அந்திபூக்கள்
By என்.லக்ஷ்மி அய்யர் | Published On : 19th July 2020 06:00 AM | Last Updated : 19th July 2020 06:00 AM | அ+அ அ- |

சென்ற இதழ் தொடர்ச்சி...
அவர்களுக்கு ஆறுதல் கூறியவாறு, ""நீரூ வந்து கவலைப்படாதே, சுசீலா... உனக்கு இங்கே என்ன குறைச்சல் ? நீ போடற தையல், எம்ப்ராய்டரி வேலையெல்லாம் ஆன்லைனில் வித்து ரமா காசாய் உனக்குத்தானே தருகிறாள்? நல்லா பாடுவாய். பிரார்த்தனை பாடல்கள் எல்லாம் உன்னுடைய குரலில் ஒலிக்கிறது. எல்லாருடைய திறமைகளும் இங்கே வெளிப்படுத்துவதற்கு ரமா வாய்ப்புத் தருகிறாள். என் கதைதான் சோக கதை'' என்றாள்.
""ஆனாலும் அல்லா பெயரை சொல்லிக் கொண்டு நான் வாழவில்லையா ? என் முன்னாலேயே சுனாமியால் என் மொத்த குடும்பம் அழிந்ததைப் பார்த்தேனே'' என்றாள் வருத்ததுடன்.
ஆனால் ராமநாதன் மட்டும் எதுவும் பேசாமல் புத்தகம் கையுமாய் சுற்றிக் கொண்டு இருக்கிறார். உடனே ராமநாதன், ""அதெல்லாம் ஒண்ணுமில்லை'' என்றார்.
""அப்படியில்லை ராமனாதா ! நாம் எல்லாம் மனம் விட்டு பேசணும். காலையில் பிரார்த்தனைகள், யோகா பயிற்சிகள் எல்லாம் ஏன் தருகிறார்கள்? மனதை நிர்மலமாய் சந்தோஷமாய் வைத்து நோய் நொடியில்லாமல் வாழத்தானே ? நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பிடித்த பணியைச் சமுதாயத்திற்குச் செய்யுங்கள். நாம் எல்லாரும் தன்னலமற்ற தொண்டு செய்வோம்'' என்றார் கணேசன்.
அதற்கு ராமநாதன், ""ஓர் இருபது வருஷங்கள் முன்னாலே ஒரு முத்தை தூக்கி போட்டு விட்டேன்; ஆதலால் தான் கடவுள் என் பையனை என்னிடம் இருந்து பிரித்து விட்டார். இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்'' என்று சென்று விட்டார்.
அப்போது அங்கே வந்த சுனிதா வைதேகியைப் பார்த்து, ""மாமி ! உங்களுக்கு காலில் ஏதோ சுளுக்கு பிடிச்சிருக்காம்... எண்ணெய் கொண்டு வந்துள்ளேன், காட்டுங்கள்'' என்றாள் அன்புடன்.
""நல்லôயிடுத்து கண்ணு'' என்றாள் வைதேகி.""அதில்லை அம்மா... நீங்க சுகர் பேஷன்ட் , உங்களை நன்றாகக் கவனித்து கொள்ளணும் என்று உங்க மகள் ரமாவின் ஆர்டர்'' என்றாள், சிரித்தபடி. அவள் சென்ற பின் சுனிதா எம். பி. ஏ. படித்த திருநங்கை என்றும், தாய் தந்தையினால் கை விடப்பட்டு ஏதோ அநாதை இல்லத்தில் வளர்ந்தவள் என்றும் ரமா வேலை தந்து இங்கே தங்க வைத்துக் கொண்டாள் என்றும் எல்லாருக்கும் தெரிந்தது.
""அப்ப ரமா... இந்த காலத்தில் இவ்வளவு அன்பாய், வெகுளியாய் இருக்கிறாள்... அவள் வாழ்க்கை எப்படி ?''
