றை எழுதியது பற்றியெல்லாம்கவனிக்கத்தக்க விதமாகவே எழுதியுள்ளார்.

அவர் நாகர்கோவிலில் வசித்து வந்தார். பல தமிழ் எழுத்தாளர்கள் சென்னையில் இருந்தார்கள். ஆனால் எழுத்தாளராக வாழ்வதற்கு சென்னைதான் சரியான ஊரென்று சிலர் வாழ்ந்து வந்தார்கள். ஒரு வேலையும் செய்யாத எழுத்தாளர்கள் கூட, சென்னையை இருப்பிடமாகக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகள்,புத்தக நிலையங்கள், நூலகங்கள் புத்தகக் கடைகள் எல்லாம் சென்னையில் இருந்தன. வானொலி சென்னையில் இருந்தது. வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பல எழுத்தாளர்கள் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதனால் சென்னையில் சில எழுத்தாளர்கள் வசித்தார்கள்.

சுந்தர ராமசாமி, திருவனந்தபுரத்தில் தன் நண்பர் கிருஷ்ணன் நம்பியுடன் சென்று க.நா.சுப்பிரமணியத்தைச் சந்தித்ததை, இலக்கியம் என்பதற்கு அப்பால் ஒரு பெரிய மனிதர் சந்திப்பு என்ற வகையிலேயே எழுதி இருக்கிறார். க.நா.சுப்பிரமணியத்தின் இலக்கிய மதிப்பீடுகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டார். தொ.மு.சி. ரகுநாதன் உட்பட கம்யூனிஸ்டுஎழுத்தாளர்கள் க.நா.சுப்பிரமணியம் படைப்புக்களையும் ஏற்றுக் கொண்டது இல்லை; அவருடைய இலக்கிய விமர்சனங்களையும் கண்டு கொண்டது இல்லை. அவரை சோவியத் எதிர்ப்பாளர் என்றும், மார்க்சிஸ்டு விரோதி என்றும், அமெரிக்காவின் கூலி என்றும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்கள். இந்திய-தமிழக கம்யூனிஸ்டு எழுத்தாளர்களோடு இலங்கை கைலாசபதியும் சேர்ந்து கொண்டார். சுந்தர ராமசாமி, கைலாசபதியை நிராகரித்தார். ஆனால் ரகுநாதன் பற்றி ஒரு சொல்லும்சொன்னது இல்லை.

இலக்கியத்திற்குச் சித்தாந்தம் எதிரானதோ, விரோதமானதோ இல்லை. ஆனால் அதனைக் கலையாகச் சொல்வதில் இருக்கிறது என்ற முறையில்தான்
பின்னால் எழுதினார்.

சுந்தர ராமசாமியின் முதல் நாவல் "சரஸ்வதி' இதழில், "ஒரு புளிய மரம்' என்ற பெயரில் 1959 - ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அது தொடர்ந்து வரவில்லை. இடையில் நின்று போய்விட்டது. பின்னர், 1966 -ஆம் ஆண்டில் "ஒரு புளிய மரத்தின் கதை' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அவர் வெகுஜன பத்திரிகை எழுத்தாளர் இல்லை. அதில் உறுதியாக இருந்தார். தன் படைப்புகள்வெகுஜன பத்திரிகைகளில் வந்து பிரபல்யம் அடைய வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே அதாவது எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் சிறுபத்திரிகை, சிற்றிதழ் எழுத்தாளர்தான். அவர் "சாந்தி', "சரஸ்வதி", "எழுத்து', "இலக்கிய வட்டம்', " சலங்கை', "கொல்லிப்பாவை', "தீபம்', "ஞானரதம்' இதழ்களில் தான் எழுதினார். "தாமரை'யிலும் சில கதைகள் எழுதி உள்ளார். அவர் மொத்தமாக எழுபத்திரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நா. பார்த்தசாரதி, சுந்தரராமசாமி மீதும், அவர் படைப்புகள் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் கதைகள் தான் பணிபுரிந்த "கல்கி'யில் வெளிவரவேண்டுமென விரும்பினார். அவரிடம் வற்புறுத்தி கதைகள் வாங்கி "கல்கி' தீபாவளி மலரில் வெளியிட்டார். சொந்தமாக "தீபம்' தொடங்கியதும் அவர் கதைகளை வெளியிட்டார்.

