சிங்கப்பூரில் சாதனை படைத்த நம்ம ஊர்க்காரர்!
By DIN | Published On : 01st March 2020 11:30 AM | Last Updated : 01st March 2020 11:30 AM | அ+அ அ- |

சிங்கப்பூர் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அங்கு பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ் அமைப்பு ஒன்று "சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்' என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். இதில் இடம் பெற தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் சிற்பி வா.லோகநாதன்.
இவர் நாகபட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது 53 வயதாகும் லோகநாதன் தொடக்கத்திலிருந்தே ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர். அருகில் உள்ள கிராமத்துக் கோயில்களில் வண்ண ஓவியங்களைத் தீட்டத் தொடங்கிய லோகநாதன் பின்னர் சிலைகளை வடிவமைக்கத் தொடங்கினார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே கோயில்களில் வண்ணம் தீட்டும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டார். ஆனாலும் முறையாகச் சிற்பக் கலைக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளை இழந்த லோகநாதன், தனது ஆர்வம் மற்றும் முயற்சிகளைக் கொண்டே சாதனையைப் படைத்துள்ளார். சிங்கப்பூரில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கோயில்களை உருவாக்கி மிகச் சிறந்த ஸ்தபதிகளில் ஒருவராகத் தடம் பதித்து வருகிறார். இவரின் சாதனைகளைக் கருத்தில் கொண்டே சிறந்த இருநூற்றுவரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் லோகநாதன். பணி நிமித்தமாக சென்னை வந்த அவரிடம் பேசியதிலிருந்து...
"சிற்பக் கலை ஓவியக் கலையின் பரிணாம வளர்ச்சியே. முதலில் கற்பனை வளத்தில் ஓவியத்தை வரைந்த பிறகுதான் அதனை சிலையாகவோ, கட்டுமானங்களாகவோ வடிவமைக்க முடியும்.
தற்போது சுதை சிற்பம், கருங்கல் சிற்பம், உலோக சிற்பம், மரச் சிற்பம் என்பன போன்ற பல்வேறு வகை சிற்பங்கள் உள்ளன. இதில் இரும்புக் கம்பி, சிமெண்ட், மணல், ரசாயனக் கலவைகள் மூலம் சிலைகள், மூலஸ்தானம், கோபுரங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டமைப்பதுதான் சுதை சிற்பம் என அழைக்கப்படுகிறது. இன்றைக்கு பெரும்பாலான கோயில் கட்டுமானங்கள் சுதை சிற்ப வடிவில்தான் கட்டமைக்கப்படுகின்றன.
கருங்கல் சிற்பம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. உறுதியான கற்களைத் தேர்வு செய்து பின்னர் ஏற்கெனவே வரையப்பட்ட ஓவியத்திற்கு உருவ வடிவம் கொடுப்பது கற்சிற்பம் ஆகும். கடினமான இப்பணியில் இயந்திரங்களின் வருகை மூலம் ஓரளவு எளிதாகியுள்ளது.
உலோகச் சிற்பம் என்பது மெழுகினால் உருவம் வடிவமைக்கப்பட்டு பின்னர் காய்ச்சப்பட்ட உலோகத்தை அதில் வார்த்து எடுப்பார்கள். மரச்சிற்பங்கள் உளியின் துணைகொண்டு வடிவமைக்கப்படுகின்றன.
கோயில்களில் கட்டுமானம் என்பது ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு உட்பட்டே வடிமைக்கப்பட்டிருக்க வேண்டும். நம்முடைய மரபு வழிக் கோயில்கள் அனைத்தும் வர்க்கமானம் என்ற பத்மத்தின் அடிப்படையிலானது. முதலில் கோயிலின் அடி மனை எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு பின்னர் என்னென்ன சாமி சிலைகளை எங்கெங்கு வைக்க வேண்டும், சிலைகளுக்கு இடையேயான இடைவெளி அளவு, பூசப்பட வேண்டிய வண்ணச் சாயங்கள் எவை என்பன போன்ற பல்வேறு விசயங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் ஆகம விதிகள் உள்ளன. இதில் தவறு நேர்ந்துவிட்டால் கோயில் கட்டுமானமே குறைபட்டதாகிவிடும். எனவே இவற்றையெல்லாம் தீர்மானித்த பிறகுதான் கோயில் கட்டுவதற்கான செலவின மதிப்பீடு அளவிடப்படும்.
அந்தந்த நாடுகளில் உள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டே அஸ்திவாரம், கட்டட தூண்கள், தாங்கும் சக்தி, பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் அங்குள்ள கட்டடக் கலை நிபுணர்களின் வேலை ஆகும். ஆனாலும் ஒரு ஸ்தபதியின் மேற்பார்வையில் மட்டுமே அனைத்தும் நிர்வகிக்கப்படும். பொதுவாக ஒரு கோயிலை புதிதாகக் கட்டுவதற்கு குறைந்தபட்சம் சுமார் மூன்றாண்டுகள்வரை ஆகும்.