சந்தேகத்துடன் கேட்டார் கணேசன். அதற்கு கிருஷ்ணகாந்த், ""நானும் ரமாவின் அப்பா நடராஜனும் திருப்பதியில் ஒன்றாகப் படித்த நல்ல நண்பர்கள். அவள் திருமணம் ஆகி நார்த்தில் ஆபீசராக வேலை பார்த்தாள். அதற்கிடையில் அவ புருஷன் திருச்சிக்காரர். ஒரு சாடிஸ்ட். முதுமையில் என் நண்பர் இறந்த பிறகு அவளையும், அவள் தாயையும் வார்த்தைகளால் கொடுமைப்படுத்தி அவளை மனதளவில் நோகடித்தவன். தாய் இறந்த பிறகு ஒரே பிள்ளையைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்து டாக்டராக்கி அமெரிக்காவிற்கு போன மாதம்தான் எம். எஸ். படிக்க அனுப்பி உள்ளாள். அம்மா, அப்பாவின் மரணம் ரமாவை மானசீகமாய் பாதித்தது. புருஷன் அவளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை. பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின் தான் இங்கு வந்தாள். புருஷன் ஓர் விபத்தில் போய் விட்டான். காலையிலிருந்து ராத்திரி வரை நம்ப சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தையும் சேர்த்து, மறைந்த தாய் தந்தையை நம்மில் பார்த்து மகிழ்ந்து வாழ்கிறாள்'' என்றாள் திருமதி கிருஷ்ணகாந்த்.
மேலும், ""அவங்க தாத்தா ஜகதிஸ் அய்யர் ஒரு பெயருள்ள கிரிமினல் லாயர். அந்த நாளிலே புரட்சியை விரும்பி தன் மகளுக்கு தாராபாய் என்று பெயர் வைத்து படிக்க வைத்தவர். இந்த ஆஸ்ரமத்தை அவர் பெயரில் தான் வைத்தார்கள்'' என்றார்.
"ஒரு நாள் தனக்கு வேலை இருக்கிறது' என்று ரமாவிடம் கூறி காலையில் புறப்பட்டுச் சென்று விட்டார் வைத்திய நாதன். ரமா பிடிவாதமாய் தன் காரில் டிரைவரிடம் சொல்லி அவரைக் கொண்டு போய் விடச் செய்தாள். மாலை லேட்டாய் திரும்பி வந்தவர், "உணவு வேண்டாம்' எனச் சொல்லி அறைக்குச் சென்றார். ரமா தன் அசிஸ்டன்ட் சுரேஷுடன் பணிப்பெண் தேவியுடன் உள்ளே சென்றாள்.
""என்ன அப்பா, உடம்பு சரியில்லையா ? சாப்பிடவில்லையாமே, வாங்க லான்ல போய் காத்தோட்டமாய் உட்காரலாம்'' என்று அவரை அன்போடு கூட்டிச் சென்றாள். அவரை அங்கு உட்கார வைத்து, தேவியிடம், ""அவருக்கு பிடித்த அதரக் சாய் (இஞ்சி போட்ட டீ) கொண்டு வா...'' என்றாள்.
""சரி மேடம்'' என்று அவள் சமையல் அறைப் பக்கம் சென்றாள். அப்போது அங்கே வந்த சுனிதா உள்ளே சென்று தேவி கையில் இருந்த டீ யை வாங்கி அவருக்குக் கொடுத்தாள்.
""சுரேஷ்... நீ ஆபீஸ் ரூம்ல இரு, நான் வர்றேன்'' என்றாள். அவன் போய் விட்டான். அதற்குள் கிருஷ்ண காந்துடன், கணேஷன்ராம், ராமநாதன் மற்றும் இருவர் வந்தனர். கிருஷ்ணகாந்த் அவர் தோளில் கை போட்டு உரிமையுடன் அன்பாக கேட்டார்: ""மகளைப் பார்த்தாயா?'' என்று.