சுந்தர ராமசாமி அதிகம் எழுதும் எழுத்தாளர் இல்லை. அவசரப்படாமல்தான் எழுதி வந்தார். 1967-ஆம் ஆண்டில் சொந்தத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியால் ஏழாண்டு காலம் எழுதுவதையே விட்டுவிட்டார். படைப்பு மனம் மாறிவிட்டது. அது ஒரு மனோ நிலை. சிலர் எழுதிக் கொண்டும், பலர் எழுதாமலும் எழுத்தாளராகவே இருக்கிறார்கள். சிலருக்கு விட்டதைப் பிடிக்கும்போது கலையே உருமாறி விடுகிறது.

எழுத்து என்பது மனத்தில் சுரந்து வருவது. சிலருக்கு வற்றாது சுரந்து கொண்டே இருக்கும். சிலருக்கு சில ஆண்டுகள் சுரந்து வறண்டு போவதும் உண்டு. என்றும் சுரப்பவர்தான் எழுத்தாளர் என்றோ இடையில் விடுகிறவர் எழுத்தாளர் இல்லையென்றோ சொல்ல முடியாது. என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதுதான் படைப்புலகத்தில் முக்கியமாகக் கவனம் பெறுகிறது.

சில எழுத்தாளர்கள் முதல் நாவலில் தன்னை எழுத்தாளன் என்று நிலைநிறுத்திக் கொண்டுவிடுகிறார்கள். க.நா.சுப்பிரமணியம் முதல் நாவல் "சர்மாவின் உயில்', சி.சு. செல்லப்பாவின் "வாடிவாசல்', ஆர். சண்முகசுந்தரத்தின் "நாகம்மாள்', நீல பத்மநாபனின் "தலைமுறைகள்', அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்' எல்லாம் முதல் நாவல்கள்தாம். ஆனால் முதிர்ச்சி உள்ள நாவல்கள். ஒரு படைப்பைப் பாதியில் விட்டால், இணைப்பது என்பது அநேகமாக சாத்தியமில்லாமல் போகிறது. மிகச்சிறந்த கலைவாணர்கள் இரண்டு பகுதிகளையும் வெகு நுட்பமான முறையில் முடிச்சுத் தெரியாமல் இணைத்து விடுகிறார்கள்.

சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை' மிகவும் நேர்த்தியான விதத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இலக்கியம் என்பது பற்றி எத்தனைதான் சொன்னாலும், பூரணமாகச் சொல்லி முடித்துவிட முடியாது. ஒவ்வொரு சொல்லும் இன்னொரு சொல்லை எட்டியே செல்கிறது.

சுந்தர ராமசாமி விட்டதைப் பிடிக்கும் எழுத்தாளராகவே இருந்தார். அவர் உரைநடையில் சிறுகதைகள், நாவல்கள் எழுதியது போல புதுக் கவிதைகளும் எழுதினார். அவர் புதுக் கவிதைகள் தமிழில் எழுதப்பட்டு வந்த புதுக்கவிதைகள் மரபை ஒட்டி இல்லை. இருண்மை, தத்துவ விசாரணை கிடையாது. தீர்மானமான வெளிப்பாடுகள். ஆனால் சமூக விமர்சனம் செய்கின்றவை இல்லை. மனத்தை நெகிழ வைக்கும் புதுக்கவிதைகள் எழுதியது போல பிரகடனப்படுத்தும் கவிதைகளும் எழுதினார்.

அவர் புதுக் கவிதைகள் எழுதி வந்த காலத்தில் அவர்தான் புதுமையைச் சார்ந்திருந்தார்.

புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா இல்லை அவர். அவர்களைப் படித்திருந்தார். ஆனால் அவர்களை விட்டு ஒதுங்கி வெகுதூரம் வந்திருந்தார். அவரின் புதுக் கவிதைகள் மொழியும், சொல்லப்பட்ட கருத்தும், சொல்லிய விதமும் வசீகரம் கொண்டிருந்தன. அவருக்குத் தான் எழுதுவது பற்றி பூரண பிரக்ஞை இருந்தது. ஒவ்வொரு சொல்லின் சொல்லப்படும் அர்த்தமும், சொல்லப் படாத பொருளும் வாசிக்கும்போது புரிந்து கொள்ளும் விதமாக எழுதினார்.

"ஜே.ஜே. சில குறிப்புகள்' என்ற நாவல் 1981 - ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் சிறப்பான முறையில் அச்சிட்டிருந்தார். "ஜே.ஜே. சில குறிப்புகள்' மலர்மன்னன் என்ற எழுத்தாளர் நடத்திய "கால்' என்ற காலாண்டு இதழில் பல பகுதிகள் வெளிவந்தன. "ஜே.ஜே. சில குறிப்புகள்' அது மரபான கதையில்லை. மொழி இறுக்கமாக இருந்தது. இலக்கியம் மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும் மொழியே இலக்கியம் கிடையாது. அதனை சுந்தர ராமசாமி அறிந்து கொண்டுதான் இருந்தார். ஆனால் எழுதுகிறபோது முறுக்கலான மொழிநடை நாவலை நிலைநிறுத்திவிடும் என்று எழுதி இருப்பது தெரிகிறது.

சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்' எழுதப்பட்ட புதுமொழி புதிய வாசகர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் "ஜே.ஜே. சில குறிப்புகள்' போலதொரு நாவல் தமிழில் இல்லை என்றே கொண்டாடினார்கள். அவருக்கும் தமிழ் நாவலாசிரியர்கள் யார் மீதும் பெரிய அளவில் மதிப்பு இல்லை. அவருக்கு ஜானகிராமன், ஜெயகாந்தன் மீது சிறிது மதிப்பு இருந்தது. அதைத்தவிர அவர் மலையாள எழுத்தாளர்கள் தகழி, பஷீர், பொற்றே காட், கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, காரூர், தாமஸ் மேல் எல்லாம் மதிப்பு கொண்டிருந்தார். அதுவே அவரை தகழியின் "தோட்டியின் மகன்' நாவலை இருபது இருபத்தொரு வயதில் மொழி பெயர்க்க வைத்தது. பின்னர் அவர் தகழியின் "செம்மீன்' நாவலை மொழி பெயர்த்தார்.

க.நா.சுப்ரமணியம், இந்திய எழுத்தாளர்களில் மலையாள எழுத்தாளர் பஷீரையும், கன்னட எழுத்தாளர்களில் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், சிவராம் காரந்தையும் அங்கீகாரம் செய்தார். தமிழ் மக்கள் விரும்பிப் படித்து வந்த மராத்திய எழுத்தாளர் வி.ச. காண்டேகரை ஒதுக்கித் தள்ளிவிட்டார். அவர்தான் இலக்கியத் தரம் நிர்ணயிக்கக்கூடிய திறன் பெற்றவராக இருந்தார். அவரை ஏற்காதவர்கள் கூட, அவர் பட்டியலுக்கும், மதிப்புரைக்கும் மதிப்பளித்து வந்தார்கள். ஆனால் அவர் தன் குரலை உயர்த்தாமல் சொல்லவும் எழுதவும் கூடியவராக இருந்தார். ஒரு கவிதையை, சிறுகதையை, நாவலை வாசகன் படித்து தன் சொந்த அறிவால் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இலக்கிய விமர்சனம் என்பது தங்கத் தட்டில் வைத்து வழங்கப்படுவது இல்லை என்று சொல்லப்படுவதுதான் அது.

