பேல்பூரி (01/03/2020)
By DIN | Published On : 01st March 2020 12:01 PM | Last Updated : 01st March 2020 12:01 PM | அ+அ அ- |

கேட்டது
* ( வடகுத்து காந்திநகரில் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும்)
"என் மூளை வளர்ந்து நான் பெரிய ஆளா
ஆகணும்ங்கிறதுக்காக மத்தியானம் சாப்பாட்டுக்கு நிறையா வெண்டைக்காய் பொரியல்
வைச்சிருக்கியா?''
"ச்சே...ச்சே... வெண்டைக்காய் அதிகமா
சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்றது
எவ்வளவு பொய்ன்னு இந்த உலகத்துக்கு
நிரூபிக்கப் போறேன்''
பஞ்சு உத்ஸ், வடகுத்து.
* (சிவகாசி பேருந்து நிலையத்தில் இருவர்)
"உங்க தாத்தா இப்போ உன்னோடதானே இருக்கார்? எத்தனை வயசு நடக்குது?''
"அவரே நடக்க முடியாம இருக்கார். வயசு எப்படிப்பா நடக்கும்?''
ஆர்.சுப்பு, திருத்தங்கல்.
கண்டது
* (மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் உரக்கடை ஒன்றில் கண்ட வாசகம்)
அலங்காரமில்லா
ஆண்டவனே விவசாயி
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
* (திருத்தங்கலில் உள்ள ஒரு செல்பேசி கடையின் பெயர்)
நீர்... நிலம்... காற்று
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.
* (ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு தெருவின் பெயர்)
வெள்ளை மணல் தெரு
எம்.செல்லையா, சாத்தூர்.
* (கரூர் மாவட்டம் குளித்தலை சுங்க கேட் அருகே உள்ள பூக்கடையின் பெயர்)
இன்ஜினியர் பூக்கடை
ராஜசிம்மன், கரூர்.
யோசிக்கிறாங்கப்பா!
மகிழ்ச்சியின் ரகசியம்
விரும்புவதைச் செய்வது...
வெற்றியின் ரகசியம்
செய்வதை விரும்புவது.
நெ.இராமன், சென்னை-74.
எஸ்எம்எஸ்
சிலந்தியும் மனிதர்களும் ஒன்றுதான்.
அதிக நேரம் "நெட்' - இலேயே இருப்பதால்.
கே.அஞ்சு, ராமநாதபுரம்.
அப்படீங்களா!
ஒருவருக்குத் தொற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், பிறருக்கும் அது தொற்றிக் கொள்கிறது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் உள்ள கிருமிகள் அவர் எதைத் தொட்டாலும் அதில் ஒட்டிக் கொள்கின்றன. அவர் தொட்ட இடத்தைப் பிறர் தொடும்போது, அந்தக் கிருமிகள் தொடுபவரின் கைகளில் ஒட்டிக் கொண்டு அந்த "பிறருக்கும்' பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, கதவின் கைப்பிடியில் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருந்தால், அதைத் தொடுபவர் பாதிப்புக்கு உள்ளாகிவிடுகிறார். வீட்டுக் கதவுகளில் உள்ள கைப்பிடியை வேண்டுமானால் ஒருவேளை கவனமாக இருந்து, அடிக்கடி சுத்தம் செய்துவிடலாம். ஆனால் அலுவலகங்களில், வெளியிடங்களில் உள்ள கதவுகளின் கைப்பிடியைச் சுத்தம் செய்வது எப்படி?
கதவின் கைப்பிடிகள் தாமாகவே தம்மைச் சுத்தம் செய்து கொள்ளும் வகையில் கைப்பிடியை உருவாக்கியிருக்கிறார்கள், சீனப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான சும் மிங் வாங் மற்றும் கின் பாங் லீ.
கண்ணாடியால் செய்யப்பட்ட இந்த கைப்பிடியின் மேல் பகுதியில் டைட்டானியம் ஆக்ûஸடு பூசப்பட்டுள்ளது. அதில் புற ஊதாக் கதிர்கள் படும்போது பூசப்பட்ட டைட்டானியம் ஆக்ûஸடு கிருமிக்கொல்லியாக மாறிவிடுகிறது.
ஒருவர் கைப்பிடியில் கை வைத்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற அடுத்த விநாடி அந்தக் கைப்பிடி சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது. இந்த கைப்பிடி 99.8 சதவீதம் கிருமிகளை அழித்துவிடுகிறதாம்!
என்.ஜே., சென்னை-58.