எம்.எஸ். விஸ்வநாதன் செய்த விகடம்!
By DIN | Published On : 01st March 2020 11:51 AM | Last Updated : 01st March 2020 11:51 AM | அ+அ அ- |

ஒருமுறை இயக்குநர் பாலசந்தர், கவிஞர் கண்ணதாசன் ஆகியோருக்கு ஒரு டியூனை பாடிக் காண்பித்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.
அந்த டியூனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார் பாலசந்தர். ஆனால் கவிஞருக்கு அந்த டியூன் பிடிக்கவில்லை. இருப்பினும், பாலசந்தரின் விருப்பத்திற்காக சரியென்று சொல்லிவிட்டு, மீண்டும் பாடச் சொன்னார்.
சந்தத்தைக் கேட்ட கவிஞர் எழுதிய வரிகள்,
"வா நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா'
என்று தொடங்கி, முழுப்பாடலையும் எழுத, அதில் மொத்தம் 36 "லா'க்கள் அடங்கியிருந்தது.
பாடலைப் பாடிய பின் பாலசந்தர் மிகுந்த சந்தோஷமடைந்து, " இனி லா போட்டு யாராலும் இப்படி எழுத முடியாது' எனப் பாராட்டினார்.
ஆனால் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலைக் கேட்டு குறை சொன்னார் எம்.எஸ்.வி. குறும்பாக,
"என்ன கவிஞரே, இன்னும் நாலு, ஐந்து லா போடலாமே'' என்று சொல்ல, மீண்டும் பாடலை வாங்கிப் படித்துவிட்டு, "சரியாகத்தான் உள்ளது''
என்றார் கவிஞர்.
அதற்கு விஸ்வநாதன் சொன்னார். பிரதர் இன்லா, சிஸ்டர் இன்லா, மதர் இன்லா, ஃபாதர் இன்லா, இந்த லாக்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீங்க?
இதைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன் தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாராம்.
("பிரபலங்கள் செய்த குறும்புகள்' என்னும் நூலிலிருந்து)
- முக்கிமலை நஞ்சன்.