கலையென்பதும், படைப்பு என்பதும் வித்தையல்ல. மூளையில் கட்டும் நேர்த்தியான கூடும் கிடையாது. ஓர் எழுத்தாளன் வாழும் காலம் முழுவதும் சிறந்த கதைகளையே எழுதி கொண்டிருக்க முடியும் என்பதோ, எழுதவேண்டும் என்பதோ விதி கிடையாது. சில மகோன்னதமான படைப்பு எழுத்தாளர்களுக்கு, ஒரு படைப்பு போதுமானதாக இருக்கிறது. அதுவும் முதல் படைப்பிலேயே சிலர் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகமான எண்ணிக்கையில் தரமான, மேலான படைப்புகள் எழுதினால்தான் படைப்பாளர் என்பது கிடையாது. தமிழ் மரபில் ஒரு பாடலுக்காக மூவாயிரம் ஆண்டுகளாகக் கவியென கொண்டாடப்படுகிற கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு கவிதை, ஒரு பாடல்தான் எழுதினார்கள் என்பதில்லை. தொகுப்பாளர்கள் ஒரு பாடல் போதுமென கருதி இருக்கிறார்கள். ஒரு பாடல் மூலமாக எல்லாக் காலத்திற்குமான கவியாகி இருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி எழுத்தைச் சமூகத்திடம் இருந்து பெற்றவர். அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், மொழியென்பது பத்திரிகைகளின் மொழியில்லை.
"மணிக்கொடி'யில் வெளிவந்த புதுமைப்பித்தன் ந.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா சிறுகதைகளை அவரது தாயார் தங்கம்மாள் படித்துக் காட்ட கேட்டுக் கொண்டார். அதுவே அவரை வெகுஜன பத்திரிகை கதைகள் எழுதவிடாமல் தடுத்து நிறுத்தி, தனித்தன்மையோடு மிளிர வைத்தது என்று குறிப்பிட வேண்டும்.

இளம்பருவத்தில் புதுமைப்பித்தன் படைப்புகள் மீது அவர் கொண்ட ஈடுபாடு கடைசி வரையில் குறையவே இல்லை. இளம் பருவ இலக்கிய ஈடுபாடு, அக்கறை எல்லாம் காலம் போகப் போக ஐம்பது அறுபதுஆண்டுகளுக்குப் பின்னால் மாறிப் போவது உண்டு. அவரே முற்போக்குச் சித்தாந்தத்தின் மீதும், அதையொட்டி கதைகள் எழுதுவது என்பதையும் விட்டுவிட்டு தன்னையறிதலும் அறிந்ததைச் சொல்வதுமாக எழுத ஆரம்பித்தார். புதுமைப்பித்தனை அதிகமாக அவர் மதித்தாலும், அவர் படைப்புகள் மீது புதுமைப்பித்தன் பாதிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

புதுமைப்பித்தன் வேறு, தான் வேறு என்ற நிலைப்பாடே அவருடையது.

அவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதனை அறிந்தேதான் செய்தார் என்று குறிப்பிட வேண்டும். அவருக்குத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரைப் பிரபல்யப் படுத்துவதில், அவரின் இலக்கிய மேதமையை எடுத்துச் சொல்வதில்தான் ஈடுபாடு இருந்தது. தெரிந்துதான் அதனைச் செய்தார் என்பதுதான் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது.

புதுமைப்பித்தன், சீடர்களை நேர்முகமாகவும், இலக்கிய வழியாகவும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். ஆனால் தொ.மு.சி. ரகுநாதன் போன்று சிலர் சீடர்களாகி இருந்தார்கள். சுந்தர ராமசாமிக்கு பதின்மூன்று வயதாகும்போது புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் காலமாகிவிட்டார். அவருக்குப் புதுமைப்பித்தன் அறிமுகம், பழக்கம் என்பது எல்லாம் புத்தகங்கள் வழியாகத்தான். அதுதான் படைப்பு இலக்கியம் என்பது. அதற்கு ஆசிரியர் உயிரோடு இருக்க வேண்டும் என்பது கிடையாது. பார்த்துப் பேசி அனுபவம் பெற வேண்டும் என்பதும் இல்லை. ஒரு படைப்பில் சொன்னதற்கு மேலாக, எழுத்தாளன் எதுவும் சொல்லிவிட முடியாது. சில அபூர்வமான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் பற்றி பேசியும், எழுதியும் வதம் செய்திருக்கிறார்கள்.