""ஆமாம் டா கிருஷ்ணா'' என்று கூறியபடி அவர் கிருஷ்ணகாந்த்தை தழுவிக் கொண்டு அழுதார். அதற்கு கிருஷ்ணகாந்த், ""கவலைப்படாதே , மனம் வருந்தினால் பாவம் கழிக்கப்படும். சின்னவளானாலும் அவள் உன்னை மன்னிப்பாள் இப்போது அவள் நடக்கும் மனிததெய்வம். நம்மைப்போல் இல்லை'' என்றார். யாருக்கும் எதுவும் புரியவில்லை... ரமாவை தவிர.
எப்பவும் யாரிடமும் மனம் விட்டு பேசாத ராமநாதன், அவர் மேல் கை போட்டு, ""என்னாச்சு வைத்யா ?'' என்றார் கவலையுடன். அவ்வளவு தான். வைத்யா உடனே, ""நான் ஒரு பாவி ராமனாதா... மகாபாவி, செல்வந்தனான சமணன் எனக்கு ராஜஸ்தானில் பத்து கல்லூரிகள் பல சொத்துக்கள் உள்ளன. எங்கள் காலேஜில் என் மகள் பி.காம் படிக்கும் போது ஒரு எம். காம் படிக்கும் ராஜபூத் பையனை விரும்பினாள். நான்தான் மகா பாவி'' என்று மேலே சொல்ல முடியாமல் விசும்பினார்.
அப்போது ரமா, ""அவனை காலேஜில் இருந்து அடித்து துரத்தி தன் மகளை ஜைன துறவி ஆக்கி விட்டார். அந்த பெண் நிர்மலா அந்த விழாவில் துறவறம் பூண்டாள். என் முன்னாலே அவளின் தலையிலிருந்து ஒவ்வொரு முடியையும் பிய்ச்சு , மொட்டை அடித்து துறவியாக்கினார்கள். நான் அழுதபடி தனியாய் கேட்டேன்..."எப்படி ஒத்துகொண்டே நிர்மலா?' என்று. அதற்கு அவள், ""இப்ப எனக்கும் சிலைக்கும் எந்த வித்யாசமும் கிடையாது. நான் ஓர் நடமாடும் சிலை'' என்றாள், சலனமில்லாமல் புன்முறுவலுடன். அந்த நாள் என்முன் அப்படியே நினைவில் உள்ளது'' என்றாள் ரமா கண்ணை துடைத்தபடி.
கிருஷ்ணகாந்த், ""பிறகு கெஜெட்டில் ரிஷப் நாத் என்ற பெயரை வைத்யநாதன் என்று மாற்றி கொண்டு தென்னிந்தியாவில் பெரிய தொழில் அதிபராய் செட்டில் ஆகி, மனைவி மறைவுக்குப் பின் இங்கே வந்து விட்டார்'' என்றார். ""இன்று ஜைனர் கோயிலுக்கு துறவி நிர்மலா தேவி வந்துள்ளார். அவளைப் பார்த்து வணங்கி மன்னிப்பு கேட்டாராம்'' என்றார் வருத்ததுடன். ரமா வைத்யனாதரை பார்த்து, ""இத பாருங்க அப்பா , இப்ப நீங்கள் அவள் தந்தை இல்லை, அவள் மகளும் இல்லை. ஒரு துறவி. உலகத்திற்கு ஞானதரும் சுடர் , தெய்வீகப் பிறவி , பழசை தயவு செய்து மறந்து விடுங்கள்'' என்றாள்.
அவர், "" எப்படி மறக்க முடியும் ரமா'' என்றார் வருத்ததுடன்.
எப்போதும் அமைதியாய் இருக்கும் ராமநாதன், ""வைத்தி, உன்னைவிட பாவி நான் தான். எனக்கு இரண்டு குழந்தைகள். முதலாவது மகன். இரண்டாவது ஆணும் இல்லை பெண்ணும் இல்லாமல் பிறந்தது. அந்த சிறு குழந்தையை இரக்கமில்லாமல் சென்னையில் ஓர் அநாதை விடுதியில் வைத்து விட்டு வந்து விட்டேன். சாகும் வரை அதைப் பற்றி பேசி பேசி கண் கலங்கினாள் என் மனைவி. ஆதலால் தான் என் ஒரு பிள்ளையும் என்னை அநாதையைபோல் வீசி எறிந்துவிட்டு போய் விட்டான்'' என்றார் வருத்ததுடன்.