முதன் முதலில் 1992-ஆம் ஆண்டு தெரிந்த ஸ்தபதி ஒருவரின் அழைப்பின் பேரில் மலேசியா சென்றேன். அங்கு அவரது தலைமையில் தொடர்ந்து சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றினேன். பிறகு நான் ஸ்தபதியாகப் பொறுப்பேற்று இரண்டு கோயில்களைக் கட்டினேன். மலேசியாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆனால் சிங்கப்பூரில் உள்ள கோயில்களின் எண்ணிக்கையே சுமார் 50-க்குள் தான். சிங்கப்பூரில் கடந்த 15 ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட புதிய கோயில்களை நானே ஸ்தபதியாக தலைமை வகித்து கட்டமைத்து உள்ளேன். இவற்றில் முருகன் கோயில், சிவகிருஷ்ணர் கோயில், காளியம்மன் கோயில் படபத்திர காளியம்மன் கோயில், சிவதுர்கா கோயில், மகா மாரியம்மன் கோயில் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. ஏராளமான கோயில்களைப் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தி உள்ளேன்.
இது தவிர நைஜீரியா நாட்டில் முருகன் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளேன். கோயில் கட்டுவதில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பும், உதவியும் தேவை என்றாலும் ஸ்தபதிதான் அனைத்துக்கும் பொறுப்பானவர் ஆவார் என்பதால் எவ்விதப் பிரச்னையும் இன்றி இத்தனை கோயில்களைக் கட்டியதே எனக்கு கிடைத்த வரமாகவே நான் கருதுகிறேன்.
மலேசியா, சிங்கப்பூரில் நம் ஊரைப் போல அவரவர்மதம் சார்ந்த கோயில்களை மட்டுமே வணங்குவது இல்லை. புத்த வழிபாட்டுத் தலங்கள், இந்துக் கோயில்கள் அனைத்திலும் பிறமதத்தைச் சார்ந்தவர்கள் வந்து வணங்கிச் செல்வது இயல்பானதாக உள்ளது. மேலும் அங்குள்ள தமிழர்களைப் பொருத்தவரை தேவாரம், திருவாசகம் முதல் அனைத்து தமிழ் மந்திரங்களையும் எளிதில் உச்சரித்து வழிபாடு நடத்துகின்றனர். கோயில்கள் எங்கும் அன்னதானம், பிரசாதங்கள் தாராளமாக வழங்கப்படுவதைப் பார்க்க முடியும். பொதுவாகவே அனைவருமே கோயில்களுக்குச் சென்று வருவதை தங்களது கடமையாக வைத்திருக்கின்றனர். இறைபக்தியிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும் வீடுகளில் சைவ அற நூல்களில் உள்ளது போன்ற விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர். கோயில்களில் தமிழகத்தைப் போலவே உழவாரப் பணிகள், ஓதுவார்கள் மூலம் அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றனர். மலேசிய கோயில்களில் அங்குள்ளவர்களே பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கப்பூரிலோ தமிழகத்தைச் சேர்ந்த பிராமணர்கள்தான் கோயில்களில் பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான் சிற்பக் கலையை முறையாகக் கற்றுக்கொண்டிருக்கவில்லை என்றாலும் பல ஸ்தபதிகளிடம் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டு இன்றுவரை தொடர்ந்து பல்வேறு ஆகம, ஆன்மீக புத்தகங்களின் துணையோடு ஒரு திறன் வாய்ந்த ஸ்தபதியாக வளர்ந்துள்ளேன். புலம் பெயர்ந்த தமிழர்களின் தாக்கத்தால் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் கோயில் கட்டுமானம், குடமுழுக்கு போன்றவை அதிக எண்ணிக்கையில் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் தேவைக்கு ஏற்ப சிற்பக் கலை தொழிலாளர்களின் எண்ணிக்கை இல்லை. மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியைத் தவிர வேறு கல்லூரிகள் இல்லை. இதனால் சிற்பக் கலைக்குத் தேவையான ஆள்கள் பற்றாக் குறை உள்ளது. எனவே சிற்பக் கலையில் ஆர்முள்ளவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தயார் செய்து வருகிறேன்.
எனது மகள் கட்டடக்கலை பயின்று வருகிறாள். அவளும் இத்துறைக்கு வருவாள் என நம்புகிறேன். இத்துறையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதே அனைவருக்குமான வேண்டுகோள் ஆகும்'' என்றார்.
- முகவை க.சிவகுமார்