பேல்பூரி
By DIN | Published On : 25th February 2020 12:18 PM | Last Updated : 25th February 2020 12:18 PM | அ+அ அ- |

கண்டது
• (சென்னை போரூரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
தினமும் சாப்பாடு
எ.மஜ்பா சாகுல், அதிராம்பட்டினம்.
• (கோவையில் ஓர் அமரர் ஊர்தியின் பின்புறத்தில்)
வாழ்க்கை என்பது ஒரு கேள்வி...
யாராலும் விடை கூற முடியாது.
மரணம் என்பது விடை...
யாராலும் கேள்வி கேட்க முடியாது.
எம்.சுப்பையா, கோவை.
• (மதுரை காளவாசல் பகுதியில்
உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
மரப்பாச்சி சைவ & அசைவ உணவகம்
கா.பசும்பொன், கிரம்மர்புரம், மதுரை.
கேட்டது
• (பாளையங்கோட்டை சாந்தி நகர் வீட்டு வாசலில் மனைவியும் கணவனும்)
"கூண்டில் மாட்டிய எலியைக் கொன்னுட்டு வாங்கன்னா, கிரவுண்ட்லே விட்டுட்டு வந்திருக்கீங்க. மறுபடியும் வீட்டுக்கே வரப்போகுது''
"எலி என்ன செல்போனா வச்சிருக்கு? கூகுள் மேப்பைப் பார்த்து வீட்டுக்கு வர?''
இலக்கியா, பாளையங்கோட்டை.
• (சென்னை கொடுங்கையூரில் உணவகம் ஒன்றில் சாப்பிட வந்தவரும், சர்வரும்)
"இன்னைக்கு மட்டும் இட்லிக்கு சாம்பார் ரொம்ப சூப்பரா இருக்கே. தினமும் இது மாதிரி தரக்
கூடாதா? என்ன பண்ணுனீங்க?''
"எங்க சமையல்காரன் இன்னைக்கு சமையல்ல எதையோ ஜாஸ்தியாவோ, கம்மியாவோ போட்டிருக்கான். அது என்னன்னு அவனுக்கே தெரியாதுங்க. நீங்க என்கிட்டே கேட்டதை அவன்கிட்டே கேட்டா திருதிருன்னு முழிப்பான். நாளைக்கு சாம்பார் எப்பிடி இருக்கும்னு அந்த கடவுளுக்குத்தான் தெரியும் சார்''
எஸ்.வடிவு, சென்னை-53.
யோசிக்கிறாங்கப்பா!
தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று ஆனந்தம் கொள்ளாதீர்கள்.
பூசணிக்காயைத் தூக்கிச் சுற்றுவது பூஜை அறையில் வைக்க அல்ல.
போட்டு உடைக்க.
லோ.சித்ரா, கிருஷ்ணகிரி.
எஸ்எம்எஸ்
முடிவில் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புங்கள். செயல்படுங்கள்.
சரியாகாவிட்டால் இது முடிவல்ல என்று நம்புங்கள்.
எப்ப சரியாச்சோ அப்பதான் முடிவு.
மு.தாஜுதீன், தஞ்சாவூர்.
அப்படீங்களா!
கார் ஓட்ட வேண்டும் என்றாலே பலருக்கு பயம். காரை வாங்கி வீட்டில் நிறுத்தி வைத்துவிட்டு, எங்காவது போக வேண்டும் என்றால் கார் ஓட்டத் தெரியாததால், ஓட்டுநர்களுக்குப் போன் செய்வது இப்போது வழக்கமாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிகளுக்குக் கார் ஓட்ட கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.17 எலிகளுக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். எலிகள் ஓட்டுவதற்கென்றே சிறிய பிளாஸ்டிக் கார்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பிளாஸ்டிக் காரின் உட்புறம் உள்ள வயர்களைப் பிடித்திழுத்தால், இந்த கார் நிற்கும்; செல்லும்; வலது, இடது புறம் திரும்பும். எலிகளுக்கு இதற்கான பயிற்சிகளைக் கொடுத்து பிளாஸ்டிக் காரை ஓட்ட கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.
எலிகளை ஓட்டுநர்களாக மாற்றும் இந்தப் பயிற்சி, ஏதோ விளையாட்டுக்காகவோ, வேடிக்கைக்காகவோ செய்யப்பட்டதல்ல.
காரை ஓட்டும்போது எலிகளின் மூளையில்ஏற்படும் மாற்றங்கள், சுரக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் கண்டறிந்து அவற்றை மனித மூளையின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
மிக மிக சுறுசுறுப்பாக காரை ஓட்டும் எலிகளின் மூளையில் மன அழுத்தத்தைத் தணிக்கும் பொருள் உருவாவதையும், மந்தமாகச் செயல்படும் எலிகளின் மூளையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பொருள் உருவாவதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட இடத்தைக் கடக்க வேண்டும் என்ற இலக்கை வைத்து எலிகளைக் காரோட்டச் சொல்கிறார்கள். அந்த எலிகள் அவ்வாறு கடந்த பிறகு அவற்றின் கண்களில் படுமாறு அவை தின்னக் கூடிய பொருள்களை வைத்திருக்கிறார்கள். அந்தப் பொருள்களுக்காகவே எலிகள் விரைவாக காரை ஓட்டுகின்றன.
கூண்டுக்குள் எலிகளை வரச் செய்ய நாம் பயன்படுத்துகிற அதே பழைய டெக்னிக்தான் இது!
என்.ஜே., சென்னை-58.