""உங்க குழந்தை உங்கள் முன்னாலே அப்பா அப்பாவென்று கூப்பிட்டு கொண்டே அத்தனை பணிகளையும் செய்து, படுக்கும் வரை குட்நைட் சொல்லி தூங்கச் செய்யும்போது , நீங்கள் எப்படி அநாதை ஆவீங்க அப்பா ?'' என்று கேட்டாள் ரமா.
""என்னம்மா சொல்றே ?'' வியப்புடன் கேட்டார் ராமநாதன்.
""நீங்கள் இங்கு சேர்ந்தபோதே நான் உங்களைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டேன். எம்பிஏ படித்து சுயநலமில்லாமல் அன்போடு எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் தொண்டு செய்யும் சுனிதா தான் இங்குள்ள எல்லாரின் செல்ல மகள், நீங்க தூக்கி எறிந்த மழலைச் செல்வம்'' என்றாள்.
சுனிதாவை அருகில் அழைத்து, ""இவர் உன் அப்பா'' என்றாள். அவள் ராமநாதன் அருகில் சென்று, ""அப்பா'' வென்று விசும்பினாள்.
""தாயே ! என்னை மன்னித்து விடு. உனக்கு துரோகம் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு. ஆண் என்ன? பெண் என்ன? எல்லாரும் மனிதர்களே. அன்பு செலுத்தினால் அன்பு எல்லோருக்கும் கிடைக்கும். இந்த உண்மையை வாழ்க்கையின் கடைசி நேரத்திலாவது உணர்ந்தேனே... இனிமே நான் நிம்மதியாய் சாவேன்'' என்றார் அழுதபடி.
அதற்கு ரமா, ""நீங்கள் எல்லாரும் அந்திபூக்கள். வாழ்க்கையின் அனுபவத்தில் பூத்த மல்லிகள். எங்கள் எல்லாருக்கும் வழி காட்டிகள். நீங்களே வருத்தப்பட்டால் எப்படி? வாருங்கள், உணவருந்தி பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கலாம். சொல்லுங்கள் மாமி'' என்றாள் சுசீலா மாமியைப் பார்த்து.
உணவு அருந்திய பிறகு ராமநாதனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசி விட்டு வந்து சொன்னார்: ""என் பையன் அமெரிக்கா போகவில்லையாம். கரோனா வைரஸ் பிரச்னையால் விசா கிடைக்கவில்லையாம். என்னைக் கூட்டி போவதாக சொன்னான்'' என்றார்.
""கணேஷன் அப்ப நீ என்ன சொன்னே?'' என்று கேட்டார்.
அதற்கு அவர் வைரஸ் பல நூறு வருஷங்கள் முன்னே இயற்கையில் எப்போதும் இருப்பவை. சுனாமி என்றோம்... நிஷா என்றோம்... ராவணன்,
ஹிரன்யகஷ்யபன் என்றோம். வைரஸ் நல்ல திடமான உடம்பில் ஒட்டாது. நான் இந்த சுவர்க்கத்தை விட்டு வரமாட்டேன். வைரஸ் பிரச்னை தீர்ந்தவுடன் நீ அமெரிக்கா போ கண்ணா என்று வாழ்த்தி அனுப்பினேன்'' என்றார். எல்லாரும் சிரித்தபடி பிரார்த்தனை ஹாலுக்குச் சென்று அங்கு ஜகஜோதியாய் ஒளிர் வீசும் ஸ்ரீ வேங்கடாசலபதியைக் கை கூப்பி வணங்கினார்கள்.
"குறை ஒன்றும் இல்லை... மறை மூர்த்தி கண்ணா' என்ற எம். எஸ் பாடலும், அதற்குப் பிறகு, "இறைவனிடம் கை ஏந்துங்கள்' என்ற ஹனீபா பாடலும் இனிதாக காதில் ஒலித்தன.