அதுதான் ஜீவிதமான மரபு. ஒரு கவி, படைப்பு எழுத்தாளன் காலத்தில் வாழ்ந்து உரையாடி ஞானம் அடைவதை விட, அவன் படைப்புகள் வழியாக தானே ஞானம் அடைவதுதான் மகத்தான ஆளுமை. அதுதான் குருவை ஒழிக்கச் சொல்கிறது. பல கலைகள் ஒன்றாகச் சேர்ந்து இருந்தாலும், ஞானத்தின் வெளிப்பாடான எழுத்து என்பது தனித்துவம் கொண்டது. அது குடும்பப் பாரம்பரியம் கொண்டது இல்லை. பயிற்சி பெற்று கவியாகிவிட முடியாது.

மகத்தான கவிஞர், வியப்பூட்டும் எழுத்தாளர்கள், கதைகளையும் படிக்கலாம். ஆனால் அசல் எழுத்தாளன் தனக்குப் பிடித்தமான, பிடிக்காத எந்ததொரு எழுத்தாளனையும் பின்பற்றி எழுத முற்படுவது இல்லை. தான் விரும்பும் படைப்புக்கு இன்னொரு படி மேலே போக வேண்டும் என்பதுதான் எழுதும் எழுத்தாளர்கள், சொல்லும் இலட்சியமாகவும், சொல்லப்படாத இலட்சியமாகவும் இருக்கிறது.

""என்னை உருவாக்குவதில் பாரதிக்கு, புதுமைப்பித்தனுக்கு, ந.பிச்சமூர்த்திக்கு, க.நா.சுப்பிரமணியத்துக்கு, மலையாள மொழி எழுத்தாளர் எம்.கோவிந்தத்துக்குப் பங்கிருக்கிறது'' என்று சுந்தர ராமசாமி சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. அவர் நம்பியதைச் சொல்கிறார். படைப்பில் அது பூரணமாக இருக்கிறதா என்று பார்த்தால் அநேகமாக இல்லாமலேயே இருக்கும். எனவேதான் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு, எழுத தூண்டிய சக்தி, எழுதுவதற்கான காரணம் பற்றியெல்லாம் சொல்வதை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

தமிழ் மொழியே கவிதை மொழி. மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியம் என்பது கவிதையாகவே இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழி வழியாக, பிரிட்டிஷ், அமெரிக்கக் கவிதைகளைப் படித்த புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம் எல்லாம் இலக்கணம் இல்லாமல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். சொந்த மன உணர்வுகளைச் சொல்லும் விதமாகவும், சமூக விமர்சனமாகவும் இருந்த அவர்களின் கவிதைகளுக்குத் தமிழ்ப் பேராசிரியர்கள், முற்போக்குவாதிகளிடம் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் வாசகர்களிடம் ஓரளவு ஆதரவு இருந்தது.

சி.சு.செல்லப்பா எழுத்துப் பத்திரிகை ஆரம்பித்ததும் அதில் தமிழ்ப் புதுக் கவிதைகள் முக்கியத்துவம் பெற்றன. அவர் பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளை வெளியிட்டு மகாகவி என்று எழுதினார். புதிதாகப் பலர் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். புதுக்கவிதை எதிர்ப்பாளர்களாக இருந்த தொ.மு.சி. ரகுநாதன், நா.பார்த்தசாரதி உட்பட பலரும் புதுக்கவிதை ஆதரவாளராக மாறினார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் புதுக்கவிதைகள் எழுதினார்கள்.

(அடுத்த இதழில்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com